Tuesday, February 5, 2019

சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!



இளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

          இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2018/12/blog-post.html

பட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
நடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.

 நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.
இசையமைப்பு:

பாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார்  இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து  கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல்  வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் "ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி "நான் காண்பது" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது  BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.
            இந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான "ஓ மானே மானே மானே உன்னைத்தானே", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.
பாடலின் வரிகள்:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே..

ஹா
நான் காண்பது....உன் கோலமே
அங்கும்...
இங்கும்....
எங்கும்....!
என் நெஞ்சிலே.... உன் எண்ணமே
அன்றும்....
இன்றும்....
என்றும்...
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ....நீ......நீ......!


ஹா
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...
நீ.....
நாம்..
            

     
       பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின்  பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. "கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.
பாடலைப்பாடியவர்கள்:

SPB with Ilayaraja 
சிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
இளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தொடரும்

6 comments:

  1. நீங்கள் சொல்லியிருக்கும் அதே உணர்வுகளில் எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இதே படத்தில் எஸ் பி பி பாடிய தனிப்படல் ஒன்று மிக அருமையாக இருக்கும். "யாரோ நீயும் நானும் யாரோ" இன்னொரு டூயட் பாடலும் மிக நன்றாய் இருக்கும் "தேவதை... ஒரு தேவதை..."

    பட்டாக்கத்தி பைரவன் படம் கர்ணன் படத்தின் மாடர்ன் பதிப்பு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் , பட்டாக்கத்தி பைரவன் படம், கர்ணன் படத்தின் மாடர்ன் பதிப்பு என்பது புதிய தகவல்.

      Delete
  2. பாடலில் வரும் அந்த இழுவை தான், என்னை இழுக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. என்னையும்தான் தனபாலன்

      Delete
  3. இளையராஜாவை எப்படி அனுபவித்துக் கேட்பது என்று கற்றுக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான பாராட்டுரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் முத்துச்சாமி.

      Delete