பார்த்ததில் பிடித்தது.
பிரின்சஸ் கையூலானி
சுமார் பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு கான்ஃபிரென்சுக்காக
ஹவாயில் உள்ள ஹானலூலுவுக்குப் போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கூட என் பெரிய மகள்
அனிஷாவும் வந்தாள். நியூயார்க்கிலிருந்து நீண்ட தூரத்தில் இருக்கிறது ஹானலூலு. நேர
வித்தியாசம் கூட பத்துமணி நேரத்திற்கு மேல் கிட்டத்தட்ட இந்தியாவுக்குப் போவது போல
19-ஆம் நூற்றாண்டில்
அமெரிக்காவிலிருந்து சில கிறித்தவ மதப் பிரச்சாகர்கள் ஹவாயில் நுழைந்தனர்.
அவர்களின் போதனைகளை ஏற்று ஹவாயின் அரச வம்சம் கிறித்தவ மதத்தைத் தழுவியது. அங்கேயே
குடியேறிய அந்த அமெரிக்கர்களின் இரண்டாவது தலைமுறை, நிர்வாகப்பணிகளிலும் அரசாங்க
பதவிகளிலும் அமர்ந்தனர். இவர்கள் ஹவாயின் வாழ்க்கை முறையை முற்றிலும் நவீனமயமாக்க
முயன்றதால் மக்களிடமிருந்தும் மன்னரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. அதன்பின் சண்டையும் வந்ததால்
அவர்கள் பேர்ல் ஹார்பரில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்திடம் உதவி கேட்டனர்.
அமெரிக்க ராணுவம் அதிரடியாக நுழைய நிலைமை தலைகீழாக ஆகியது.
அங்கிருந்த வெள்ளைத்தலைவர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து,
இதனை அமெரிக்க மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும்
அல்லது நாங்கள் தனிநாடாக பிரகடனம் செய்வோம் என்று சொல்ல வேறு வழியின்றி அமெரிக்கா
ஹவாயை 50ஆவது மாநிலமாக சேர்த்துக் கொண்டது.
இது மிகவும் அநியாயம் என்பதால் இன்றுவரை அதனை
எதிர்த்து போராடி வருகிறார்கள். ஆனால்
இப்போது அந்த நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களின் சதவீதமும் குறைந்துவிட்டது.
அமெரிக்க அதிபராக கிளின்ட்டன் இருந்த போது இவ்வாறு நடந்த அமெரிக்க
ஆக்கிரமிப்புக்கு மன்னிப்புக் கேட்டார். ஆனால் திரும்பவும் ஹவாயை அந்த
மக்களிடம் ஒப்படைப்பது என்பது இயலாத காரியமாகி விட்டது. பராக் ஒபாமா கூட ஹவாயில் பிறந்து வளர்ந்தவர்தான்.
இதன் அடிப்படையில் படம் நெட் பிலிக்சில் வரவும் உடனே ஆர்வமாக
என்னுடைய லிஸ்ட்டில் அதனை இணைத்து கடந்த வாரம் பார்த்து முடித்தேன்.
King David Kalakaua |
அயோலானி அரண்மனையில் முதன் முதலாக மின்சாரம்
பொறுத்தப்படுவதில் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஒரே அரண்மனை
இதுதான் .ஏனென்றால் அமெரிக்காவின் மற்ற பகுதிகளை எந்த மன்னரும் ஆளவில்லை .கலாக்குவா
அப்பொழுது அரசராக இருந்தார். அவர் மனைவி ராணி லீலியோ கலானி. அரசர் கலாக்குவாவின் தங்கைக்கும்
அவரது ஸ்காட்டிஷ் கணவருக்கும் பிறந்தவர்தான் இளவரசி கையூலனி.
Lorrin Thurston |
மின்சாரம் வந்த அதே நேரத்தில் வெள்ளை
வீரர்களுடன் உள்ளே நுழைந்த வெள்ளை அமெரிக்கர்களின் தலைவர் லாரின் தேர்ஸ்டன் (Lorrin
Thurston) மன்னரை மிரட்டிப் பணிய வைத்து அவர்களுக்கு அதிக அதிகாரம்
கொடுக்க வலியுறுத்துகிறான். மன்னரின் பாதுகாவலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்தக் கலாட்டாவிலிருந்து
பாதுகாக்க இளவரசி கையூலனியின் ஸ்காட்டிஷ் தந்தை அவளை இங்கிலாந்துக்குக் கொண்டு
போய் படிக்க வைக்கிறார்.
இப்படி இருக்கும் போது மன்னர் டேவிட் கலாகுவா
சிறிய வயதிலேயே இறந்து போன செய்தி இளவரசிக்கு எட்டுகிறது. அவள் அமெரிக்காவிற்குச்
சென்று அப்போதிருந்த அதிபர் கிளீவ்லேண்டைச் சந்திக்கிறார்.
Princess Kaiulani |
அதற்கு கிளீவ்லேண்ட் ஆதரவு தெரிவித்தாலும்
அவருடைய பதவி சீக்கிரம் முடியவிருப்பதால் பெரியதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே இளவரசி கையூலனி தன் நாட்டுக்குத் திரும்புகிறார். அதற்கு முன்
படிக்கும்போது அங்கு அமெரிக்க இளைஞன் ஒருவனிடம் காதலில் விழுகிறாள். அந்தக் காதல்
கைகூடியதா, தன் மக்களுக்கு அவரால் உரிமைகளைப் பெற்றுத்தர
முடிந்ததா என்பதை திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அக்டோபர்
2009ல் ஹவாயிலும்/ மே 2010ல்
அமெரிக்காவிலும் இது ரிலீஸ் செய்யப்பட்டது. ராபர்ட் பைன் மற்றும் மார்க்
ஃபோர்பி இதை எழுத மார்க் ஃபோர்பி
இயக்கியிருக்கிறார். பிரின்சஸ் கையூலனியாக கோரியங்கா கில்ச்சர் (Qarianka
cilcher) தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். லாரி
தேர்ன்ஸ்டனாக பேரி பெப்பர் நடித்திருக்கிறார்.
Qarianka cilcher |
இது ஹவாயில் நடந்த திரைப்பட விழாவில்
திரையிடப்பட்டபோது சிறந்த படமாக ஆடியன்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டது. (Audience
Award)
ஹவாயின் வரலாற்றை அறிய விரும்பும் ரசிகர்கள்
இதனைப் பார்த்து மகிழலாம்.
- முற்றும்.
ஆடியன்ஸ் அவார்ட் பெற்ற திரைப்படமான பிரின்ஸஸ் கையூலானி பற்றிய விமர்சனம் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுள்ளது.
ReplyDeleteநன்றி முத்துச்சாமி .
Deleteவிமர்சனம் நன்று...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்
Delete