Monday, June 25, 2018

சௌபாவும் நானும்!!!! பகுதி 2

Related image
Sowba 

இதன் முந்தைய  பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/06/blog-post_18.html
செளபாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் கஞ்சா போன்ற வேற வஸ்துக்கள் புகைப்பதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும், முதல் முறை தெரியாமல் கஞ்சா நிரப்பிய சிகரெட்டைக் குடித்ததால் தலை சுற்றி நாவறண்டு மிகவும் பயந்து போனார். செளபாவை கைத்தாங்கலாப் பிடித்துக் கொண்டு கீழிறங்கி வந்தேன். யாரோ இனிப்பு சாப்பிட்டால் சரியாய்விடும் என்றும் மற்றொருவன் சூடாக ஒரு காப்பி குடித்தால் ஓரளவுக்குத் தெளியும்  என்று சொன்னதால் கல்லூரியின் எதிரே இருந்த மல்லிகை காபி பாருக்கு அழைத்துச் சென்று இனிப்பு போண்டா ஒன்றையும் காபியையும் வாங்கிக் கொடுத்தேன். போண்டாவை ஓரிறு கடி கடித்துவிட்டு வேண்டாம் என்று சொன்னவர் காபியை முழுவதுமாகக் குடித்தார். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த இனிப்பு எதிர் வினையாற்ற அங்கிருந்து மெதுவாக நகர்ந்து பக்கத்தில் இருக்கும் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கேட்டுக்கேட்டு டூட்டி டாக்டரிடம் சென்றோம்.
செளபா கண்ணை மூடிக்கொண்டு தியான நிலையில் இருக்க, என்ன நடந்தது என்று அந்த இளம் டாக்டரிடம் சொன்னேன். அவர் ஒன்றும் சொல்லாமல் படக்கென்று எழுந்து எங்கோ போய் கொஞ்சம் முதிய ஒரு டாக்டரை அழைத்து வந்தார்.
அமெரிக்கன் கல்லூரி மாணவன் தானே, என்று கேட்டுவிட்டு என்னைப்பார்த்து கண்ணாபிண்ணா வென்று கத்த ஆரம்பித்தார். “ஏண்டா நீயெல்லாம் படிக்க வந்தியா இல்ல கஞ்சா குடிச்சு சீரழிய வந்தியா, எந்த ஊரு நீ, உங்கப்பா அம்மா....”, என்று தொடர்ந்து பேச நான் பல முறை தடுத்தும் முடியவில்லை. பின்னர் அந்த இளம்டாக்டர் குறுக்கிட்டு, அவன் இல்லை இவன்தான் குடித்தது என்று செளபாவைக் காண்பிக்க, டாக்டருக்கு மேலும் கோபம்  வந்தது. “அமெரிக்கன் காலேஜ் ரொம்பக் கெட்டுப்போச்சு எல்லாப் பயல்களும் கஞ்சா குடித்து கெட்டுப் போறாய்ங்க. எந்த ஊருடா? ஓ ஹால்டலா யாரு இன்சார்ஜ் யார் பிரின்ஸ்பல் ஓ P.T. செல்லப்பாவா? போனைப் போடு வார்டனை   இங்கே கூப்பிடு”, என்று ஒரே அல்லோகலப்படுத்தி விட்டார். செளபாவின் தியான நிலை தொடர, நான்தான் வேர்த்து விறுவிறுத்து ரொம்ப பயந்துபோனேன். படக்கென்று காலில் விழுந்து அவர் பேசுவதை தடுத்தி நிறுத்தி என் தரப்பு நியாயத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.
ஒரு வழியாக சமாதானம் ஆன டாக்டர். ஊசி ஒன்றைப் போட்டு சில மருந்து மாத்திரைகளைத் தந்து எச்சரித்து அனுப்பினார்.
அவர் சொல்வது உண்மைதான். அப்போது அமெரிக்கன் கல்லூரியில் கஞ்சாப் பழக்கம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர் தவிர உள்ளே கேம்பசில் மற்றவர் நடமாட்டம் அதிகமிருக்கும். கஞ்சா விற்பவர்களும் குடிப்பவர்களும் இதில் அடங்குவர். கல்லூரியின் ஏராளமான மரங்களின் அடியே புகைத்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பார்க்கலாம். இந்தப் பழக்கத்துக்கு அடிமையான என்னுடைய சீனியர்கள், ஜூனியர்கள் என்று சில பேரை சாவு வரைக்கும் இந்தப் பழக்கம் இழுத்துச் சென்றது.
ஆனால் பி.டி. செல்லப்பா மிகவும் முயன்று இதனை முற்றிலுமாக மாற்றியமைத்தார். மரத்தடியில் மட்டுமல்ல எங்குமே புகைக்க முடியாத நிலையைக் கொண்டு வந்தார். அக்காலத்தில் மற்றவர் உள்ளே வருவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது.
இப்படி செளபாவுடன் என்னுடைய நினைவுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதன் பிறகு உசிலம்பட்டி சிசுக்கொலை, சீவலப்பேரி பாண்டி என்று பல கட்டுரைகளை ஜூவியில் எழுதி எல்லோருக்கும்  தெரிந்த பத்திரிக்கையாளர் ஆனார். ஆனந்த விகடன் குழுமத்தின் அப்போதைய தலைவரான சீனிவாசன் அவர்களின் செல்லப்பிள்ளை ஆகி, ஒரு கட்டத்தில் ஆவி, ஜூவி  போன்ற பத்திரிகைகளின் மதுரையின் விற்பனைப் பிரதிநிதியாகி ஏராளமான பணம் ஈட்டினார். வறுமையில் வளர்ந்து வாழ்ந்த அவர் தோட்டம் துரவு என்று வளர்ந்தார்.
இதற்கிடையில் உருகி உருகிக் காதலித்த தன் அன்புக்குரியவரை மணந்தார். அந்தச் சமயத்தில் ஜாதி மாறி நடந்த பெரிய புரட்சித் திருமணம் இது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமண வாழ்க்கை இவருக்கு சரியாக அமையவில்லை. புரட்சித் திருமணம் வெகு சீக்கிரம் வறட்சித் திருமணம் ஆகி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தாயிடமும் தந்தையிடமும் மாறி மாறி வாழ்ந்த இவர்களின் பையன் தகாத வழியில் சென்று கடைசியில் கொலை வரை சென்றது, அவரோடு நெருங்கிப் பழகிய எங்கள் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.  
நான் சென்னையில் இருந்து மதுரை செல்லும் போது செளபாவை  போய்ப் பார்ப்பது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக அவர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் . ஒருமுறை சென்னையிலிருந்து என்ன வாங்கி வரட்டும் என்று போன் செய்த போது "ஒன் மென் ஷோ" என்ற பெர்ஃபியும் கேட்டார். நான் அதனைக் கொண்டு சென்று கொடுக்கும் போது " ஏன்  ஒன்  மேன் ஷோ" என்று கேட்டபோது, "ஆம் ஆல்ஃபி இப்ப நான் நடத்துவது ஒன்  மேன் ஷோதானே", என்று தான் பிரிந்து வாழ்வதை வேடிக்கையாகச் சொன்னார்.
சமீபத்தில் நண்பன் சையது அபுதாகிர்  தொடங்கிய 1981-84 வாஷ்பர்ன் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து எங்களோடு அனுதினம் உரையாடிக் கொண்டிருந்தார். குழுவில் எல்லோருக்கும் இது பேரதிர்ச்சி.

Image result for sowba funeral


மதுரையின் அருகில் இருக்கும் செளபாவின் பெரிய தோட்டம் பத்திரிக்கைத்துறை திரைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் பல பிரபல மனிதர்கள் வந்து கொண்டாடிச் செல்லும் இடமாக இருந்தது. இறுதியில் அந்த இடத்திலேயே தன் மகனைப்புதைக்கும் அளவுக்குப் போனது காலத்தின் கொடுமை. அதோடு நெருங்கிப்பழகிய பல பிரபலங்களில் ஒருவர் கூட உதவிக்கரம் நீட்டாதது கொடுமையிலும் கொடுமை.
சில நெருங்கிய நண்பர்களான நண்பர் பிரபாகர், வனராஜ் ஆகியோர் அவரைச் சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அப்போது கூட  சொத்தை எழுதிவைத்துவிட்டு தற்கொலை பண்ணிக் கொள்ளப் போகிறேன் என்று மிகுந்த விரக்தியோடு சொல்லியிருக்கிறார்.
இது கிட்டத்தட்ட தற்கொலைதான். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்து ஏற்கனவே சர்க்கரை வியாதி முற்றிய ஒருவருக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுத்துவிட்டது. நண்பர்களை மீளாத்துயரில் ஆற்றிவிட்டு மறைந்தார் செளபா.
"யாருக்கும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டான்" என்று அவரின் அம்மா சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
நம்பமுடியாத தொடர் நிகழ்வுகளைத் தொடர்ந்து செளபா மறைந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர எங்களைப்போன்றோருக்கு நீண்ட காலம் ஆகும்.
-முற்றும்.

முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில்

  பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 
Image result for fetna convention
Add caption

5 comments:

  1. கருத்துக்களத்தில் பங்கேற்பதற்கு வாழ்த்துக்கள் தலைவரே

    ReplyDelete
  2. சௌபாவின் மறுபக்கம் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete