Monday, June 18, 2018

சௌபாவும் நானும்!!!!


சௌபாவும் நானும்!!!!
Image result for sowba
செளபா என்கிற சவுந்திரபாண்டியன்
"ஆல்ஃபிஈஈஈஈ” சாகும் தருவாயில் இருக்கும் யாரோ ஒருவர் உயிர் தவிப்பில் கதறுவதைப்போல அந்தக்குரல் கேட்டது. வாஷ்பர்ன் ஹாலில் அன்று மாத விருந்து. அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும்   வாஷ்பர்ன் ஹால் ஒரு சிறப்பு வாய்ந்த மாணவர் விடுதி. அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நிறைய விடுதிகள் இருக்கின்றன. ஜம்ரோ ஹால் என்பது பி.யு.சி  இருந்த காலத்தில் மிகச்சிறப்பாய் செயல்பட்டதாம். அது கல்லூரியின் பின்னால் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது. அதற்கு முன்னால்  இருப்பது டட்லி ஹால் என்ற புதிய கட்டிடம். பாருங்கள் புதியகட்டிடம் என்று நான் சொன்னது நான் படிக்கும்போது. ஆனாலும் இப்போதும் 100 வருடப் பழமையான மற்ற விடுதிகளை நோக்கும் பொது இது புதிதுதான். இது சைவ விடுதி. இது தவிர “வேலஸ் ஹால்” என்ற ஒன்றும் மாணவியருக்கு வேலி சூழ்ந்த மற்றொரு விடுதியும் இருக்கின்றன.
இதில் மிகவும் பிரபலமானது 'வாஷ்பர்ன் ஹால்'. இது ஒரு அசைவ விடுதி வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஆட்டுக்கறிதான். சதுர  வடிவில் இரு தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடம்தான் மாணவரின் முதல் சாய்ஸ், இது கிடைக்கவில்லையென்றால் தான் மற்ற விடுதிகளுக்குப் போவார்கள். அமெரிக்கன் கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும் இங்கே தங்கிப் படித்தது நான் செய்த பாக்கியம் என்பேன்.
இங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழு, பொதுச் செயலாளர் தலைமையில் இயங்கும். ஒரு வார்டன்,அவருக்கு பக்கத்தில் ஒரு பங்களா. அவர் தவிர மூன்று அல்லது நான்கு கண்காணிப்பாளர்கள் (சூப்பரின் டென்டென்ட்) உள்ளேயே தங்கியிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் புதிதாய்ச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்களாய் இருப்பார்கள். 
Image result for washburn hall, Madurai
வாஷ்பர்ன் ஹால்
இந்த வாஷ்பர்ன் ஹாலில் தினமும் நடப்பது விருந்துதான் என்றாலும் மாதமொருமுறை பெரிய விருந்து நடக்கும். மட்டன் பிரியாணி, கோழி வருவல், ஐஸ்கிரீம் பீடா என்று அமர்க்களப்படும்.
அன்று உண்டு களித்து உண்ட மயக்கத்தில் தூங்குவதா இல்லை திங்கள் பரீட்சைக்குப் படிப்பதா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அந்தச் சத்தம் கேட்டது. ஹாஸ்டலில் பெரும்பாலும் யாருமில்லை. உண்டு முடித்து வெளியே திரைப்படத்துக்குப் போயிருப்பார்கள். எனக்கு திங்கள் முதல் பீரியட்டில் ஒரு பரீட்சை (Quiz) இருந்ததால் நான் எங்கும் வெளியே செல்லவில்லை படிக்க உட்கார்ந்தாலும் கண்கள் சுழற்றி சுழற்றி அடித்ததால் படிக்கவும் முடியவில்லை.
"டேய் ஆஃல்பி சீக்கிரம் வா" என்று மறுபடியும் அந்தக்குரல் கேட்க, என் அரைமயக்கம் முற்றிலுமாய்த் தெளிந்து இப்போது யார் கூப்பிடுவது என்று எனக்கு உடனே தெரிந்தது. கீழ்த்தளத்தில் இருந்த என் ரூமுக்கு நேர் எதிரே மேல் தளத்தில் இருந்த ரூமில் இருந்து ஜன்னல் வழியாக கூப்பிட்டது செளபாதான்.
செளபா என்கிற சவுந்திரபாண்டியன் அப்போது தமிழ் இலக்கியம் படிக்கும் இரண்டாமாண்டு மாணவன். பேராசிரியர் சாலமன் பாப்பையா துறைத்தலைவராய் இருந்த போது அங்கு மிகவும் பிரபலமாய் இருந்த மாணவன். என்னையும் தமிழ்த்துறையில் சேர்க்க செளபா முயன்றதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
ஜூனியர் விகடனின் முதலாமாண்டு மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மதுரைப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் தான் செளபா. இடது சாரிப் பாசறையில் வளர்ந்ததால் நல்ல பேச்சுத் திறமை வாய்க்கப்பெற்றவர். சந்தக் கவிதை எழுதும் திறமையும் இருந்தது. சங்கரையா போன்ற தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. கம்யூனிஸ்ட் மேடைகளில் ஒரு மாணவப் பேச்சாளராய்க் கலக்கியதால் கல்லூரிகளுக்கிடையே நடந்த பல பேச்சு, கவிதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகள் பெற்றவர். அவருடைய சந்தக் கவிதைகளில் புரட்சிக் கனல் தெறிக்கும். “நியூட்ரான் பல்லுடனும் ஹைட்ரஜன் நாக்குடனும்” என்று தொடங்கும் அவரது கனல் கவிதை இன்றும் செவிகளில் ஒலிக்கிறது.
“உன்னிடத்தில் என்னைத் தந்துவிட்டேன்
எந்தன் உள்ளமெல்லாம் பூத்ததே
உந்தன் சின்ன விழி சிந்தும் புன்னகையில்
ஒளி மின்னலிடை மின்னும் மென்னகையில்
எந்தன் ஜீவனுக்கும் வேர்த்ததே.
என்று அவர் எழுதிய பாடலுக்கு என்னுடைய கிடாரில் கார்ட்ஸ் அமைத்து இசையமைக்க முயன்றது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இதெல்லாம் நடந்தது 1982ல். 1981 ஜூன் முதல் 1984 ஏப்ரல் வரை நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன்.

அதோடு வாஷ்பர்ன் ஹால் வார்டன் “ஜான் சகாயம்” அவர்கள் அனுமதியோடு என்னுடைய முயற்சியில் வெளிவந்த கையெழுத்துப் பிரதியான “வாஷ்ஜேர்ன்” என்ற பத்திரிக்கைக்கு நான் எடிட்டராகவும் என்னுடன் செளபா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து பணியாற்ற நண்பர் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் தன்னுடைய லே அவுட் மற்றும் சித்திரங்களால் சிறப்பித்தார். செமஸ்டருக்கு ஒரு முறை அது அச்சிலும் வந்தது.
செளபா எல்லாவற்றையும் கவிதையிலேயே வெளிப்படுத்த முயல்வார். ஒரு சமயம் அறையில் சிகரெட் பிடித்ததால் மிகவும் கட்டுப் பாடுகளை எதிர்பார்க்கும் வார்டன் ஜான் சகாயம், ரூமை விட்டு வெளியே போகச் சொல்ல, செளபா இப்படி எழுதினார்.
“அதிகாலையில்
அறையைவிட்டு வெளியே செல்ல
ஆணையிட்டார்
அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர்” என்று.
நினைவுகள் எங்கேயே போய்விட்டன. ஆல்ஃபி என்று அதிரடியாகக் கூப்பிட்டதும், தலை தெறிக்க ஓடிச் சென்று மேலே ஏறி செளபாவின் ரூமுக்குள் நுழைந்தேன். பாதி உடல் கட்டிலிலும் மீதி உடல் கீழேயும் கிடக்க செளபாவின் கண்கள் ஒரு பக்கம் மேலே இழுத்துக் கொண்டிருக்க, நாக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. நான் உடனே ஓடி தண்ணீரைக் கொண்டு போய்க் கொடுத்து,
“என்ன செளபா, என்னாச்சு?” என்றேன். பதறியபடி
“ஆல்ஃபி நான் சாகப்போகிறேன், என்னைக் காப்பாத்து” என்று உறக்கக்கத்தினார்.
“வாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” என்று சொல்லி கைத் தாங்கலாக அழைத்துச் சென்றேன். என்னுடைய செட் என்றாலும் வயதில் மூத்தவர் என்பதால் நீங்க வாங்க என்று பேசியே பழகி விட்டேன்.
என்னாச்சு என்று கேட்டபோதுதான். ரூமில் அவருடைய ரூம்மேட் வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் குடித்ததாகவும் ஆனால் அதின் உள்ளே இருந்தது கஞ்சா என்று தெரியவில்லை என்றும் சொன்னார். எனக்குப் பகீரென்றது.
- தொடரும்.   

நண்பர்களே வருகின்ற சனிக்கிழமை ( ஜூன் ௨௩ ) மாலை நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் கோடை விழாவில் அடியேன் பங்கு பெற்றுப்பேசும் பட்டிமன்றம் நடக்க இருக்கிறது .நியூயார்க் , நியூ ஜெர்சியில் வாழும் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன் .

9 comments:


 1. செள்பாவிம் மரணம் பாதிக்கத்தான் செய்ததது.. நல்ல எழுத்தளாராக இருந்த அவர் நல்ல குடும்பத்தலைவராக இல்லாமல் போய்விட்டார் என்பதை பல இடங்களில் படிக்க நேர்ந்தது.... சங்கடமாகத்தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மதுரைத்தமிழன் , பல காரணங்கள் இருக்கின்றன , எதை சொல்வது எதை விடுவது ?

   Delete
 2. தொடர்கிறேன். சௌபாவின் மரணம் ஒரு அதிர்ச்சி. அவர் செய்த கொலையும். காலம்தான் என்னென்ன செய்கிறது...

  ReplyDelete
  Replies
  1. பெரிய அதிர்ச்சிதான் ஸ்ரீராம் .

   Delete
 3. மிகவும் வருந்துகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வேறென்ன நாம் செய்யமுடியும் திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 4. அப்போது நான் மதுரையை மையமாகக் கொண்ட நிஜ நாடக இயக்கத்தில் இணைந்துச் செயலாற்றிக் கொண்டிருந்த காலம்.தங்கள் கல்லூரியின் முப்பெரும் விழா தியாகராயர் கல்லூரிக்கு ஈடு கொடுக்கும் விதமாய் இருக்கும்.அந்த நினைவுகள் தங்கள் கட்டுரையைப் படிக்க வந்து போனது.வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 5. அப்போது நான் மதுரையை மையமாகக் கொண்ட நிஜ நாடக இயக்கத்தில் இணைந்துச் செயலாற்றிக் கொண்டிருந்த காலம்.தங்கள் கல்லூரியின் முப்பெரும் விழா தியாகராயர் கல்லூரிக்கு ஈடு கொடுக்கும் விதமாய் இருக்கும்.அந்த நினைவுகள் தங்கள் கட்டுரையைப் படிக்க வந்து போனது.வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. நிஜ நாடக இயக்கத்தில் இருந்த பல பேர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்தான் .நாம் எப்படி சந்திக்காமல் போனோம் ரமணி ?

   Delete