Thursday, October 13, 2016

இளையராஜாவிடம் மாட்டிய பாடகர் மனோ!!!!!!

அமெரிக்காவில் இளையராஜா பகுதி -3

Image result for mano with ilayaraja
Photo courtesy: Chakpak.com 
அடுத்து வந்த பாடலைப்பாட வழக்கம்போல் கார்த்திக் துள்ளிக்குதித்து வந்து, துறுதுறுவென்று அங்குமிங்கும் அலைபாய்ந்து நிற்பதைப்பார்த்த இளையராஜா, "எப்பவும் ஓடிப்போற மாதிரியே வரியே ", என்று கலாய்க்க கார்த்திக் சிறிது வழிந்தார். அவருடன் அனிதா இணைந்து கொள்ள, "வேதம் அனுதினம் ஒரு கானம்" என்று தெலுங்கில் ஆரம்பித்து தமிழில் முடித்தனர். அனிதாவின் அருமையான குரலைக்கேட்டு மயங்கிய ரசிகர் ஒருவர் ,அனிதா தன் இடத்திற்குச் சென்றபோது 'அனிதா அனிதா" என்று அரற்றியது அரங்கில் எல்லோருக்கும் கேட்க, சிரிப்பொலி எழுந்தது. அனிதா சற்றே நாணத்துடன் போய் அமர்ந்தார்.
Karthik
Karthik Singing
அடுத்து வீணையின் நாதம் எழுந்து BGM  ஆரம்பிக்க பலத்த கைதட்டல் எழுந்தது. Prelude & interlude என்று BGM -க்கும் கைதட்டல் வாங்கும் ரே இசையமைப்பாளர் இளையராஜாவாகத்தான் இருக்கும். மனோவும் சுறுமுகியும் இணைந்து "பொத்திவச்ச மல்லிகை மொட்டை" நோகாமல் பிரித்தனர். SPB,  ஜானகி பாடி பாரதிராஜாவின் மண் வாசனையில் இடம்பெற்ற பாடல். இளையராஜாவின் மெலடிகளில் தலைசிறந்த ஒன்றாகும். இசை வழிந்து காதில் தேனாக பாய்ந்தது. அச்சரம் பிசகாமல் இசைக்குழு அப்படியே வாசித்தார்கள். மனோ சுறுமுகியின் குரல்கள் நன்கு பொருந்தின. பாடி முடித்து  அவர்கள் கிளம்பும் போது மனோவைக் கூப்பிட்டார் இளையராஜா.
"முதல்  சரணத்தை எப்படிப்பாடினாய் ?"
“மாலையிடக் காத்து அள்ளியிருக்கு"( பாடுகிறார்)
"அந்த கடைசி வரியை திரும்பச்சொல்லு.
"அள்ளியிருக்கு".
"அது அள்ளியிருக்கு இல்லை அல்லியிருக்கு. அல்லிப் பூ இருக்கு என்று அர்த்தம்.  அதனாலதான் அடுத்த வரி இறுதியா சொல்லியிருக்கு என்று வருது. அள்ளி என்று வந்தால் கிள்ளி என்றுதான் வரும்.( அரங்கைப்பார்த்து) இப்படித்தான் மனோ வந்து என்னிடம் அடிக்கடி மாட்டிக் கொள்வான்"
மனோ பம்மிக்குனிந்து மீண்டும் சரியாக உச்சரித்துச் சென்றார்.
Sadhna Sargam
Sadhana with Anitha
இளையராஜாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது இன்னொன்று, உச்சரிப்புச் சுத்தம். ஏ.ஆர். ரகுமானிடம் பிடிக்காத ஒன்று உச்சரிப்பு சரியில்லாததுதான். அதோடு இளையராஜா நல்ல கவிஞரும் கூட. பல சூப்பர் ஹிட் பாடல்களை அவரே எழுதியதோடு, பலவற்றிற்கு பல்லவியை அவரே எழுதியிருக்கிறார். அல்லி என்று வருவதால்தான் அடுத்த வரியில் சொல்லி என்று வருகிறது என்று சொல்லும்போது அவருடைய தமிழ் அறிவும், கவிதை உணர்வும் வெளிப்பட்டது. ஆனால் பாடலை எழுதிய வைரமுத்துவைப்பற்றி ம்ஹிம் மூசசு விடவில்லை. இளையராஜாவிடம் பிடிக்காத ஒன்றில் இது தலையாயது.

மனோவும் சாதனாவும் அடுத்து வந்து "மாத்தலாடி"னார்கள். கேட்காத தெலுங்குப் பாடல் அது.
அடுத்து வந்த BGM  ஆரம்பித்தவுடன் என் கண்களில் நீர் நிரம்பியது.  ஷ்யாம்  வந்து அந்தப்பாடலைப்பாட என்னை அறியாமல் கண்ணீர் தழும்பி வடிந்தது. பாட்டு முடியும்வரை நிற்கவில்லை. இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. செல்ஃப் ஹிப்னாசிஸ் செய்து பார்க்க வேண்டும். அந்தப்பாடல் "கோடை கால காற்றே" என்பது. மலேசியா வாசுதேவன் இளையராஜாவுக்குப் பாடிய ஒரு சில மெலடிகளில்  இது முக்கியமான ஒன்று.
அடுத்து மனோ வந்து தெரியாத, அவருக்குத்தெரியாத அல்ல எனக்குத் தெரியாத ஒரு பாடலை இளையராஜா அவரிடம் தெலுங்கிலேயும் உச்சரிப்பு சரியில்லை என்று சொல்லித்திருத்தினார். அப்படிப்பாடினால் அந்தப் பாடலின் அர்த்தம் மாறிவிடும் என்பதை தெலுங்கிலேயே மாத்தலாடினார். தெலுங்கு மொழியிலும்   இருந்த இளையராஜாவின் பாண்டித்யம் வியக்கவைத்தது. சரியாகப் பாடிவிட்டு அதன் பின்னரும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.இளையராஜா அவரிடம் கேட்டார்
“ஏன் நிற்கிறாய்?”
"அடுத்த பாட்டு என்ன?"
"என்கிட்டயே கேள்வி கேட்கிறாயா?”
"இல்லை அடுத்த பாட்டும் நான் பாடனுமான்னு கேட்டேன்"
 இளையராஜா மக்களைப் பார்த்து "பாருங்க என்னயே  கேள்வி கேட்கிறான். என்ன பாடப்போற? , என்ன பாடலைப் பாடி கிழிக்கப் போறன்னு கேட்கிறான். நான் பாத்து வளர்ந்த பய, என்னைக் கேள்வி கேட்கிறான்" ,என்று சொல்லிக் கொண்டே போக, மனோ வந்து காலில் விழ சபை ஆரவாரம் செய்து மகிழ்ந்தது.
இளையராஜா அன்றைய தினம் ஆரம்ப முதல் முடிவு வரை நல்ல மூடுல இருந்தது எல்லோருக்கும் ஆறுதலைத்தந்தது. ஆனால் பாடகர்கள் மற்றும் ஆர்க்கெஸ்ட்ராவில்   ஒரு சிறு பதட்டம் ஒளிந்திருந்தது கண்கூடு .
அடுத்து மிகவும் வித்தியாசமாக செந்தில், அச்சு அசல் கமல் போல பேச சுறுமுகி வந்து "கண்மணி அன்போட காதலன்" என்ற அபிராமிப் பாடலைப்பாடி அப்ளாஸ் அள்ளினார். அடுத்து  கார்த்திக்கும் அனிதாவும் 'ஏகாந்த வேளை"யை தெலுங்கில் பாடி அசத்தினார். அதன்பின் வந்த சித்ரா "நின்னுக்கோரி வர்ணம் வரணும்" என பாடலை அட்டகாசமாக ஆரம்பித்தார். ஆர்க்கெஸ்ட்ரா தன் அற்புதத்திறமையைக் காட்டி அப்படியே ஒரிஜினலாக வாசித்தார்கள். மணி 10.30 வழக்கம்போலஎன்னுடைய அமெரிக்கன் கல்லூரி வகுப்புத் தோழர்களின் 'வாட்ஸ் அப்' குரூப்பில் நண்பன் சாரதா மெஸ் ஓனர் ராஜசேகர் வந்து GM என்றான். இளையராஜாவின் பரம பக்தன். உடனே வாட்ஸாப்பில் அவனைக் கூப்பிட்டுவிட்டு ",இதைக் கேளு", என்று சொல்லிவிட்டு அப்படியே டோனை ஸ்பீக்கருக்கு முன்னால் பிடித்தேன். நின்னுக்கோரியை முடியும்வரை வைத்துவிட்டு "எப்படி" என்று கேட்டேன். ஆள் அசந்துபோனான். சென்னையில் உள்ள நண்பனுக்கு நியூஜெர்சியில் நடக்கும் இளையராஜாவின் கச்சேரியை லை லைவ் ரிலே செய்ததை கேள்விப்பட்டியிருக்கிறீர்களா ?. ராஜசேகர் அதனை குரூப்பில் பகிர்ந்து நன்றி சொன்னான்.
கார்த்திக், பிரியா, யுவன் வந்து "அடியே நான் நில்லுன்னா நிக்காதடி" என்ற பாடலை அதிர அதிர பாட, யுவன் பாடாமல் கார்த்திக்கே முழுதும் பாடியிருந்தால் இன்னும்   நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன்.
அதன்பின்னர் கார்த்திக்கும் யுவனும் "போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி" என்ற பாடலைப் பாடினர். இதில் யுவன் பரவாயில்லை. ஏனென்றால் இதே பாடலைப் பலமுறை பாடியிருக்கிறார். ரொம்ப நேரம் பாடாமல் இருந்த இளையராஜா "வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" என்ற பாடலைப்பாடினார். யுவன் குரலுக்கு இளையராஜாவின் குரல் இந்த வயதிலும் நன்றாகவே இருந்தது.
Ilayaraja
Ilayaraja at Prudential NJ
கீழே இருந்த VIP களில் DSP என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் டிரம்ஸ் சிவமணி இருந்தனர். கடைசி வரை மேடைக்கு கூப்பிடவே இல்லை. மேலே உள்ள திரையில் பார்க்கும்போது தான் தெரிந்தது. டிரம்ஸ் வாசித்தவர்களுள் ஒருவன் வெள்ளைக்காரன், நியுயார்க்கைச் சேர்ந்தவனாம். இளையராஜாவின் US டூரைப்பற்றி  கேள்விப்பட்டு , தன்னுடைய சொந்தக்கச்சேரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருமாதமாக இவர்களுடன் இருப்பதாக சொன்னார் .

 அடுத்து வந்த கார்த்திக்கும் மனோவும் எவர்கிரீன் பாடலான "காட்டுக்குயிலு மனசுக்குள்ள" என்ற பாடலை அற்புதமாகப் பாடினர். கார்த்திக் தொடர்ந்து "மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு"  என்ற பாடலை சிறப்பாகப்பாடினார்.  அதன்பின் 'மனோ ஏ ஆத்தா ஆத்தோரமா" என்ற பாடலைப்பாட சில  பேர் பயந்து பயந்து ஆட ஆரம்பித்தனர். அடுத்து கார்த்திக்கும் மனோவும் இணைந்து "பொதுவாக எம்மனசு தங்கம்" என்று பாட ஆரம்பிக்க, இளையராஜா அதை நிறுத்திவிட்டு, "பொதுவாக எம் மனசு தங்கம்" என்ற வரியை மட்டும் பாடிவிட்டு அப்படியே இறங்கிப்போனார். கொஞ்சம் ரிலாக்சான கூட்டம் ஆங்காங்கே எழுந்து ஆட ஆரம்பித்தது.கச்சேரி முடியும் தருணம் வந்துவிட்டது என நினைக்கும்போதே திடீரென்று சவுண்ட் சிஸ்டம் அப்படியே நின்றுவிட்டது. எல்லோரும் திடுக்கிட்டு உட்கார்ந்து விட மணியைப் பார்த்த எனக்கு உடனே புரிந்துவிட்டது. மணி 11, அரங்கு 11 மணிவரை தான் அனுமதிக்கப்படும். அதற்குள் முடிக்கவில்லையென்பதால் ஆஃப்  செய்துவிட்டார்கள். மனோ  வந்து 'குட்நைட் எவ்ரி படி' என்று சத்தமாகச்  சொல்ல, புரிந்து கொண்ட மக்கள் எழுந்தார்கள். அப்போதுதான் ஞாபகம் வந்தது. பார்க்கிங் கூட 11 மணி வரைதான் என்று. மடமடவென்று வந்து வண்டியை எடுத்துக் கொண்டு, சுமார் 1 1/2 மணி நேர டிரைவ்வில்  வீடு சேர்ந்தோம்.
Ilayaraja
With Suresh, CEO of  8k Miles  Radio
தேர்ந்தெடுத்த பாடல்கள், அழகிய அரங்கு, அருமையான சவுண்ட் சிஸ்டம், இளையராஜாவின் ஆளுமை, திறமையான இசைக்கலைஞர்கள், அட்டகாசமான பாடல்கள், ராஜாவின் நல்ல மூட் என்று மிக அருமையான இசைக் கச்சேரி கொடுத்த திருப்தி ரொம்ப நாள் மனதில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முற்றும்

  

8 comments:

  1. கோடை கால காற்றே நல்ல பாடல். அதுபோலவே இன்னொரு நல்ல பாடல் நண்டு படப்பாடலான "அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா..."

    ReplyDelete
    Replies
    1. பாடல் முழுவதும் ஹாஃப் பீட்டில் வரும் இளையராஜாவின் இன்னுமொரு சாதனைப்பாடல் அது .
      ஸ்ரீராம் உங்கள் ரசனையும் என் ரசனையும் ஒன்றாகவே இருக்கிறது.

      Delete
  2. இளையராஜா பற்றிய மூன்று பதிவுகளையும் இப்போதுதான் வாசித்தேன். அசத்தல்.
    கச்சேரியை கண்முன் கொண்டு வந்துவிடீர்கள் ஆல்ஃபி நண்பரே!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கு என்றும் என் நன்றிகள் உரித்தாகுக செந்திகுமார் .

      Delete
  3. எனக்கு ஐயோ வடை போச்சே !!, அருமையான தருணங்கள் ஆல்பி சார்

    ReplyDelete
    Replies
    1. பாஸ்கர் நம்ம வடையின் , உடை, நடை மற்றும் படை எல்லாம் ஆரோக்கியமாகவே இருக்கிறது அதோடு கொஞ்சம் ஓய்வாகத்தான் இருக்கிறது.
      எனவே அடுத்த முறை வடையும் சாப்பிடலாம் , லட்டும் சாப்பிடலாம் ,கவலை வேண்டாம் .

      Delete
  4. நானும் நியூ ஜெர்ஸியில் சென்ற 3-4 வாரங்களாக இருந்தேன் .. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு போக முடியவில்லை.. உங்கள் அருமையான தொகுப்பின் மூலம் அனைத்தையும் நேரில் பார்த்த உணர்வு..
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா , அடுத்த முறை இந்தப்பக்கம் வரும்போது சொல்லுங்கள் சந்திக்கலாம்

      Delete