Monday, August 8, 2016

தமிழனுக்கு தமிழன் உதவி செய்வானா?

தமிழர் திருவிழா FETNA : 4

Swab Test

ஃபெட்னாவின் தமிழர் திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் போது நடுவிலே பல அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அதிலே  ஜான்  நவீன் என்ற ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டு அவருடைய மனைவி புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் "போன் மாரோ" செய்தால் மட்டுமே காப்பாற்றப்படமுடியும் என்று சொல்லி போன் மாரோவுக்கு எப்படி நாம் உதவ முடியும்? என்று சொன்னார்கள். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்களே ஆகியிருக்கின்றன.

அதனைக் கண்டு பிடித்ததிலிருந்து ஜான் நவீன் பல தளங்களில் அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு, பல தொடர்புகளை ஏற்படுத்தி இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.  

இடைவேளையின் போது ஒரு ஸ்டாலில் அவரைச் சந்தித்தேன். அவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு என்னுடைய பிளாக்கில் எழுதுவதாகவும் உறுதியளித்தேன். அதன்பின் அவரிடம் தொலைபேசிவழியாகவும், ஈமெயில் வழியாகவும் தொடர்பு கொண்டு, போன் மாரோ வைப்பற்றியும் அதற்கு எப்படி நாம் உதவமுடியும் என்று பல தகவல்களை அறிந்து கொண்டேன். அதனை இதோ உங்களுக்கு கீழே தருகிறேன்.
Add caption
1.   கேன்சர்  அல்லது புற்றுநோய் இன்னமும் சமூகத்தில் தண்டனை அல்லது விதி என்றுதான் பார்க்கப்படுகிறது. அது தன் சொந்தக் குடும்பத்தில் உள்ள  நபருக்கு நேரும் வரை யாரும், அது எப்படி தனிநபரையும் அவரின் குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதின் வலியை உணர்ந்து கொள்வதில்லை. நமக்கு மிகவும் தெரிந்த அல்லது குடும்ப நண்பருக்குத் தேவைப்பட்டால் ஒழிய, நாம் பிறருக்கு உதவ முயல்வதில்லை.
2.   ஸ்டெம் செல்களை தானம் செய்வது மூலம் தேவையிருக்கும் ஒருவருக்கு அது பயன்பட முடியும்.
3.   'ஸ்டெம் செல்' அல்லது போன் மாரோ' என்பது ரத்தவகையின் பொருத்தம் அல்ல (Blood Group Match). தானம் செய்பவரும், தானம் தேவைப்படும் நோயாளியும் ஒரே HLA டைப்பாக இருக்க வேண்டும். அது பத்துவகைகளில் பொருந்த வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு, அந்தப்பத்தில் குறைந்தபட்சம்   ஒன்பது வகைகள் பொருந்தினால் மட்டுமே அவர்கள் முயற்சி செய்வார்கள்.   
4.   புற்றுநோயாளியின் HLA (Human Leukocyte antigen) என்பது பத்து லட்சத்தில் ஒருவரில்தான் பொருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது  (Probability).
5.   இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் ரத்தமும், பிளேட்லட் இன்ஃபியூசனும் (Platelet Infusion) எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்று ஏற்படுமென்பதால் அதிக மக்கள் இருக்கும் அல்லது கூடும் எந்த  இடத்துக்கும் இவர்கள் போகமுடியாது.  
6.   நம்முடைய தானம் பெரும்பாலும், இது தேவைப்படும் தமிழருக்கோ அல்லது ஒரு தென்னிந்தியருக்கோ மட்டுமே பொருந்த வாய்ப்பிருக்கிறது.
7.   பலவிதமான உறுப்புதானங்கள் நீங்கள் இறந்தபின் தான் தரமுடியும். ஆனால் ஸ்டெம் செல் அல்லது ரத்த செல் தானம் ஒன்றுதான் நீங்கள் உயிரோடு இருக்கும் போதே கொடுக்க முடியும்.
8.   ரிஜிஸ்டரியில் சேருவது ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதுபோலத் தான். தானம் செய்வது அவ்வளவு விரைவிலோ அடிக்கடியோ நடக்காது. உங்கள் செல் ஒருவருக்குப் பொருந்துவது மிகமிக அபூர்வம். ஆனால் அப்படிப் பொருந்தினால் ஒரு உயிரைக் காப்பாற்றும்  வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்.
9.   நிறைய இந்தியர்கள் இப்படி வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறுதி நிலையில் இருப்பவர்கள்  உங்களைப்போல ஒரு டோனர் செல்லால் அவர்கள் 2-ஆவது ஜென்மத்தைப் பெறுவார்கள்.
10.               இதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் 99% சதவீத டாக்டர்களும் நர்சுகளும் இந்த ரிஜிஸ்டரியில் இருக்கிறார்கள். உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது யாராவது தெரிந்த மருத்துவரிடம் இதனைப்பற்றிப் பேசிப் பாருங்கள். மற்றவிவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

தவறான  கருத்துக்கள் - Myths

1.   எல்லா தானமும் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும்.
2.   இந்த தானம் வலிமிகுந்தது.
3.   உங்கள் எலும்பின் ஒரு பகுதி வெட்டியெடுக்கப்படும்.
4.   இந்த தானம் செய்ய உங்களுக்குச் செலவாகும்.
5.   நீங்கள் நோயாளியின் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.



உண்மைகள் - Facts
1.   PBSC  (Peripheral Blood Stem Cell) என்ற முறை மூலம் தானம் செய்வது அறுவை சிகிச்சையின்றி நடக்கும். போன் மாரோ என்பதுதான் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படும் தானம்.
2.   PBSC  தானம் மூலம், தானம் செய்பவருக்கு ஏற்படும் சிறு சங்கடங்கள் (Side Effects) விரைவில் தீரக்கூடிய ஒன்று. தானம் செய்ப்பவர்கள் ஒரு ஐந்து நாட்களுக்கு முன்னால் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
3.   ஸ்டெம் செல் தானம் என்பது ரத்ததானம் செய்வதைப்போலவே எளிமையானது.
4.   மாரோ தானத்தின் போது உங்களுக்கு ஜெனரல் அல்லது லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்படுவதால் உங்களுக்கு எந்த வலியும் தெரியாது. இந்த முழு சிகிச்சையும் ஒரே மணிநேரத்தில் முடிந்துவிடும். அதே நாளில் வீட்டுக்குத்திரும்பலாம். இரண்டு நாளில் வேலைக்குத் திரும்பலாம்.
5.   மாரோ தானத்தில் ஒரு உயிரைக் காப்பாற்ற 1 முதல் 5 சதவீத மாரோ மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் உங்களுக்கு எந்தப்  பாதிப்பும் இல்லை 4-6 வாரங்களில் அது தானே வளர்ந்துவிடும்.
6.   மில்லியனில் ஒருவராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் உங்கள் உடல் நிலை, வலிமை, சோதிக்கப்பட்டு எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது என்று தெரிந்தால் மட்டுமே தானம் ஏற்கப்படும்.
7.   போன் மாரோ தானத்தில் எலும்பின் ஒருபகுதி வெட்டியெடுக்கப்படும் என்பது தவறான எண்ணம். பெல்விக் போனின் உள்ளே உள்ள திரவமாரோதான் எடுக்கப்படும். அது மட்டுமே ஒரு உயிரைக் காப்பாற்றப் போதுமானது. நோயுற்றவருக்கு PBSC மட்டுமே தேவைப்பட்டால் அது ரத்ததானம் போல்தான்.
8.   தானம் செய்பவர்க்கு தானம் செய்வதற்கு எந்தக் கட்டணமோ செலவோ இல்லை. மாறாக உங்கள் பயணச் செலவு மற்றும் இதர செலவுகளை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும்.
9.   நோயாளி இருக்கும் இடத்திற்கு தானம் செய்பவர் செல்லத்தேவையில்லை. உள்ளூரில் தானம் செய்யும் இடத்தில் கொடுத்தால் கூட அது தேவைப்படும் இடத்திற்கு அனுப்பப்படும்.
ரிஜிஸ்டரியில் சேர்வதற்கு உங்கள் வாயில் காட்டன் ஸ்வாப்  மூலம் திரவம் சேகரிக்கப்பட்டு அதனை சோதனை செய்து கண்டுபிடிப்பார்கள். 

ஜான் நவீனின் மனைவியின் பெயர் மெர்லின். 2013-ல் அவருக்கு Aplastic Aremia இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.அதிலிருந்து கடந்த மூன்று வருடங்களாக அவர் அந்த நோயுடன் போராடி வருகிறார். மேரிலாண்டில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போன் மாரோ சிகிச்சையின் மூலமாக மட்டுமே இதனைக் குணப்படுத்த முடியும்.  இது வரை அவருக்கு ஏற்ற தானம் கிடைக்கவில்லை.

இந்த ரிஜிஸ்டரியில் தானம் செய்யப் பதிவு செய்த இந்தியர்கள் மிகக் குறைவு. அதிலும் தென்னிந்தியர்களோ தமிழர்களோ மிகமிக குறைவு.

ஜான் நவீன் அவர்களின் தொலைபேசி அலைபேசி  எண்கள்: 805-304-5802 அல்லது 201-247-8567.
அவருடைய ஈமெயில் முகவரி: john.navin@gmail.com
நீங்கள் ஜான் நவீனை நேரடியாகத் தொடர்பு கொண்டாலும் அவர் உங்களுக்கு மேலும் விவரம் அளிக்கவும் ரிஜிஸ்டரியில் பதியவும் உதவுவார்.



உயிர்  காக்கும் உபாயம் ஒன்று உங்கள் கையில் இருக்கிறது  என்று  தெரிந்தும் வாளாயிருக்கலாமா  நண்பர்களே .
உதவிக்கரம் நீட்டுவோம் உயிர் ஒன்றைக்காப்போம்.

தமிழர் திருவிழா பதிவுகள் தொடரும்

12 comments:

  1. Alfi, ஜான் நவீன் நல்ல நண்பர். நானும் register செய்திருக்கிறேன். இப்பதிவின் மூலம் பலர் donor ஆக register செய்தால் நலமாக இருக்கும்!!!

    ReplyDelete
  2. நானும் பகிர்கிறேன்.

    ReplyDelete
  3. முகநூலில் ஏற்கனவே பார்த்து இருக்கேன் இவர்களை. நன்றி ஆல்ஃபி. தமிழர்கள்தான் உதவணும்னு இல்லை. எல்லா மொழி பேசுபவர்களிலும் நல்லுள்ளம், உதவும் எண்ணம் உள்ளவர்கள் உண்டுனு நினைக்கிறேன். அவேர்னெஸ் உருவாக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நன்றி, Will do the needful.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருண்.இந்தப்பதிவு தமிழில், தமிழர்களை நோக்கி ஒரு தமிழனுக்காக,எழுதப்பட்ட பதிவு என்பதால் இந்தத்தலைப்பைக்கொடுத்தேன் .

      Delete
  4. இந்த நோயைப்பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். இன்றைக்குத்தான் முழுமையாக தெரிந்து கொண்டேன். மெர்லினுக்கு தானம் அளிப்பவர்கள் கிடைத்து அவர் பூரண குணமடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அறிந்திராத தகவல்கள். நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  6. I already registered in singapore.
    https://bmdp.org/

    ReplyDelete