சீனாவில் பரதேசி -20
Summer palace lake |
இந்த சலவைக்கல் படகு, முதலில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்ததாம்.
1755-ல் சிங்லாங் பேரரசர் (Qianlong Emperor)
காலத்தில்
, இந்த இடத்தில் கீழே பெரிய பெரிய கற்பலகைகளை போட்டு, அதன் மேல் உறுதியான
மரத்தால் ஒரு அழகிய படகு அமைக்கப்பட்டது. சீனர்களின் கட்டடக்கலை பெரும்பாலும்
மரத்தால் அமைக்கப்படுகிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் எளிதில் தீயினால் எரிந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. விலக்கப்பட்ட
நகரம் கூட இருமுறை எரிந்து போனது என்பது உங்களுக்குத் தெரியும்.
அதே போலவே 1860ல் நடந்த ஓப்பியம் போரில், ஆங்கில ஃபிரெஞ்சுப் படைகளினால்
இந்த அமைப்பு முற்றிலுமாகத் தகர்ந்து போனது. அதன்பின் 1893ல் தான் பேரரசி சிக்சியால் இது மீண்டும்
நிர்மானிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் இரு அடுக்குகளைக் கொண்ட இந்த மாபெரும் படகு கொஞ்சம் ஐரோப்பியக்
கட்டடக்கலையினையும் இணைத்து கட்டப்பட்டது.
மேக நோயால் இறந்துபோன தன் மகனுக்குப்பதிலாக தன் உறவினனான
குவாங்சு பேரரசை நியமித்தாலும்,பேரரசி சிக்ஸி
அதிகாரம்முழுவதையும் தன் கையில் மட்டுமே வைத்துக் கொண்டாள். ஒரு சமயத்தில்
தன்னிச்சையாக செயல்படத்துணிந்த பேரரசரை அங்கே வீட்டுச் சிறை சாரி அரண்மனைச்
சிறையில் அடைத்து வைத்ததையும் ஏற்கனவே சொன்னேன்.
Marble boat. |
எனவே வலுவில்லாமல் இருந்த கப்பற்படையை மீட்டு உருவாக்க
ஒதுக்கப்பட்ட பணத்தில் 22 மில்லியன் வெள்ளிக் காசுகளை எடுத்து (1
மில்லியன் என்பது 10 லட்சம் என்று கணக்குப் பார்த்தால் இது 2
கோடியே 20 லட்சம் வெள்ளிக் காசுகள் ஆகும், அடேங்கப்பா) சம்மர் பேலஸை
மராமத்து செய்வதற்கு கட்டளையிட்டார்.
அதில் பெரும்பகுதி இந்த மார்பிள் படகுக்குச்
செலவழிக்கப் பட்டதாம்.
எதற்கு இந்த ஆடம்பரம் என்றால் பேரரசி சிக்ஸியின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இது அமைக்கப்பட்டதாம்.
பேரரசரின் ஆலோசகர்கள், தளபதிகள் குறிப்பாக கப்பற்படைத்தளபதிக்கு இது கொஞ்சம் கூட
பிடிக்கவில்லை. ஆனால் வாயைத்திறந்தால் பதவி மட்டுமல்லாமல் தலையும் போய்விடும்
என்பதால் மூச்சு விடவில்லை.
Add caption |
இளவரசர் சுன் (chun) என்பவர்தான் கப்பற்படைக்கு பொறுப்பேற்று இருந்தவர். காலாட்படை
மிகவும் வலுவாக இருந்தாலும் சீனாவுக்கு புதிது புதிதாக வந்த ஐரோப்பிய எதிரிகள் கடல்
வழியாக வந்ததால் அவர்களை தடுப்பதற்கு வேண்டிய பலம் சீனாவிடம் இல்லை. ஓப்பியம் போர்
போன்ற தாக்குதல்கள் கடல்வழிதான் நடந்தது.அதனால் தான் கப்பற்படையை வலுப்படுத்த இளவரசர்
சுன் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதோடு அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால் இவருக்கு இந்தப்பதவி கொடுத்தவர் பேரரசி சிக்ஸி ஆவார். அது மட்டுமல்லாமல் சிக்ஸியின் மகன் இறந்து
போனதால் சுன் அவர்களின் மகனையே தத்தெடுத்து பேரரசராக தேர்ந்தெடுத்தவரும்
சிக்ஸிதான் . அந்தப் பேரரசர்தான் குவாங்சு பேரரசர். அப்படியிருக்கும் போது பேரரசி சிக்ஸியின்
60-ஆவது பிறந்த நாளுக்கு கப்பற்படைக்கு ஒதுக்கிய பணத்தைச் செலவழித்தால் அதனை இளவரசர்
சுன் எப்படித் தட்டிக்கேட்க முடியும் அல்லது பேரரசர்தான் எப்படித் தட்டிக்கேட்க முடியும்.
ஆனால் அன்று ஆடம்பரமாகப் பார்க்கப்பட்ட இது, இன்று கலைப்படைப்பின் உச்சமாக மதிக்கப்பட்டு
உலகமெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. தாஜ்மஹால் கூட அப்படித்தானே கட்டப்பட்டது.
ஒவ்வொரு தளத்திலும் ஒரு பெரிய கண்ணாடி இருக்கிறது. இது
ஏரியின் நீரைப் பிரதிபலிப்பதால் படகு நகர்வதுபோலவே தெரிகிறது. இருபுறமும் உள்ள துடுப்புச் சக்கரங்கள் ஏதோ
உண்மைப்படகு போலவே தோற்றமளிக்கிறது. இந்தப்படகின் ஓரங்களில் உள்ள வெற்றுத் தூண்கள்,
மேல் மாடியிலோ
கீழோ தேங்கும் நீரை வெளியேற்றும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன .இந்த
மழை நீர் வெளியேறுவதற்கு நான்கு டிராகன் தலைகள் அமைக்கப்பட்டு மழைநீர் அதிகமாகும்
போது அது தூண்கள் வழியே கீழே வந்து டிராகன் தலைகளின் வாயிலிருந்து வெளிப்படுமாம்.
அப்போது பார்க்க அது ஒரு மாபெரும் புஷ்பக விமானம்போல் காட்சியளிக்குமென லீ
சொன்னான். ஆனால் குளிர்காலத்தில் வந்த எனக்கு அதைப்பார்க்க வாய்ப்பில்லை என
பெருமூச்சு விட்டேன். இந்தப் படகு அமைக்கப்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றை லீ சொன்னான்.
பேரரசர் டைஜோங் (TAIZONG) ஆளும் போது ,அவர் கீழே இருந்த வெய் ஜெங் (Wei
zheng) என்ற மதிமந்திரி, பேரரசரிடம் ஒரு கருத்தைச்
சொல்லியிருக்கிறார். "படகை மிதக்க வைக்கும்
நீர், அந்தப் படகையே சில சமயங்களில் கவிழ்த்து விழுங்கி விடும்" என்று சொன்னாராம்.
அதன் அர்த்தம், "பேரரசரை உயர்த்தி வைக்கும் மக்களை நன்கு கவனிக்காவிடில், அந்த
மக்களே பேரரசரை கவிழ்த்து விடுவார்கள்" என்பதாகும். இதனை மனதில் வைத்துக் கொண்டு
தான் சிங்லாங் பேரரசர் ஒரு பெரிய படகை கல்லின் மேல் நிரந்தரமாக அமைத்து பேரரசையோ பேரரசரையோ
யாரும் கவிழ்க்க முடியாது என்று சொல்லும் வகையில் நிறுவினாராம்.
கன்மிங் ஏரியின் ஒருபகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படகு 36 மீட்டர் நீளமும்
எட்டு மீட்டர் உயரமும் கொண்டது.
பேரரசி சிக்ஸி சில சமயங்களில் தன்னைப் பார்க்க வருபவர்களை இங்கேயே சந்தித்தாராம். இரவு
வேளையில் நிலாக்காலங்களில் இந்தப் படகில் அமர்ந்து பொழுதுபோக்குவது அவருக்கு மிகவும்
பிடித்த ஒன்றாம்.
நீரும், நிலமும், கோவில்களும், அரண்மனைகளும் சூழ்ந்து அந்த இடம் தேவலோகம் போலக்
காட்சியளித்தது. அங்கிருந்து பிரிந்து வருவதற்கு மனசே இல்லாவிட்டாலும் சீன அக்ரோபேட்டிக்
ஷோவுக்கு நேரமாகிவிட்டது என்று லீ சொன்னதால்
அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தோம்.
உள்ளேயிருந்து வெளிவந்து மறுபடியும் சப்வே பயணம் செய்து பீஜிங்கின் மையப்பகுதிக்குச்
சென்றோம். சீன அக்ரோபேடிக் ஷோ நடக்கும் பிரமாண்ட தியேட்டருக்கு அருகில் சென்றோம். தியேட்டரில்
கூட்டத்தைக் காணோம். ஆனால் அதன் அருகில் உள்ள சிறுகடையின் முன் நீண்ட வரிசையில் மக்கள்
நின்றனர். லீயைக் கேட்டேன் ,தியேட்டருக்கு டிக்கட் இங்குதான் வாங்க வேண்டுமா? என்று.
- தொடரும்
ஸ்வாரஸ்யமான தகவல்கள்.... தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteBalance story alfi.u even beat our weekly kumudam .They usually do for their hike of Business but u tempting us to wait ha
ReplyDeleteThank you Raja for comimg.
Delete