Thursday, August 18, 2016

நியூ ஜெர்சி தமிழர் திருவிழாவில் பறை ஆட்டம் !!!!!!!!!


FETNA-5


நான் நிறைய தமிழ்ச் சங்க நிகழ்வுகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் போயிருக்கிறேன். ஆனால் Fetna -வின் விழாவில் தமிழ் உணர்வு அதிகமாகக் காணப்பட்டது போல் தெரிந்தது.  எந்தத் தமிழ் விழாவும் ஒரு மாலை நேரத்தில் ஆரம்பித்து 2 அல்லது 3 மணிநேரத்துக்கு மேல் போகாமல், மிஞ்சிப் போனால் ஒரு இரவு உணவுடன் முடிந்துவிடும். ஆனால் ஃபெட்னா நிகழ்வு, நான்கு நாட்கள் நடந்து அங்கேயே தங்கியிருந்து தமிழமுதம் பருகியதால் ஒருவேளை எனக்கு அப்படித்தோன்றியதோ என்னவோ?.
ஃபெட்னா விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு தமிழ்ச்சங்கமும் குறைந்தபட்சம் ஒரு கலை நிகழ்ச்சியைக்கொடுத்தனர். அவை நடனங்கள், நாட்டிய நாடகங்கள் இசை, மேடை நாடகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தன.

குறிப்பாக தமிழ் விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில், பரத நாட்டியம் தான் பிரதானமாக இருக்கும். அல்லது சினிமாப் பாடல்களுக்குஆடும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
ஆனால் நான் பார்த்து அதிசயத்த ஒரு நிகழ்வு என்ன வென்றால், இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய நடனங்களான, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகியவை பிரதான இடம் பிடித்தன.
குறிப்பாக வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில்,  வில்லுப்பாட்டு, காவடி, புலியாட்டம், மொளப்பாரி, கும்மியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், குறவன் குறத்தி என்று முற்றிலும் தமிழரின் பாரம்பரிய நடனங்களைக் கொடுத்து அசத்தினர்.
அதே போல் டெலவர் தமிழ்ச்சங்கமும் அதற்கு அடுத்த நாள் ஜீலை 3ஆம் தேதி, கரகாட்டம், ஒயிலாட்டம், புலிவேஷம், மயிலாட்டம் ஆகியவற்றை ஆடி மகிழ்வித்தனர்.

இதைத்தவிர கனக்டிக்கட் தமிழ்ச் சங்கம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவியான, பறை ஆட்டம் ஆடி அதிசயிக்க வைத்தனர். அதன் தலைவர் பறை என்பது ஒரு தாழ்த்தப்பட்டவர் பயன்படுத்தும் சாவு இசைக்கருவி இல் லை, அது தமிழரின் பாரம்பரிய கொண்டாட்ட இசைக்கருவி என்று சொல்லி, பறைமேல் பலர் கொண்டிருந்த தப்பான எண்ணத்தை மாற்றினார். அதோடு ஆண்களோடு பெண்களும் இணைந்து பறை வாசித்தது அதிசயிக்க வைத்ததோடு சிறுபிள்ளைகளும் வாசித்தனர்.

நியுஜெர்சி தமிழ்ச்சங்கம் 'பஞ்ச பூதங்கள்'  என்ற தலைப்பில் நடத்திய நாட்டியத்தில் பஞ்சபூதங்களின் பெயரில் வரும் சினிமாப் பாடல்களுக்கு ஆடி அசத்தினர், காற்றே என் வாசல் வந்தாய், நீ வரும்போது, தீ தித்திக்குதே, கலகவென மேகம் ஆகிய பாடல்களைக் உட் கொண்டதாய் அது அமைந்தது.
NJ தமிழ்ச்சங்கம் ஆடிய “திருமந்திரம்’ நடனமும் நன்றாகஇருந்தது. விசா பிரச்சனையால் வரமுடியாது போன "கங்கை கொண்ட சோழன்" நாட்டியக்குழுவுக்குப் பதிலாக, ராஜராஜ சோழனின் நாட்டிய நாடகம் நடந்தது .மகனின் வரலாறு இல்லாவிட்டாலும் அப்பாவின் வரலாறு அதை விடப்பெரிதுதானே. ராஜராஜ சோழனின் ராஜபவனி கலையரங்கத்தின் முற்பகுதியிலிருந்து பார்வையாளர்கள் வழியாக நடந்து மேடைக்குப் போனது எதிர்பாராதது. அதேபோல ஜீலை 3ல் நடந்த "சீதா சுயம்வரம்" நாட்டிய நாடகமும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக நாட்டிய உறுப்பினர்களே தேர் போல உருமாறி ராம பவனி வந்தது மிகவும் தத்ரூபமாக இருந்தது.  
டாக்டர் பாலா சுவாமி நாதன் நடத்தும் ‘நியூயார்க் தமிழ்ப்பள்ளி’ சார்பாக நடந்த ஸ்கிட்டில் சிறுபிள்ளைகள் தமிழில் பேசி தமிழ்ப்பள்ளியை மேடையில் கொண்டுவந்த தனர். அது எவ்வளவு சிரமம் என்பது இங்கு வளரும் பிள்ளைகளின் தந்தையாகிய எனக்கு நன்கு தெரியும்.
அதேபோல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் வழங்கிய கண்ணகி நாடகம், சில நாட்டியங்களை உள்ளடக்கி நடந்தது. சிறந்த நாட்டியக்கலைஞர் ஸ்ரீதர் தயாரித்த இந்த நாடகத்தில் பல புதுமையான டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருந்தனர். மேடை அமைப்பு, சிம்மாசனம் மற்றும் அரசவை ஆகிய சிறப்பாக இருந்தன. அதனை வடிவமைத்தவர் எனது நண்பர் சக் (chuck) என்றழைக்கப்படும் சிற்றரசு. குறிப்பாக மேடை சீன் மாற்றுவது போல் பின்புறம் இருந்த வீடியோ ஸ்கிரீனில், தெரு மற்றும் அரசவையைக் கொண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது. இறுதியில் கண்ணகி மதுரையை எரிக்கும் நிகழ்வில், பின்புற வீடியோவில் தீ எரிய, மேடையில் இரத்தச்சிவப்பான சேலைகளை அங்கும் இங்கும் அசைக்க, அது தீ பற்றிக்கொண்டு எரிவது போலவே தெரிந்தது. குறுக்கும் நெருக்கும் மக்கள் பரிதவிப்புடன் ஓடியது மதுரையின் அந்தக்காலத்துக்கே கொண்டுபோனது.  சொந்த ஊரான மதுரை   எரிந்ததை பார்க்கையில் என்னை அறியாமலேயே கண்களில் நீர் திரண்டது .
 மேடையில் ஒரு கிராம மணம் திகழ தமிழரின் திருமணம் எப்படி நடக்கும் என்பதையும் நிகழ்த்திக் காண்பித்தார்கள்.
ஆலபனி தமிழ்ச் சங்கம் நடத்திய சாலைவிதிகள் பற்றிய மைமிங் நிகழ்ச்சியும் சூப்பராக இருந்தது.  
G Balachander IAS
சிறப்பு அமைப்பாளராக வந்த G. பாலச்சந்திரன் IAS, பாரதிதாசன் 'பாவலனா, தமிழ்க்காவலனா' என்ற தலைப்பில்  நல்ல ஒரு சொற்பொழிவாற்றினார். ஒரு IAS அதிகாரி தமிழ் ஆர்வலராக மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்ககளை  ஆழமாக அறிந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Mayuranathan 
தமிழ் விக்கிப்பீடியாவை ஆரம்பித்து, 85000 கட்டுரைகள் வரை தொகுத்த இலங்கைத்தமிழ் உணர்வாளர் மயூரநாதன், தேடித்தேடி தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் தஞ்சாவூர் தமிழ்மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மயூரநாதன், “இந்தியாவில் இந்திக்குப்பின்னர் பேசப்படும் இரண்டாவது பெரிய மொழியான தமிழ், உலகின் 18-ஆவது பெரிய மொழியாகவும் இருக்கிறது”, என்ற தகவலைச் சொன்னார். இவர் கனடாவில் இருக்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கிய "இயல்விருதை" சமீபத்தில் பெற்றிருக்கிறார்.


அதோடு கவிஞர் அறிவுமதி இயற்றிய தமிழில் பாடக்கூடிய பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அறிமுகப்படுத்தப் பட்டது. நல்லஇசையுடன் கூடிய இந்தப் பாடல் எளிமையான வரிகளுடன் அமைந்து எல்லோரும் பாடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த வாரம், சிறப்பு நிகழ்வுகளான கவியரங்கம், கருத்துக்களம், குறள் தேனி, உலகத்தமிழர் விழிப்புணர்வு அமர்வு, ஆகியவற்றைப்பற்றிச் சொல்லுகிறேன். அதோடு அரிசி சாப்பிடலாம் என்ற நல்ல செய்தியைப் பற்றிய  Dr.சிவராமனின் கருத்துக்களையும் சொல்கிறேன்.

- தமிழர் விழா பதிவுகள் தொடரும்.   

10 comments:

  1. நன்றி அய்யா ஆல்பிரட்.
    அருமையான பதிவு.
    விளக்கங்களுடன் படங்கள் நல்ல ஆவணமாக அமைகிறது.

    ReplyDelete
    Replies
    1. நாஞ்சி பீட்டர் அய்யா,உலகளாவிய ஒரு சிறந்த தமிழர் விழாவைக்கொடுத்த உங்களுக்கு அல்லவா நாங்கள் நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கிறோம் .

      Delete
  2. விழா பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. தகவல்களுக்கும் உங்கள் எழுத்து வடிவத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  4. நிகழ்வை குறிப்பெடுத்து மறக்காமல் பதிவிட்டு நிறைய தமிழ் உள்ளங்களுக்குடன் பகிரும் நீங்கள் பாராட்டுக்குறியவர். வாழ்த்துக்கள் ஆல்பி அய்யா!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரூர் பாஸ்கர்.என்ன இது புதுசா எல்லோரும் அய்யான்னு ஆரம்பிச்சிட்டிங்க.

      Delete
  5. இங்கிருந்தும் கலந்து கொள்ள முடியாமல்
    போனது வருத்தம்ளித்தது
    பதிவைப்படிக்க வருத்தம் இன்னும் கூடுகிறது
    பகிர்வுக்கும்தொடரவும் நலவாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதற்கென்ன அடுத்த முறை கலந்துகொள்ளுங்கள் ரமணி.

      Delete