பொங்கல்
சிறப்புப்பதிவு -1
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முடிந்த கையோடு அவசரமாய் பொங்கல்
வந்து விடும் என்பது தெரிந்ததுதான். ஆனால்
இந்த ஆண்டு ரொம்பவும் சீக்கிரமாய் வருவது போல்
தெரிகிறது .பொங்கல் பண்டிகை மட்டுமல்ல எந்தப் பண்டிகையிலும் நன்றாக சாப்பிடுவது என்பது
முக்கியமான மகிழ்ச்சி தரும் விஷயம். இப்போதெல்லாம் பெரும்பாலானவர் பசிக்கும் சாப்பிடுவதில்லை
ருசிக்கும் சாப்பிடுவதில்லை. ஏதோ நேரத்திற்குச் சாப்பிட வேண்டுமே என்று அவசர அவசரமாக
ஏதோ கடைமைக்குச் சாப்பிடுகிறோம். அதோடு இது எவ்வளவு கலோரி, சுகர் பிரச்சனை, கொலஸ்ட்ரால்
பிரச்சனை என்று பயந்து சாப்பிடுபவர்களும் ஏராளம்.
ஆனால் உணவை தேவைப்படும் அளவுக்கு குறைவாகவோ
அதிகமாகவோ இல்லாமல் அளவோடு, நிதானமாக, பசித்து, ரசித்து, ருசித்துப் பின் புசித்தோமென்றால்
உணவே மருந்தாகும். இல்லையெனில் மருந்தே உணவாகி விடக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மெதுவாக,
மென்று நிதானமாக சாப்பிட்டோ மென்றால் சீரணக்கோளாறு
ஏன் வரப்போகிறது? .
பொங்கல் பண்டிகையில் முக்கியமான உணவு இனிப்புப்
பொங்கல் மற்றும் வெண்பொங்கலை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள்.
என்ன இனிப்புப் பொங்கல்னு சொன்னவுடன் வாயில்
எச்சில் ஊறுதா? மனுசனுக்கு நாவடக்கம் வேணும். இல்லேன்னா சீக்கிரம் வேறு ஒரு அடக்கம்
நடந்திரும். அதான் டாக்டர் சொல்லியிருக்கார்ல, அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப் போடணும்.
பேசாம வெண் பொங்கலுக்கு மாறிடுங்க.
கடந்த சனிக்கிழமையில் ஃபிளஷிங்கில் இருக்கும் பிள்ளையார்
கோவிலின் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே
கைமணக்க நெய்மணக்க சூடான வெண்பொங்கலில் சட்னி மற்றும் சாம்பாரை ஒருங்கிணைத்து ஐவிரல்
இணைத்துப் பிசைந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளைக் காரர்களை சட்டை செய்யாது
கவளங்களை அமைத்து கபக்கினேன். தொட்டுக் கொள்வதற்கு ஆமை வடைகள். அமெரிக்கன் கல்லூரியின்
விடுதியில் சாப்பிட்ட இந்த காம்பினேஷன் அபாரமானது. நீங்களும் இந்த கூட்டமைப்பை சாப்பிட்டுப்பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கும். ஆமை வடை என்று மதுரையில்
அழைக்கப்படும் பருப்பு வடை இந்தக் கூட்டணிக்கு மிகவும் அவசியம்.
இதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது.
அதனை கொஞ்சம் விளாவாரியாகப் பார்ப்போமா?
முதலில் பொங்கல் சூடாக இருக்க வேண்டும். அதிலுள்ள
நன்கு வெந்த மிளகுகளை சிலர் பொறுக்கி எடுத்து ஒதுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அப்படிச் சாப்பிட்டால் அது பொங்கலே இல்லை. வெறும் சோறு. ஒரு காலத்தில் நம்மூர் மிளகுக்கு
ஐரோப்பாவில் எடைக்கு எடை தங்கம் கொடுத்திருக்கிறார்கள்.
மிளகு என்றால் சும்மா இல்லை. மிளகுக்காரம் மற்ற காரங்களை விட மேலானது உடம்புக்கு நல்லது. தொண்டைச்செருமல்
நெஞ்செரிச்சல் ஆகியவற்றை சரி செய்துவிடும். சீரணத்திற்கும் நல்லது. அதோடு வெண்பொங்கலில்
கருப்பு நட்சத்திரங்களாய் பள பளக்கும் மிளகை எடுத்துப்போட எப்படித்தான் உங்களுக்கு
மனசு வருதோ? மிளகை முழுதாக போடப் பிடிக்கவில்லை
என்றால் லேசாக மிக்சியில் பொடித்துப் போடலாம்.
அதில் உள்ள முந்திரிப்பருப்புகள் வெந்திருக்கக்
கூடாது. இலேசாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புகளை பொங்கல் மேல் தூவியிருக்க வேண்டும்.
பொங்கலைச் சாப்பிடும் போது முந்திரிப்பருப்பின்
மொறுமொறுப்பு கூடுதல் சுவையைக் கொடுக்கும். அதற்காக முந்திரிப்பருப்பை அள்ளிப் போடக்
கூடாது. கிள்ளித்தான் போட வேண்டும். அதிகம் போட்டால் பொங்கலின் சுவையைக் கெடுத்துவிடும்.
பொங்கல் ரொம்பவும் குழையவும் கூடாது, விரைவிரையாக
இருக்கவும் கூடாது. இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டும். ரொம்பவும் குழைந்தால் அது
கூழ் போல் ஆகிவிடும். நம்போல் இளைஞர்களுக்கு (?) அது சரிவராது.
பொங்கல் சூடாக இருக்க வேண்டும் எனச்சொன்னேன்.
கையைச் சுட வேண்டும் ஆனால் நாவைச்சுட்டுவிடக் கூடாது அந்த மாதிரி பக்குவத்தில் சூடு
இருக்க வேண்டும். அப்புறம் ஒரு வாரம் எந்த சுவையும் தெரியாது.
பொங்கலில் இஞ்சி சேர்ப்பார்கள். இதுவும்
ஜீ ரணத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இஞ்சியை சிறிதளவே சேர்க்க வேண்டும். இல்லையென்றால்
சாப்பிடுபவர்கள் இஞ்சி தின்ற எதுவோ போல் ஆகிவிட வாய்ப்புண்டு. இஞ்சியை மிகச் சிறிதாக
நறுக்கிச் சேர்த்தால் அது பொங்கலோடு நற்சுவையைத் தரும். பெரிதாகப் போட்டால் அது சுவையைக்
கெடுத்து வாயையும் கெடுத்துவிடும், ஜாக்கிரதை.
முதலில் சட்னியை எப்படிச் சேர்ப்பது என்று
சொல்கிறேன். சட்னியில் பலவகைச் சட்னிகள் உள்ளன, பொட்டுக்கடலை தேங்காய், வேர்க்கடலை,
புதினா, தக்காளி, மிளகாய், காரச்சட்னி என பலவகைகள் உண்டு. கவனமாக கேளுங்க பொங்கலுக்கு
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தவிற வேறெதையும் சேர்த்தீங்க அம்புட்டுத்தான் வாயே கெட்டுறுங்க .
முதலில் தேவையான அளவு பொங்கலை எடுத்து தட்டில் போட்டு, அதன் மைய பகுதியில் சிறிய குளி
ஒன்றை அமைத்து, தேங்காய்ச்சட்னி கெட்டிச்சட்னி அல்லது பக்குவமாக கரைக்கப்பட்ட சட்னியை
அதில் ஊற்ற வேண்டும். நிறைய ஊற்றக் கூடாது கவனம். பின்னர் அதனை பொங்கல் முழுவதும் பரவும்படி
பிசைய வேண்டும். கவனம் பிசையும் போது உள்ளங்கையில் படக்கூடாது. அந்த சட்னி தாளிக்க உதவும் முழு உளுந்தம்பருப்பும் ஊறிவிடாமல் மொறுமொறுவென்று இருந்தால் இன்னும் சிறப்பு.
அடுத்தது
சாம்பாரை எப்படிச் சேர்க்க வேண்டுமென சொல்கிறேன். சாம்பாரில் பொதுவாக இரண்டு வகைகளில்
விடுதிகளில் சமைப்பார்கள். சாதத்திற்கு ஒன்றும் சிற்றுண்டி அதாவது இட்லி / தோசைக்கு
வேறொன்றும் இருக்கும். இதில் எந்த வித சாம்பாரையும்
சேர்த்துக் கொள்ளலாம். சட்னி ஊற்றிப் பிசைந்த பொங்கலில் கொஞ்சம் பெரிய குழி அமைத்து
சாம்பாரை தளதளவென்று ஊற்றிப் பிசைய வேண்டும். இப்போது சட்னி சாம்பார் இணைந்த பொங்கல்
சமவிகிதத்தில் கலந்திருக்கும். கையில் பிசைந்தால் மட்டுமே இது உத்தமம். இல்லையென்றால்
ஒவ்வொரு கவளமும் வேறுவேறு சுவை தந்து சலித்துவிடும்.
பக்கத்தில் மிதமான சூட்டில் ஆமை வடைகளை
வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஆமை வடை சூடாக இல்லையென்றால் மைக்ரோவேவில் சூடுபடுத்தும்
தப்பைச் செய்துவிடாதீர்கள். ஆமை வடை மெதுவடையாகி சொதப்பிவிடும். சிறிய கிரில் இருந்தால்
அதில் சூடு பண்ணுங்கள். இல்லை எனில் தவா அல்லது தோசைச் சட்டியிலும் சூடு பண்ணலாம். ஏனென்றால் மொறு மொறுப்பு மிக மிக
முக்கியம்.
இப்போது ஒரு கவளம் பொங்கலை வலது கையால்
எடுத்து வாயில் வைத்து மெதுவாக மென்று தின்று விழுங்கியவுடன், இடது கையில் இருக்கும்
ஆமை வடையை ஒரு கடிகடித்து மென்று விழுங்கவும். கவனம் ஸ்பூனில் சாப்பிடுவது அதுவும்
பொங்கலன்று சாப்பிடுவது சட்டப்படி குற்றம். இப்படியே மாற்றி மாற்றி சுவையுங்கள். பொங்கலின்
மணமும் குணமும் சுவையும் பெரிதும் கூடும் என்பதில் சந்தேகமில்லை. கவனம் அளவு முக்கியம்.
கை மணக்க நெய் மணக்க வாய் மணக்க சாப்பிடுங்கள் .பொங்கலைக் கொண்டாடி மகிழுங்கள் . சாப்பிட்டு
முடித்து கூச்சப்படாது விரல்களை ஒவ்வொன்றாக வாயில் நுழைத்து சுத்தப்படுத்தலாம். அதன்
சுவை தனி. ஆனால் மீண்டும் முகர்ந்து பார்க்கவேண்டாம்
.கை மணக்க நெய் மணக்க என்று சொன்னது தப்பாகி
வேறெதுவோ மணக்க வாய்ப்பிருக்கிறது கவனம் . எனவே நாவால் ஏற்கனவே சுத்தப்படுத்திவிட்டாலும்
கைகளை நன்றாக கழுவிவிடுவது உத்தமம் .
இப்போது ஆசைப்படுபவர்களுக்காக இனிப்பு
பொங்கல் சாப்பிடுவது எப்படி என்று சொல்கிறேன்
ஓகேவா.
இப்படி வெண்பொங்கலை சாப்பிட்டு முடித்து
ஒரு மணி நேரம் கழித்து ஒரு சிறிய தேக்கரண்டியில் கவனம்அன்னக்கரண்டி அல்ல தேக்கரண்டியில் பாதியளவு இனிப்புப் பொங்கலை
எடுத்து லேசாக நுனிநாக்கில் சுவைத்து ஒரு 15 நிமிடம் செலவழித்து சிறிது சிறிதாக உண்ணுங்கள்.
சுகருக்கும் நல்லது பிகருக்கும் நல்லது .பொங்கலோ
பொங்கல்.
அடுத்த
பகுதியில் கரும்பு சாப்பிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
தொடரும்
ஹா... ஹா... ஹா... வெண்பொங்கலை நாங்கள் அப்படி மொத்தமாக சட்னி சாம்பார் ஊற்றி பிசைந்து விடமாட்டோம். கவளம் கேவலமாகத்தான். ஒரு உருண்டை சட்னியுடன். ஒரு உருண்டை சாம்பாருடன். ஒரு உருண்டை இரண்டும் கலந்து. ஒரு உருண்டை ப்ளெயின் பொங்கல் மட்டும்.
ReplyDeleteஅப்புறம் முக்கியமான துணைப்பொருள் ஒன்றை விட்டு விடீர்கள். சட்னி சாம்பாரைவிட இதற்குப் பொருத்தமானது, மிகப்பொருத்தமானது கொத்ஸு. சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு.
சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு என்பது ஒரு வேளை சென்னை போன்ற பகுதிகளில் இருக்கலாம் .என்னைப்போன்ற கிராமத்துக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது ஸ்ரீராம்
Deletekatharikkai kpthsu thaan romba poruthamaana side dish! nice article Alfy, want to eat Pongal right now with black pepper in it!
ReplyDeleteThank you Ranga.
Deleteபொங்கல் சாப்பிடுவது எப்படி? வித்தியாசமான பதிவு. மதுரையில் தயாராகும் ஆமைவடை ருசி மிகுந்தது. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கு நன்றி முத்துச்சாமி.
Deleteவாயில் நீர் ஊறுகிறது
ReplyDeleteபடிக்க படிக்க
அன்பு , நீங்கள் நினைத்தால் உடனே சாப்பிட்டுவிடலாமே ,எங்களுக்குத்தான் இங்கு கிடைக்காது
Deleteஉண்மை சார்
Delete