முத்தமிழில் ஒரு தமிழ் இசைத் தமிழ். இயல்,
இசை, நாடகம் என்று சொல்லும்போது, இயலிலிருந்து பிறந்தது இசையென்றும், இசையிலிருந்து
வந்தது நாடகம் என்றும் சொல்லலாம். இயலும் இசையும் சேர்ந்ததுதான் நாடகம். பேச்சும் எழுத்தும்
இயல் அதாவது கவிதை கட்டுரை கதைகள், நவீனங்கள், பேச்சு, உரை ஆகியவை இயலில் அடங்குபவை.
பாடல், இசை, செய்யுள் என்பவை இசையில் உள்ளவை. நாடகம் என்பது தெருக்கூத்திலிருந்து வந்தது.
திரைப்படம் என்பது நாடகத்தின் நவீன வடிவம் என்று சொல்லலாம்.
இசை, பாடல் என்று சொல்லும்போது அதில் பலவகை
இருக்கின்றன. கர்நாடகம், இந்துஸ்தானி, மெல்லிசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய
இசை போன்றவை நமக்குத் தெரிந்த சில வடிவங்கள். மேற்கத்திய இசையிலும், பாப், கன்ட்ரி,
ஜாஸ், ராக் & ரோல், ரெகே, ராப், ராக், மெட்டல் போன்ற பல வகைகள் இருக்கின்றன.
Add caption |
இதில்
நமக்குப் பிடித்த ஒன்று திரையிசை, நாடகத்தின் நவீன வடிவம் தான் திரைப்படம் என்று முன்னரே
சொன்னேன். முற்கால நாடகங்களில் வசனங்களை விட பாட்டுக்கள் நிறைய இருக்கும். பாடல் வழியாக
உரையாடுவது, செய்திகளைச் சொல்வது, காதலை உணர்த்துவது ஆகியவை நடக்குமென்பதால் அது ரசிகர்களை
வெகுவாகக் கவர்ந்தது.
P.U.Chinappa |
ஹரிச் சந்திரா, வள்ளி திருமணம். பக்தப்பிரகலாதன்
போன்ற இதிகாசக்கதைகள் நாடகத்திலிருந்து திரைப்படமானதால் அம்மாதிரி திரைப்படங்களிலும்
பாடல்கள் நிறைய இருந்தன. நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க
வேண்டும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும், எனவே ஆரம்பக்காலத்தில் திரைப்படங்களிலும்
அவரவர் பாடல்களை அவர்களே பாடினார்கள் . S.G. கிட்டப்பா, P.U. சின்னப்பா, T.R. மகாலிங்கம்,
தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இதற்கு உதாரணம். பிறகு பின்னணிப்பாடகர்கள் வந்தபோது இந்த
முறை மாறிப்போனது.
தியாகராஜ பாகவதர் |
மைக் இல்லாத காலகட்டங்களில் தெருக்கூத்து
மற்றும் நாடகங்களில் பாடுபவர்கள் எல்லா மக்களுக்கும் கேட்க வேண்டுமென்பதால் பெருங்குரலெடுத்து
(High pitch) பாடுவார்கள். அதாவது எட்டுக்கட்டை, ஒன்பது கட்டை என்று சொல்வார்கள். சினிமாவிலும்
ஆரம்பத்தில் இதுவே பிரதி பலித்தது. பின்னர் அதுவும் மாறி மெல்லிசையாக ஆனது.
திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. 60, 70 பாடல்களிலிருந்து 6, 7 என்று குறைந்து அதன்பின்னர்
5,3,2 என்று குறைந்து விட்டது. வெறும் பாடல்களினால்
படங்கள் ஓடியது என்ற நிலைமை மாறி, இந்தப் பாடல் இந்த இடத்தில் தேவையில்லை என்று தோன்றும்
வரைக்கும் வந்துவிட்டது.
இப்போதுள்ள நாளைய தலைமுறையான சிறுவர் சிறுமியர்
மற்றும் இதற்குப்பின் பிறக்கும் பிள்ளைகள் திரையிசையை விரும்பிக் கேட்பார்களா என்பது
சந்தேகம் தான்.
ஆனால் நேற்றைய மற்றும் இன்றைய தலைமுறை
, M.S. விஸ்வநாதனிடம் ஆரம்பித்து இளையராஜாவிடம் நீண்ட நெடுங்காலம் தஞ்சமடைந்திருந்து
பின்னர் A.Rரகுமானை ஆரத்தழுவி அரவணைத்து வாழும் காலமிது. மேடைகளிலும் போட்டிகளிலும்
இவை மீண்டும் மீண்டும் ஒலித்து உலகளாவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.
“என்னடா நீட்டி முழக்கிக்கிட்டே இருக்க,
சீக்கிரம் பாயிண்ட்டுக்கு வாடா பரதேசி”, என்று சொல்லும் உங்கள் குரல் காதில் ஒலிக்கிறது.
ஒரு பாடலை எப்படிக் கேட்பது என்று சொல்ல
ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கன் கல்லூரி
இசைக்குழுவில் இருக்கும்போது இளையராஜா கோலோச்சிய காலம்.
"என்னடா எண்பதுகளில் தொடக்கம் முடக்கம்ணு
சொல்லிக்கிட்டு, ஏன் சரியான ஆண்டை சொல்லிற வேண்டியது தானே?"
“யாருன்னு தெரியல ஆனா நல்லாத்தான்யா கேள்வி கேக்கிறிங்க. சரிப்பா சொல்லிர்றேன்,
81 ஜூனில் ஆரம்பிச்சு 84 ஏப்ரல்ல என்னோட இளங்கலைய முடிச்சேன்”. இப்ப திருப்திதானே.
வயசைக் கண்டுபிச்சிட்டியோன்னோ? .
நாங்கள் புதிதாக பாடல் ஹிட்டானால், அதனை
இசைக்குழுவில் பாடுவதற்கு குழுவாக உட்கார்ந்து பயிற்சி செய்து பழகுவோம். அப்போது பாடலை
ஒலிக்கவிட்டுக் கேட்போம்.
முதலில் என்ன சுருதி என்று பார்ப்போம்.
அந்த சுதியில் எங்களுடைய பாடகர்கள் பாடமுடியுமா என்று கேட்டு, சிறிதளவு கூட்டியோ அல்லது
குறைத்தோ சுதியை அமைத்துக் கொள்வோம். இல்லேனா சுதியே சதியாயிடும். அதற்கப்புறம் என்ன குரல் என்று பார்ப்போம். பொதுவாக
யேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற மலையாளக் குரலில் பாட ஒருவனும், எஸ்பிபி குரலில் பாட
ஒருவரும், இளையராஜா குரலில் பாட ஒருவரும், மலேசியா குரலில் பாட ஒருவரும் டி. எம். எஸ்
குரலில் பாட இருந்தனர். ஆனால் பெண் குரல்களில் எல்லாப் பாடகிகளுக்கும் ஒரே பெண்தான்.
பெரும்பாலும், வெளியிலிருந்துதான் கூப்பிடுவோம். மேடைக்கச்சேரிகளில் ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியினிமித்தம்
பாடுவது அவ்வளவு சிறப்பாய் இல்லா விட்டாலும்
வெளியிலிருந்து கூப்பிடுவோம் .அம்மாவால் பத்திரமாய் அடைகாக்கப்படும் ஒரு தளிர்
பெண்ணும் கூட வருவாள் .அதோடு அச்சு அசலில் ஜானகி குரலில் பாட அருமையான பையன் ஒருவன்
இருந்தான். அவர்கள் பாடலைக் கேட்கும் போது பாடகரின் நுணுக்கம், அணுக்கம், சங்கதி, எந்த
இடத்தில் மூச்சை எடுப்பது என்பவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்.
கீபோர்டு அல்லது ஆர்கன் வாசிப்பவன் ஆர்கன்
லீட் மற்றும் கார்டு புரகெரசன் (chord progression) பார்த்துக் கொள்வான். லீட் கிட்டார்
வாசிப்பவன், கிட்டார் லீடு எங்கெல்லாம் வருகிறது என்று கேட்டு வாசித்துப் பழகுவான்.
அதுபோலவே பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார்
வருவதை அந்த இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இளையராஜா பாடல்களில் பேஸ் கிட்டார் இசையே லீட் போல வரும். இதுதவிர புல்லாங்குழல்,
கிளாரினெட், ஷெனாய், பெல்ஸ், கீபோர்டு லீடு,
சின்தசைசர் போன்றவை எங்கெல்லாம் எப்படியெல்லாம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இவற்றை முடித்துவிட்டால் ஸ்கின் செக்சன்
அதாவது தோல் கருவிகள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று கேட்க வேண்டும். டிரம்ஸ்,
தபேலா, டிரிப்பிள் காங்கோ, தும்பா, கடசிங்காரி, மிருதங்கம், டோலக் , பேங்கோஸ், பம்பை, உடுக்கை ஆகியவையே
இவை.
இவைகளோடு டைமிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என்று சொல்லக்கூடிய தாளம், மொராக்கோஸ், கப்பாஸ்,
ஜால்ரா டாமரின் போன்ற இசைக்கருவிகளும் எங்கே வருகின்றன என்று தனியாகப் பார்த்துக் கொள்ள
வேண்டும்.
ஒருவேளை இதற்காக பாடலைப் பலமுறை கேட்க
வேண்டிய திருக்கும், ஒவ்வொரு முறையும் வேறுவேறு
கருவிகளையும் கேட்பதற்கு காதுகளை பழக்கப்படுத்த முடிந்தால் மட்டுமே இசையை நன்கு ரசிக்க
முடியும்
இப்படியெல்லாம்தான் இசை உருவாகிறது. எனவே
இனிமேல் ஒரு பாட்டைக் கேட்கும்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனித்துக் கேட்டுப்பாருங்கள்.
இன்னும் நன்றாக ரசிக்கலாம். இசை மட்டுமே இசைப்பவர்க்கும் , பாடுபவர்க்கும் , கேட்பவர்க்கும்
ஒருங்கே இன்பமளிக்கும் ஒன்று. இசையால் வசமாகா இதயமுண்டோ? .
முற்றும்.
பின்குறிப்பு .வேலைப்பளு
மற்றும் விடுமுறை காலங்கள் என்பதால் இந்தப்பக்கம் வரமுடியவில்லை .இனிமேல் பரதேசியின்
பிறாண்டல்கள் தொடரும். நண்பர்கள் அனைவருக்கும் என்னுடய இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
.
இசையால் வசமாகி சிக்கித் திளைக்கும் அடிமை அடியேன்...!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்.
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நான் ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்தேன். அங்கு முரளி என்கிற நண்பன் என்னை அவன் குழுவில் பாட அழைத்திருக்கிறான். இந்த சுருதி, தாளம், தொடங்குவது மற்றும் மேடை போன்ற பயங்களால் நான் அவனைக் கண்டாலே பதுங்கி விடுவேன்!
ஆஹா தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு நல்ல பாடகனை இழந்துவிட்டதே .
Deleteமெல்லிசை நுட்பங்கள் பற்றி நீண்ட நெடிய ஆனால் எளிய விளக்கங்கள் அருமை. குழுவில் தங்கள் பணி என்னவென்று சொல்லவில்லையே!
ReplyDeleteநன்றி முத்துசாமி , வெஸ்டர்ன் இசைக்கு கிடாரும் , திரைப்பட இசைக்கு ட்ரிப்பில் காங்கோவும் வாசிப்பேன்
Delete