Thursday, July 12, 2018

மன்னர் பாஸ்கர சேதுபதி !!!!



FETNA 2018 -பகுதி 1
பெட்னா 2018  மலரில்  வெளிவந்த அடியேன் எழுதிய கட்டுரையின் முழுப்பகுதியை இங்கே கொடுக்கிறேன் 



சேதுபதி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மறவர் பூமியான இராமநாதபுரம். மறவர் குல மன்னர்கள் ஆண்டதால் இதனை மறவர் பூமி என்பார்கள். ஆனால் அனைத்து குல மக்களையும் ஆதரித்து மகிழ்ந்தவர்கள் மறவ குல மன்னர்கள். அதில் முக்கியமான ஒருவர் பாஸ்கர சேதுபதி.
இராமநாதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சேது மன்னர்களில் ஒருவர்தான் இவர். இராமநாதபுரம் என்றதும் நமக்கு உடனே இன்னொன்றும் ஞாபகத்துக்கு வரும் அது இராமேஸ்வரம் திருக்கோவில். இராமநாதபுரத்திலிருந்து வந்த இரத்தினம் அப்துல்கலாம் அவர்களையும் மறக்க முடியாது. தனுஷ்கோடியும் ஞாபகத்துக்கு வரும். அதன் இன்னொரு பெயர் சேது சமுத்திரம்.

இராமபிரான் தம் இலங்கைப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்து அன்னை சீதாப்பிராட்டியை மீட்டு அழைத்து வந்த போது, நன்றி செலுத்தும் விதமாக இராமேஸ்வரம் கோவிலை ஏற்படுத்தி அங்கு தொழுது கொண்டு, அக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் ஒருவரை நியமித்தாராம். சேது பூமியையும் சேது சமுத்திரத்தையும் காக்க நியமிக்கப்பட்ட அவருக்கு ‘சேதுபதி’  என்ற பெயர் வந்து நிலைத்தது.
பாண்டியர் காலத்திருலிருந்தே வந்த இந்த சேதுபதி பட்டம், பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு கிட்டத்தட்ட அழிந்து  போனது. ஆனால் அதன்பின் மதுரையை ஆண்ட நாயக்க வம்சத்தில் வந்த மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், புராதன சேதுபதி பரம்பரையை மீண்டும் தகுதிப்படுத்தி அவர்களுக்கான உரிமையைக் கொடுத்தார். இது நடந்தது 17-ஆம் நூற்றாண்டு. அப்படி முதலில் நியமிக்கப் பட்டவர்தான் சடைக்கத்தேவர். இராமேஸ்வரத்திற்கு  வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அந்தக் கோவிலின் அறங்காவலர்களாகவும்  அவர்கள் விளங்கி வருகிறார்கள். ஆம் இன்றுவரை அது தொடர்கிறது.   இராமேஸ்வரத்தில் இருக்கும் சொக்கநாதர் ஆலயத்தைக் கட்டியது சடைக்கத் தேவர்தான். இந்த சேதுபதிகள் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்ததோடு நாயக்க மன்னர்கள் நடத்திய போர்களில் முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த பல போர்களில் அப்போதிருந்த ரகுநாத சேதுபதி வெற்றிக்கு உதவியதால் அவருக்கு பட்டங்களோடு பல ஊர்களும் பரிசாகக் கிடைத்தன.
இளவயதில் பாஸ்கர சேதுபதி 

இராமநாதபுரம் பகுதிகள் தவிர, திருப்புவனம், மன்னார் கோவில், திருச்சுளி, தேவகோட்டை, அறந்தாங்கி, பிரான்மலை, சிவகங்கை, திருமயம் ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டன. 
சேதுபதிகளின் வரிசையில் ஏழாவதாக வந்து இரண்டாம் ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதிதான்  இந்த வரிசையில் மிகவும் புகழ் பெற்றவர். அப்போது ஆட்சியிலிருந்த மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கருக்கு இவர் வலதுகரமாய்த் திகழ்ந்தார். ஆனால் சொக்கநாதருக்குப் பின் ராணி மங்கம்மாள் ஆட்சிக்கு வர கிழவன் சேதுபதி தன்னை சுதந்திர மன்னராக அறிவித்ததோடு அதனை எதிர்த்து வந்த ராணி மங்கம்மாவின் சேனையையும் முறியடித்தார். இவர் உருவாக்கியதுதான் சிவகங்கை சீமை என்று அழைக்கப்படும் நாலுகோட்டைபாளையம். அதற்கு ஆட்சியாளராக உடையாத்தேவரை நியமித்தார். கிழவன் சேதுபதியின் மறைவுக்குப் பின்னர் விஜய ரகுநாத சேதுபதி பதவிக்கு வந்தார். அதன்பின் வந்த ஆங்கிலேய ஆட்சியில்  இராமநாத புர சமஸ்தானம் ஒரு ஜமீனாக குறுகியது. விஜய ரகுநாத சேதுபதியின் மகள்தான் வீரமங்கை வேலுநாச்சியார் அவரை சிவகங்கையின் இரண்டாவது மன்னருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அதன் பின்தான்  சிவகங்கையும் சுதந்திரப் பகுதியானது.
அதன்பின்னர் பட்டத்திற்கு வந்த ராஜா இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிக்கும் அவர்தம் மனைவி ராணி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் முதல் மகனாக நவம்பர் 3 ஆம் தேதி 1868-ல் பிறந்தவர்தான் ராஜா பாஸ்கர சேதுபதி. இவருடைய முழுப்பெயர், “ஹிரன்யாகர்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி” என்பதாகும். ராஜா முத்துராமலிங்க சேதுபதியின் அண்ணன் பொன்னுச்சாமித்தேவர் தம் தம்பிக்கு உறுதுணையாக இருந்து நாட்டை பாதுகாத்து வந்தார். இவரின் மகன்தான் மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர்.
ஆனால் பாஸ்கர சேதுபதி வெறும் நான்கு வயதாகியிருந்த போது தந்தை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி இறந்துபோனார். அப்போதிருந்த ஆங்கிலேயே சட்டப்படி பாஸ்கர சேதுபதி கோர்ட் ஆப் வார்ட்ஸ் (Court of Wards)–ன் கட்டுப்பட்டுக்குள் வந்தார். பட்டத்து வாரிசு  வயதுக்கு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும். கோர்ட் ஆப் வார்ட்ஸ் என்பது மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பு.

அதன்படி பாஸ்கர சேதுபதி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு ஆங்கிலக் கல்வியும், மேற்கத்திய பாணி நடையுடை பாவனைகள், கலாச்சாரம் ஆகியவையும்  கற்றுக் கொடுக்கப்பட்டன. அவருக்கு அமைந்த ஆங்கில ஆசிரியர் அவருக்கு ஆங்கில இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதோடு இசையையும் கற்றுக் கொடுத்தார். இசையில் இயற்கையான ஆர்வம் கொண்டிருந்த பாஸ்கர சேதுபதி பியானோ வாசிப்பதையும் நன்கு கற்றுக் கொண்டார். அதோடு அவர் இந்தியா  மற்றும் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
                                        
1888 ல் சிவ பாக்கியம் நாச்சியாரை மணந்து கொண்ட கையோடு , ஏப்ரல் 3 1889ல் மகாராஜா பட்டம் பெற்று இராமநாதபுரம் ஜமீனின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
மன்னர் பாஸ்கர சேதுபதி மேற்கத்திய கலை இலக்கிய கலாச்சாரத்தை கற்றுத் தேர்ந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்திலும் தமிழிசையிலும் தான் ஆர்வமாக இருந்தார்.
சேதுபதிகளின் குலக்கடவுளான இராமேஸ்வரம் அமர் இராமநாத சுவாமி தாயார் ராஜராஜேஸ்வரி ஆகியோர் மீது மிகுந்த பற்றும் பக்தியும் வைத்திருந்தார். பக்கத்தில் இருந்த திருப்புலானியில் அருள் பாலித்த பத்மாசினி தாயாரின் மேல் சுரட்டி ராகத்தில் ஒரு கிருத்தியை இயற்றினார். அதோடு சுவாமி விவேகானந்தர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சிக்காகோ நகரில் நடந்த  சமய மாநாட்டிற்கு தனக்குக் கிடைத்த அழைப்பில் தனக்குப் பதிலாக விவேகானந்தரை அனுப்பினார். அதற்கான அனைத்துப் பொருட் செலவையும் தானே ஏற்றுக் கொண்டார். சுவாமி விவேகானந்தரும் பாஸ்கர சேதுபதி மேல் மதிப்பும் மரியாதை வைத்து அவருக்கு “ராஜரிஷி” என்ற பட்டத்தைக் கொடுத்தார். சுவாமி விவேகானந்தர் தம்முடைய மாநாட்டை வெற்றிகரமாக முடித்து ராமேஸ்வரம் திரும்பும்போது பாஸ்கர சேதுபதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக் கொடுத்து 40 அடி உயரத்தில் ஒரு நினைவுத்துணையும் எழுப்பினார். அதில் “சத்யமேவஜெயதே” என்ற வரிகளைப் பொறித்தார். அதுவே 50 வருடங்களுக்குப்பின் இந்திய நாட்டின் கொள்கையாக உருவெடுத்து அசோகச் சின்னத்தில்  சேர்க்கப்பட்டது.


பாஸ்கர சேதுபதி மிகப்பெரிய வள்ளலாக உருவெடுத்தார். உதவி கேட்டுவந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். தான் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் அந்த இயக்கத்திற்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்தார். தான் படித்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு ரூபாய் 40000 அளித்து அதன் மூலம் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவினார். அந்தக் காலத்தில் இவையெல்லாம் மிகப்பெரிய தொகைகள்.  தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே சுவாமிநாத அய்யர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்து பல உதவிகளைச்செய்துள்ளார் .
  சிறு வயதிலிருந்தே டயரி எழுதும் பழக்கம் கொண்ட சேதுபதி தொடர்ந்து எழுதினார். அதனை அப்போதிருந்த ஆங்கிலேயரின் பதிப்பகமான G.W.டெய்லர் என்ற நிறுவனம் புத்தகமாக வெளியிட்டது. இசையில் தீராத ஆர்வம் கொண்ட சேதுபதி அவருடைய ஆட்சிக் காலத்தில் குன்றக்குடி கிருஷ்ண ஐயர், மகா வைத்தியநாத ஐயர், பட்னம் சுப்ரமணிய ஐயர், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்ற பல இசை விற்பன்னர்களை ஆதரித்து வந்தார்.
அவர் பதவியேற்கும்போதே அவருடைய சிறிய அன்னை வாங்கிய கடனான மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் கடன் அவர் மேல் வந்தது. அதன்பின் தொடர்ந்து தன்னுடைய கொடை  மூலம் அவருடைய சொத்து கரைந்து வந்தது. அதுதவிர அப்போதிருந்த பெரும் பணக்காரர்களான நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மற்றும் ஆலய நிதியிலிருந்து தன் சொத்துக்களை அடகு வைத்து தொடர்ந்து பலருக்கு உதவி செய்தார்.ஒரு கட்டத்தில் அவருடைய முழு ஜமீனும் திவாலாகும் நிலைமை வந்தது அப்போது அவருக்கு வயது 26 தான். கடன்காரர்களின் தொல்லை தொடர்ந்து அதிகரிக்க அவர் தம் பதவியை விட்டிறங்கி அப்போது மைனராக இருந்த தன்னுடைய மகனை அரியணையில் அமர்த்தும்படி ஆனது.


அவரிடம் ஏராளமான உதவிகளை வாங்கிய பலரும் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதோடு அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளரிடம் புகார்களும் செய்தார்கள். இதனால் மிகவும் நொந்துபோன நிலையில் இருந்த சேதுபதி, 1903-ல் தனது 35 வயதிலேயே இயற்கை எய்தினார். இந்திய அரசு அவரின் நினைவாக 2004ல்  அவருக்கு தபால் தலை வெளியிட்டு  கௌரவப்படுத்தியது.
அன்னாரின் 150 –ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முகத்தான், அவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த பணிகளை நினைவு கூர்ந்து அவருடைய நினைவுகளைப் போற்றுவோம்
 தி.ஆல்ஃபிரட் தியாகராஜன், நியூயார்க்.  
(www.paradesiatnewyork.blogspot.com)

ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி நியூயார்க் வாசி. மான்ஹாட்டனில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றி வரும் இவர் தமிழ் மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர்.கவிதை , பேச்சு , பட்டிமன்றம் , இதழியல், வலைப்பதிவு என்ற பல தளங்களில் இயங்கி வரும் இவர் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளராகவும் பணியாற்றிவருகிறார் .


9 comments:

  1. அருமையான தகவல்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //அவரிடம் ஏராளமான உதவிகளை வாங்கிய பலரும் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதோடு அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளரிடம் புகார்களும் செய்தார்கள்.//

    அதுதான் உலகம்...!

    ReplyDelete
    Replies
    1. வந்த நாள் முதல் இந்த நாள் வரை
      வானம் மாறவில்லை
      வான் மதியும் நீரும் கடல் காற்றும்
      மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
      மனிதன் மாறிவிட்டான்

      Delete
  3. சிறப்பான தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி முயற்சிக்கு வாழ்த்துக்கள்

      Delete
  5. பாஸ்கர சேதுபதி பற்றியும் இராமநாதபுரம் சமஸ்தானம் பற்றியும் முழுமையான செய்திகளைத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete