Monday, July 30, 2018

கஞ்சியும் துவையலும் !


Image result for Teenage boys in rural Tamilnadu
Thank you Flicker 
வேர்களைத்தேடி பகுதி -20
    இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_23.html
ஒரு திடுக்கிடும் திருப்பம் கதையில் வரும் சமயத்தில் இன்னொரு திடுக்கிடும் திருப்பமாக எங்கம்மாவின் தலை ஏணி வழியாகத் தெரிந்தது. கதையின் சுவாரஸ்யத்தில் எங்கம்மா ஏறி வருவதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை. எங்கம்மா எவ்வளவு ஸ்டிரிக்ட்டுன்னு உங்களுக்கும் தெரியும்தானே. கதைப் புத்தகம் படித்தால் கூட என்ன புத்தகம் படிக்கிறேன் என்று முதல் சில பக்கங்கள்  நடுவில் கொஞ்சம் இறுதியில் கொஞ்சம் என்று படித்துத்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். கையில் முருகனுக்கு காப்பியையும், கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையையும் வைத்திருந்தார்கள்.
"என்னடா படிக்கிறீங்க"
அவரசத்தில் முருகன், "கதை டீச்சர்"
“என்ன கதையா?”
“அதாம்மா வரலாற்றுப் பாடத்தில் உள்ள கதைகள்"
“சரி சரி இதை வாங்கிட்டுப்போ”
நல்லவேளை அம்மா மேலே ஏறி வரவில்லை. கடைசிப் படிக்கட்டில் நின்று கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார்கள். போகும்போது ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனது இருவருக்கும் சிரிப்பை வரவழைத்துவிட்டது.
"சத்தமாகப் படிங்கடா, அப்பத்தான் மண்டையில் ஏறும்".
அதற்கு மேலும் பொறுமையிழந்த நான். “முருகா வேண்டாம்டா போதும் சகிக்கல, நான் பாடத்தைப் படிக்கணும்”, என்று சொன்னேன். வந்த வேர்க்கடலையை கொறித்துவிட்டு, காப்பியையும் குடித்தவுடன் சுவாரஸ்யம் குறைந்துபோன முருகன் விடைபெற்றுச் சென்றான். அதற்குப்புறம் பாடத்தை எவ்வளவோ படிக்க முயன்றும் என்னால் படிக்க முடியவில்லை.
இரவு சீக்கிரமாய்ப் படுக்கைக்குச் சென்றும் தூக்கம் வரவில்லை. வைரமுத்து சொன்னதுபோல் "படுக்கையில் பாம்பு நெளியுது" சிட்டுவேசன் தான். காலையில் 4 மணிக்கு எழுந்து ஜெபித்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன். இரண்டு பாடங்கள் முழுவதையும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் எப்படி படித்து  முடிக்க முடியும். ஆனால் எப்படியோ பாஸ் செய்துவிட்டேன். பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்களைப் பார்த்தால் தெரியும். எல்லாப் பாடங்களிலும்  ஓரளவுக்கு நல்ல மார்க்குகள் எடுத்த நான் வரலாறு புவியியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தேன். அந்த முதல் அனுபவத்தை மறக்க முடியாது.

அந்த மாதிரிப் புத்தகங்கள் கல்லூரி போனபிறகும் கூட என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அட நம்புங்க பாஸ். அந்த வயதில் நடந்த இன்னொரு சுவாரஸ்ய சம்பவத்தைச் சொல்கிறேன்.
எங்கம்மா அப்பா வேலை செய்த இந்து நடுநிலைப்பள்ளி ஏப்ரல் கடைசி நாள்வரை நடக்கும். மே மாதம் 1-ஆம் தேதி முதல் விடுமுறை. ஜூன் 1 அல்லது வருகின்ற முதல் திங்களன்று தான் பள்ளி துவங்கும். நீங்கள் ஆசிரியர் வீட்டில் பிறந்திருந்தால், “மே மாசம் பண்ணிரலாம், மே மாசம் பாத்துக்கலாம், மே மாசம் கண்டிப்பாய் வர்றேன்", என்று அடிக்கடி சொல்லுவதை கேட்டிருப்பீர்கள். நானும் அப்படித்தான், ஆனால் நான் தம்பித்தோட்டம் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் போது மார்ச்சு மாதத்திலேயே பரீட்சை முடிந்துவிடும் என்பதால், விடுமுறைக்கு ஏப்ரல் மாதத்திலேயே ஊருக்கு வந்துவிடுவேன்.
Image result for easy chair wooden with hands

   என்னுடைய பெரிய பொழுதுபோக்கு நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து முன்  ஹாலில் உள்ள ஈஸி சேரை ஃபேனுக்கு அடியில் போட்டுக் கொண்டு, இரு கைப்பிடிகளிலும் இரு கால்களை வைத்துக் கொண்டு,  சுவாரஸ்யமாக படிப்பதுதான்.  1 மணிக்கு மதிய இடைவேளையில்  பெற்றோரும் தம்பிகளும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நான் ரேடியோ ரூமில் பெருக்கிவிட்டு பாயை விரித்து தட்டுகளைக் கழுவி வைத்துவிடுவேன். எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டும் குறிப்பிட்ட தட்டு இருக்கும். அம்மாவுக்கு ஓவல் ஷேப், என்னது வட்ட வடிவம். கொஞ்சம் நேரத்திற்கு முன்னால் நூலகம் சென்று திரும்பி வரும்போது நல்ல கல்லாமை மாங்காய்களை வாங்கி நன்கு கழுவி காம்பை வெட்டிவிட்டு வரும் பாலைத் துடைத்துவிட்டு சிறு  துண்டுகளாக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் போட்டு கலந்து வைத்துவிடுவேன். அம்மா வந்ததும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவர அனைவரும் ஒன்றாக  உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பு. அப்பாதான் சாப்பாட்டைப் பரிமாறுவார்கள். காலையில் பொதுவாக மற்ற நாள்கள் தினமும் இட்லி தான். திங்கள் கிழமைகளில் மட்டும் சுடுகஞ்சி அகத்திக்கீரை அல்லது தேங்காய்த்துவையல் இருக்கும். கஞ்சி என்றால் வடித்த சோறில் சுடுதண்ணீர் ஊற்றித்தருவார்கள். சோற்றை உண்டுவிட்டு கடைசியில் இருக்கும் தண்ணீரில் மிச்சத் துவையலை கலந்து குடிப்பேன். அமிர்தமாக இருக்கும். எங்கப்பா மட்டும் சுடுநீருக்குப்பதிலாக ரசம் ஊற்றிச் சாப்பிடுவார். அவருக்கு மட்டும் சலுகை.


Related image
கல்லாமை மாங்காய்

மற்ற நாட்களில் இட்லிக்கு தேங்காய்ச் சட்டினி அல்லது, பருப்பு கத்திரிக்காய் கடைந்தது அல்லது தக்காளிச்சட்டினி இருக்கும். தினமும் இட்லி என்றாலும் தொட்டுக்க வேறு வேறு சட்னி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தோசை சுட்டுத் தருவார்கள் எங்கம்மாவின் தாயார், எங்கள் ஆயா இருக்கும் போது இட்லிக்கு ரத்தப் பொரியல்  செய்து தருவது ஞாபகம் இருக்கிறது. புதன். சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டன் குழம்பு இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கடைகள் இருக்கவில்லை. 
Image result for mutton shops in india

கோழிக்கறி வேண்டுமென்றால் வத்தலக்குண்டு அல்லது பெரியகுளம் போய் வாங்கி வர வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான வீடுகளில் கோழி வளர்ப்பார்கள். தேவைப்பட்டால் அடித்துச் சாப்பிடுவார்கள். உயிருடன் கோழி விலைக்கும் கிடைக்கும். ஆனால் எங்கம்மாவுக்கு உயிர்க் கோழியை அடித்துச் சமைப்பது தெரியாதென்பதால் எப்போதும் மட்டன்தான். ஏதாவது விசேஷங்களுக்கு அப்பா பெரியகுளம் போய் கோழி வாங்கி வருவார். ஃபிரிட்ஜ்  எல்லாம் இல்லையென்பதால் அன்றைக்கே செய்வது அன்றைக்கே சாப்பிட்டு விடுவோம். மீதமுள்ளது பின் வீட்டுச் சொக்கருக்குப் போய்விடும் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழம்பு. துவரம்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார், கத்தரிக்காய் புளிக்குழம்பு, மொச்சை கத்தரிக்காய் குழம்பு ஆகியவை மாறி மாறி வரும்.
Image result for idli chutney

ரீசஸ் என்று சொல்லும் இடைவேளைக்கு 10.30 மணிக்கு வரும்போதுதான் அம்மா  வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள். காலையில் 4 மணிக்கு எழுந்தும் வேலை சரியாக இருக்கும். காலை உணவுடன், மத்திய உணவும் தயாரித்து முடித்து 8.30 மணிக்குள் பள்ளிக்குப் போக வேண்டும்.எங்கப்பா சரியான நேரத்திற்குப் போய்விடுவார். அம்மா சிறிது தாமதமாக தன்னுடைய பிள்ளைகள் படை சூழ பள்ளிக்குச் செல்வார்கள்.
அப்போதுதான் எங்கள் வீட்டின் பின்புறம் புதிதாகக் கல்யாணமான ஒரு முஸ்லீம் தம்பதிகள் குடியேறியுள்ளதாக அம்மா சொன்னார்கள். நான் நூலகம் போய் வந்த ஒரு நாள் காலை 10 மணிக்கு தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்ற போது பின்புறம் சிரிக்கும் சிணுங்கும் சத்தத்தோடு கொலுசு வளையல் சத்தம் கேட்டது.
-தொடரும்.    

6 comments:

  1. தொடருங்கள் நண்பரே ...
    நாங்களும் தொடர்கிறோம்...

    ReplyDelete
  2. நல்ல இடத்தில தொடரும் போட்டு விட்டீர்கள்!!!!

    கல்லாமை மாங்காய், கல்லா மாங்காய், ஒட்டு மாங்காய், கிளி மூக்கு மாங்காய் என்றெல்லாமும் இதைச் சொல்வார்கள். மாவடுவில் இது தனி டேஸ்ட்!

    ReplyDelete
    Replies
    1. இதன் சிறப்பம்சம் இது புளிக்காது .கிளி மூக்கு என்ற பெயர் தெரியும் மற்றவை எனக்குப்புதுசு. நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. பிரியாணி...?

    அடுத்த வாரமா...?

    ReplyDelete
    Replies
    1. கஞ்சிக்கு அப்பறம் பிரியாணியா ? கேட்க நல்லாத்தான் இருக்கு , பார்க்கலாம் அடுத்த வாரம் , நன்றி தனபாலன்.

      Delete