இலங்கையில்
பரதேசி-28
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_20.html
100 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது ஆமை என்று சொன்னபோது
வாயைப் பிளக்காதவர்களே இல்லை. மில்லியன் வேணாம்ப்பா கோடியில சொல்லு அப்பத்தான்
எனக்குப்புரியும்னு சொல்றவங்களுக்கு
இதோ கோடியில். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்,
பத்து மில்லியன் என்பது 10 கோடி ஆண்டுகள், அடேங்கப்பா இது கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு ( அல்லது வாலோடு என்றும் வைத்துக்கொள்ளலாம்
) முன் தோன்றிய தமிழ் இனத்திற்கும் இது முந்திய
இனம் போல் தெரிகிறதே . ஆமைகள் தற்போது மொத்தம் எட்டு வகைகள் மட்டுமே
இருக்கின்றன. பல வகைகள் அழிந்துவிட்டன. ஆனால் ஆமைகள் வேட்டையாடப்படுவதால் இந்த 8 இனமும் அழியும் சூழ்நிலையில் இருக்கிறதாம். ஆமைகளை
வேட்டையாடுகிறார்களா, எனக்குப் புதிராக இருந்தது.
ஆமைகள் தாங்கள் இனப்பெருக்கம்
செய்வதற்காக ஆண்டிற்கு ஒரு முறை சில குறிப்பிட்ட இடங்களில் சேருமாம்.
இனப்பெருக்கம் முடிந்து, பெண் ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுமாம். ஆமைகள்
முட்டையிடும் வயது 30 வயதுக்கு மேல் இவைகள் இரவில்தான் முட்டைகளையிடுமாம்.
ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுமாம். ஆமைகள் தாங்கள் எந்த கடற்கரையில்
பிறந்தனவோ, அதே கடற்கரையில்தான் தன் முட்டைகளை இடும் என்று சொல்கிறார்கள். ஆச்சரியமாக
இருந்தது. ஒரு தடவையில் அவைகள் 120 முட்டைகள் வரை இடுமாம். நல்லவேளை மனிதர்களுக்கு இப்படி ஒரு
இனப்பெருக்கம் இல்லை. இல்லையென்றால் ஒருவர் தலைமீது ஒருவர். நடக்குமளவுக்கு
நெருக்கம் அதிகரித்துவிடும். இந்த முட்டைகள் டேபிள் டென்னிஸ் (பிங்பாங்)பந்துகளின்
சைசில் வெள்ளைக் கலரில் இருக்குமாம்.
தன்னிடமிருந்து உருவாகும் ஒருவித திரவத்தால் இந்த முட்டைகளை பெண் ஆமைகள் ஈரப்பதத்தில் வைத்திருக்குமாம். அப்படி வைத்துவிட்டு திரும்பவும் கடலுக்குத்
திரும்பி விடுமாம். அதன்பின் முட்டைகளுடனோ அல்லது அவைகளின் குஞ்சுகளுடனோ
அவைகளுக்குத் தொடர்பு இருக்காது.
கடற்கரை மணலில் சூரிய வெப்பத்தில் இருக்கும் இவைகள் சுமார் 60 நாட்கள் கழித்து தாமாகவே குஞ்சு பொரிந்து ஓட்டை உடைத்துக்
கொண்டு வெளியே வந்து தாமாகவே கடலை நோக்கிச் சென்று கலந்து விடுமாம். பிறந்த
ஆமைக்குஞ்சுகளின் அளவு வெறும் 5 சென்ட்டி மீட்டர்
தான்.
ஆமைகளும் அவைகளின் முட்டைகளும் வேட்டையாடப் படுகின்றன அல்லது அழிகின்றன
என்று சொன்னேனே அது எப்படி என்று பார்ப்போம்.
ஆமை ஓடுகள் அல்லது அதன் முட்டை ஓடுகளால் அழகுப் பொருட்கள் மற்றும்
ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஆமைகளின் முட்டைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.
ஆமைகள் கறிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. மீன் வலைகளில் மாட்டிக் கொண்டு இறந்து
போகின்றன. மோட்டார் படகுகள் அதிவேகத்தில் செல்லும்போது ஆமைகள் அடிபட்டு
இறந்துவிடுகின்றன. மாசுபட்ட கடற்கரைகள்,
கடல் நீர், கடற்கரைகளில் இருக்கும் ஹோட்டல்கள்,
ரிசார்ட்டுகள் ஆகியவை ஆமைகளின் இனப்பெருக்கத்திற்குத்
தடையாக இருக்கின்றன. பாலித்தீன் மற்றும் பிற கழிவுகள் கடலில் வீசப்படுவதாலும் அது
ஆமைகளால் சாப்பிடப்பட்டு அழிவு ஏற்படுகிறது.
ஆனால் இதனை எப்படித்தடுக்கலாம் என்பதற்கும் உள்ள பல வழிகளை விளக்க ஆரம்பித்தார்.
மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வந்து அழிந்து போய்க் கொண்டிருக்கும்
இனத்தை மீட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்கலாம்.
ஆமைகள் இனப்பெருக்கம் நடக்கும் கடற்கரைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டு
செயற்கை விளக்குகள் அகற்றப்படவேண்டும். பவளப்பாறைகள் கடற்பாசிகள் போன்ற ஆமைக்கு
உணவாக இருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆமை உட்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மீன்
பிடித்தொழில் நடத்தப்படவேண்டும். கடல் மாசுபடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். ஆமை
ஓடுகளை வைத்து செய்யும் பொருட்களுக்குத்தடை செய்ய வேண்டும்
.மக்கள் ஆமை முட்டைகள் மற்றும் ஆமை இறைச்சியைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
"அதெல்லாம் சரி இதில் உங்களின் பங்கை எப்படிச் செய்கிறீர்கள்?"
என்று கேட்டேன். அதற்குக் கிடைத்த பதிலைக் கீழே தருகிறேன்.
"எங்களுடைய முக்கிய நோக்கம் இந்த ஆமை இனத்தை முடிந்த வரையில்
பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்
செல்வதுதான். அதற்கு நாங்கள் ஆமை முட்டைகளை எடுத்து பாதுகாப்புடன்
எங்களிடத்தில் இருக்கும் இன்குபேட்டர்களைப் பயன்படுத்தி குஞ்சு பொரிக்கிறோம். அதன்பின் அவற்றை மிக
கவனத்துடன் கடலில் கொண்டு போய்ச் சேர்க்கிறோம். அது தவிர உடல்நலம் பாதிக்கப்பட்ட
ஏராளமான ஆமைகள், மீனவர்களின் வலைகளினால் சேதப்படுத்தப்பட்டவைகள் ஆகியவற்றை
எடுத்துக் கொண்டுவந்து, பராமரித்து சுகப்படுத்தி மீண்டும் கடலில் கொண்டு போய்
விடுகிறோம்”.
“அது தவிர வெவ்வேறு ஆமை இனங்களை கொண்டு வந்து வளர்த்து நான்கு அல்லது 5
வருடங்கள் கழித்து கடலில் கொண்டுபோய் விடுகிறோம். இதன்
மூலம் பல ஆமை இனங்களும் காப்பாற்றப்படும். அது தவிர அந்த இனங்களை இங்கே பொதுமக்கள் பார்ப்பதற்காக
வைத்திருக்கிறோம். உங்களைப் போல பல மக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்
வந்து பார்த்து எங்களை ஆதரிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க வருகை தருபவர்கள்
நன்கொடையால்தான் நடக்கிறது தவிர பலர் நினைப்பது போல் அரசாங்க உதவி என்று
ஒன்றுமில்லை”.
“ஆமை முட்டைகளை மீனவர்களிடமிருந்தும் கடற்கரையின் அருகில் வாழும்
மக்களிடமிருந்து நாங்கள் விலை கொடுத்து வாங்கித்தான் குஞ்சு பொரிக்கிறோம். மொத்தம்
4000 முட்டைகள் இதில் வைத்திருக்கிறோம். அவற்றுள் சுமார் 3000 வரை குஞ்சு பொரிக்கும். இது ஒரு மாதக் கணக்கு. ஒரு சில
நாட்களில் இவற்றை கடலில் விட்டுவிடுவோம். நாங்கள் விலை கொடுத்து வாங்குவதால் பலர்
முட்டைகளை சாப்பிடுவதை நிறுத்தி எங்களிடம் விற்றுவிடுகிறார்கள். அதனால் பல ஆமைகள் எங்களால் காப்பாற்றப்படுகின்றன என்கிறார். சமீபத்தில்
மட்டும் லட்சக் கணக்கான ஆமைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறதாகச் சொன்னார்கள்.
நாமும் நட்சத்திர
ஆமைகள் கடத்தப்படுவதைப்பற்றி செய்திகளில் அடிக்கடி பார்த்திருப்போம் .ஆமை வகைகளிலேயே
மிக அழகானவை என அறியப்படுவது நட்சத்திர ஆமைகள்.உணவு, மருந்து தயாரிப்புக்காக கடத்தப்படும்
இந்த ஆமைகள், வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில்
இவை நல்ல விலை போவதால், இந்தியாவில் இவற்றின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது.
அம்மாடி இந்த ஆமைகள்
வரலாற்றில் இவ்வளவு இருக்கிறதா என்றபடி தொட்டிகளில் உள்ள ஆமைகளைப்
பார்த்தேன். எல்லாம் நல்ல ஆரோக்யத்துடன்
இருந்தன. இந்த இல்லம் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது. பின்னால் வங்காள விரிகுடா ஆர்ப்பரித்து எழுந்து கொண்டிருந்தது. ஆமைகளுக்காக இவர்கள்
தங்கள் வாழ்க்கையை குடும்பமாக அர்ப்பணித்து வாழ்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக
இருந்தது. வாருங்கள் கடலுக்குள் பயணித்து அதன் மற்ற ஆச்சரியங்களைப் பார்ப்போம்.
தொடரும்
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம் .
Deleteபரதேசி சார்... முட்டையிடும், குட்டி போடும் பிராணிகளில், அதிக அளவில் முட்டையோ அல்லது குட்டியோ போடும் இனங்களில், பிறந்த குஞ்சுகளில் பத்தில் ஒரு பங்குகூட உயிர் வாழாது. 90% பிறந்தவுடனேயே சில நாட்களில் இறந்துவிடும். (உதாரணம், ராஜ நாகம், 25 குட்டி போடும், அதில் 1 அல்லது 2தான் உயிர் பிழைக்கும். மற்றவை வெளிவரும்போதே, சில நாட்களுக்குள் பறவைகளுக்கும் மற்றவற்றிர்க்கும் உணவாகிவிடும். ஆமைகளிலும் 10-15 குஞ்சுகள் கடலை அடைந்தாலே பெரிது. மற்றவற்றை கடற்கரையில் காத்திருக்கும் பறவைகளும் பிற விலங்குகளும் உணவாக்கிக்கொள்ளும். சிங்கங்களும் இந்தச் சம நிலையைக் கடைபிடிக்கின்றன. அதனால்தான் survival of the fittest என்ற பிரயோகமே வந்தது.
ReplyDeleteஇன்னொன்று, மெதுவாக மூச்சுவிடும் எந்தப் பிராணியும் நம்மைவிட அதிக வருடங்கள் வாழும். ஆமை, 150 வருடங்கள். அது நிமிடத்துக்கு 4 மூச்சு என்று நினைக்கிறேன் (நாம 20?) மூச்சைப் பொறுத்துத்தான் வாழ்க்கை (no. of times breath)
மேலும் தெள்ளத் தெளிவான தகவல்களை அள்ளித்தெளித்த நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
DeleteThank you Ilakkiyam.
ReplyDelete