Thursday, June 30, 2016

உதயணனின் “மயில்கோட்டை”


படித்ததில் பிடித்தது


உதயணன் எழுதிய 'மயில்கோட்டை" -சீதை பதிப்பகம்.

வரலாற்று நாவல்கள் படிப்பது ஒரு சுகமான அனுபவம். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சற்றே மறந்து, கடந்த காலத்திற்குச் சென்று, அரசர் ஆண்ட காலத்திற்கு கற்பனைகளை ஓட விட்டு மூழ்கும்போது, நாமும் அதில் ஒரு பாத்திரமாகவே மாறிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு.

குறிப்பாக தாத்தா பாட்டி சொல்லும் ராஜா ராணிக்கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, வரலாற்றுப்புதினங்களைப்படிப்பது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும். என்னுடைய ஆயா (அம்மாவின் தாயார்) "ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம்" என்று ஆரம்பித்து கதையினூடே சோறுட்டியது தான் என் வரலாற்று  ஆவலை தூண்டியிருக்க வேண்டும்.
Tamilnannool - Kalki Krishnamurthy
Kalki
சிறுபிள்ளையாக இருக்கும்போது, கோடை விடுமுறைக்கு என்னுடைய மாமாவின் வீட்டிற்கு திண்டுக்கல்  செல்வது வழக்கம். இரவில் என் அத்தை சமைக்கும் அறுசுவை உணவை உண்டுமுடித்து முற்றத்தில் கூடுவோம். எனது மாமா தேவராஜ் அவர்கள் தாம் படித்த கல்கியின் "பார்த்திபன் கனவு" கதையை சொல்ல ஆரம்பிப்பார். ஒவ்வொரு நாளும் தொடர்ந்த இக்கதை என் ஆவலை  மிகுதியாகத் தூண்டியது.

கல்கி அவர்கள் சோழ நாட்டுப் பின்ணணியில் எழுதிய பிற வரலாற்றுப் புதினங்களான “பொன்னியின் செல்வன்”, "சிவகாமியின் சபதம்" ஆகியவை தமிழில் ஒரு பெரிய தரத்தை அமைக்க, அதன் பின்னர் வந்த சாண்டில்யன் எழுதிய “கடல்புபுறா”, “யவனராணி” போன்றவை புதிய பாதை அமைந்தன. அதன் பின்னர் அகிலன், கோவி மணிசேகரன், ஆகியோர் தொடர்ந்தனர். 

இப்போதுள்ள எழுத்தாளர்களில் அப்படி எவரும் இல்லை என்று நினைத்தேன். சிலர் எழுதினாலும் ரசிக்கும் படியாக இல்லை.

அந்தச் சமயத்தில்தான் 'உதயணன்' என்பவர் எழுதிய சில புத்தகங்களைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒன்றை வாங்கிப் படித்துப் பார்க்கலாம் என்று வாங்கிய புத்தகம்தான் "மயில் கோட்டை". 720 பக்கங்கள் கொண்ட இந்த ஹிஸ்டாரிக்கல்  ஃபிக் ஷன் எனக்குப் பிடித்திருந்தது.

கதையின் காலம்:
பல்லவர் ஆட்சியின் பிற்பட்ட காலத்தில் நிகழும் கதை இது. இது பல்லவரின் கடைசி அரசன் அபராஜிதன் பற்றிய கதை. பல்லவரின் முடிவில் பிறந்து வளர்ந்தது தான் பிற்கால சோழர் ஆட்சி. அபராஜிதன் காலத்தில், ஆண்ட பிற்கால சோழர் ஆட்சியின் முதல் மன்னரான விஜயாலயச் சோழன் பல்லவ ஆட்சிக்கு அடங்கிய ஒரு சிற்றரசன். கதையின் காலத்தில் பல்லவ அரியணையில் இருப்பது நிருபதுங்க வர்மன். இவன் நந்திவர்ம பல்லவனின் மகன்.ஆனால் இவன் மகன் அபராஜிதன் தான்  கதையில் அதிகமாக வருவது. சோழ அரியணையில் இருப்பது விஜயாலயன். ஆனால் அவன் மகன்,  இளவரசன் ஆதித்தன் தான் இக்கதையில் முக்கிய பங்காற்றுகிறான். அப்போது பாண்டிய அரசனாக இருந்தவன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ  வல்லவன். அவன் மகன் தான் பல்லவர் மீது பகை கொண்ட  வரகுண பாண்டியன்.

இது தவிர அச்சமயம் சேர அரசராக இருக்கும் ஸ்தாணு ரவியும் கதையில் வந்து போகிறான். இவர்கள்தான் கதையில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள். கதையின் காலம் கி.பி.850 முதல் கி.பி.900 வரை.

கதைக்கரு:
வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்தால் கற்பனையை அதிகமாக பயன்படுத்தமுடியாது என்ற உத்தியைப் பயன்படுத்தி கதையாசிரியர் ‘வளவன்' என்ற கதாபாத்திரத்தை  உருவாக்கியிருக்கிறார். கதை முழுவதும் இவனைச்சுற்றியே நடப்பதால் இவன்தான் கதையின் நாயகன் என்று வைத்துக் கொள்ளலாம். பல்லவ சேனையின் உபதளபதியாக இருக்கும் இவன் பிறகு தளபதியாகி, கடற்போர் மற்றும் நிலப்போரை தலைமை தாங்கி நடத்துகிறான்.

பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் இளையசகோதரன் கம்பவர்மரின் சதியை முறியடித்து, சிங்கள அரசன் முதலாம் சேனனின் கடற்போரை வென்று, பாண்டிய இளவரசன் வரகுணனின் மாபெரும் படையையும் திருப்புறம்பியும் போரில் வெல்வதாக கதை அமைகிறது.

கதாபாத்திரங்கள்:  
ஏற்கனவே குறிப்பிட்ட அரச குலத்தினரைத் தவிர, ஒலக்கூர் மன்னன் கம்பவர்மன், கங்கமன்னர் பிருதிவிபூதி, பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின்  மனைவி பிருதிவீ மாணிக்கம், சோழ இளவரசி மாதேவி அடிகள், சிங்களக் கடற்படைத்தளபதி கலபதி தென்னன் காராளன், பாண்டிய சேனாதிபதி நக்கம் புள்ளன் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள்.

இவை தவிர கற்பனைக் கதா பாத்திரங்களான போற்றிநங்கை,பத்மினி, அரங்கூறும் தலைவன் அமத்தீஸ்வரன், கபாலிக தலைவன் அமோஷகன், கருமத்தலைவன், விஜயபாகு, வானாதி கங்கராயன்  என பல கதா பாத்திரங்களை  மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார்.

போர்கள்:
Battle of Thirupurambiyam 
வரலாற்றுக் கதைகளில் போர்கள் மிகவும் முக்கியம். ஆசிரியர், கதையை போர்களைச் சுற்றியே பின்னி அநேகமாக போரை உச்சகட்டமாக  (Climax) பயன்படுத்துவார்கள். இக்கதையில் இருபெரும் போர்கள் வருகின்றன. ஒன்று பல்லவக்கப்பல் படைக்கும் சிங்களக் கப்பற்படைக்கும் நடக்கும் போர். இதனை விரிவாக எழுதியதோடு அக்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட விதவித போர்க்கலங்களை குறிப்பிட்டு, ஒவ்வொன்றின் சிறப்பையும், செயல்படும் விதத்தையும் விளக்கியுள்ளார். அவற்றுள் சில, சொர்ணமுகி, தீர்கா, (நீளமானது) கர்ப்பிணி (தென்னை மர உயரம்) அதூர்த்வா, தாரணிகள், ஊர்த்வாக்கள்  என்பவை சில.  

இரண்டாவது போர் :
இரண்டாவது போர் இரு பகுதிகளாக நடைபெறுகிறது. பாண்டிய வரகுணன் முதலில் வந்து இடவைக் கோட்டையைப் பிடித்துக் கொள்கிறான். ஆனால் அதன்பின் வந்து திரும்புறம்பியம்  போர் பிளாசி யுத்ததிற்கு இணையாகச் சொல்லப்படுகிறது. இப்போரில் மகாபாரத புத்தத்தில் அமைந்த பத்ம வியூகத்தை பாண்டியன் அமைத்தான் என்று ஆசிரியர் கற்பனையில் எழுதியதோடு போரின் பலமுகங்களை  கதையில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

கதையின் இன்னொரு சிறப்பு ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒரு பாத்திரத்தின் பெயரில் முடித்து, அடுத்த அத்தியாயத்தை அதே பெயரில் ஆரம்பிக்கிறார். ஏராளமான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து  சான்றுகளை ஆங்காங்கே கொடுத்திருக்கிறார். தெள்ளிய தமிழில், தெளிவான நடையில், குழப்பமில்லாத கதைக்கருவுடன், வரலாறு கற்பனை ஆகிய இரண்டையும் சரிவிகிதமாகக் கலந்த கதை இது.

உதயனன் சுமார் 20 புதினங்களை எழுதியிருக்கிறார். கல்கி, சாண்டில்யனுக்குப்பிறகு அவ்வளவாக நல்ல வரலாற்றுப் புதினங்கள் வரவில்லை என்று நினைப்பவர்களுக்கும், வந்தாலும் அவ்வளவு +சுவாரஸ்யமில்லை என்று எண்ணுபவர்களுக்கும், உதயனின் கதைகள் ஏமாற்றம் அளிக்காது என்பது நான் இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்ட உண்மை.

உதயணன் அவர்களே தொடர்ந்து எழுதுங்கள்.

முற்றும்

8 comments:

  1. அருமையான நாவல் போலிருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் , முடிந்தால் படித்துப்பாருங்கள் .

      Delete
  2. ஆல்ஃபி, நாவலைப் படிக்கத்தூண்டும் வண்ணம் அமைந்த நல்லதொரு கட்டுரை!

    ReplyDelete
  3. ஆல்ஃபி சார். உங்களுடைய பதிவு கண்டிப்பாக வாசிக்க தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய பரந்துபட்ட வாசிப்பனுபவம் வரலாற்று நாவல்களை வரைத் தொடுகிறது. படிக்க முயற்சிக்கிறேன்.!

    ReplyDelete
  4. மயில் கோட்டை புதினத்தினை வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் அறிமுகம். படிக்க முயல்கிறேன். நன்றி.

    ReplyDelete