Thursday, June 30, 2016

உதயணனின் “மயில்கோட்டை”


படித்ததில் பிடித்தது


உதயணன் எழுதிய 'மயில்கோட்டை" -சீதை பதிப்பகம்.

வரலாற்று நாவல்கள் படிப்பது ஒரு சுகமான அனுபவம். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சற்றே மறந்து, கடந்த காலத்திற்குச் சென்று, அரசர் ஆண்ட காலத்திற்கு கற்பனைகளை ஓட விட்டு மூழ்கும்போது, நாமும் அதில் ஒரு பாத்திரமாகவே மாறிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு.

குறிப்பாக தாத்தா பாட்டி சொல்லும் ராஜா ராணிக்கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, வரலாற்றுப்புதினங்களைப்படிப்பது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும். என்னுடைய ஆயா (அம்மாவின் தாயார்) "ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம்" என்று ஆரம்பித்து கதையினூடே சோறுட்டியது தான் என் வரலாற்று  ஆவலை தூண்டியிருக்க வேண்டும்.
Tamilnannool - Kalki Krishnamurthy
Kalki
சிறுபிள்ளையாக இருக்கும்போது, கோடை விடுமுறைக்கு என்னுடைய மாமாவின் வீட்டிற்கு திண்டுக்கல்  செல்வது வழக்கம். இரவில் என் அத்தை சமைக்கும் அறுசுவை உணவை உண்டுமுடித்து முற்றத்தில் கூடுவோம். எனது மாமா தேவராஜ் அவர்கள் தாம் படித்த கல்கியின் "பார்த்திபன் கனவு" கதையை சொல்ல ஆரம்பிப்பார். ஒவ்வொரு நாளும் தொடர்ந்த இக்கதை என் ஆவலை  மிகுதியாகத் தூண்டியது.

கல்கி அவர்கள் சோழ நாட்டுப் பின்ணணியில் எழுதிய பிற வரலாற்றுப் புதினங்களான “பொன்னியின் செல்வன்”, "சிவகாமியின் சபதம்" ஆகியவை தமிழில் ஒரு பெரிய தரத்தை அமைக்க, அதன் பின்னர் வந்த சாண்டில்யன் எழுதிய “கடல்புபுறா”, “யவனராணி” போன்றவை புதிய பாதை அமைந்தன. அதன் பின்னர் அகிலன், கோவி மணிசேகரன், ஆகியோர் தொடர்ந்தனர். 

இப்போதுள்ள எழுத்தாளர்களில் அப்படி எவரும் இல்லை என்று நினைத்தேன். சிலர் எழுதினாலும் ரசிக்கும் படியாக இல்லை.

அந்தச் சமயத்தில்தான் 'உதயணன்' என்பவர் எழுதிய சில புத்தகங்களைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒன்றை வாங்கிப் படித்துப் பார்க்கலாம் என்று வாங்கிய புத்தகம்தான் "மயில் கோட்டை". 720 பக்கங்கள் கொண்ட இந்த ஹிஸ்டாரிக்கல்  ஃபிக் ஷன் எனக்குப் பிடித்திருந்தது.

கதையின் காலம்:
பல்லவர் ஆட்சியின் பிற்பட்ட காலத்தில் நிகழும் கதை இது. இது பல்லவரின் கடைசி அரசன் அபராஜிதன் பற்றிய கதை. பல்லவரின் முடிவில் பிறந்து வளர்ந்தது தான் பிற்கால சோழர் ஆட்சி. அபராஜிதன் காலத்தில், ஆண்ட பிற்கால சோழர் ஆட்சியின் முதல் மன்னரான விஜயாலயச் சோழன் பல்லவ ஆட்சிக்கு அடங்கிய ஒரு சிற்றரசன். கதையின் காலத்தில் பல்லவ அரியணையில் இருப்பது நிருபதுங்க வர்மன். இவன் நந்திவர்ம பல்லவனின் மகன்.ஆனால் இவன் மகன் அபராஜிதன் தான்  கதையில் அதிகமாக வருவது. சோழ அரியணையில் இருப்பது விஜயாலயன். ஆனால் அவன் மகன்,  இளவரசன் ஆதித்தன் தான் இக்கதையில் முக்கிய பங்காற்றுகிறான். அப்போது பாண்டிய அரசனாக இருந்தவன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ  வல்லவன். அவன் மகன் தான் பல்லவர் மீது பகை கொண்ட  வரகுண பாண்டியன்.

இது தவிர அச்சமயம் சேர அரசராக இருக்கும் ஸ்தாணு ரவியும் கதையில் வந்து போகிறான். இவர்கள்தான் கதையில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள். கதையின் காலம் கி.பி.850 முதல் கி.பி.900 வரை.

கதைக்கரு:
வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்தால் கற்பனையை அதிகமாக பயன்படுத்தமுடியாது என்ற உத்தியைப் பயன்படுத்தி கதையாசிரியர் ‘வளவன்' என்ற கதாபாத்திரத்தை  உருவாக்கியிருக்கிறார். கதை முழுவதும் இவனைச்சுற்றியே நடப்பதால் இவன்தான் கதையின் நாயகன் என்று வைத்துக் கொள்ளலாம். பல்லவ சேனையின் உபதளபதியாக இருக்கும் இவன் பிறகு தளபதியாகி, கடற்போர் மற்றும் நிலப்போரை தலைமை தாங்கி நடத்துகிறான்.

பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் இளையசகோதரன் கம்பவர்மரின் சதியை முறியடித்து, சிங்கள அரசன் முதலாம் சேனனின் கடற்போரை வென்று, பாண்டிய இளவரசன் வரகுணனின் மாபெரும் படையையும் திருப்புறம்பியும் போரில் வெல்வதாக கதை அமைகிறது.

கதாபாத்திரங்கள்:  
ஏற்கனவே குறிப்பிட்ட அரச குலத்தினரைத் தவிர, ஒலக்கூர் மன்னன் கம்பவர்மன், கங்கமன்னர் பிருதிவிபூதி, பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின்  மனைவி பிருதிவீ மாணிக்கம், சோழ இளவரசி மாதேவி அடிகள், சிங்களக் கடற்படைத்தளபதி கலபதி தென்னன் காராளன், பாண்டிய சேனாதிபதி நக்கம் புள்ளன் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள்.

இவை தவிர கற்பனைக் கதா பாத்திரங்களான போற்றிநங்கை,பத்மினி, அரங்கூறும் தலைவன் அமத்தீஸ்வரன், கபாலிக தலைவன் அமோஷகன், கருமத்தலைவன், விஜயபாகு, வானாதி கங்கராயன்  என பல கதா பாத்திரங்களை  மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார்.

போர்கள்:
Battle of Thirupurambiyam 
வரலாற்றுக் கதைகளில் போர்கள் மிகவும் முக்கியம். ஆசிரியர், கதையை போர்களைச் சுற்றியே பின்னி அநேகமாக போரை உச்சகட்டமாக  (Climax) பயன்படுத்துவார்கள். இக்கதையில் இருபெரும் போர்கள் வருகின்றன. ஒன்று பல்லவக்கப்பல் படைக்கும் சிங்களக் கப்பற்படைக்கும் நடக்கும் போர். இதனை விரிவாக எழுதியதோடு அக்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட விதவித போர்க்கலங்களை குறிப்பிட்டு, ஒவ்வொன்றின் சிறப்பையும், செயல்படும் விதத்தையும் விளக்கியுள்ளார். அவற்றுள் சில, சொர்ணமுகி, தீர்கா, (நீளமானது) கர்ப்பிணி (தென்னை மர உயரம்) அதூர்த்வா, தாரணிகள், ஊர்த்வாக்கள்  என்பவை சில.  

இரண்டாவது போர் :
இரண்டாவது போர் இரு பகுதிகளாக நடைபெறுகிறது. பாண்டிய வரகுணன் முதலில் வந்து இடவைக் கோட்டையைப் பிடித்துக் கொள்கிறான். ஆனால் அதன்பின் வந்து திரும்புறம்பியம்  போர் பிளாசி யுத்ததிற்கு இணையாகச் சொல்லப்படுகிறது. இப்போரில் மகாபாரத புத்தத்தில் அமைந்த பத்ம வியூகத்தை பாண்டியன் அமைத்தான் என்று ஆசிரியர் கற்பனையில் எழுதியதோடு போரின் பலமுகங்களை  கதையில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

கதையின் இன்னொரு சிறப்பு ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒரு பாத்திரத்தின் பெயரில் முடித்து, அடுத்த அத்தியாயத்தை அதே பெயரில் ஆரம்பிக்கிறார். ஏராளமான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து  சான்றுகளை ஆங்காங்கே கொடுத்திருக்கிறார். தெள்ளிய தமிழில், தெளிவான நடையில், குழப்பமில்லாத கதைக்கருவுடன், வரலாறு கற்பனை ஆகிய இரண்டையும் சரிவிகிதமாகக் கலந்த கதை இது.

உதயனன் சுமார் 20 புதினங்களை எழுதியிருக்கிறார். கல்கி, சாண்டில்யனுக்குப்பிறகு அவ்வளவாக நல்ல வரலாற்றுப் புதினங்கள் வரவில்லை என்று நினைப்பவர்களுக்கும், வந்தாலும் அவ்வளவு +சுவாரஸ்யமில்லை என்று எண்ணுபவர்களுக்கும், உதயனின் கதைகள் ஏமாற்றம் அளிக்காது என்பது நான் இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்ட உண்மை.

உதயணன் அவர்களே தொடர்ந்து எழுதுங்கள்.

முற்றும்

Monday, June 27, 2016

சொர்க்கத்தின் கோவிலில் பரதேசி!!!!!

சீனாவில் பரதேசி -13

Beijing bus travel
Public bus in Beijing 
நன்றாகத் தூங்கி எழுந்தேன். கிளம்பி காலைச் சிற்றுண்டி முடித்து வெளியே வந்து பஸ்ஸில் ஏறினேன். நேற்றே ஜோஹன்னாவிடம் எல்லா வழிவகைகளையும் கேட்டுக் கொண்டு கையில் அட்ரஸையும் சீனமொழியில் எழுதி எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். பீஜிங்கில் பஸ் பிரயாணம் இதுதான் முதல் முறை என்பதால் சிறிது படபடப்பாக இருந்தது. பஸ் முழுவதும் ஏசி  செய்யப்பட்டு இருந்தது. அமெரிக்கா போல் அங்கு எல்லா பேருந்துகளும் ஏசி/ஹீட்டர் வசதிகளோடு இருந்தன. கண்டக்டர் பெண் நடுவில் உட்கார்ந்திருந்தாள். அவளிடம் போய் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்க பஸ்களில் கண்டக்டர் கிடையாது. ஒரு அரை மணி நேரப்பயணத்திற்குப் பின் நான் பார்க்க வேண்டிய இடம் வந்தது. இதற்குப் பெயர் 'டெம்பில் ஆஃப் ஹெவன்' ( Temple of Heaven).
The Entrance Ticket Information in Chinese
Entrance to get the tickets
          பஸ்ஸைவிட்டு இறங்கி குறுக்கே நடந்து கடந்து வழிகேட்டால் உயரமான சுவர்கள் கொண்ட ஒரு பெரிய தோட்டம் போன்ற இடம் வந்தது. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தேன். ஒரு மரங்கள் சூழ்ந்த  அந்த இடத்தின் நடுவில் அகலமான சிமென்ட் பாதை தெரிந்தது. அதனுள்ளே போகச் சொன்னார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கோவிலையையும் காணோம்.பாதையின் இரு மருங்கிலும் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு 1 1/2 கி.மீ. நடந்திருப்பேன். நடந்து உள்ளே போனதும், பசி வயிற்றைக் கிள்ளியதால் வழியில் வந்த ஒரு கடையில் விற்ற பன் போன்ற ஒரு வஸ்துவைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் விற்ற பழங்களையும் சாப்பிட்டுவிட்டு, ஒரு லெமன் ஜூஸ் போன்ற ஒன்றைக் குடித்தவுடன்தான் என்னுடைய படபடப்பு அடங்கியது.
Excising  People
சாப்பிட்டு முடித்து ஒரு ஏப்பத்தையும் விட்ட பிறகு கடைக்காரப் பெண்ணிடம் இடத்தைக் கேட்டேன். அவள் இடதுபுறம் இந்த ஒரு மரப் பாலத்தைக் காண்பித்து அதனைத் தாண்டிப் போகச் சொன்னாள். அவள் சொன்ன வழியில் சிறிது நடந்தவுடன் மிகப் பிரமாண்டமான ஒரு கோயில் தெரிந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்துவிட்டோம் என்று நினைத்து அதனை நோக்கி நடந்தேன்.

அதனைப் பற்றி சில விவரங்களைப் பார்த்துவிடுவோமே.

1.   இந்த 'சொர்க்கத்தின் ஆலயம்' கிபி.1406 முதல் 1420 –க்குள் யாங்லி பேரரசரால் கட்டப்பட்டது. இவர்தான் விலக்கப்பட்ட நகரத்தையும் கட்டியவர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
2.   ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜியாஜிங் (Jiajing) பேரரசர் காலத்தில்தான்  இது விரிவுபடுத்தப்பட்டு "டெம்பிள் ஆஃப் ஹெவன்" என்ற பெயரையும் பெற்றது.
3.   ஜியாஜிங் இது போன்றே கிழக்குப்புறம், சூரியனுக்கும் (Temple of sun) வடபுறம்  பூமிக்கும் (Temple of Earth), மேற்குப்புறம் நிலவுக்கும் (Temple of Moon) வெவ்வேறு கோவில்களைக் கட்டினாராம்.
4.   அதன்பின் 18ஆம் நூற்றாண்டில் சின்லாங் (Qianlong) பேரரசர் காலத்தில் இது  முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது.
5.   ஓப்பியம் யுத்தம் நடக்கும்போது, ஆங்கில ஃபிரெஞ்சுப்  படைகள் இதனை ஆக்ரமித்து தங்கள் செயலகம் போல் பயன்படுத்தினராம்.  
6.   1900ல் நடந்த பாக்சர் புரட்சியின் போது எட்டு நாடுகள் ஒன்று சேர்ந்து இதனை ஆக்ரமித்து தங்கள் போர்த்தலைமையகமாக ஆக்கிக் கொண்டனர். இதனால் முற்றிலும் சிதிலமடைந்து சிலகாலம் கேட்பாரற்றுக் கிடந்தது.
7.   ஆனால் 1914ல் யுவான் ஷிக்காய் (Yuan shikai) தாம் சீன அதிபராக பதவியேற்றபிறகு, இங்கு ஒரு மிங் வழி பிராத்தனையை நடத்தினார். ஏனென்றால் அவரே தன்னை சீனப்பேரரசராக முடிசூட்டிக் கொள்ள நினைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.
8.   1918ல் இது அரசு பூங்காவாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்டது.
9.   1998ல் இதன் கட்டடக்கலையின் உன்னதத்தை வியந்து, புனெஸ்கோவால் "வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்” டாக ஆக்கப்பட்டது.
10.               இந்த இடம் மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று சதுர மீட்டர் அகலம் கொண்டதாம்.

North Sky Gate
Inner Entrance 

மெதுவாக இடதுபுறம் இருந்த பாலத்தில் நடந்த போது, ஒரு பிரம்மாண்டமான உயரமான நுழைவாயில் வந்தது. அருமையான வேலைப்பாடுகளைக் கொண்ட  அந்த வாயிலைக் கடந்து, அதன் மறுபுறம் பல படிகளில் இறங்கி உள்ளே சென்றால் வெட்டவெளியில் பிரமாண்டமாக பல வண்ணங்களில் ஜொலித்தது, “சொர்க்கத்தின் கோவில்”.
Hall of Prayer for Good Harvests, the largest building in the Temple of Heaven
Temple of Heaven
அதன் இருபுறமும் இடைவெளிவிட்டு இரு பெரிய கட்டங்கள் இருந்தன.
எனது முன்னால் வந்தது "ஹால் ஆஃப் பிரேயர் ஃபார் குட் ஹார்வெஸ்ட்”. ( Hall of Prayer for Good harvest)அப்படியே நடந்து சென்று சுற்றியும் அமைக்கப்பட்டிருந்த படிகளில் ஏறி மேலே சென்றேன்.

வட்ட வடிவமாக மூன்று அடுக்குகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்த பிரார்த்தனை மண்டபம் 36 மீட்டர் சுற்றளவும், 38 மீட்டர் உயரமும் கொண்டது. மூன்று அடுக்கு மார்பிள் கல்லால் இதன் அடிப்பகுதி அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த முழு மண்டபமும் மரத்தால் கட்டப்பட்டது. ஆனால் ஒரு ஆணிகூட பயன்படுத்தப்படவில்லையாம்.

இதன் மறுபுறம் இருந்தது “இம்பீரியல் வால்ட் ஆஃப் ஹெவன்” (The Imperia lVault of Heaven). இது ஒரு அடுக்கில் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டது. ஆனால் ஹால் ஆஃப் பிரேயரைக் காட்டிலும் சின்னது. இதன் கவர் வழவழப்பாய் இருக்கிறது. லேசாகப்பேசினால் கூட எதிரொலி கேட்கிறது. பிரார்த்தனை மந்திரங்களை ஓதும்போது கூடியிருக்கும் அனைவருக்கும் கேட்கும் விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எதிரொலி சொர்கத்தில் எதிரொலிக்கும் என்று இவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இது “ஹால் ஆஃப் பிரேயரு”டன் ஒரு காவிநிற பாலத்தின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

இதன்  கிழக்குப்புறத்தில் ஒரு வட்டவடிவ பலிபீடம் ஒன்று இருக்கிறது. இதுவும் மூன்று அடுக்கு பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு, ஒவ்வொரு அடுக்கிலும் டிராகன் வடிவங்கள் செதுக்கப்பட்டு இருந்தன.

அதன் மறுபுறம் இறங்கினால் ஒரு கம்பீரமான சீன ஆண்மகனும் இளவரசிபோல் உடையணிந்த ஒரு அழகியும் முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர்.  சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, நானும் அவர்களை நோக்கி நகர்ந்தேன்.

-தொடரும்.

ஒரு முக்கிய அறிவிப்பு :

வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும், தமிழர் விழா ட்ரெண்டன்  , நியூ ஜெர்சியில்  வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .அடியேனும் கலந்து கொள்கிறேன்.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.வாருங்கள் சந்திப்போம் .






Thursday, June 23, 2016

நியூயார்க்கில் பழங்களின் காலம் !!!!!!!!!!!!

My wife's Rose garden 2016 

நியூயார்க்கில் நான்கு காலங்களையும் துல்லியமாக பார்க்கலாம் ..ஃபால் (Fall) அல்லது ஆட்டம் (Autumn) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காலத்தில் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலை கூட இல்லாது உதிர்ந்து போய், சுற்றுப்புறம் களையிழந்து இருக்கும்.என் வீட்டுத் தோட்டத்தில் பின்னால் இருக்கும் பழமரங்களுக்கும் அதே கதிதான். காய்கறிச் செடிகள் முற்றிலுமாக செத்துவிடும். முன்னால் இருக்கும் ரோஜாத் தோட்டமும் புல்வெளியும் கூட முற்றிலும் உதிர்ந்து காய்ந்து பரிதாபமாய் இருக்கும். இந்த நிலை மார்ச் வரை நீடிக்கும்.
Front Lawn-2016


 பின்னர் கடுமையான குளிர்காலம், பனிப்பொழிவு எனும் வெள்ளைமழை, பனிப்புயல் ஆகிய எல்லாவற்றையும் பொறுமையுடன் கடந்தால், மெதுவாக கள்ளனைப்போல் வருகிறது வசந்த காலம் (Spring). ஏப்ரலில் மழை பெய்ய ஆரம்பிக்கும்.   மரங்களும், செடிகளும் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்து பூப்பூக்க ஆரம்பிக்கும். இதைத்தான் இங்கே "ஏப்ரல் ஷவர் மே ஃபிளவர்" என்று  சொல்வார்கள்.


பின்னால் இருக்கும் தோட்டத்தில் (Kitchen Garden) பெர்சிமன் மரமும், அத்தி மரமும் ஏப்ரலில் துளிர்க்க ஆரம்பிக்கும். ஆனால் பழங்கள் வர ஜூலை இறுதி ஆகிவிடும்.முதலில் புதினாதான் பசபச வென்று வர ஆரம்பிக்கும். என் மனைவி வழக்கமாகப்போடும் கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பாவக்காய், சுரைக்காய் ஆகியவற்றுக்கு மறுபடியும் செடிகள் வாங்கி வைக்க வேண்டும். அது மட்டும் தானாக வராது. செடிகள் வைக்குமுன்னால் களைபிடிங்கி, கொத்தி உரம் போடவேண்டும். முன்னால் உள்ள பூந்தோட்டத்தில் உள்ள பலவண்ண ரோஜாச்செடிகளும் மற்றவையும் தன்னால் வந்துவிடும், ஒவ்வொரு வருடமும் செடிகள் வைக்கத் தேவையில்லை. ஆனால் ஆறுமாதம் அமைதியாயிருந்ததால் பூத்துக் குலுங்கிவிடும். 
 
Quenpa and Leeches
அதோடு வசந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு அம்சம் விதவிதமான பழங்கள். ஆப்பிள்கள், ஆரஞ்சு பழங்கள், மாம்பழங்கள், திராட்சை ஆகியவை எல்லா சீசனிலும் கிடைக்கும். ஆனால் வசந்த காலத்தில் தான், செர்ரி , ராஸ்பெர்ரி, பிளாக் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, கிச்சிலி, பீச்சஸ், பிளம்ஸ், ஆப்ரிகாட், பேரிக்காய்கள், நெக்டரின், கிர்னி, தர்ப்பூசணி போன்ற பழங்கள் கிடைக்கும்.
Jujubee 
இதுதவிர மிகவும் சிறப்பான பழங்கள் என்று சொன்னால் பெர்சிமன், அத்தி, கிவி, பேரீச்ச காய்கள், ஜூஜீபி  ஆகியவற்றைச் சொல்லலாம். இவை இலையுதிர்கால ஆரம்பம் வரை கிடைக்கும்.

மதிய உணவு முடித்து காலாற வெளியே நடந்து போய் வருவது என் வழக்கம்.என் அலுவலகத்தின் அருகில் ஒரு கொரியன் கடை உள்ளத. அங்கு இந்தத்தடவை சில வழக்கமான மற்றும் சில மிகவும் வித்தியாசமான பழங்களைப் பார்த்தேன்.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சிலவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். சிலவை என்னால் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகம். இதோ அவை உங்களுக்காக:

பேஷன் ஃப்ரூட்  (Passion Fruit)

Passion Fruit

இந்தப் பழத்தில் நிறைய வகைகள் உண்டு. நான் ஹவாய் போயிருந்த சமயம் முதன் முதலில் இதைச் சாப்பிட்டேன். தோல் ஓடு போல் கடினமாய் இருக்கும். உள்ளே விதைகள் நிரம்பி புளிப்புச் சுவையாய் இருக்கும். இந்தக்கடையில் இதன் இரண்டு வகைகளைப் பார்த்தேன். பெரியது ஒன்று  6 டாலர்கள் சின்னது 4 டாலர்கள் .

Passion Fruits


கோல்டன் ஹனிடியூ   (Golden Honey Dew)

Golden Honey Dew

ஹனிடியு என்ற பழம் கிர்ணிப்பழ வகையைச் சேர்ந்தது. பொதுவாக வெளியேயும் உள்ளேயும் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால்  தேன் போல் தித்திக்கும். அதனால்தான் இதற்குப் பெயர் ஹினிடியூ. ஆனால் இந்த வகை வெளியில் மஞ்சளாய் இருப்பதால். இதற்குப் பெயர் கோல்டன் ஹனிடியூ. பக்கத்தில் சாம்பிளுக்கும் வைத்திருந்தார்கள். உள்ளே வெள்ளை நிறம்தான், சுவையும் அதே தேன் சுவைதான். நல்ல சைஸில் இருந்த இதன் விலை ஒன்று மூன்று டாலர்தான்.

மங்குஸ்தான் (Mangosteen)
Mangosteen

அடர்ந்த பிரெளன் நிறத்தில் இருக்கும் இந்தப்பழம்தான் நான் இதுவரை பார்த்ததில் மிகவும் விலையுயர்ந்தது. விலையைப் பார்த்துவிட்டு பல தடவை வந்துவிட்டேன். இதுவரை நான் சுவைக்காத பழங்களில் இது ஒன்று. சிறிய கொய்யாப்பழ அளவில் இருந்தது. விலை ஒரு பவுண்ட் 15 டாலர் . பவுண்ட் என்பது அரைக்கிலோவுக்கும் சற்று குறைவானது.

டிராகன் பழம் (Dragon Fruit)

Dragon Fruit

இது பார்ப்பதற்கு விசித்திரமான பழம். ரோஸ் நிற அழகு கலரில் ஆங்காங்கே  பச்சை நிறப்பட்டைகள்  முளைத்திருக்கும். பார்ப்பதற்கு டிராகன் போல இருப்பதால் இதனை இப்பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தப் பழம் வியட்நாம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது. விலை ஒரு பவுண்ட் ஏழு டாலர். இந்தப்பழத்தை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.  சற்றே வளவளவென்று விதைகள் அதிகமாக இருந்தது.

கொரியன் ஸ்வீட் மெலன் (Korean Sweet Melan)



இது எப்போதும் எனக்கு வெள்ளரிப் பழத்தை நினைவு படுத்தும்.தோற்றத்தில் மட்டுமல்ல ருசியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வரிகளைக் கொண்டது. ஆனால் இதன் அளவு ஒரு சிறிய மாம்பழம் அளவில் இருக்கும். விலை பவுண்ட் 3 டாலர்கள்.

கிவானோ கொம்பு பழம்: (Kiwano Horned Melan)


மஞ்சள் நிறமான இந்தப்பழத்தில் ஆங்காங்கே முட்கள் உள்ளது. தொட்டுப் பார்த்தேன் மிகவும் கூர்மையாக இருந்தன. பேரும் பொருத்தமாய்த் தான் வைத்திருக்கிறார்கள். நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். நான் இவ்வகைப் பழத்தை இதுதான் முதற்தடவை பார்க்கிறேன். இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. முள்ளைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. விலை ஒன்று 8 டாலர்கள்.

பெர்சிமன் பழம்  (Persimon)


இதில் எனக்குத் தெரிந்து 2 வகைகள் உள்ளன. ஒன்று தோலை வெட்டிவிட்டு சாப்பிட  வேண்டும் இல்லாவிட்டால் தொண்டையைப் பிடித்துவிடும். இவ்வகை நன்கு பழுத்தால்தான் சாப்பிட முடியும். படத்தில் பார்க்கும் மற்றொன்று தோலோடும் சாப்பிடலாம். காய்வெட்டாக இருந்தாலும் இனிக்கும், பழுத்துவிட்டால் தேன் ஒழுகும் விலை ஒன்று 2.50 டாலர்கள்.

       மற்றும் படத்தில் உள்ள கினிப்பா, துரியன்,(வந்த புதிதில்  இதை பலாப்பழம் என்று  நினைத்து ஏமாந்துவிட்டேன்)

Apricots
பீச், ஆப்ரிகாட் ஆகியவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆண்டவனின் படைப்பில்தான் எவ்வளவு அதிசயங்கள். அனுபவிப்போம் வாருங்கள்.
Durian
Durian

பி(பெ)ண் குறிப்பு:
"பழங்களைப்பற்றி ஒரு பிளாக் எழுதியுள்ளேன் , படித்துப்பார்", என்று என் மனைவியிடம் சொன்னேன் ."ஒரு பழம் தானே பழத்தைப்பற்றி எழுதமுடியும்", என்று சொன்னாள். இதற்கு நான் சும்மா இருந்திருக்கலாம் .நமக்கெல்லாம் எத்தனை முறை பட்டாலும் ???????
 
முற்றும்.