Thursday, March 17, 2016

நல்லெண்ணெயும் கெட்டெண்ணெயும்!!!!!!!!!!!


"கொக்கரக்கோ, கோ", அந்தச் சேவல் மறுபடியும் கூவியது. “இந்தச் சேவலுக்கு வேற வேலையில்லையா? மனுசனை தூங்கவிடமாட்டேங்குதுஎன்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பிப்படுத்தேன். எங்க வீட்டு முன்னறையில் இருந்த, ஊமை ஆசாரி செஞ்ச மரக்கட்டிலில் பாயை விரித்து அதில்தான் நான் படுப்பேன். மூத்த பையன் என்பதால் இந்த விசேஷ சலுகை. கீழே எனது இரு தம்பிகள் பாயில் படுத்திருந்தார்கள். அரைக் கண்ணால் பார்த்தேன் அவர்களிடத்தில் எந்த அசைவும் இல்லை. மீண்டும் சேவல் கூவுவது காதுகளுக்குள் புகுந்து குடைந்தது.
அடுத்து, "எந்திரிங்கப்பா, நேரமாச்சு", இது எங்கம்மாவின் குரல். எங்கம்மா திரும்பி வந்து தனித்தனியாக தொட்டு அசைத்து, "டேய் எந்திரிங்கடா சீக்கிரம், இன்னக்கி சனிக்கிழமை அந்த மனுஷனுக்கு கோபம் வந்துரும்" என்று எழுப்பினார்கள். எங்கப்பாவுக்கு கோபம் வந்தால் பின்னி பெடலெடுத்துருவார். இந்த சனியன் பிடித்த சனிக்கிழமை ஏந்தான் வருதோன்னு சலித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். என் தம்பிகள் இருவரும் மெதுவாக எழுந்தார்கள்.
போய் பல் துலக்கிவிட்டு வருவதற்குள், என் அப்பா லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு 3 மணப்பலகைகளை வைத்துக் கொண்டு ரேடியோ ரூமில் காத்திருந்தார். நாங்கள் மூவரும் உள்ளே நடுரூமில் மறைத்தும் மறைக்காமலும் எங்கள் கால்சட்டைகளைக் கழற்றிவிட்டு கோமணம் கட்டிக் கொண்டு வந்தோம். அப்போதெல்லாம் ஜட்டி கண்டுபிடிக்கலயா இல்லை ஜட்டி வாங்க முடியலையானு தெரியல.
நான் அப்ப ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமைகளில் எது நடக்கத்தவறினாலும் இது தவறவே தவறாது.
“ஏய் சுசிலா நல்லெண்ணெய எங்க வச்ச”?
எங்கப்பா நார்மலாக இருக்கும் போது எங்கம்மாவை குழந்தை என்றோ சுசி என்றோ குப்பிடுவார். கோபம் வரும்போதுதான் முழுப்பெயரான சுசிலா என்று கூப்பிடுவார்.
"ஒரு எடத்தில வச்சா அதை மாத்தி வைக்காதன்னு எத்தனை தடவை சொல்றது" இது அப்பா.
அம்மியை அரைத்துக் கொண்டிருந்த அம்மா, அப்படியே விட்டுவிட்டு, ஈரக்கையுடன் எழுந்து வந்து நல்லெண்ணெயை எடுத்துக் கொடுத்தார்.


மூவரும் போய் மணப்பலகையில் உட்காரவும், எங்கப்பா நல்லெண்ணெயை வாங்கிக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும். எங்கம்மா, அப்பா இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியர்கள். அது ஒரு நடுநிலைப்பள்ளி, பெயர் இந்து நடுநிலைப்பள்ளி. அங்கேதான் நானும் என் தம்பிகளும் எட்டாவது வரை படித்தோம்.
எங்கம்மாவுக்கு காலையில் 4 மணிக்கு எழுந்தால்தான் வேலை முடியும். பாத்திரம் விளக்கி முடித்து, சாணியைக் கரைத்து இருபுற வாசலையும் தெளித்து, கோலம் போட்டு முடித்து உள்ளே வருவார்கள்.
அடுப்பைப்பற்ற வைத்து கருப்பட்டிக் காப்பி போட்டு முடிக்க, எங்கப்பா வெளியில் போய் காலைக்கடன்களை முடித்துவர சரியாக இருக்கும். வீட்டில் கழிவறை இருந்தாலும் ஒரு நாளும் அவர் அதை பயன்படுத்தமாட்டார்.
அவர் வந்தவுடன் ஆலங்குச்சியில் பல்துலக்கி முடிக்க, காப்பி ரெடியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கோபம் வந்துவிடும்.
இதற்கிடையில் எங்கம்மா, ஆட்டுரலில் தேங்காய் சட்னி ஆட்டிமுடித்து, இட்லியை அடுப்பில் வைத்துவிட்டு வந்து அம்மியில் கலர் கலராக மசாலாக்களை அரைப்பார்கள். சாதத்தை ஒரு புறம் வடித்துவிட்டு  சாம்பாரோ, புளிக்குழம்போ வைத்துவிட்டு  பள்ளிக்கு ஓட வேண்டும். இதிலே அவர்களுக்கு பாவம் சாப்பிடமட்டும் நேரமிருக்காது. இடைவேளையில் வந்து ரசத்தைக் கூட்டிவிட்டுப் போவார்கள்.
ஆனால் சனிக்கிழமை கொஞ்சம் வித்தியாசம்.
நல்லெண்ணெயை எடுத்து எங்கப்பா என் தலையில் வைத்து கரகரவென்று தேய்த்து மடமடவென்று தலையில் தட்டினார். எனக்குப் பொறி கலங்கியது. எண்ணெய் கண்களுக்குள்  இறங்கி எரிச்சலைத்தந்தது. என் அடுத்த தம்பி, அதைப் பார்த்து விக்கித்து உட்கார்ந்திருக்க, என் சின்னத்தம்பி வழக்கம்போல் அழத்துவங்கினான்.

எங்கப்பா நாக்கை மடித்து அவனைப்பேசாமலிரு என்று மிரட்ட, அவன் மேலும் அழ ஆரம்பித்தான். அவனுக்கு எண்ணெய் வைக்க ஆரம்பிக்க, அவன் அழுகை உச்சஸ்தாயிக்கு போனது. உடம்பு முழுவதும் எண்ணெய் வைத்துவிட்டு கைகால்களை உருவிவிடுவார்.
எண்ணெய் வைக்கும் படலம் முடிய, எங்கப்பா இப்போது ஒவ்வொருவராக குளிப்பாட்ட ஆரம்பிப்பார்.
          அதற்கு சிறப்பாக தயாரிக்கப்பட்ட சீயக்காய் பயன்படுத்தப்படும். எங்கம்மா இதற்காக வருடமொருமுறை மதுரைக்குச் சென்று தேர்முட்டித் தெருவில் சீயக்காய் வாங்கி காய வைத்து பதப்படுத்தி, கஸ்தூரி மஞ்சள், கடலைப்பருப்பு, உலர்ந்த எலுமிச்சைத் தோல், போன்ற பலவற்றை கலந்து அரைத்து சிறப்பாக செய்வார்கள்.  
மறந்துகூட கொஞ்சம் கண்ணைத் திறந்தாலும், சீயக்காய் உள்ளேபோய் எரியத்துவங்கும். கண்கள் கொவ்வைப் பழமாய்ச் சிவந்துவிடும். குளிச்சி முடித்து தலையை துவட்டி எங்கப்பா பவுடரை தலையிலும் கொஞ்சம் போட்டுவிடுவார். அன்றைக்கு ஸ்கூலுக்கு போனா என்னோட நண்பர்கள் குஷியாக தலையைத் தட்டுவார்கள். அப்போது பறக்கும் பாண்ட்ஸ் பவுடரைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்.
இதெல்லாம் தேவையா என்று பலமுறை நினைத்து நொந்திருக்கிறேன்.
எங்கப்பாவிடம் கேட்கத்தைரியம் இல்லாததால் ஒருநாள் எங்கம்மாவைக் கேட்டேன்.
அவர் சொன்னார், “ இது ரொம்பவும் நல்லதுப்பா, முடி நன்றாக வளரும், சீக்கிரம் நரைக்காது. கண்கள் ஒளி வீசும், உடம்பு சூடு தனிந்து குளிர்ச்சியாகும் என்று பல நன்மைகளை அடுக்கினார். அதன் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த துன்பத்தைத் தாங்கிக் கொண்டேன்.   
அந்த நப்பாசை தப்பாசை என்பது பிறகுதான் தெரிந்தது. முப்பது வயசில கண்ணாடி போட்டு 35 வயசுல டை அடிக்க ஆரம்பிச்சு நாற்பது வயசுல முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சு ....ஹீம் .
நல்லெண்ணெய் நம்ம கணக்குல கெட்ட எண்ணெய் ஆயிப்போச்சேசேசேசே. இதுக்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டேன்.

முற்றும்.

15 comments:

  1. ஹா... ஹா.... ஹா... பொய் நம்பிக்கைக்கள். அல்லது அப்புறம் வந்த வருடங்களில் செயற்கை ஷாம்பூ, கால/ ஊர் மாற்றம் போல என்ன தவறு நிகழ்ந்ததோ!:)))))

    ReplyDelete
    Replies
    1. எதை நம்புறது எதை நம்பக்கூடாதுன்னே தெரியலை ஸ்ரீராம்

      Delete
  2. அடடா... இப்படி ஆகிப்போச்சே...!

    ReplyDelete
  3. No. I know. Something is missing.

    ஒரு சந்தேகம் : இந்த எண்ணெய் தேச்சி குளிச்சா ஒரு சொக்கும் தூக்கம் ஒண்ணு வருதே ஏன்?!


    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அதிக அலட்டலினால் வரும் கிறக்கம்தான் ikway.

      Delete
  4. Hilarious. This part got published out of sequence ?

    ReplyDelete
  5. no sekar it is true..the samething was happening in my house also there three here four brothers...but the effect is true example..my head

    ReplyDelete
  6. unforgettable saturdays unga veetukum enga veetukum 30 adi thooram thaan rendu veetilayum ore maathiri nadanthuruku😀😀

    ReplyDelete
    Replies
    1. எல்லா வாத்தியார் வீடும் ஒரே மாதிரிதான் இருக்குமோ.

      Delete
  7. unforgettable saturdays unga veetukum enga veetukum 30 adi thooram thaan rendu veetilayum ore maathiri nadanthuruku😀😀

    ReplyDelete
  8. அதென்ன ரேடியோ ரூம்?

    //முப்பது வயசில கண்ணாடி போட்டு 35 வயசுல டை அடிக்க ஆரம்பிச்சு நாற்பது வயசுல முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சு ....ஹீம் .
    நல்லெண்ணெய் நம்ம கணக்குல கெட்ட எண்ணெய் ஆயிப்போச்சேசேசேசே//

    What about your brothers? அவங்களுக்காகிலும் நல்லெண்னையா? இல்ல அவங்களுக்கும் கெட்டென்னைதானா?

    ReplyDelete
    Replies
    1. அவைன்களுக்கும் அதே கதிதான் .
      அந்த ரூமில் ரேடியோ இருப்பதால் அதன் பெயர் ரேடியோ ரூம்.

      Delete