Thursday, June 9, 2016

கல்லூரி ஹாஸ்டலில் கிருஷ்ண லீலா !!!!!!!!!!

Washburn Hall, a landmark building in American College with historical significance in Madurai. Photo: R. Ashok
Washburn Hall, The American College, Madurai.
'வாஷ்பர்ன் ஹால்' மெஸ்ஸின் தலைவர் நாயர் சுட்டுப்போடும் மொறு மொறு நீள் வட்ட தோசையும், அதனோடு கொடுக்கப்படும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் நினைவுக்கு வர சடாரென்று எழுந்தேன். காலையில் எழுவதற்கு அது நல்ல ஒரு மோட்டிவேஷன். மணி ஏழு இருக்கும். குளித்து ரெடியாகி, சாப்பிட்டுவிட்டு 8.30க்கு துவங்கும் முதல் கிளாசுக்குப்போக சரியாக இருக்கும். எழுந்து நெட்டி முறித்துக் கொண்டே, கைலியை சரியாகக் கட்டிவிட்டு திசை திரும்பிப்போன, டூத் பிரஸ்ஸின் குச்சங்களில் ரூம்மேட் ரவீந்திரனின் கோல்கேட் பேஸ்ட்டில் சிறிது பிதுக்கி எடுத்து பரப்பிவிட்டு என் ரூமைவிட்டு வெளியே வந்தேன். என் ரூம் மேட் எக்கனாமிக்ஸ் ரவீந்திரன் ஏற்கனவே எழுந்து ஹாஸ்டலின் நடுவிலிருந்த பார்களில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.  அது தினமும் நடப்பதுதான். என்னை பல நாட்கள் கூப்பிட்டு ஒத்து வராததால் இப்போதெல்லாம் கூப்பிடுவதில்லை. (ரவீந்திரன் சேலத்தில் தற்பொழுது உதவிக்கமிஷனர்).

 10வது படிக்கும்போது ஜெய்சங்கர் படத்தைப் பார்த்துட்டு அடுத்த நாள் காலையில் உடற்பயிற்சி செய்ய முயன்றபோது வந்த என் அப்பா, "எலும்புக்கு என்னடா எக்சர்சைஸ் ?" என்று கிண்டலடித்ததால் அன்று விட்டதுதான். இன்று வரை எக்சர்சைஸ் என்பது என் வாழ்கையில் இல்லை.

 At Washburn Hall with Minisam and Vanaraj.

வெளியே வந்து, ரவீந்திரன் கையசைத்துச் சொன்ன குட்மார்னிங்கை ஏற்றுக்கொண்டு, வாயில் நுரையுடன் இருந்ததால் கையைத் தூக்கி சல்யூட் அடித்துவிட்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தேன்.

என்னுடைய 2-ஆவது ரூம்மேட் பாலா தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எட்டு மணிக்கு எழுந்தாலும், 8.30-க்குள் கிளம்பி வகுப்புக்குப் போய்விடுவான். பாட்டனி  படித்தான். பிற்காலத்தில் வக்கீலுக்குப்படித்து, தேர்தல் சமயத்தில் சும்மா ஒரு அப்ளிகேஷனை தட்டிவிட, அம்மா சீட் கொடுத்ததில் ஒரு தடவை MLA  ஆனான். அவனைப்பற்றி இன்னும் விவரமாக இன்னொரு முறை சொல்கிறேன்.

'வாஷ்பர்ன் ஹால்' அமெரிக்கன் கல்லூரியில் நடுநாயகமாக இருந்த ஒரு அசைவ ஹாஸ்டல். சதுர வடிவில் இரண்டு அடுக்கில் இருக்கும் கம்பீரமான சிவப்புக் கட்டிடம். முன்புறமும் பின்புறமாக இரும்புக்கிராதிகளால் அமைந்த இரு நுழைவாயில்கள். பின்புறகேட்டைத் திறந்து சென்றால் நீள்வடிவ மெஸ் வரும். வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஆட்டுக்கறி. சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டுகறிக் குழம்பு அமிர்தமாக இருக்கும். அதோடு அங்கு செய்யும் ரசம் ஆஹா அது அதிரசம் தான். வெள்ளிக்கிழமை மட்டும் வடை பாயாசத்தோடு சைவ உணவு இருக்கும்.
Washburn Hall


மாலையில் வாரமிருமுறை குஸ்கா இருக்கும். அதனை அடித்துக் கொள்ள உலகில் எதுவுமில்லை. அந்த நாள் மட்டும் உடற்பயிற்சி பாரில் அதிக போட்டி இருக்கும். நல்ல உடற்பயிற்சி செய்துவிட்டு ஒருபிடி பிடித்து விடுவார்கள்.

நிச்சயம் சொல்ல வேண்டிய ஒன்று, மாதமொருமுறை நடக்கும் 'Feast' என்று அழைக்கப்படும் விருந்து. பிரியாணி சிக்கன் வகைகள் இருக்கும். அந்த மூன்று வருடங்களில் என்னுடைய ருசிக்கும் நாவுக்கும் சுவையறிவு கூடியது அப்போதுதான்.

வெள்ளிக்கிழமை ரசமும் மற்ற நாள் ரசமும் முழுக்க வேறுவேறு. வெள்ளிக்கிழமை பருப்பு ரசம். ஆனால் மற்ற நாள் ரசம் ஆஹா ஆஹா,  அதன் ருசியை எப்படி விவரிப்பது ?. ஒரு நாள் மாலையில், ஒரு ஓரமாக பீடி பிடித்துக் கொண்டிருந்த நாயரிடம் குசுகுசுன்னு கேட்டபோது கிடைத்த அந்த ரகசியத்தை  உங்களுக்குச்  சொல்கிறேன்.

மட்டன் வேகவைத்த சூப் தண்ணீரில் தயாரிக்கப்படும் ரசமாம் அது. என் மனைவியிடம் சொன்னபோது "உவ்வே" என்று சொல்லிவிட்டாள்.உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நன்றாக அமைந்துவிட்டால் எனக்கும் சொல்லியனுப்புங்கள்.  

வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் பொங்கலும் ஆமை வடையும் இருக்கும். அந்த காம்பினேஷன்  யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் நீடூழி  வாழியவே. பொங்கலின் நடுவில் சிறு குழியிட்டு  தளதளவென்று சாம்பார் ஊற்றி, அதோடு சிறிது தேங்காய்ச் சட்னியும் சேர்த்து பொலபொலவென்று பிசைந்து வலதுகையால் ஒரு கவளம் வாயில் வைக்க, இடதுகையில் இருக்கும் ஆமை வடையில் ஒரு கடி கடித்துக் கொண்டே சாப்பிட்டால்,  மதியம் சாப்பிடவேண்டிய அவசியம் இருக்காது.

அமெரிக்கன் கல்லூரி ஆண்கள் கல்லூரி, முதுகலைப் படிப்பு மட்டும் கோ எஜீகேஷன். முதுகலைப் பெண்கள் தங்கும் ஹாஸ்டல், எங்கள் ஹாஸ்டலுக்கு எதிரில்தான் இருக்கும். முழுவதுமாக வேலி அடைத்து கோட்டை போல இருக்கும் .உள்ளே எப்படி இருக்கும் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. ஒருநாளாவது உள்ளே போய் பார்க்கவேண்டும் என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவே இல்லை . ஆனா அந்தப்பக்கம் நடந்து போனாலே அந்த மீசைக்கார வாட்ச்மேன் உஷாராகி குறுகுறுன்னு பார்ப்பான் . அட மெஸ்னாலும் ஒன்னா இருந்திருக்கலாம் .

            தோசை ஞாபகம் வர பசி வயிற்றைக் கிள்ளியது.  பாத்ரூம் போகும் வழியில் கிருஷ்ணன் வந்தான். அவன் ஒரு வித்யாசமான பேர்வழி. அவன் எப்ப எந்திரிக்கிறான்னு  யாருக்கும் தெரியாது. அவ்வளவு காலையிலே எங்க போறான்னு எங்க யாருக்குமே தெரியாது .நாங்க எந்திரிக்கும்போது அவன் வெளியே இருந்து வருவான். எங்கடா போயிட்டு வரேன்னு கேட்டா கோயிலுக்குன்னு சொல்வான்.ஆமா கோயிலுக்கு போயிட்டு வந்தா பல்லு விளக்குவான் , ஒண்ணுமே புரியலயே.  நான் பார்த்த போது வேப்பங்குச்சியை வச்சு பல்லு விளக்கிட்டிருந்தான். கறுப்பு நெற்றியில் துல்லியமாக இட்ட திரு நீறு  எடுப்பாக இருந்தது. “ஏண்டா வேப்பங்குச்சி”ன்னு கேட்டா , “ஆலும்  வேலும் பல்லுக்குறுதி”ன்னு சொல்லிட்டு, என்னைப்பார்த்துப்  புன்னகைத்தான். அவன் முகம் முழுக்க பருக்களால் நிறைந்திருக்கும். பசங்க சொல்வாங்க, அதிகமாக சைட் அடிக்கிறவங்களுக்கு பரு வரும்னு. அது உண்மையான்னு தெரியல. ஆனா எனக்கு மூணாவது ஆண்டு படிக்கும்போதுதான் பரு வந்தது. அதுவும் வலதுபுறத்தில் மட்டும். “டேய் ஆல்ஃபிக்கு ஒரு தலைக்காதல்ரா அதான் ஒருபுறம் மட்டும் வருது”ன்னு சொல்வாய்ங்க.

ஆனா இவன் காலைல எந்திரிச்சு குளித்து முடித்து தினமும் வெளியே கோயிலுக்குப் போய்ட்டு சாமி கும்பிட்டு வர்றவனாச்சே. ஏன் இவனுக்கு இவ்வளவு பரு என்று எனக்கு விளங்கவில்லை. நெத்தியிலே எப்பவும் திருநீறு இருக்கும். ஒரு நாள் கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன் போல. எழுந்து பாத்தா ஹாஸ்டலே கொஞ்சம் பரபரன்னு இருந்தது. காலை வேளையிலயே,  ஹாஸ்டல் வார்டன் ஜான் சகாயம் வந்திருந்தார். மனுஷன் சஃபாரி போட்டு டக்டக்குனு நடந்து வந்தா ஹாஸ்டலே நடுங்கும். ரொம்ப கண்டிப்பானவர் அவரு. சிறு பிழைக்குக் கூட என்கொயரி ஸ்லிப் வந்துரும். காலையில எங்க ரூம் பக்கம் வாட்ச்மேன் குருசாமி வந்தா, ஐயையோ என்கொயரி வந்துருச்சோன்னு பயப்படுவோம். எதிரே எக்சர்சைஸ் முடித்து வேர்வை வழிய வந்த ரவீந்திரனைக் கேட்டேன்.

 "என்னா ரவி, இன்னக்கி யார் மாட்னான்னு"  
“நம்ப கிருஷ்ணன்தான்”
“கிருஷ்ணனா,  என்னாச்ச?”'

"அவன் டெய்லி வேப்பங்குச்சில பல்விளக்கிறேன்னு சொல்லிட்டு, லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் வேப்பமரத்தில் ஏறி பாத்ரூம்ல எட்டிப்பார்த்தானாம். டெய்லி  இது நடந்திருக்கு.  இன்னிக்கு வாட்ச்மேன் கையும் களவும பிடிச்சிட்டாரு. யாரை நம்புறதுன்னே தெரியல”,ன்னு சொன்னான்.

 அடப்பாவி காலையிலே கோயிலுக்குபோய் அம்மன்  தரிசனம் செய்றானு  நினைச்சா, இவன் அம்ம , சரி விடுங்க . என்ன பாத்துறுப்பான்னு நினைத்துக் கொண்டே,  நான் ரெடியாகி கிளாசுக்குப் போனபோது, எதிரே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே கிருஷ்ணன் வந்தான். “என்னடா என்னாச்சு?’ன்னு கேட்டேன். பதில் சொல்லாம விறு விறுன்னு நடந்து அவனோடு ரூமுக்குள்ளே போனான். அது தான் அவனை கடைசியா நான் பாத்தது. கிருஷ்ணா எங்கடா இருக்க , அப்படி என்னதாண்டா பார்த்த , சொல்லாமலேயே  போயிட்டியே? .


முற்றும் .

Tuesday, June 7, 2016

மேலோகமும் பூலோகமும் இணையும் இடம் !!!!!!!!!!

சீனாவில் பரதேசி -10



முதல் மண்டபத்திலிருந்து பின்புறம் இறங்கும் போதும் சரி, அடுத்த வந்த இரண்டு சிறிய மண்டபத்திலிருந்து முன்புறம் ஏறும் போதும், படிகளுக்கு நடுவே கீழிருந்து மேல் வரை ஒரு பெரிய பளிங்குப்பலகை இருந்தது. மிகவும் நுண்ணிய வேலைப்பாடுடைய அந்தப் பளிங்கு கிட்டத்தட்ட 200 டன் எடை என்று சம்மர் சொன்னாள். ஏறக்குறைய 55 அடி உயரம் 10 அடி அகலம், 6 அடி திக்னெஸ் உள்ள இந்தக்கல்தான் சீனாவிலேயே மிகப்பெரியதாம். ஒரே கல்லில் இருந்த சிற்ப வேலைப்பாடுகள் ஆச்சரியமூட்டின. அது எப்படி உடையாமல் புதைக்கப்பட்டதோ தெரியவில்லை.
The carved Marble stone 


"ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனி"க்குப்பின் வந்த மண்டபத்தின் பெயர் "ஹால் ஆஃப் சென்ட்ரல்  ஹார்மனி". முன் மண்டபத்துக்குப் போகும்முன் பேரரசர் இங்கு சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர்தான் முன் ஹாலுக்குப் போவாராம். இதிலும் நடுவாந்திரமாக ஒரு சிம்மாசனம் இருந்தது.


இதன் பின் வந்த மண்டபத்தின் பெயர் 'ஹால் ஆஃப்' பிரசர்விங் (Preserving) ஹார்மனி" என்பது. இந்த மண்டபத்தில் தான் முன் ஹாலில் நடக்கப்போகும் சடங்குகளுக்கு ஒத்திகை நடக்குமாம். இங்கும் ஒரு சிம்மாசனம் இருந்தது. ஆனால் இந்த மூன்றில் மிகப்பெரியது முன் மண்டபமான "ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனியில்” இருப்பதுதான்.   
Add caption


மண்டபத்தின் ஒருபுறம் சீன மொழியிலும் மறுபுறம்  ஆங்கில மொழியிலும் அந்த இடத்தின் விவரங்களை எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் முழுதும் படிக்கவிடாமல் சம்மர் அவசரப்படுத்தியதால், அதனை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு நகர்ந்தேன்.

இந்த மூன்று மண்டபங்களின் இடதுபுறமும் வலது புறமும் சிறிது இடைவெளிவிட்டு இரண்டு பெரிய மண்டபங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ராணுவத்தலைவர்களின் பயன்பாட்டுக்கும் மற்றொன்று கலை நிகழ்வுகளுக்கும் பயன்பட்டனவாம். ராணுவ மண்டபத்தில்தான் பேரரசர் தமது அமைச்சர்களையும் மற்ற அதிகாரிகளையும் சந்தித்து  நாட்டு நடப்புகளைக் கவனிக்கும் நிகழ்வுகள் நடக்கும். மற்றொன்றில் அரண்மனையின் அச்சகம் செயல்பட்டது. அதோடு “கன்பியூசியஸ்” போன்ற தத்துவ மேதைகளின் சீடர்களும் படித்தவர்களும் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்களாம். அதன் பின்னர் அதுவே தலைமைச் செயலகம் ஆனதாம். உலகின் மூத்த மிகச் சிறந்த நாகரிகத்தை உடையவர்கள் சீனர்கள்.


அங்கிருந்து வடகிழக்குப் பகுதியில் மூன்று அரண்மனைகள் இருக்கின்றன. அங்குதான் பட்டத்து இளவரசன் தங்கியிருப்பானாம்.  அவனுக்கு தனிப்பட்ட முறையில் பலவித வசதிகள், மரியாதைகள் உண்டு. அதோடு அவுட்டர் கோர்ட் என்று சொல்லப்படும் வெளி மண்டபங்கள்  முடிந்துபோக, இன்னும் உள்ளே போனால் இன்னர் கோர்ட் என்று சொல்லக் கூடிய உள் மண்டபங்கள் வந்தன. இந்த இரண்டையும் பிரிக்க மிகப்பெரிய வெட்ட வெளி இருந்தது. இன்னர் கோர்ட்டில்தான் பேரரசரும் அவருடைய குடும்பங்களும் தங்கிய பலவித மாளிகைகள் இருந்தன. ஷிங்  (Qing) பரம்பரையின் பேரரசர்கள் இங்கு தங்கிஇருந்ததோடு எல்லா அரசாங்க அலுவல்களையும் இன்னர் கோர்ட்டிலிருந்தே கவனித்துக் கொண்டார்களாம்.  அவுட்டர் கோர்ட் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.

இன்னர் கோர்ட்டின் நடுவில் மூன்று அரண்மனை மண்டபங்கள் இருந்தன. அவை “பேலஸ் ஆஃப் ஹெவன்லி பியூரிட்டி” (Palace of Heavenly Purity), “ஹால் ஆஃப் யூனியன்”, “பேலஸ் ஆஃப் எர்த்லி டிரான்குல்ட்டி” (Palace of Earthly Tranquility). இதில் யான்  ( Yan) மற்றும் சொர்க்கத்தின் பிரதிநிதியான பேரரசர் 'ஹெவன்லி பியூரிட்டி' என்ற அரண்மனையில் தான் தங்குவார். யின் ( Yin) மற்றும் உலகத்தின் பிரதிநிதியான பேரரசி தங்குவது 'எர்த்லி டிரான்குல்ட்டி' என்ற அரண்மனையில். பின்னர் மூன்றாவது அரண்மனையான 'ஹால் ஆஃப் யூனியன்" எதற்கென்று நீங்களே ஊசித்திருப்பீர்கள். அதுசரிதான். இருவரும் இணைந்து தாம்பத்யம் நடத்த இந்த ஹால் பயன்பட்டது. யின்னும் யானும் அதாவது மேலோகமும் பூலோகமும் இணையும் நிகழ்வு என்று அதனைச் சொல்கிறார்கள்.    

தற்சமயம் ஹால் ஆஃப் யூனியனில், ஸிங் டைனாஸ்டியைச் சேர்ந்த 25 பேரரசரின் முத்திரைச் சின்னங்கள் (Imperial seal) மற்றும் பலவித புனிதப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
Crown of Empress Cixi


இந்த மூன்று அரண்மணைகளின் பின்புறம், பேரரசின் நந்தவனம் இருக்கிறது (Imperial Garden). இது பலவித பழைய மரங்கள், ஓய்வெடுக்க  சிறுசிறு மண்டபங்கள், செடி கொடிகள், சிறுசிறு செயற்கைக் குன்றுகள் என்று சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் குளிர் காலம் என்பதால் அதன்  அழகு அவ்வளவாய்த் தெரியவில்லை.

அதன் பின்புறமும் பலவித அரண்மனைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் வந்த ஒரு முக்கிய அரண்மனை "ஹால் ஆஃப் மென்ட்டல் கல்ட்டிவேஷன்" என்பது. ஒரு காலத்தில் இது பேரரசர் தங்குவதற்கும் மற்றும் அலுவலகமாகவும் பயன்பட்டது. பேரரசி சிஸி (Cixi) யின் காலத்தில் இதுவே அரசாங்க அத்தானி மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டதாம். இதனைச் சுற்றிலும் பேரரசின் கிராண்ட் கவுன்சிலின்  பல்வேறு அலுவலகங்கள் இருந்தன.

இதற்கப்புறம் வந்த முக்கியமான இடம் "பேலஸ் ஆஃப் டிரான்குயில் லாஞ்சிவிட்டி( Palace of Longivitty)என்பது. இது சிஸ்லாங் பேரரசர் தனது ஓய்வுக்குப்பின்னர் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது. அதன் உள்ளே தோட்டங்கள் ஆலயங்கள் என்று அமைக்கப்பட்டிருந்தன. அதன் நுழைவாயிலில் பளபளப்பான டைல்களால் ஒன்பது டிராகன்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Nine Dragon 


அதன் உள்ளே போக அனுமதியில்லை. ஏனென்றால் பேலஸ் மியூசியத்துடன் வேர்ல்ட் மானுமன்ஸ் பண்ட் (World Monuments Fund) என்ற நிறுவனம் இணைந்து மராமத்துப் பணிகள் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நீண்ட கால புராஜக்ட் 2017ல் தான் முடியுமாம். ஒரு படத்தை எடுத்துவிட்டு உள்ளே மேலும் நகர்ந்தோம்.


- தொடரும்.

Thursday, June 2, 2016

முதலமைச்சர் ஆக ஆசைப்படுபவர்களுக்கு சில கேள்விகள் ?


2016 தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட முதல் அமைச்சர் வேட்பாளர்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி தவிர்த்து, இலவுகாத்த கிளியாய் மு.க.ஸ்டாலின்,  சமீபத்திய உடல் நலக்குறைவால் பேசக்கூட முடியாத விஜயகாந்த், தன் ஜாதியினர் மத்தியில் கூட 100  சதவீத வாக்குகளை வாங்கமுடியாத அன்புமணி, புதிதாக வீரம்பேசும் சீமான் ஆகியோர் களத்தில் நேரடியாக நின்றனர்.

இதுதவிர இன்னும் அநேகர். சில திரைப்பட கதாநாயகர்கள் முதற்கொண்டு இதே கனவில் இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவி தங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடும் என்று  இவர்கள் நினைக்கிறார்கள் நம்புகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.  
இவர்களுக்கெல்லாம் சில கேள்விகளை வைக்கிறேன்.
Add caption
1.   முதலாவது தமிழ்நாடு முழுவதும் மக்கள் உங்களை அறிவார்களா?
2.   ஆம் என்றால் எப்படி அறிவார்கள்? யார் என்று அறிவார்கள்?
3.   மக்கள் தொண்டன் என்றோ, மக்களுக்காக உழைப்பவன் என்றோ, மக்களுக்கு ஒன்று என்றால் ஓடிவருவார் என்றோ நினைக்கிறார்களா?
4.   தலைவராக இருக்க விரும்புவதற்கு முன்னால் தொண்டனாக   இருந்திருக்கிறீர்களா ? அல்லது இருக்க நினைத்திருக்கிறீர்களா?
5.   உங்களுக்குத் தமிழ்மொழி பற்றித் தெரியுமா? அதன் பாரம்பரியம் தெரியுமா? தமிழை சரியாக உச்சரிக்கவாவது தெரியுமா?
6.   தமிழகத்தின்  சமூக, அரசியல், கலாச்சார வரலாறு தெரியுமா?
7.   லெமூரியா கண்டமும், தனுஷ்கோடியும் எப்படி ஏன் அழிந்தது என்று தெரியுமா?
8.   சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் ஏன் ஒற்றுமையில்லாமல் பிளவு பட்டிருந்தார்கள் என்று தெரியுமா?
9.   தமிழகத்தை ஆண்ட, வெளியிலிருந்து வந்த நாயக்க, மராட்டிய, முஸ்லீம் மன்னர்கள் பற்றித்தெரியுமா? எப்படி  அந்நிய ஆட்சி வந்தது? ஏன் வந்தது என்று தெரியுமா?
10.               தமிழகத்தில் தளைத்தோங்கிய சைவ, வைணவ மற்றும் சமண மதங்களும் அதனால் வந்த பிரிவினைகளும் பற்றித் தெரியுமா?
11.               தமிழகத்தின் இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், புலவர் பெருமக்கள் ஆகியோர் பற்றித்தெரியுமா?
12.               இவற்றை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது பற்றித் தெரியுமா?
13.               சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியல் வரலாறு பற்றித் தெரியுமா?
14.               சென்னை மாகாணம் எப்படி இருந்தது? அது தமிழகமாக மாறும்போது எவற்றை இழந்தோம்? எவற்றைப்பெற்றோம் என்று தெரியுமா?
15.               மொழிப்போர் பற்றியும், அதில் மடிந்த தியாகிகள் பற்றியும் தெரியுமா? மொழி பற்றிய இப்போதுள்ள மனநிலையும் இந்தியை  அறிந்து கொள்ளுதல் மற்ற இந்தியர்களோடு இணைக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா? இந்தி வராமலேயே தமிழ்மொழி அழிந்து கொண்டிருப்பது தெரியுமா?
16.               தமிழகத்தின் தற்கால இலக்கியங்கள் மற்றும் எழுத்தாளர்கள் யார் என்றும் அவர்களின் திறமைகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்றும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
17.               தமிழ்நாட்டின் மக்கள் தொகை எந்த சதவீகத்தில் வளர்ந்து வருகிறது, அதன் பெருகி வரும் அடிப்படைத் தேவைகள் பற்றியும் அதற்கு எதிர்காலத்திட்டங்களை  எப்படி வகுக்க வேண்டும் என்று தெரியுமா?
18.               தமிழக மக்களின் சாதி மத விகிதாச்சாரங்கள் பற்றியும், அது ஏன் என்றும் தெரியுமா?
19.               தமிழ்நாட்டின் மொத்த வருமானம், செலவு, பற்றாக்குறை பற்றியும், அதனை எப்படித் தீர்ப்பதென்று தெரியுமா?
20.               ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றித் தெரியுமா?
21.               தமிழ்நாட்டில் உள்ள பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்கள் யார் யார்? எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியுமா?
22.               எத்தனை திட்டங்கள் போட்டாலும், சேரிகள் பெருகுவது ஏன்?
23.               தமிழ்நாட்டில் மாறும் தட்ப வெப்பநிலை எந்தெந்தப் பகுதியில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று தெரியுமா?
24.               என்ன மாதிரியான விளைபொருள்கள் எங்கே விளைகிறது என்று தெரியுமா?
25.               நம் நாட்டில் இருக்கும் பாரம்பரிய தொழில்கள், சிறுதொழில்கள், குடிசைத்தொழில்கள் பற்றியும் அதன்மூலம் பயன்பெறும் பிழைக்கும் மக்கள் பற்றியும் அவர்களின் குறைகள் பற்றியும் தெரியுமா?
26.               நம் நாட்டிற்கு எந்த அளவு தண்ணீர், மின்சாரம் தேவை அதை எப்படி பெருக்குவது என்று தெரியுமா?
27.               தமிழகத்தில் ஏன் ஜீவ நதிகள் இல்லை? காணாமல் போன நதிகள் எவை? ஏன்? என்று தெரியுமா?
28.               தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் யார்? அவர்கள் என்ன தொழில் மூலம் உயர்ந்தார்கள்? மேலும் புதிய தொழிலதிபர்களை   எப்படி உருவாக்குவது என்று தெரியுமா?
29.               தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் விவசாயிகள், தொழிலாளிகள், அரசு அலுவலர்கள், என்று தெரியுமா? மீதியுள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு எப்படி வழிநடத்தப்போகிறீர்கள்.
30.               தமிழ்நாட்டின் காடுவளம், வனத்துறை அதன் குறைகள் பற்றாக்குறை, ஏன் காட்டுமிருகங்கள் காட்டுக்குள் நுழைகின்றன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா ?
31.               உணர்வு பூர்வமாக சிந்திக்கும் நம் மக்களை அறிவு பூர்வமாகவும் சிந்திக்க வைக்க உங்களிடத்தில் என்ன திட்டங்கள் இருக்கின்றன?

இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் பற்றி அறியாமலோ, அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமலோ, திறமை இல்லாமலோ நீங்கள் எப்படி ஒரு நல்ல முதல்வராக இருக்கமுடியும்?
முதல்வர் என்றால் என்ன விளையாட்டா?
இன்னும் எத்தனை நாள் நீங்கள் எங்களை ஏமாற்றமுடியும்?

முற்றும்.

Tuesday, May 31, 2016

மு.க ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

தமிழக தேர்தல் 2016 :பகுதி 3


தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்கு வந்தாகிவிட்டது. முழு நேர அரசியல்வாதியாகவும்   ஆகியாகிவிட்டது. கட்சிப் பதவிகளில் இளைஞர் அணியில் ஆரம்பித்து, எம்ஜியார், சாதிக் பாட்ஷா, ஆற்காடு வீராசாமி ஆகியோர் அலங்கரித்த பொருளாளர் பதவி வரை வந்தாகிவிட்டது.

அரசியல் பதவிகளில், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மேயர், மற்றும் துணை முதலமைச்சர் போன்ற பதவிகளையும் அடைந்தாகிவிட்டது. ஆனால் உங்கள் எதிர்காலம் என்ன? என்ன செய்ய வேண்டும்?

பலம்:

1.   திராவிட இயக்கத் தூண்களில்  முக்கியமான ஒருவரும்,ஐந்துமுறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவருமான, கலைஞர் மு.கருணாநிதியின் மகன் மற்றும் அரசியல் வாரிசு.
2.   பலமான கட்டமைப்புக் கொண்ட ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, அடுத்த தலைவராக வருவதற்கு பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
3.   அதிகமான ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.
4.   கடுமையான உழைப்பாளி.
5.   அரசியலில், கருணாநிதி மகன் என்றாலும் கட்சியில் படிப்படியாக உயர்ந்தவர்.
6.   திமுகவின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களாலும், தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
7.   2016- தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டியவர்.

பலவீனம்:


1.   கருணாநிதியின் மகன் என்பதால் அவருக்கு வருகிற, அவர்மேல் சுமத்தப்படுகிற குற்றச் சாட்டுகளையும், விமர்சனங்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலை.
2.   உலக மற்றும் இந்திய அரசியலை ஆழ்ந்து கற்றுத் தேறவில்லை
3.   வெறும் மாநில  அரசியலை மட்டும் முன்னெடுத்து, இந்திய அளவில் எதிலும் பங்கு பெறாத நிலை.
4.   இந்திய அளவிலோ, மாநில அளவிலோ பிற தலைவர்களுடன் ஒட்டாத நிலை.
5.   சகஜமாக பழகாமல் எப்போதும் தள்ளியிருந்து தனியாகவே இருப்பது.
6.   சொந்த அண்ணன் முக அழகிரியே இவருக்கு எதிராக இருப்பது.
7.   குடும்ப உறுப்பினர்களான கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் மேலுள்ள ஊழல்  குற்றச்சாட்டு.
8.   கருணாநிதி குடும்பத்தின் மீதுள்ள குடும்ப அரசியல், வாரிசு அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள்.

என்ன செய்யவேண்டும்?


1.   தோல்வியை ஒப்புக் கொண்டு, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதியெடுத்தல்.
2.   எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் நல்ல திட்டங்களுக்கு ஆதரவையும் மற்றவற்றிற்கு எதிர்ப்பையும் தெரிவித்தல்.  
3.   சட்டசபையில் மாற்றுக்கட்சியினரும் மதிக்கும் வகையில் ஒரு தேர்ந்த தலைவராக பரிணமித்தல்.
4.   நாடு முழுதும் மீண்டும் ஒரு சுற்றுப்பயணம் செய்து, ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தல்.
5.   ஜெயித்த MLA -க்களை நன்கு  ஒருங்கிணைந்து, அவரவர் தொகுதிகளில் மக்களோடு இணைந்து நலத்திட்டங்களைச் செய்தல்.
6.   ஜெயலலிதாவை சந்திப்பது, வேண்டுகோள் விடுப்பது என்று எந்த ஈகோ பார்க்காது நடந்து கொள்ளுதல்.
7.   திமுகவில் படித்த இளைஞர்களுக்கு பதவியைக் கொடுத்தல்.
8.   அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசியல் பாடம் எடுத்து ஒவ்வொரு தெருவுக்கும், வார்டுக்கும், கிராம நகர அளவில் மக்களோடு ஒன்றிணைந்து பணியாற்ற பயிற்சி கொடுத்தல்.
9.   எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் MLA -க்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் முடிந்தவரை நட்பு பாராட்டுதல்.
10.               தன் கட்சிக்காரர்களாக இருந்தாலும் தவறைத் தட்டிக் கேட்டு தண்டனை கொடுத்தல்.
இதெல்லாம் செய்தால் கருணாநிதி போல், ராஜதந்திரி, ஆளுமை நிறைந்தவர், சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுப்பதைக் காட்டிலும், நல்ல  மனிதர், மக்கள் தலைவர், மக்கள் நலனை தன் நலனாகக் கருதுபவர், கறைபடியாதவர், நேர்மையானவர் என்று பெயரை எடுக்க முடியும்.
திமுக மிகக் குறைவான ஓட்டு சதவிகிதத்தால் தோற்றாலும் ஓட்டு வங்கியை அதிகப்படுத்தியதும், சட்டசபையில் எப்போதுமல்லாத அதிக அளவு MLA -க்களை பெற்றதும், சென்னையை மீட்டெடுத்ததும், மக்கள் நம்பிக்கையைப் பெற்றதும் ஸ்டாலினே உங்களால் தான்.  
பலவீனங்களைக் களைந்து, பலங்களை அதிகரித்து தொடர்ந்து மக்களோடு நெருங்கி உழைத்தால் நீங்கள் உங்கள் அப்பாவை விட ஒப்பற்ற தலைவராக விளங்கும் நாள் வெகு தூரத்திலில்லை.