Tuesday, February 23, 2021

காதலர் தினக்கவிதை-2021



 காதலர் தினத்தை  முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் நாள் மாலை தமெரிக்கா தொலைக்காட்சியில் நண்பர் மகேந்திரன்  பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அடியேன் பங்கு கொண்டு வாசித்த கவிதை இதோ உங்களுக்காக  

https://www.youtube.com/watch?t=2182&v=eIhYOHMYwHQ&feature=youtu.be  

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும்

பேச்சுக்கொடுத்த அன்னைக்கும்

வாய்ப்புக்கொடுத்த தமெரிக்காவுக்கும்

வணக்கங்கள் பலப்பல

 

கவியரங்கத்தலைவர்

மகேந்திரன் பெரியசாமி

எந்திர வாழ்க்கையில்

நொந்தவர்க்கு

மந்திரச்சொற்கள் பேசி

மனதைத்தொடுபவர்

 

இந்திர மகேந்திர ஜாலங்களால்

இதயம் இணைத்தவர்

பழகுவதற்கு இனியவர்

பண்பாளர்

 வணக்கம் .

 

சனிக்கிழமை காலை

சடுதியில் அழைப்பு வந்தது

கவிதை பாடச் சொல்லி

கவனம் ஈர்த்தது

பெரியசாமி கூப்பிட்டால் இந்தச்

சின்னசாமி மறுக்கமுடியுமா?

பாவலர் கூப்பிட்டால் ,இந்த

பரதேசி மறுக்கமுடியுமா ?

 

 கவிதைத்தலைப்பு என்னவென்றேன் ?

காதல் என்றார்

 

வெள்ளிவிழா கொண்டாடி

தள்ளாடி அல்லாடி

தயங்கி மயங்கி தள்ளிப்படுத்து

சாய்ந்து ஓய்ந்திருக்கும்

எனக்கு காதலா என்றேன்?

காதலுக்கு ஓய்வேதென்றார்

உடனே

உள்ளமும் உடலும்

விழித்துக்கொண்டன

 

மெல்லினம்

இடையினமாகி

வல்லினமாகிப்பின்

மல்லினமாகி  

மாயமாய்ப்போன

மனதைத்  தோண்டினேன்

 

ஆஹா அங்கு

காதல் இன்னும்

கனன்றுகொண்டிருந்தது

 நீறு நீக்கி

நிரவிவிட்டேன்

படக்கென்று

பற்றிக்கொண்டது , மீண்டும்

தொற்றிக்கொண்டது  என்னை .

 

தீக்குள் விரலை  வைத்த

பாரதீ யின் பாடலை

நாக்கு நவின்றது

 

சங்க காலத்தை

தங்க காலமாக்கிய

காதல் இது !

 குறுந்தொகையில்

பெருந்தொகையாய்

இருந்த காதல் இது!

 

காயாத கானகத்தே

மேயாத மானா க

கடவுள்கள் போற்றிய

காதல் இது !

 

காற்று வெளியிடை

களித்திட்ட காதல் இது !

 

சில்லென்று பூத்த

சிறுநெரிஞ்சிக்காட்டில்

மெல்லென்று பூத்த காதல் இது !

 

விழியில் விழுந்து

இதயம் நுழைந்து

உயிரில் கலந்த

காதல் இது!

 

 

ஆனால் இன்றோ

சாதியெனும் சாக்காட்டில்

அய்யகோ

அமிழ்ந்து போனதென்ன

அழிந்து  போனதென்ன?

 

களவொழுக்கம்

கற்பொழுக்கம் என்ற

அற்றைக்காதல்

இற்றைக்காலத்தில்

கற்பழிக்கும் காமமாக

கட ந்து போனதேன் ?

 

அன்புக்கு நான் அடிமை என்று

அன்றை ய நாளில் இருந்த காதல்

அன்பு கிடைக்காவிட்டால்

அமிலம் ஊற்றி

துன்பு செய்யும் துயரமாக

தூர்ந்து  போனதேன்?

 

காதல் போதின்  சாதல்

காதலுக்காக  உயிரை விட்ட

காலம்போய்

காதலிக்காவிட்டால்

உயிரை எடுக்கும் காலமாக இன்று

உறைந்து போனதேன் >

 

இன்றய நாளில் உறுதி எடுப்போம்

சாதியெனும்

சாக்காட்டை

தூக்கியெறிவோம்

மதமெனும்  பிரிவினையை

மாற்றி அமைப்போம்

 

எல்லோரும் அன்புற்றிருக்க

எல்லோரும் இன்புற்றிருக்க

 

காதலால்

கசிந்துருகி

மனங் கனிந்து

இனம் மறந்து

குலம் துறந்து

சாதி நீக்கி

ஆதிக்காதலை

அமரவைப்போம்

 

ஆதலினால்

காதல் செய்வோம்

 

நன்றி வணக்கம்


5 comments:

  1. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. பாவலர் கூப்பிட்டால் ,இந்த

    பரதேசி மறுக்கமுடியுமா ?
    அருமை

    ReplyDelete