Monday, October 22, 2018

அசுரனைக்கொன்ற காமாட்சி !!!!


Image result for வச்சிரதந்தன்

வேர்களைத்தேடி பகுதி 29
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.          
https://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_8.html
தல வரலாறு ( நன்றி தினமலர்)
            கோவிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு முன் அதன் தல வரலாறை சொல்வது முக்கியம் என்பதால் அதனை இந்தப்பதிவில் பார்த்து விடலாம் .
            இந்து சமயக் கதையின்படி, முன்பொரு காலத்தில், காஞ்சனா எனும் காட்டுப்பகுதியை, சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர் அவனை அப்பகுதியின் அரசனாக்கினான். அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும், துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர். இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.
              பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார். தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால்தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார். வங்கிசபுரி வரும் வழியில் பன்றிமலை என்ற வராகமலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.
Image result for அசுரன்

         துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார். அவனுடைய தலையைத் துண்டித்தார். மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான். அதையும் துண்டித்தார். பின்னர் புலி, கரடி, காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை. இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.
            துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்காதேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார். வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்றுமுறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது. வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான். பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான். துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான். காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார். துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார். அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
                     அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும், மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும், குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன. இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.
               வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது. அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள், தெய்வப் பெண்கள், துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர். கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது. அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடரும்










No comments:

Post a Comment