Monday, December 4, 2017

பரதேசிக்கு நீச்சல் தெரியுமா தெரியாதா ?

இலங்கையில் பரதேசி -29
Gale Beach

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_27.html
          
அங்கிருந்து சிறிது தூரம் பயணித்து காலே பஸ் நிலையம் அருகில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். சாலட் தவிர எதுவும் சொல்லிக் கொள்ளும் போல இல்லை. இந்திய உணவை மட்டுமே தேடிப்போகாமல் வெவ்வேறு உணவுகளைச் சாப்பிட்டுப் பார்க்கும்படி மனது சொல்கிறது. ஆனால் நாக்கும் வயிறும் கேட்க மாட்டேன்கின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும் இதுவே தொடர்கிறது. நான் என்ன செய்வது. அம்ரி நன்றாகவே சாப்பிட்டான்.  அவனுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை போலிருக்கிறது. வயிறு நிரம்பினால் போதும்போல தெரிகிறது. ஆள் நல்ல வாட்டசாட்டமாகவே இருந்தான். நல்லதுதான் டூர் கைட், டிரைவர் மட்டுமல்லாது என்னோட பாடிகார்டும் அவன்தானே. எனக்குத்தான் பிரச்சனை சுடர்மிகும் அறிவுடன் ஆண்டவன் படைத்தானோ இல்லையோ 'ருசிமிகும் நாவினைப் படைத்துவிட்டான் என்ன செய்வது.


          “சார் நீங்கள் ஸ்விம்மிங் போறீர்களா? இல்லை சர்பிங்கா இல்லை ஸ்நார்க்லிங்கா?
          “எங்கே எதில்?”
          "என்ன இப்படிக் கேட்கறீங்க, கடலில்தான்"
          (அடடே அம்ரிக்கு என்னைப்பற்றித் தெரியாது போலிருக்கு)
          “என்ன சார் சீக்கிரம் சொல்லுங்க”.
          “அந்தப் பொருட்களோ உடையோ எடுத்து வரவில்லையே”
          “சார் அதனால்தான் கேட்கிறேன் இங்கே அவையெல்லாம் வாடகைக்குக் கிடைக்கும்”.
          “அப்படியா இருக்கட்டும் பரவாயில்லை. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்”.
          “சார் இங்கு திருப்பி வரமாட்டோம். இதுதான் கடைசி சான்ஸ். ஆமா உங்களுக்கு நீச்சல் தெரியுமா? தெரியாதா”?
          “தெரியும்ம்ம்ம் ஆனா தெரியாது?”
          “சார் கரெக்டா சொல்லுங்க, தெரியுமா? தெரியாதா?”
          “அட நீச்சல் கூடவா தெரியாது, ஏன் அழுத்தி அழுத்தி கேட்கற”,
 “அப்ப சரி வாங்க ரெண்டு ஸ்நார்க்ளிங் கிட் வாடகைக்கு எடுக்கலாம்”.
          “அது என்ன வென்று 5 வரிகளுக்கு மிகாமல் விளக்க முடியுமா?”
          “சார் ஸ்நார்க்ளிங் என்பது ஆழ்கடல் டைவிங், ஆக்சிகன் உதவியோடு கண்ணில் கண்ணாடி உரையை மாட்டிக் கொண்டு ஆழ்கடல் அதிசயங்களைப் பார்க்கலாம்”.
          “ஐயையோ அம்ரி நிச்சல் தெரியும் ஆனால் தண்ணீரில் தெரியாது”.
          “என்னாது, தண்ணீரில்லாமல் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?”
இல்லை தப்பாச் சொல்லிட்டேன். கடலில் அடிக்கத்தெரியாது. ஆறு, ஏறி, குளம் கிணறுஆகியவற்றில் அடிப்பேன்”.
“சார் இந்தக் கடல் ஆழமில்லை, ஆறு கிணறைவிட இது ரொம்ப சேஃப் சார்”.
          “அம்ரி உண்மையைச் சொல்லாறேன் எனக்கு  நீச்சல் தெரியாது?
நீச்சலும் தெரியாது பாய்ச்சலும் தெரியாது. கூச்சலும் தெரியாது என்னை இப்படி வளர்த்துவிட்ட என் அம்மா அப்பாவின் மேல் கோபங்கோபமாய்  வந்தது.
          "சரி விடுங்க சார், அப்ப போட்டில் போகலாம்
“அட அம்ரி போட் இருக்கா?, இதை முதல்லயே சொல்ல வேண்டியதுதானே?"
          எங்கள் வண்டி சந்துபொந்துகளில் நுழைந்து சென்றது.
          “என்னப்பா பீச்சுக்குப் போறேன்னு சொல்லிட்டு சந்து பொந்துக்குள்ள போற”.
          “சார் இது தான் வழி மத்ததெல்லாம் பிரைவேட்”.
Image result for Sun bath galle beach sri lanka

 வழியெங்கும் சிறுசிறு கடைகள் இருந்தன. அவற்றுக்குள் நீச்சல் உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதுதவிர கடல்  பொருட்களை வைத்து செய்யப்பட அழகுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அதனையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். வீடுகளுக்கு முன்னால் ஆட்கள் உட்கார்ந்து கொண்டு சில பண்டங்களை விற்றுக்கொண்டு இருந்தனர். அதுதவிர அவர்கள் வீட்டின் முன்னால் கார்களை விட கட்டணம் வசூலித்துக் கொண்டும் இருந்தனர். பீச்சுக்கு மிக அருகில் இருந்த ஒரு வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடக்க, பீச் வந்தது.
          மதிய வெய்யில் சுள்ளென்று அடித்தாலும்  கடற்காற்று அதனைத்தடவித்தடவி சாந்தப்படுத்தியதால் இ தமாகவே இருந்தது. வழியெங்கும் வெள்ளைக் காரர்கள் வெறும் ஷார்ட்ஸில் கையில் நீச்சல் சாதனங்களோடு வந்து கொண்டிருந்தார். வாயைப் பிளக்க வேண்டாம் ஆண்கள்தான். பெண்கள் டூபீசில் இருந்தார்கள். வழி சந்து பொந்தாக இருந்தாலும் உள்ளே நீண்ட கடற்கரை அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. கடற்கரை முழுவதும் பலதரப்பட்ட மக்களைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் வெள்ளைக்கார வெளிநாட்டினர். சர்ஃபிங் செய்பவர்கள். ஸ்நார்க்லிங் செய்பவர்கள், வெறுமனே கடலில்           நீந்துபவர்கள், சன்பாத் எடுப்பவர்கள் என்று பலரும் இருந்தனர். ஸ்னார்க்லிங் செய்பவர்கள்  கிட்டத்தட்ட மீன் போன்றே மாறியிருந்தனர். சன்பாத் செய்பவர்கள் பெரும்பாலும் அரை நிர்வாணமாக இருந்தார்கள். ஆம் பெண்களும்தான். உடனே திரும்பவும் வாயைப் பிளக்க வேண்டாம். அவர்கள் குப்புறப் படுத்திருந்தார்கள்.
          அம்ரி ஒரு போட்காரரிடம் பேரம் பேசினான். பேரம்முடிந்து நானும் அம்ரியும் மட்டும் படகில் ஏறினோம். அது ஒரு மோட்டார் படகு.  அடடே நீச்சல் தெரிந்திருந்தால் கடலில் டைவ் செய்து ஆழ்கடல் அதிசயங்களை ஆத்மார்த்தமாக அனுபவித்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டேன். (ஆஹா அ, ஆ ஐந்து தடவை வந்துவிட்டதே,இந்தப் பழைய புதுக்கவிஞன் அவ்வப்போது எட்டிப்பார்த்து அடம் பிடிக்கிறான், விட்டுவிடுங்கள் பாவம்)
          போர்ட்டில் இன்னொரு துடுப்பு போல இருந்தது. அந்தப் படகோட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒருபுறம் உட்கார, அம்ரி அநாயசமாக ஏறி அடுத்தப்புறம் அமர்ந்தான் (மறுபடியும் அ நான்கு முறை அஹ்ஹா)
          கடல் பளிச்சிடும் நீல நிறங்களில் ஜொலித்தது. போட்டின் மேல் கூரை இருந்ததால் வெயில் தெரியாமல் அட்டகாசமாக இருந்தது அந்த மதிய நேரம். அப்போது போட் ஓட்டுபவர் கீழே இருந்த பலகையை உருவி விலக்க என்ன ஆச்சரியம் கடல் ஆழம்வரை தெரிந்தது. ஆம் படகின் கீழ்ப்புறம் நல்ல கெட்டியான ஃபைபர் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. கீழே பவளப்பாறைகள், கலர் கலராய் சிறுசிறு அழகு மீன்கள் ,பவளப்பாசிகள்  என்று வேறு ஒரு உலகம் விரிந்தது. இவ்வளவு பாதுகாப்பாக இத்தனை அருகில் கடலின்  ஆழத்தைப் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. அப்போதுதான் என் காலுக்குக் கீழே அந்த பெரிய மிகப்பெரிய மீனைப் பார்த்தேன்.
-தொடரும்.  

5 comments:

  1. No more suspence pa.Dont have patience

    ReplyDelete
  2. சுவாரஸ்யம், த்ரில்.

    ReplyDelete
  3. நீச்சல் தெரியாதா....

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கேக்கிறீங்க மாதவி ?

      Delete