Thursday, March 9, 2017

வனநாயகன் - மலேசிய நாட்கள்


படித்ததில் பிடித்தது.
வனநாயகன் - மலேசிய நாட்கள் - ஆரூர் பாஸ்கர்.( கிழக்கு பதிப்பகம்)

Image result for வனநாயகன் - மலேசிய நாட்கள்

          
   பதிவுலகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர், நண்பர் ஆரூர் பாஸ்கர். முதலில் அவரைப்பற்றி நான் தெரிந்து கொண்டது, அவர் ஒரு கவிஞர் என்பதைத்தான். அவருடைய கவிதைகளைத் தொகுத்து “என்   ஜன்னல் வழிப்பாதையில்”, என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகம். அதன்பின் அவர் ஒரு நாவலாசிரியராக வெளிப்பட்டது, அவரது 2ஆவது புத்தகமான "பங்களா கொட்டா"வில். தஞ்சைத் தரணியின் பின்னனியில் பண்ணையார்கள், நிலக்கிழார்களின் சமூக நிகழ்வுகளை மண்ணின் மொழியில் அதில் காட்டிருந்தார். அதன் பின் வந்த "வன நாயகன் மலேசிய நாட்கள்" என்ற மூன்றாம் படைப்பில் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். முதலிரண்டு புத்தகங்கள் எழுதிய அதே நபரா இதையும் எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். காரணம் அவர் தேர்ந்தெடுத்த பின்னனி என்று சொல்லலாம்.

Related image
ஆரூர் பாஸ்கர்
          ‘ஆரூர் பாஸ்கர்’ இங்கே அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலத்தில் ஒரு மென் பொருள் பொறியாளராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2016 ஜூலையில் ,ஃபெட்னா (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு) நியூஜெர்சியில் நடத்திய தமிழர் திருவிழாவுக்கு அவர் வந்திருக்கையில் அவரோடு மூன்று நாட்கள் நேரில் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்னுடைய பதிவுகளின் பின்னோட்டத்தில் அவரை நீங்கள் சந்தித்திருக்கலாம். பழகுவதற்கு அவர் அவரது சாஃப்ட்வெர் வேலையைப் போன்றே மென்மையானவர். சாஃப்ட்வெர் மக்களில் சில ஹார்டுவேர்களை  நான் பார்த்திருக்கிறேன் என்பதால் அப்படிச்சொல்கிறேன். பாஸ்கர் அமெரிக்காவுக்கு வருமுன் மலேசியாவில் சில மாதங்கள் வேலை செய்தார். அதுதான் அவருடைய முதல் வெளிநாட்டு அனுபவம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப்புதினம் எழுதப்பட்டுள்ளது.
Image result for வனநாயகன் - மலேசிய நாட்கள்

          சுஜாதாவுக்குப் பின் மென்பொருள் உலகத்தின் பின்னனியில் எழுதப்பட்ட நான் படித்த முதல் புத்தகம் இது எனலாம். இந்தப்புத்தகம் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அது படிப்படியாக வளர்ந்த போது  நானும் அதனோடு பயணித்தேன் என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான், மகிழ்ச்சிதான்.

          இந்தப்புதினத்தில் பாஸ்கர், அவரின் கவித்துவம், நுண்ணறிவு, நகைச்சுவைத்திறன், கதை சொல்லும் பாணி என்று பல திறமைகளை வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார்.

கதைக்கரு:
கீழ் மத்திய வர்க்கத்தைச் (Lower Middle Class)சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி, தன்னையும் தன் குடும்பத்தையும் முன்னேற்ற மலேசியாவுக்கு வருகிறான். இரண்டு வங்கிகள் ஒன்றாக இணையும் ஒரு நிகழ்வுக்காக, இரு கம்பெனியின் டேட்டாபேஸ் மென்பொருளை மெர்ஜ் செய்யும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவன் திடீரென்று வேலையைவிட்டு நீக்கப்படுகிறான். அதன் பின்னணியை அவனே ஆராய முயன்றபோது துவங்கும் கதை , திடுக்கிடும் நிகழ்வுகளும் ஆச்சரிய திருப்பங்களுமாக பயணிக்கிறது. ஒரு கொலை கூட நடந்துவிடுகிறது. இதன் பின்னனியில் மலேசியாவின் அரசியல், பணபலம் ,அரச குடும்பம் ஆகியவை இருப்பதும், தனிநபர்கள் தாங்கள் வளர எப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்து, அதற்கு தன் சொந்த நாட்டு மக்களையே எப்படிக் கவிழ்த்துவிடுகிறார்கள் என்பதனை மலேசியாவின் பின்னனியில் சொல்லும் கதை இது. இந்தக் கதைக்கரு அல்லது களம் தமிழ்வாசகர்களுக்கு மிகவும் புதிது.
          இப்போதுதான் சமீபத்தில் மலேசிய தமிழ் கேங்குகளைப்பற்றி 'கபாலி' திரைப்படத்தில் பார்த்ததால் அந்தச் சூழ்நிலையை இந்தப்புத்தகத்திலும் ஆசிரியர் வெளிப்படுத்தும் போது நன்றாகவே புரிகிறது
           
கதை சொல்லும் பாணி:

          கதையின் நாயகனாக 'சுதா' இந்தக் கதையைச் சொல்வதுபோல ஆசிரியர் அமைத்துள்ளார். சுதாவின் முழு கேரக்டரும் வெளிப்படும்படி பல சம்பவங்களையும், பின்னனியையும் அமைத்திருக்கிறார். நிதானமாக கதை சொல்லும் பாணியில் மூன்றாவது அத்தியாயத்தில் சுதாவுக்கு வேலை போய்விட வேகம் பிடிக்கிறது. 127ஆம் பக்கத்தில் சுதா துப்பதிவாளனாகும் போது கதையில் மேலும் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ஆசிரியர்  ஏதோ தனக்கே நடந்த சம்பவத்தைச் சொல்வது போலவே இருக்கிறது. தவிர பல சமயங்களில் இது கற்பனையில் உதித்த புதினம் என்பது மறந்து போகிறது. சொந்த அனுபவங்களோடு கற்பனையைக் குழைத்து எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம்.

கதை சொல்லும் உத்தி:

          நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் மாற்றி மாற்றிச் சொல்லும் உத்தியை ஆசிரியர் கடைப்பிடித்திருக்கிறார். ஆனாலும் எந்த இடத்திலும் தொய்வோ குழப்பமோ இல்லாமல் கதையை நகர்த்தியிருப்பதில் ஆசிரியர்  வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லமுடியும். யார் வில்லன் என்பது இறுதிக்கணம்  வரை சஸ்பென்சாகவே  இருந்தது நாவலை சூடாகவே வைத்திருந்தது.

பாத்திரப்படைப்புகள்:

          இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற மென்பொருள் பொறியாளர்கள், அங்கேயே வேலை செய்யும் சீனர்கள், மலேசியாவின் பூர்வ குடியினர், பிரிட்டிஷ் காலத்தில் இங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் என பலபேர் பாத்திரங்களாக வருகிறார்கள். குறிப்பாக இதில் வரும் பெண் பாத்திரங்களான சுஜாதா, வீணா, பத்மா, சாரா, லிசா ஆகியோரின் பாத்திரப்படைப்புகள் மிகவும் அருமை. அவர்களுக்குள் பல வித்தியாசங்களை ஆசிரியர் வேறுபடுத்திக் காட்டியிருந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழகாகவே படைத்ததோடு ஒவ்வொருவரையும் வர்ணிக்கும் கதாநாயகனின் மூலம் தன் சொந்த அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆசிரியரே ஒரு கவிஞர் என்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை ஆனால் தேவையான அளவு மட்டுமே இருப்பதால் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் மலேசியப் பின்னனிகளும் ஓவியமாய் கண்முன் விரிகிறது.

யதார்த்தங்கள்:

          முகம் தெரியா சாட் (Chat)  உலகில் ஆணா பெண்ணா என்று தெரியாமல் மணிக்கணக்காக Chat செய்வது, அவர்களுக்கும் நமக்குத் தெரியாமலேயே மிகத் தெரிந்த பெண்ணுடன் Chat  செய்திருக்கலாம்,குடும்பத்தில் பொறுப்புகளை சுமக்கும் ஒருவன் பார்க்கும் எல்லாப் பெண்ணையும் ஒருவேளை நமக்கு மனைவியாய் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் மனோபாவம். எல்லா இடங்களிலும் அரசியல், பணபலம் புஜபலம் இருக்கத்தான் செய்யும், அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் பலர் முன் இருக்கும் சேலஞ், காதல் என்பது கூட அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியது தான்  போன்ற பல யதார்த்தங்கள் கதையில் வருகின்றன. ஆண்கள் தங்கள் காதலிகளைத்தவிர மற்றவரை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்பது அபத்தம், கதாநாயகர்கள் எல்லோரும் புஜபலம் கொண்ட ஹீரோக்கள் இல்லை, வெளிநாட்டுக்கு முதன் முதலில் போகிறவர்களுக்கு ஏற்படும் கல்சுரல் ஷாக் போன்ற யதார்த்தங்களும்   கதையில் காட்டப்பட்டிருக்கின்றன.

கதையின் காலம்:

          நாவல் 2017ல் வெளியிடப்பட்டிருந்தாலும் கதையின் காலத்தை 2000 ன் ஆரம்ப கால கட்டத்தில்அமைத்திருக்கிறார் ஆசிரியர் . எனவே அந்த காலக்கட்டத்தை கண்முன் கொண்டுவருவதற்கு கதையில் போகிற போக்கில் பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். மலேசியப் பிரதமர் மஹாதீர் ஓய்வு பெறுவது, ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல், மலேசியாவில் அப்போது நடந்த மோனோரயில் பிரச்சனை, 97-ல் ஏற்பட்ட புகைமூட்டம், அந்தக் காலகட்டத்தின் சினிமாக்கள், பாடல்கள், கதாநாயகிகள், ஜெயலலிதா லட்சம் பேரை வேலைக்கு அனுப்பியது என்று பல செய்திகள் ஆங்காங்கே இயல்பாக வருவது மீண்டும் மீண்டும் கதையின் காலகட்டத்தை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு தேர்ந்த எழுத்தாளர்தான் இவ்வளவு நுணுக்கமாக திணிக்காமல் அதைச் செய்ய முடியும்.

கதை நடந்த இடம்:

          கதை நடந்த இடம் மலேசியா என்பதால் கதைமுழுதும் மலேசியாவைப் பற்றிய பல விவரங்கள், இடங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அதையும் சாமர்த்தியமாகவே செய்திருக்கிறார் ஆசிரியர் . மலேசியாவின் அனைத்து இடங்களும் கண்முன் விரிவதோடு மலேசியாவுக்கு இதுவரை செல்லாதவர்களை செல்லத்தூண்டுவதாக அமைந்துள்ளது. என்னைப்போன்ற ஏற்கனவே போனவர்கள், பார்க்காமல் விட்டுவிட்ட இடங்களையும் அறிந்து கொண்டு மறுபடியும் போக அழைக்கிறது.

         மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள், சைபர் ஜெயா, புத்ர ஜெயா, லங்காயன் தீவு, வனநாயகன் உராங்குட்டானின் கதை, கிழக்கு மலேசியா, பிரிக்ஸ்ஃபில்ட் தமிழ் உலகம், தமிழ் முஸ்லீம் மஸ்ஜித்தான மஸ்ஜித் ஜாமேக், KLCC ஸ்டேடியம், செராங்  என்ற சேரர் ஆண்ட பகுதி, கம்போங்  என்றால் கிராமம் என்ற செய்தி, மெர்டெக்டா சுதந்திர சதுக்கம் பத்துமலைக்கோவில், கடாரங் கொண்டான் ராஜேந்திர சோழன் பிடித்த கெடா மாநிலம், வெள்ளைமணல், கறுப்பு மணல் பீச் இப்படிப்பலவற்றைச் சொல்லலாம். இடங்கள் மட்டுமின்றி அதையொட்டிய கலாச்சார சமூக வேறுபாடுகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். குறிப்பாக பக்கத்துவீட்டு இந்தோநேசியச் சிறுமி போன்ற பலர் அங்கு சிறுவயதில் வீட்டு வேலைக்கு வந்து கஷ்டப்படுவது.  அங்குள்ள குடிமக்களின் அரசால் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளனர் என்பது எனக்கு புதிய செய்தி. இஸ்லாமிக் பேங்கிங் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.  

My wife and me with Baskar at Fetna 2016

          குறைகள் என்று சொல்லவேண்டுமென்றால், கதையாக்கத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். கதையின் நாயகனை அதீத நல்லவனாகக் காட்டியிருப்பது, ஒரு காதல் போனபின் அடுத்த காதலில் உடனே விழுவது, ஐ லவ்யூ என்று சொல்லி விட்டு இந்தியா திரும்பியும் அதிகம் பேசாமலிருந்தது போன்றவை கொஞ்சம் உறுத்தின.

          ஆனால் முற்றிலும் புதிதான கதைக்களத்தில் படைக்கப்பட்ட இந்தக் கதையின் மூலம் பாஸ்கரின் வேறொரு பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது. பாஸ்கர் தன் கற்பனைச்சுரங்கத்தில் இன்னும் ஆழமாகத் தொடர்ந்து தோண்டினால் பல புதையல்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பல படைப்புகள் படைத்து பிரபலமடைவதோடு அந்நிய நாட்டில் தமிழையும் தொடர்ந்து வளர்க்க பரதேசியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

17 comments:

 1. மிகவும் ரசனையான விமர்சனம்...

  ஆரூர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் அப்படி திண்டுக்கல்லார் அவர்களே.

   Delete
 2. விமர்சனம் அருமை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. பேரைப்பார்த்ததும் வட இந்தியர் என்று நினைத்தேன் , நல்ல தமிழில் கவிதை கூட எழுதுகிறீர்களே , நன்றி

   Delete
 3. விமர்சனம் அருமை
  நண்பர் ஆருர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் அருமை கரந்தை ஜெயக்குமார்.

   Delete
 4. நாவல்களை படிக்கும் பழக்கம் விட்டு போன எனக்கு இந்த விமர்சனம் மூலம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை துண்டிவீட்டீர்கள் நல்லதொரு விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு புத்தகம் மதுரைத்தமிழா .

   Delete
 5. அமெரிக்காவில், ஃபிளாரிடாவில் வேலை செய்பவர்களுக்கு டென்சன் குறைவு என்பார்கள்.Low Cost City (State) என்பதால் நிறுவனங்களில் அதிக ஆள்பலம் இருக்குமாம். அப்படியானால் நிறைய ஒய்வு கிடைக்கவும் வழியுண்டு. எனவே ஆரூர் பாஸ்கரிடம் இருந்து இன்னும் விரிவான நாவலை விரைவில் எதிர்பார்க்கலாம்போல் தெரிகிறதே? - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராய செல்லப்பா , இதனை பாஸ்கரும் படிப்பார் என்று நம்புகிறேன்.

   Delete
  2. செல்லப்பா சார்,
   I wish that :)
   உண்மையில்
   பிளாரிடா பற்றி 1980களின் கண்ணொட்டத்தில் சொல்கிறீர்கள். இங்கே விலைவாசி நியூஜெர்சியை எட்டித்தொட்டும் தூரத்தில் . ஐடி வேலையும் அதுபோலவே. :)

   கடந்த வருடம்கூட குடும்பம் இந்தியாவில் 3 மாதங்கள் இருந்த நேரத்தை சரியாக எழுத்துக்கு பயன்படுத்திக்கொண்டேன்.

   Delete
  3. "ஆரூர் பாஸ்கரிடம் இருந்து இன்னும் விரிவான நாவலை விரைவில் எதிர்பார்க்கலாம்போல் தெரிகிறதே?"இதைத்தான் பாஸ்கரும் படிப்பார் என்று நம்புகிறேன், என்று சொன்னேன்

   Delete
 6. உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி ஆல்பி சார். இது குறித்து எனது விரிவான பதிவு இங்கே

  http://aarurbass.blogspot.com/2017/03/4_13.html

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு எழுத்து நன்றாக வருகிறது , தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்கர் .

   Delete