Friday, August 14, 2015

விம்மிய மார்பும் கம்மிய மார்பும் !!!!!!!!

தோள் போராட்டமும் ஆள் மாறாட்டமும்  பகுதி 2
இதன்  முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2015/08/blog-post_11.html



ரிசப்ஷனில் பெயரை எழுதிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தேன். பெரிய டி.வி திரையில் NY-1 சேனலில், உதடு திறக்காமல் ஒருவர் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். படபடப்பாய் இருந்ததால் செய்தி எதுவும் தலையில் ஏறவில்லை. சிறிது நேரத்தில் மரிஸா (Front Office Secretary) வந்து கிம் உள்ளே கூப்பிடுவதாகக் கூறினாள். நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றேன். சரியாகக் கவனிக்காமல் ரூடாக இருந்தால், பேசாமல் வந்துவிட்டு, மூன்று வாரம் கழித்து, சாகர் வந்தவுடன் திரும்ப வர வேண்டியதுதான் என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன்.
அப்போது தெரப்பி அறையில் கிம்பர்லி நுழைந்தாள்.

"ஹாய் ஆல்ஃபி, கம் ஆன் இன்", ஆஹா நன்கு சிரித்துக் கொண்டு அழைப்பது கிம்பர்லியா? எனக்கு ஆச்சரியத்தில் வாயடைத்துவிட்டது. உடை மாற்றிக்கொண்டு இருக்கச் சொன்னாள். சட்டையைக் கழற்றிவிட்டு வெறும் பனியனில் இருந்தேன். ஒரு காலத்தில் விம்மியிருந்த மார்புகள் இப்போது கம்மியிருந்தது .
“டேய் சேகரு சந்தடி சாக்கில சந்துல சிந்து பாடுற. எப்படா இருந்தது உனக்கு விம்மிய மார்புகள் ? அந்தக் காலத்திலிருந்து கம்மிய மார்புகள்தான் உனக்கு”. “
வந்துட்டான்யா, வந்துட்டான்யா எவ்வளவு தூரத்திலிருந்தாலும் சரியான நேரத்திற்கு, இல்லை தவறான நேரத்திற்கு வந்துர்ரான் இந்த மகேந்திரன் ஒன்னுமே சொல்ல முடியல, நீசப்பயபுள்ள.
உள்ளே நுழைந்து சிரித்த கிம்முக்கு நன்றி சொன்னேன்.
ஆச்சரியத்துடன் விற்புருவங்களை மேலே உயர்த்தி, எதற்கு? என்றாள்.
 'நீ சிரித்ததற்கு' என்றேன்.
"என்ன சிரித்ததற்கா? –
 “ஆமாம் இதுதான் முதன்முறை என்னைப் பார்த்து சிரிக்கிறாய்? ஒரு வேளை உனக்கு சிரிக்கத் தெரியாதோ என்று நினைத்தேன்", என்றேன் .
வாய்விட்டுச் சிரித்தாள் அழகு கூடியது. அப்போதுதான் எனக்கு சகஜ நிலை வந்தது. அப்பாடி தப்பிச்சேண்டா சாமி, இந்த மூணு வாரத்தை நல்லபடியாவே ஓட்டிறலாம்னு நெனைச்சேன். அதுக்கப்புறம் பல நாள் பழகியதுபோல் நெருங்கிவிட்டாள்.
அடுத்த நாள் முதல்  அவளோடு நடந்த சில  ஆங்கில உரையாடல்களை தமிழில் கீழே கொடுக்கிறேன்.
"க்யா ஹாலா  கிம்".
"வாட்” ?
“என்னது தெலுங்கில கேட்டாலும் வாட்னு சொல்ற ஹிந்தியில் கேட்டாலும் 'வாட்'னு சொல்ற?"
"இதுக்குப்பெயர்  என்ன இந்தியா?"
ஏதோ எனக்குத் தெரிந்த ஹிந்தி" .
அப்போது ஆள் மாறாட்டம் நியாபகம் வந்து சிரிப்பு வந்தது.ஆரிய உடலையும், ஐரோப்பாவின் ரத்தத்தையும் ஆந்திரம்’ என்று எப்படி தப்புக்கணக்குப் போட்டேனோ. ஆம் கிம்பர்லி கோவாவைச் சேர்ந்தவள், மும்பையில் படித்து வளர்ந்தவள். போர்த்துக்கீசிய பரம்பரையில் வந்தவள். அதனால்தான் பெயர் கிம்பர்லி மிரண்டா என்று இருக்கிறது.
பிறகு ஜிம்முக்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஒரு சைக்கிள் இருந்தது. அது ஒரு ஸ்டாட்டிக் பைக், கையால் ஓட்டுவது.
SciFit
Static Bike
“இன்றிலிருந்து இந்த பைக்கில் உடற்பயிற்சியை ஆரம்பி”.
“ஐயையோ எனக்கு பைக் ஓட்ட லைசன்ஸ் இல்லையே?”
உடைஞ்ச கைல ஒட்டுப்போட்டுருக்காங்கல்ல அதான் லைசென்ஸ்”.
15 நிமிடங்கள் டைமர் வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அது அவ்வளவு கடினமாய் இருக்கும் என்று நினைக்கவேயில்லை. வியர்வைப் பூக்கள் என் முகத்தில் முத்துமுத்தாய்ப் பூத்திருந்தது  (வந்துட்டான்யா பழைய கவிஞன், வேர்த்து வடிஞ்சதுன்னு சொல்றதுக்குப்போய் எப்படில்லாம் ஜோடிக்கிறான் பாரு).
 கிம் வந்து உதட்டோர புன்னகையுடன் "டன்?" என்றாள்.
"ஆமாம் என் வாழ்வின் மிக நீண்ட நிமிடங்கள்" என்றேன்.
"இப்படித் தெரிந்திருந்தா ஒரு அரைமணி நேரம் டைமர் போட்டு, உன் வாழ்க்கையை நீட்டியிருப்பேனே" என்றாள்.
சைக்கிளின் எதிரே ஜன்னலில் தெரிந்தது கொலம்பியா லேடீஸ் ஹாஸ்டல்; ஆனால் ஒரு தேவதை கூட ஒரு தடவை கூட கண்ணில் படவில்லை.
மறு நாள் அதே சைக்கிள் எக்னசர்சைஸ் பண்ணி முடித்தபின் கிம் வந்த போது சொன்னேன்.
"இந்த சைக்கிள் சரியில்லை"
"ஏன் ?".
"எவ்வளவு முயன்றாலும் நகர மாட்டேங்குது,நானும் எப்படியாவது எதிரே உள்ள அறைக்கு சைக்கிளில் போக முயன்றாலும், முடியவில்லை".
"அங்கே போக வேண்டுமென்றால், வெளியே போய் எதிர் பில்டிங்கில் இருக்கும் எலிவேட்டரில்  ஏறியும் போகலாம்".
“அம்மா ஆளவிடு, உனக்கு என் இன்னொரு தோளும் உடையறத பார்க்கனுமா?”
மற்றொரு நாளில்
“இன்றைக்கு சைக்கிளில் என்ன தோனுச்சு?.” என்றாள் கிம்.
“இந்த சைக்கிள் அமெரிக்க வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குது?”
     “அமெரிக்கத்தத்துவமா? அது என்ன?”

லொள்ளு அடுத்த வாரம் நிறைவு பெறும்.



நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 



4 comments:

  1. Sir,

    Happy Independence Day to you, Sir.

    ReplyDelete
  2. ஆல்ஃபி. Sir, நீங்கள் எழுத சுவாரஸ்யமா ஏதாவது கிடைத்து விடுகிறது.. :)

    ReplyDelete
  3. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete