Monday, September 15, 2014

கன்னி இளவரசியும் கற்கோட்டையும்!!!!!!!!!!

இஸ்தான்புல்லில் பரதேசி -18 
Maiden Tower
'மெய்டன் டவர்' என்பதன் பின்னனி வரலாறு என்று இங்கு பல கதைகள் உலவுகின்றன. இதில் துருக்கியில் பெரும்பாலும் நம்பப்படும் கதை என்னவென்றால்...
முன்னொரு காலத்தில் ஒரு பேரரசர் இருந்தாராம். அவருக்கு ஒரு அழகான மகள் இருந்தாளாம். அவருடைய அரசில் இருந்த ஜோதிடர், அவருடைய மகள் தனது 18-ஆவது வயதில் விஷப்பாம்பு கடித்து இறந்துவிடுவாள் என்று சொன்னாராம். அந்தப் பாம்பிடமிருந்து பாதுகாக்க பேரரசர், பாஸ்ஃபரஸ் மத்தியிலே ஒரு சிறு கோட்டையைக் கட்டி அவளது 18ஆவது வயது வரை பாதுகாக்க நினைத்தாராம்.
கிட்டத்தட்ட தனிமைச்சிறை போல் வைத்து தன்னைத்தவிர வேறு யாரையும் அங்கு சென்று இளவரசியைப்பார்க்க அவர் அனுமதிக்கவில்லை. இளவரசியின் 18-ஆவது பிறந்த நாளும் வந்தது. அன்று பேரரசர் அவளைக் கண்டு வாழ்த்துச் சொல்வதற்கு ஒரு கூடை நிறைய பழங்களை எடுத்துச் சென்றாராம். மகளைக் காப்பாற்றிவிட்டோம் என்று அவர் மகிழ்ச்சியில் திளைத்த போது, பழங்களிடையே  இருந்த ஒரு விஷக் குளவி இளவரசியியைக் கொட்டிவிட, ன் தந்தையின் கரங்களிலேயே அவள் உயிரை விட்டாளாம். எனவே இதற்கு  மெய்டன் டவர் என்று பெயர் வந்ததாம்.  

துருக்கியின் 10 லிரா கரன்சியின் பின்னால் இந்த மெய்டன் டவர் பொறிக்கப்பட்டுள்ளது.
படகு மெதுவாக நகர்ந்து சென்றபோது இடது புறத்தில் ஒரு பிரம்மாண்டமான கோட்டை ஒன்று வந்தது. உங்களுக்குத்தான் தெரியுமே கோட்டை கொத்தளங்களைப் பார்த்தால் என் தோள்கள்  தினவெடுக்குமே ("ஆமா தோள் எங்க இருக்கு வெறும் தோல்தான் இருக்குது ". யாரது யாரது இதை யார் இதைச் சொல்வது? ரொம்ப நாள் காணாப்போன மகேந்திரனாய் இருக்குமோ அல்லது என் மனைவியா? )

Rumelian castle
உற்றுப் பார்க்கும் போது அங்கே உருவங்கள் சாரி சாரியாய்த் தெரிந்தன. திடுக்கிட்டு ஓஸிடம் கேட்டேன், "சுல்தானின் படைகள் இன்னுமா இங்கே இருக்குது ?". "இல்லை இல்லை கோட்டையைப் பார்க்க வந்த மக்கள்", என்று ஓஸ் தெளிவுபடுத்தினான். அதான பார்த்தேன் சுல்தான் கதை முடிஞ்சு 100 வருஷம் ஓடிப்போச்சே.
ருமேலியன் கோட்டை (Rumelian Castle)
சரியர் மாவட்டப்பகுதியான துருக்கியின் ஐரோப்பிய பகுதியில் இருக்கும் இந்தக் கோட்டையின் பெயர் "ருமேலி ஹிசரி" அல்லது 'ருமேலியன் கோட்டை". ஆட்டமன் சுல்தான் மெஹ்மது II -வால் 1451-1452ல் கட்டப்பட்டது இந்தக்கோட்டை. கட்டி முடிக்கப்பட்டு சுமார் 570 வருடங்கள் ஆகியும் கம்பீரமாய் நின்றது கோட்டை. 
Sultan Mehmed II
கான்ஸ்டான்டிநோபிளை பிடிக்கும் முன்னால், படைகளை நிறுத்துவதற்காகப் கட்டப்பட்ட கோட்டையாம் இது. அது தவிர பாஸ்ஃபரஸ் பகுதியில் கப்பல்கள் வருவதைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நேர் எதிரே அக்கறையில் இதைவிடப் பழமையான அனடோலியன் கோட்டை இருக்கிறது என்றான் ஓஸ். இங்கிருந்து பார்க்க முடியவில்லை. அனடோலியப் பகுதி தான் ஆட்டமன் படைகளால் ஆக்ரமிக்கப்பட்ட முதல் பகுதி. இந்த அனடோலியக் கோட்டை கட்டப்பட்டது 1394ல்

ஏற்கனவே சுல்தான் இரண்டாவது மெஹ்மதுவின் தந்தை, சுல்தான் இரண்டாவது முராது, கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்ற  முனைந்த போது  பாஸ்ஃபரசில் இருந்த பைஜான்டிய கப்பற்படையை முறியடிக்க முடியவில்லை. எனவேதான் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த இடத்தில் இருந்த கன்னியாஸ்திரிகளின் மடத்தைக் கைப்பற்றி, அவர்களைத்துரத்திவிட்டு கட்டப்பட்டதுதான் இந்தக்கோட்டை.
அதற்கு முன்னால் இதே இடத்தில் ஒரு காலத்தில் ரோமர்களின் கோட்டை இருந்து அதன் பின்னர் ரோமப்பேரரசின் சிறையாக மாற்றப்பட்டதாம்.
சுல்தான் கோட்டை கட்ட ஆரம்பிக்கும்போதே, அவர்களின் படை வலிமையை அறிந்த பைஜான்டிய  ரோமப் பேரரசர் பதினோராவது கான்ஸ்டான்டைன் (1404-1453)  சமாதான தூதுவிட்டார். ஆனால் சுல்தான் அதை நிராகரித்துவிட்டார்.
Emperor Constantine X1 
கோட்டையில் உள்ள மூன்று முக்கிய டவர்களுக்கு அதனைக் கட்டும்போது மேற்பார்வை பார்த்த மூன்று படைத்தலைவர்களின் (பாஷா) பெயரே சூட்டப்பட்டது. சுல்தானும் நேரடியாக வந்து கட்டுவதைக் கண்காணித்தார். ஆயிரக்கணக்கான கட்டடக் கலைஞர்களின் உதவியால் ஏப்ரல் 15, 1452ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 31 ஆகஸ்ட் 1452ல் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தமே நான்கு மாதங்கள் 16 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பிரமாண்ட கோட்டை ஒரு இமாலய சாதனைதான்.
வேலை செய்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேலிருந்து பார்த்தால் அரபி மொழியில் முகமது நபியின் பெயர் வருவதுபோல் இது அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அரபி மொழியில் எழுதும்போது சுல்தான் மெகமதுவின் பெயரும் அதே மாதிரிதான் தெரியும் என்பதால் சுல்தான் மறைமுகமாக தனது பெயரையே அப்படிப் பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அதன் பின்னர் நடந்தது தான் தெரியுமே. கான்ஸ்டான்டி நோபிள் வீழ்ந்தது ஆட்டமன் பேரரசு எழுந்தது, வளர்ந்தது, நீண்ட நெடுங்காலம் நிலைத்தது. 
Bosphorus Bridge 
படகு நகர்ந்து சென்றதில் பெரிய மூன்று மேம் பாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
முதலாவது பாலம் 1973-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 'பாஸ்ஃபரஸ் பாலம்' என்றழைக்கப்படும் இது ஆசியப்பகுதியை ஐரோப்பியப் பகுதியோடு இணைக்கிறது. 1973ல் இதற்கான செலவு சுமார் 200 மில்லியன் டாலர். இதன் மொத்த நீளம் 3524 அடி.ஆறு பாதைகள் கொண்ட இந்தப் பாலத்தில் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 2 லட்சம் வண்டிகள் கடக்கின்றனவாம். பழைய 1000 லிரா கரன்சியில் இந்தப் பாலம் அச்சடிக்கப்பட்டது.  
டிராஃபிக்கைச் சமாளிக்க இரண்டாவது பாலம் 1988ல் கட்டிமுடிக்கப்பட்டு ஃபடிஹ் சுல்தான் மெஹ்மது பாலம், எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூன்றாவது பாலம் இப்போது கட்டப்பட்டு வருகிறது.   
அதன்பின்னர் நான் ஏற்கனவே பார்த்த பெய்லர்பேயி அரண்மனை வந்தது. அப்படியே அழகான சூரிய அஸ்தமனத்தையும் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
வழக்கம்போல என்னைக் கொண்டுவந்து ரூமில் விட்டுவிட்டனர். நன்கு தூங்கி எழுந்து அடுத்த நாள் காலையில் எழுந்து ரெடியாகி திரும்பவும் ஆட்டாதுருக் ஹவில்மணி விமான நிலையத்திற்கு வந்து அதேநாள் மாலை நியூயார்க் வந்து சேர்ந்தேன்.
இஸ்தான்புல் நினைவுகளும் சுல்தானின் ஆட்டமன் பேரரசு என்ற கனவுலகமும் என்றென்றும் மறக்க முடியாதவை.
-முற்றும்.

இஸ்தான்புல்லில் என்னுடன் கடந்த 18 வாரங்களாக தொடர்ந்து பயணித்த வாசக நண்பர்களுக்கு என் உளமார்ந்த  நன்றிகள்.


அடுத்த திங்கள் கிழமை முதல் "எழுபதுகளில்  இளையராஜா" என்ற புதிய தொடர் ஆரம்பம்.

2 comments:

  1. அருமையான பயணத்தொடர். உங்கள் மூலம் நாங்களும் சில புதிய இடங்களைக் கண்டோம். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. தொடர்ந்து பயணித்த வெங்கட் நாகராஜ்க்கு என் உளமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete