Monday, May 6, 2013

மெக்சிகோ பயணம்-10 : மெக்சிகோவின் விடுதலைப்போராட்டம்


விடுதலைப் போராட்டம் மற்றும் அமெரிக்க ஆதிக்கம் பற்றி பின்னர் சொல்கிறேன்.
     முதலில் டானியல் எங்களை அழைத்துச் சென்றது, ஆந்த்ரபாலஜி மியூசியம். போகும் வழியில் “காந்தி சாலை”யைப் பார்த்தேன். ஒருவேளை இங்குள்ள ஏதாவது பெயராக இருக்கும் என நினைத்தபோதுதான், மியூசியம் நுழைவாயிலருகில் காந்தி சிலையைப் பார்த்தேன். எங்கேயெல்லாம் காந்தி ஆகர்ஷித்திருக்கிறார்  என நினைத்து பெருமையாக இருந்தது. அதே சமயத்தில் இந்தியர் அனைவருமே இப்படித்தான் அரை நிர்வாணமாய் இருப்பார்களோ? என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று பயமாகவும் இருந்தது.

     ஆந்த்ரபாலஜி மியூசியம் 70களில் கட்டப்பட்ட நேர்த்தியான கட்டிடம். மெக்சிகோவின் மிகப்பிரபலமான ஆர்க்கிடெக்ட் “பெட்ரோ  ராமிரெஸ்” (Pedro Ramirez) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஞாபகம் இருக்கிறதா ? இவர்தான் , புதிய குவாடலுப் பேராலயத்தைக்கட்டியவர்
Aztec Model Village

     மியூசியத்தில் மாயன் மற்றும் ஆஸ்டெக் நாகரிகத்தைக் குறித்து விலாவரியான தகவல்கள் கலைப்பொருட்கள், புராதனச் சின்னங்கள் இருந்தன. அதில் முக்கியமானது, மாயன் காலண்டர் மற்றும் ஆஸ்டெக் காலண்டர். நடுவில் நாக்கைத்துருத்தி பயமுறுத்திய தலையுடன் சுற்றிலும் பல உருவங்கள் செதுக்கப்பட்டிருந்த, மிகப்பெரிய கல்லில்  வட்டவடிவில் இருந்த ஆஸ்டெக் காலண்டரில் போட்டோ எடுத்துக் கொண்டேன். மாயன் காலண்டர் பற்றி உலகமெங்கும் புரளி இருந்தாலும், ஆச்சரியமாக மெக்சிகோவில் ஒன்றுமே இல்லை.
Aztec calender

     வெளியே வந்தபோது, எங்கெங்கு நோக்கினாலும் போலிஸ் படை திரள்திரளாக இருந்தது. டானியலிடம் கேட்டேன், “இன்று என்ன விசேஷம்”? என்று. அப்பொழுதுதான் சொன்னான், அன்று அவர்களின் புதிய பிரசிடன்ட்  பதவியேற்க விருப்பதாக. ஒவ்வொரு ஆறு வருடமும் புதிய பிரசிடன்ட்  மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பெயர் , என்றிக் பினா நியடோ (Enrique  Pena  Nieto) எனும் 46 வயது இளைஞன். குற்றப்பின்னணி உள்ள குடும்பம் என்பதால் ஏகப்பட்ட எதிர்ப்பு (இங்கேயுமா?). எனவே பல இடங்களுக்கு நம்மால் இன்றுபோகமுடியாது என்று குண்டைப்போட்டான். அப்பொழுதுதான் புரிந்தது ஏன் இன்றைய டூரில் ஆளே இல்லை என்று (சொல்லவேயில்லை...)
     அதன்பின்னர் தத்தித்தடவி, பேலஸ் ஆஃப் ஆர்ட்ஸ் சென்றோம். பலவித எண்ணெய் ஓவியங்கள் நிறைந்த அந்த அரண்மனைக் கட்டிடம் மிக அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தது. 
Palace of Arts

மெயின் சிட்டியான, டெளன் டவுன் (Down Town) செல்லும் எல்லாப்பாதைகளிலும் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.
     சிறிது நேரத்தில் தெருவெங்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பேர் பதாகைகளை ஏந்திக்கொண்டு, எதிர்ப்புக் கோஷங்களுடன் நடந்தனர். மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் சைக்கிள் பேரணி நடத்தினர். குறுக்குவழியில் ஜெயித்துவிட்டார் என்று ஒரே புரளி. திரும்பிவிடலாம் என்று திட்டமிட்டு, அந்த டொமினிக்கன் தம்பதியினரை ஹோட்டலில் இறக்கிவிடச் சென்றோம். அவர்கள் பாதிநாள்  மட்டுமே புக் செய்திருந்தார்கள். (தப்பித்தார்கள் ஆனால் சுத்த வேஸ்ட்).
     போகும் வழியில் சுதந்திரதேவியின் நினைவுச்சின்னம் இருந்தது. டேனியல் விவரித்த சுதந்திரப்போராட்டத்தை சுருக்கமாக சொல்கிறேன். Pls feel free to skip.
     மாவீரன் நெப்போலியன் ஸ்பெயினை வென்று பரம்பரை ஸ்பெயின் நாட்டு மன்னனான, ஏழாவது ஃபெர்டினாண்டை தள்ளிவைத்துவிட்டு தன்னுடைய தம்பியான ஜோசப்பை அரியணையில் அமர்த்தினான். ஆரம்பித்தது மெக்சிகோவிலும் குழப்பம். அதிகப்படி வரி, நிலையில்லாத அரசாங்கம், சரிசமமான மதிப்பின்மை ஆகியவை சுதந்திரப் போராட்டத்திற்கு அடிகோலியது.
     மிகுவேல் ஹிடால்கோ (Miguel Hidalgo) என்று கத்தோலிக்க பாதிரியார் செப்டம்பர் 16, 1810ல் சுதந்திரப்போராட்ட முழக்கத்தை எழுப்பினார். எழுந்தது சிவப்பிந்தியர்களின் கூட்டம்.எதிர்ப்பட்ட ஸ்பானிஸ்காரர்களை கொன்று குவித்தது. அதற்குள் கருத்து வேறுபாடு கொண்டு இக்னேசியோ என்னும் பாதிரியார் பாதி ஆட்களை கழற்றிக்கொண்டு போய்விட்டார். அவ்வளவுதான் முடிந்தது கதை. இரண்டு பட்டுப்போன கூட்டத்தை, ஸ்பெயின் ராணுவம் சுலபமாக முறியடித்தது, இருவரையும் தனித்தனியே பிடித்து தூக்கிலிட்டது. இருவர் தலையையும் முச்சந்தியில் தொங்கவிட்டு மக்களை எச்சரித்தது.

     ஆனாலும் ஜோஸ் மரியா மோரலஸ் என்ற இன்னொரு பாதிரியின் தலைமையில் அணி திரண்ட படையினர் தொடர்ந்து போராடினர். (பாதிரியார்கள் அப்போல்லாம் வீரர்களாய்  இருந்திருக்கிறார்களாம்ப்பு). பூர்வகுடி மக்களுக்கு சமஉரிமை வேண்டி சுதந்திர பிரகடனம் செய்த அவர்  கதியும், அதோகதி மற்றும் அதே கதி ஆனது.

     அதன் பின்னர் போராட்டம், வின்சென்ட் குவாரோ மற்றும் குவாடலுப் விக்டோரியா ஆகிய கொரில்லாக்கள் தலைமையில் சென்று சூடுபிடித்தது. வைஸ்ராய் அவர்களை அடக்க இருர்பைட் என்பவரை அனுப்பினார். இவர் எதிர்க்கட்சியில் சேர்ந்து சுதந்திரம் வாங்கி ஸ்பானிஸ் முடியாட்சியுடன் ஒப்பந்தம் செய்தார். எப்படியாவது ஃபெர்டினாண்ட் அல்லது ஏதாவது ஐரோப்பியரை அரசராக்கி மெக்சிகோவை சுதந்திர முடியாட்சியாக்கிவிட வேண்டும் என்பது அவர் விருப்பம். ஒருவரும் சிக்காத சமயத்தில் விடுதலைத் தலைவர்கள் அசந்திருக்கும் சந்தர்ப்பத்தில் தன்னைத்தானே பேரரசாக முடிசூட்டிக் கொண்டார். சும்மாவிடுவார்களா விடுதலை வீரர்கள், கூட இருந்தே குழிபறித்த அகஸ்டின் இருர்பைடை, ஒரு வருடத்திற்குள் அகற்றிவிட்டு ஜனநாயக நாடாக அறிவித்தனர். ஹிடால்கோ  இட்ட முதல் அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் 16 சுதந்திர தினமாகியது. அவரே நாட்டின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.
Father Hidalgo

      எங்களோடு வந்த, டொமினிக்கன் நாட்டைச்சேர்ந்த இருவரையும் இறக்கிவிட்டபின், டானியலைப் பார்த்தேன். மணி மதியம் 12.30, எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு அடுத்த இடத்திற்கு செல்வோம் என்றேன். அடுத்தபடியாக ஷோஸிமில்கோ ரிவர் குருஸ். அங்கே கூட்டமிருக்குமா? இதே பிரச்சனை இருக்குமா? என வினவியபோது, அது நகரைவிட்டு தள்ளி இருக்கிறது, எனவே ஒன்னும் பிரச்சனையிருக்காது பயப்படாதே என்று தைரியமூட்டினான், டானியல். 

No comments:

Post a Comment