Monday, January 20, 2014

காரைக்குடி பயணம் பகுதி 1: கொக்குகளும் மக்குகளும் !!!!!!!!!!


            மதுரையைவிட சென்னையில் அதிக நாட்கள் வாழ்ந்திருந்தாலும், மதுரை செல்வது என்பது, தாய் வீட்டுக்குப் போவது போல அவ்வளவு சுகமானது. சென்னையில் குடும்பம் இருந்தாலும், மதுரைக்குப்போகாமல் திரும்பமாட்டேன். மதுரைக்குப் போகும்போதெல்லாம் நண்பர் பிரபாகர் வீட்டில் தங்குவது வழக்கம். இந்தத் தடவையும் மதுரை விமானநிலையத்தில் பிரபாகரின் கருத்துப் பெருத்த மாருதி SX-4  என்னை அப்படியே உள்வாங்கிக்கொண்டு நகர்ந்தது. ஆஹா ஊர் சுற்றுவதற்கு இந்த வண்டியே கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபோது, என் நினைவலைகள் பிரபாகரை எட்டியதோ என்னவோ, அவரின் ஓசையலைகளாய்த் திரும்பியது.
Naan, Minisam  and Prabahar

“ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம்”, என்றார்.இவ்வளவு சொன்னா பத்தாதா எனக்கு. பிரபாகர் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வருடம் சீனியர். இப்போது அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் மேலும் “விஸ்காம்” (visual commander) டிபார்ட்மென்ட்டின் HOD.
அதே நாளில் மதியம் சி.எஸ்.ஐ. செவிலியர் கல்லூரியில் “அமெரிக்காவில் செவிலியர்” என்ற சொற்பொழிவை முடித்த கையோடு, அக்கல்லூரியின் பேராசிரியர் எட்வின் ராஜ்குமாரிடம் (மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் என் சீனியர்) “ அண்ணே இந்த காரைக்குடிப்பகுதியை பார்க்கனும்னு ஆசை”, என்றேன். “ஆல்ஃபி கவலைய விடு, காரைக்குடி என் அக்கா ஊருதான், நானே கூப்பிட்டுட்டுப் போறேன்,” என்றார்.
        காரும் ரெடி, கைடும் ரெடி, இப்போது டிரைவருக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே பிரபா வீடுவந்து சேர்ந்தபோது, பிரபா கேட்டார், “நாளைக்குத்தானே நீ காரைக்குடி போறேன்னு சொன்ன,”
“ஆமாம் ஏன் கார் ஃப்ரியா இல்லையா”? என்றேன் பயந்து கொண்டே.
        “இல்லப்பா டிரைவருக்கு சொல்லிட்டேன். காலையில ஏழுமணிக்கு வந்தாப் போதும்ல,” என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். கொஞ்சம் கண் அசந்தால் வாயில் பாலை ஊற்றும் நண்பர்கள் மத்தியில்   இப்படி ஒருவர்.
        “அசத்திட்டீங்க பிரபா, ரொம்ப தேங்க்ஸ்,” என்றேன்.
 காலையில் நான் ரெடியாகி வெளியே வருவதற்கு முன்னால் மனைவியுடன் வாக்கிங் முடித்து வந்த பிரபா, பக்கத்து காலி கிரவுன்டை காண்பித்தார். அங்கே ஒரு இளம் டிரைவர் காரை தண்ணீரிட்டு பளபளவென்று கழுவிக் கொண்டிருந்தான்.
        விடைபெற்று காரில் அமர்ந்து வழியில் பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த எட்வினை ஏற்றிக்கொண்டு, கார் திருப்பத்தூர் ரோட்டில் விரைந்தது.
        “ஏ சரவணா நீதானா”, என்று டிரைவர் தம்பியைப்பார்த்து சொல்லிவிட்டு, என்னை நோக்கி திரும்பி, “ஆல்ஃபி நமக்குத் தெரிஞ்ச பையன்தான் பசுமலையில் இருக்கான்”, என்றார். ஆஹா சூப்பர் ,ரொம்ப நல்லதாப்போச்சு என்று இன்னும் உற்சாகமானேன்.
 “என்னன்னே இன்னிக்கு ப்ளான், எங்கெல்லாம் போறோம்”, என்றேன்.
        “லேட்டா திரும்பினால் போதும்ல, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பாத்துரலாம்னு,” சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
(“டேய் மாப்ள என்னடா ஒன் ஃபிரண்ட்ஸ் எல்லாமே பேராசிரியர்கள்தானா, பாப்பையான்ற, இப்ப பிரபாகர், எட்வின்ற, காலேஜில அட்மிஷன் வேணும்னா உன்ட்டவந்திரலாம் போல இருக்கே” .
        “மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல. நண்பர் போலப் பழகுகிற பேராசிரியர். மற்ற இருவரும்...”
        “பேராசிரியர் போலப் பழகுகிற நண்பர்களா?
“இல்லடா அவசரப்படாதே இவர்கள் இருவரும் பேராசிரிய நண்பர்கள்.தொடர்ந்து கற்க விரும்பும் ஒரு மாணவனுக்கு பேராசிரியர்கள் தானே நண்பர்களாய் இருக்க முடியும்”.
        “அப்படிப்போடு அருவாள”.
        “என் நண்பர்கள்ல உருப்படாம போனது நீ ஒருத்தன்தாண்டா”.
“வாடி வில்லா தேவதானப்பட்டிக்கு, உன்னை சந்தைப்பேட்டையில சந்திக்கிறேன்”. )
        எட்வின் சரவணனை ரைட்டில திரும்பச்சொல்ல, கார் சாலையைவிட்டு சோலையில் திரும்பியது. இரண்டு பக்கமும் மரங்களடர்ந்த பாதையில் திரும்பி வேட்டங்குடியில் நின்றது.
        “இது தான் “வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்” வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டு  குஞ்சு பொரித்து, பலுகிப் பெருகும் இடம்”,  என்றார் எட்வின்.
ஆஹா, என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டுக்குப் போகும்போது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி நம் நாட்டுக்கு வருவது ஆச்சரிய அதிசயம்தான். இதைத்தான் முரண்பாடு (Irony) என்கிறார்கள் போலும்.

        வேட்டங்குடி என்ற பெயரும் ஆச்சரியப்படுத்தியது. சென்னையின் அருகிலுள்ள வேடந்தாங்கல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு பெயரிலும் உள்ள “வேடன்” என்ற பெயர் வேடர்கள் வரும் சொர்க்கபுரியாக இவை இருந்திருக்க வேண்டும் என்று நினைவுறுத்துகிறது. வெளிநாட்டு வெள்ளைக் கொக்குகள் ருசியாகத்தான் இருந்திருக்கும்.
        ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். சுற்றி சுற்றிப்பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை. பறவைகளைப் பார்க்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் ஏறி உற்று உற்றுப்பார்த்தேன். ம்ஹீம் ஒன்றும் தெரியவில்லை. எங்கே போயின எல்லாப் பறவைகளும் என்ற யோசனையுடன் இறங்கி வந்து “அண்ணே என்னன்னே கொக்கு ஒன்னத்தையும் காணோம்,” என்று கேட்டேன்.
        “அட மக்கு, கொக்கு இந்த சீசனில் வரும் ஆனா வராது,” என்றார். அப்புறம் ஏய்யா என்னை இங்க கூட்டி வந்த என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். நான் கொக்கை நினைச்சு கொக்கு மாக்கா சாரி கோக்கு மாக்கா எதையாவது கேட்டு அவர் நொம்பலப்பட்டு, பாதியில விட்டுட்டுப்போயிட்டா என் கதி என்னாகும்னு நினைச்சு கம்முன்னு இருந்திட்டேன். 
தூரத்தில் தெரிந்த உள்ளூர் கொக்கு .
     தூரத்துல கொக்கு மாதிரி ஒண்ணு தெரிந்தது. படத்தைப் பார்த்து நீங்களே சொல்லுங்க. எங்காவது கொக்கு தெரியுதான்னு.
        “உனக்கு பறவை தானே பார்க்கணும். அங்கே பார்,” என்றார் எட்வின்.
Add caption
        எங்கே என்று ஆவலோடு பார்த்தபோது, ஒரு கோழி தன் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்தது. அதுவும் அழகாகவே இருந்தது. க்ளிக்கிவிட்டு, “அண்ணே போவோம் பசிக்குது” என்றேன்.
        “இந்தா திருப்பத்தூரில சாப்பிட்டுரலாம்,” என்றார்
        “ரொம்ப தேங்ஸ்னே, எனக்காக லீவு போட்டுட்டு வந்திருக்கீங்க,” என்றேன்.
        “லீவா, ஆன் டூட்டிப்பா”
        “என்ன ஆன்டூட்டிப்யா?.
“ஆமா நீ எங்க காலேஜீக்கு வந்திருக்கிற கெஸ்ட் லெக்சரர், உன்னை கவனிக்க வேண்டாமா”
        “அட அப்படி ஒண்ணு இருக்கா, அப்ப நானும் பேராசிரியர் தான்”.

தொடரும்>>>>>>>>>>>>>>>>>>



Friday, January 17, 2014

பனி விழும் இரவு !!!!!!!!!!!!!!!!!!

Winter Weather New York
       இல்லம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்ல. நாங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கோம். எது குளிரா? அது இருக்கத்தான செய்யும். சரி நீங்க ஒடம்பை பாத்துக்கங்க. என்ன இந்தியாவுக்கு திரும்பிரவா?. இல்லம்மா அது முடியாது, இட்ஸ் டூ லேட். சரிம்மா எனக்கு இன்னொரு போன் வருது. நான் அடுத்த வாரம் உங்கள்ட்ட பேசுறேன்.

       ஹலோ, விசுவா, ஆமாமா ஆபிசுக்கு வந்துட்டேன். என்ன பண்றது. வேலைக்கு வந்துதானே ஆகனும். சரி விசு கலிபோர்னியா எப்படி இருக்கு? என்ன 70 டிகிரியா. இங்க மைனஸ் 20. நியூயார்க் வர்றதுக்கு பதிலா பேசாம அங்க வந்திருக்கலாம். விசு ஒரு இந்தியா கால் வருது, அப்புறம் பேசுறேன்.

       ஹலோ

       ஹலோ லோ லோ

       “யார் பேசுறது”?

       “சேகரு இருக்காரா”?

       “எலேய் மகேந்திரா? என்னடா இது அதிசயமா”?

       “இல்லடா அமெரிக்காவுல பனிப்புயல்னு சொல்லி பயமுறுத்தினாய்ங்க  வியாழக்கிழமை பதிவும் வரலையா ,அதான் கூப்பிட்டுப்பார்க்கலாம்னு”.

       “பரவால்லையே பாசக்கார பயடா நீ”

       “இல்ல உயிரோட இருக்கயா, இல்ல பனில வெறச்சு செத்துட்டயான்னு கேட்கலாம்னு”.

       “அடப்பாவி பாசக்காரன்னு, நெனைச்சா நீ ரொம்ப மோசக்காரனா இருக்கியேடா”.

           “அது சரி குடிக்க தண்ணிக்கு என்ன செய்ற”?

       “அது எப்பவும்போல் டயட் வாட்டர்தான்”.

       “அது இல்லடா தண்ணியெல்லாம் ஒறைஞ்சு போச்சுன்னு சொன்னாய்ங்க”.

       “ஹஹஹ அதெல்லாம் இல்லடா, வீட்டுல 24 மணி நேரமும் தண்ணீரும்          வெண்ணீரும் தாராளமாய் வரும்”.

       “சரி என்னதான் நடக்குது அங்கே”?
       புதுவருஷம் பொறந்த அடுத்த நாள் வியாழக்கிழமை ஒரு பனிப்புயல். ராத்திரி ஆரம்பிச்சு விடிய விடிய கொட்டோ கொட்டுனு ஒரு அடிக்கு மேல கொட்டிட்டுப்போயிடுச்சு. வெள்ளிக்கிழமை ஆபிஸ்க்கும் போகல. அத நாக்குத்தள்ள கிளீன் பண்ணா, ஞாயிற்றுக்கிழமை ஒரு உருக்குற மழை (Freezing Rain) அப்புறம் அது சாதாரண மழையாகி, கொஞ்சம் உறைபனியை கரைச்சுவிட்டுறுச்சு.

       சந்தோசமா இருந்தா, திங்கள்கிழமை, மைனஸில் போவுதுன்னு சொன்னாய்ங்க. விடியக்கால செல்போன் கோழி கூப்புட எழுந்தா, என் மனைவி ரொம்பக்குளிருது கொஞ்சம் பஸ் ஸ்டாப்புல விடுன்னு சொன்னா. வெளியே வந்தா, ஒரு குளிர்காத்து அடிச்சுது பாரு, என் ஸ்டார்ம்டோர் வேகமாக ஒரு அடி அடிச்சுது. இதுக்குப் பேர்தான் நெத்தியடி போல. வலதுபுற நெத்தியில நெல்லிக்காய் முளைச்சுருச்சு. மனைவிய விடலேன்ன எலுமிச்சம்பழம்

முளைக்கும் அதனால இது தேவலைன்னு    

       அப்புறம் விட்டுட்டு வந்து, நான் ஆபிசு வந்து சேர்றதுக்குள்ள கட்டை வெறச்சுப்போச்சு. பேசாம இந்தியா போயிரலாம்னு ஆயிப்போச்சுரா. வயித்துப்பொழப்புக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

       இதுக்கிடையில நம்ம தோஸ்த் ஜூட் (Jude)பாஸ்டனிலிருந்து போன் பண்ணான். ஒரு அடிக்கு மேல் ஸ்நோ வந்துருச்சுன்னு சொன்னேன். அடப்போடா இவனே, இங்க பாஸ்டனில் 5 அடிக்கு ஸ்நோ என்றான். ஆறடி ஜூடே அசந்துட்டானே, நம்ம கொஞ்சம் பரவாயில்லைனு நினைச்சேன்.

       நியூயார்க் சென்ட்ரல் பார்க் ரெக்கார்ட் படி ஜனவரி 7, 2014 குளிர்காற்றினால் மைனஸ் 20 டிகிரி காண்பிக்க, இதுபோல் கடைசிமுறை 1896-ல் தான் வந்ததாம். இது ஒரு புதிய ரெக்கார்டாம். இந்த ரெக்கார்டு பிரேக்ல, எங்க தல பிரேக் ஆனதுதான் மிச்சம்.

       என்னாங்கடா ஏன்னு கேட்டா, "போலார் வெர்டெக்ஸ் "னு சொல்றாய்ங்க. (Polar Vertex). நம்ம ரமணி பாஷையில சொல்லனும்னா  “வட துருவத்தில் மையம் கொண்டிருந்த குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் இரண்டாக பிளந்ததில், அப்படியே அது பனிப்புயலாக மாறி, பரவி வட அமெரிக்காவை 100 கிமீ வேகத்தில் தாக்கியது” . அதனால் நடந்த பெரும் பிரச்சனை இது.

       இதுல "ஆர்க்டிக் ஏர் மாஸ்" (Arctic Air Mass) ஒண்ணு அடுத்து வருதாம். ஐயையோ தாங்காதம்மா. இந்தியாவுக்கு டிக்கட்டைப்போடு.

       வெளியே போகக்கூடாதுன்னு, மூச்சைப்பிடிச்சு உட்கார்ந்திருந்தேன். ஆனா பேங்க்ல ஒரு கையெழுத்துப் போடனும்னு சொன்னதால், உயிரைக்கையில் பிடிச்சுட்டு வெளியே போனா, அங்க இந்த வெள்ளைக்கார நாதாரிங்க ஐஸ்கிரீம் சப்பிக்கிட்டு, வெளியே திரியறாய்ங்க, அடங்கொக்க மக்கா ...

       ஹலோ ஹலோ, அப்பவே வச்சுட்டான் போலருக்கு.

Thursday, January 16, 2014

வெள்ளைமாளிகையில் பொங்கல் விழா !!!!!!!!!!!!!!!!!!!!!!

காணும் பொங்கல் சிறப்பு பதிவு
 
       “அத்தான் இங்க வந்து பாருங்க இந்த அதிசயத்தை”
       “என்ன இது காலங்காத்தால, குளிர்தான் அவ்வளவா இல்லையே, நீயே போய்க்கக் கூடாதா?”
       “அதில்லை இங்க வாங்களேன்”
       “என்னவோ ஏதோ என்று அடித்துப்புரண்டு எழுந்து வந்து பார்த்தால், அதிசயம்தான்.
           CNN –ல் லைவ் நிகழ்ச்சி. முகப்பில் “பொங்கல் திருநாள் கொண்டாட்டம்” என்று தமிழில் எழுதப்பட்ட வெள்ளை மாளிகை முகப்பு, காலைக்கதிரவன் ஒளியில் இன்னும் வெள்ளையாக மின்னியது. (பொங்கலுக்கு வெள்ளையடித்திருப்பார்களோ என்னவோ !!!.) இதோ பார்ரா,  நம்முடைய விஜய் டிவி புகழ் வாயாDD நின்று வரவேற்க, அட நம்ம AR ரகுமான் உள்ளே நுழைகிறார். “வெள்ளை மாளிகையில் முதல் முதலாக  பொங்கல் விழா நடப்பதைக் குறித்து உங்கள் கருத்தென்ன”, என்ற கேள்விக்கு, நம்பாள் புன்சிரிப்புடன் “எல்லாப்புகழும் இறைவனுக்கே,” என்று சொல்லி உள்ளே நுழைந்தார். (இன்னும் ஒருவாட்டி இதைச்சொன்னா, நடக்குறதே வேற).
     சிறப்பு அழைப்பாளராக, கொலம்பியாவுக்கு ஒரு கெஸ்ட் லெக்சருக்கு வந்த அப்துல் கலாம், ஒரு மந்தகாச சிரிப்புடன் உள்ளே நுழைய, DD தான் பேச வேண்டியதை மறந்து வணக்கம் சொல்ல, உள்ளே நுழைந்தார். (என்ன முடி ரொம்ப தொங்குது? , அதுவா வெட்டி மூணு வருஷமாச்சாம்)

       “தமிழினத் தலைவர் வாழ்க, டாக்டர் கலைஞர் வாழ்க”, என்று திடீரென்று சத்தம் கேட்க, அல்லக்கைகள் இங்கயும் வந்துட்டாய்ங்களா  என்று நான் நினைத்த வேளையில் உருண்டு வந்தது ஒரு வீல் வீலென்று சத்தமிட்ட வீல் சேர். (இத மாத்துங்கப்பா சீக்கிரம்,ரொம்ப பழசாயிருச்சு).  கருத்துக்கேட்காமலேயே,பராக் ஒபாமா அவர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே பிறந்த மூத்த தமிழ்க்குடியின்,என்று ஆரம்பிக்க “ஐயா போதும் தயவு செய்து  உள்ளே போங்க”, என்று தள்ளி விட்டனர். வீல் சேரை தள்ளிக்கொண்டே உள்ளே செல்ல முயன்ற TR பாலுவை செக்யூரிட்டி ஆட்கள் வெளியே தள்ளிக்கொண்டு சென்றனர். என்ன ஸ்டாலினைக்கானோம்? அவர் இங்க  வந்த சமயத்தில்,  அழகிரி தலைவர் பதவியை ஆட்டயப்போட்டிரக்கூடாதுன்னு அங்கேயே தங்கிட்டாராம்.
       பாமா தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் ஜெயலலிதாவை அழைத்ததாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டன் அல்லது கொட நாடில் விழா வைத்தால் மட்டுமே வரமுடியும் என்றும் மற்றபடி காணொளிக் காட்சி மூலம் கலந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டதாகவும் கேள்வி. அதோடு கருணாநிதியை கூப்பிடக்கூடாதுன்னும் கண்டிஷன் போட்டாராம். 

“அட நம்ம பன்னீர்செல்வத்தை   அனுப்பியிருக்கலாம்ல”.
“அதை ஏன்  கேட்கற? ஹிலாரியின் தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று  பன்னீர்செல்வத்தையாவது அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்க வந்த பன்னீர், ஜெயலலிதாவுக்கு குனிந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கையில் அல்லையில்   பிடித்துக்கொண்டதால் அப்போல்லோவில் அட்மிட் ஆயிருக்கிறாராம்”.

       “அமெரிக்காவில் மதுக்கடைகளை மூடினால் மட்டுமே நான் கலந்து கொள்வேன்”, என ராமதாஸ் அறிக்கை விட, “24 மணிநேரமும் மதுக்கடைகள் திறந்திருந்தால்தான் நான் வருவேனென்று”, விஜயகாந்த் மெசேஜ் அனுப்ப  , “நாங்கதான் கூப்பிடவேயில்லயே நீங்க ஏன் கூவுறீங்க”, என்று சென்னை, அமெரிக்க கான்சுலேட்டில் இருந்து பதிலறிக்கை வந்ததாம்.
Add caption
       அழைப்பு அனுப்பாததை கண்டித்து நம்ம வைகோ “நீதிகேட்டு நெடும்பயணம்” அறிவிக்க, “வாங்குன கேன்வாஸ் எல்லாம் நடந்து நடந்து கிழிஞ்சு போச்சு. இப்படியே நடந்துட்டிருந்தா கேன்வாஸ் வாங்க “நிதிகேட்டு நெடும்பயணம்” போகவேண்டியிருக்கும்”, என்று கட்சிப் பொருளாளர் காதைக்கடித்ததும் அமைதியாகி டென்னிஸ் பார்க்கப்போய்ட்டாராம்
       அழைப்பு வராத நம்ம சீயான் சீமான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தும், இலங்கைத்தமிழர்களையும் அழைக்கவேண்டும் என்றும் சொல்லி சென்னையில் அமெரிக்க கான்சுலேட் முன்னால் தொடர் முழக்கப் போராட்டம் ஒன்றை அறிவித்தார்.
       பொங்கல் திருவிழாவுக்கு அழைப்பு அனுப்புவதில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றாததை கண்டித்து வீறு கொண்ட நம்ம விடுதலைச்சிறுத்தை மாவளவன் உண்ணாவிரதம் அறிவித்தார். (சீறிய சிறுத்தை நம்ம கருணாநிதியின் தடவலில் சிறு பூனையானதால் தன் உருவை இழந்ததோடு, தன் திருவையும் இழந்ததால் இனிமேல் அவர் மாவளவன் என்று அழைக்கப்படுவார்.)
        முள்ளி வாய்க்காலில் இரவும் பகலும் வாட்ச்மேன் வேலை பார்ப்பதால், நான் போகமுடியவில்லை என்று நெடுமாறன் புலம்பியதாக கேள்வி. 
       உள்ளே நின்றவர்கள் எல்லாம் மறைக்க, ஒன்றும் தெரியாமல் எட்டி எட்டிப்பார்த்து தவித்த கருணாநிதி,   நிறை குறை மறை என்று கவிதை முயற்சியில் கரகரக் குரலில் கத்த “தொண்டைதான் சரியில்ல இந்தாளுக்கு, ஆனா  மண்டை அப்படியேதான் இருக்கு”, என்று சொன்னபடி நம்ம ஏடாகூட   இளங்கோவன் அவரை மேலும் மறைத்து நின்றார்.
          

       அப்போது, நம்ம முதற்பெண் (அதாங்க First Lady) மிச்செல் தளையத்தளைய காஞ்சிபுரம் சேலை சரசரக்க வந்தார். நெற்றியில் வைத்திருந்த   குங்குமம் அவ்வளவாகத் தெரியவில்லை(?). நடுஹாலில் பொங்கல் கொதித்துக் கொண்டிருக்க, எல்லாத் தூண்களிலும் ஹவாயிலிருந்து வந்திருந்த கரும்புகளும், போர்ட்டரிக்கோவிலிருந்து வந்திருந்த மாவிலைகளும் கட்டப்பட்டிருந்தன. அவரோடு அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் பாவாடை தாவணியில் புன்னகைத்தபடி வந்தார்கள்.

       சட்டென எல்லோரும் அப்போது அமைதியாக, ஒபாமா வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி அணிந்து பரபரவென்று வந்தார். நம் பாரம்பரிய உடை அவருக்கு பாந்தமாகவே இருக்க, கருப்பு நெற்றியில் திருநீறும் சந்தனமும்  பளீரென்று தெரிந்தன.
உடனே சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த அனுராதா ஸ்ரீராம் " கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்று பாடி அசத்தினார்.
       அட, நம் மிச்செல், ஒபாமா காலில் விழ   , எங்கே என்று தேடி, US மரைன் கொண்டு வந்த பாதுகாக்கப்பட்ட குங்குமத்தை எடுத்து மிச்சலின் நேர் வகிடில் வைத்து உச்சி முகர்ந்து முகம் சுளித்தார். (எண்ணெய் ஸ்நானம் எடுத்து எட்டு மாசம் ஆகிவிட்டதாம்.)
      கலைஞர் தமிழ்மொழியை அமெரிக்காவின் ஆட்சி மொழியாக ஆக்கச்சொல்லி கத்திக்கொண்டிருந்ததை பார்த்து US மரைன் பக்கத்தில் வந்ததும் அமைதியானார்.
       அதற்குள் பொங்கல் பானையிலிருந்து வழிந்த சுடுநீர், ஒபாமாவின் காலைச் சுட்டுவிட, அவர் ஆ என்று சொல்லி காலை உதற, அவரின் பெர்சனல் கார்டுகள் சட்டென்று அவரை வளைத்து நின்றனர். பிறகு அவர் தீயென சுட்டது சுடு நீர்தான் தீவிரவாதியல்ல என்று தெரிந்து வழி விட்டனர்  .
       “ஆஹா ஆஹா என்னே ஒபாமாவின் வீரம், தமிழர் சார்பாக அவருக்கு “கரிகால் பெருவளத்தான்” என்ற வீரவிருதை வழங்குகிறேன்”  என்று கரகர கருணாநிதி சொல்ல. அதை Black Leg என்று ஒருவர் மொழி பெயர்க்க, டென்ஷன் ஆன ஒபாமா, அவரை வெளியே தள்ளச்சொன்னார்.
       அதற்குள் பொங்கல் பொங்கிவழிய, பொங்கலோ பொங்கல் என்று யாரோ சத்தமிட “பெங்காஜி” என்று காதில் விழுந்த ஹிலாரி முகம் சுளித்தார்.
       ஒபாமா பேசுவதற்கு முன்னால் வர, உலகத் தொலைக்காட்சி நிருபர்கள் உஷாராகினர். “வணக்கம் உங்கள் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.இனிமேல் நம் அமெரிக்கப்பள்ளிகளில் வழங்கும் உணவில் சர்க்கரைப் பொங்கலும் சேர்க்கப்படும். இந்த விழா முடிந்து, காபிடல் ஹாலில் நம்ம நியூயார்க் பரதேசி தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்துக்கு>>>>>>>>>>>>>>>>>>

       யோவ் என்ன ஆபிசுக்குப் போலயா மணி ஏழரை ஆகுது, என்று எழுப்ப முழித்துக்கொண்டே எழுந்தேன். அத்தனையும் கனவா என்று ஆயாசம் வந்தது. காணும் பொங்கல் அல்லவா இன்று. காணும் பொங்கல் எனக்கு “கனவு காணும் பொங்கலாய்” அமைந்ததை நினைத்து சிரிப்பதா அழுவதா? நீங்களே சொல்லுங்க.

நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்........!!!!!!!