Thursday, February 11, 2016

அமெரிக்காவில் அடையாறு ஆனந்தபவன் - பகுதி-2

இதன் முதல் பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும் 
 http://paradesiatnewyork.blogspot.com/2016/02/1.html

Adyar Ananda Bhavan - New York, NY, United States


"என்னது எனக்குத் தெரியாமல் நியூயார்க்கில் அடையாறு ஆனந்த பவனா? புதுசா வந்திருக்கோ
“இல்லையே அது வந்து மூணு மாசமாச்சு.
"அடையாறு ஆனந்த பவனா?"
“ஆமா சார்”.
“இல்லை இதே போலா?”
“இல்லீங்க அடையாறு ஆனந்த பவனேதான்”.
“எங்க இருக்கு?”
“நியூயார்க் டவுன் டவுனில இருக்குன்னு சொன்னாங்க”
“சரி சரி கூகிள்ள பிடிக்கலாம்
          பக்கத்தில்,கிட்டத்தட்ட 11/2 மீல்சை சாப்பிட்டுவிட்டும் இன்னும் வேணும் போல் கண்ணில் கெஞ்சர்லா காட்டி உட்கார்ந்திருந்த எஞ்சர்லாவை "வா வா நேரமாச்சு"ன்னு சொல்லி, கூப்பிட்டுக்கொண்டு வெளியே  வந்தேன். அவனை நியூ ஜெர்சி கெஸ்ட் ஹவுசில்  தள்ளிவிட்டு நியூயார்க் சாலையில் நுழைந்தேன்.
கன்ஸ்ட்ரக்சன் நடந்த சாலை தடதடக்க, என் வயிறும், _______ ம் கடகடக்க, "ஐயையோ ஆந்திரா, வருது வருது வாந்திரான்னு" நினைத்துக் கொண்டே டிராஃபிக்கில் மாட்டி வீட்டுக்குள் வந்து சேர்வதற்கு 2 மணி நேரம் ஆனது. அந்த 2 மணிநேரம் நான் பட்ட அவஸ்தை எனக்குத்தான் தெரியும். மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்ததில் படபடப்பாய் இருந்தது. நல்லவேளை கார் நாஸ்தியாகலை, கூடவும் யாருமில்லை.
காரை வீட்டின் முன்னால் ஏடா கூடாமாய் நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தேன். 2 மணி நேரம் பொறுத்துக் கொண்ட எனக்கு அந்த ரெண்டு நிமிடம் ம்ஹீம் பொறுக்கவே முடியவில்லை. பேக்கை எறிந்துவிட்டு, ஷூவைக் கழட்டாமலே பாத்ரூமூக்குள் நுழைந்தால், மீண்டும் இடி மின்னலுடன்!!!!!!!!! அதையேன் கேட்கிறீங்க போங்க. 
அப்படியே சோஃபாவில் ஒருக்களித்து உட்கார்ந்தேன். ரணமாய்க் காந்தியது.
இரவில் வயிற்றைக் காயப்போட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றேன். சுவையான கனவு வந்தது.
அடையாறு ஆனந்த பவனில் அன்லிமிட்டட் மீல்சை ஆர்டர் பண்ணிவிட்டு சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்பட்டது போல கனவு.  
அடுத்த நாள், காலையில் இருந்து, “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே", என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். சே ஒரு சாப்பாட்டுக் கடைக்கு போவதற்கா இவ்வளவு ஆனந்தம் என்று கேட்ட மனதை பின்தள்ளி, வெறும் சாப்பாட்டுக்கடை இல்லை, இது அடையாறு ஆனந்தபவன் என்று நானே என் மனசுக்கு சொல்லிக் கொண்டேன். ஏற்கனவே ஏமாந்த ஆத்திரம்   வேறு.
கிளம்பி ரெடியாகி, ஆபீசுக்குப் போனதும் கூகிள் பண்ணினேன். அட ஆமா, அடையாறு ஆனந்த பவனேதான். நியூயார்க் மேன்ஹாட்டனில், டவுன் டவுனில் (Down town) ஒன்னாவது மற்றும் 2-ஆவது அவென்யூ பக்கத்தில் இருந்தது.
மிட்டவுனில் இருந்த 'லிட்டில் இந்தியா' என்று அழைக்கப்படும் லெக்சிங்டன் அவென்யூவில், சரவணபவன், அஞ்சப்பர், சென்னை கார்டன், பொங்கல், மெட்ராஸ் மஹால், தோசை என்று பல தமிழ் ரெஸ்டாரண்ட்டுகளுக்குப் போயிருக்கிறேன். அடையாறு ஆனந்த பவன் இந்தப் பகுதியில் இல்லாததால் மிஸ் ஆகியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  
முந்தைய தினம்  ஆஃபிஸ் வராததால், கொட்டிக்கிடந்த  5000 ஈமெயில்களை சார்ட் அவுட் செய்து முடித்து நிமிர்ந்தால் மணி 1 ஆகியது.
“சாப்பிட வரலியா”, என்று கேட்ட  உடன் ஊழியர்களிடம் ,
"இல்லை வெளியே செல்கிறேன்", என்று சொல்லிவிட்டு டிரைன் ரூட்டை பார்த்துவிட்டுக் கிளம்பினேன்.
போய்ச் சேருவதற்கு 40 நிமிடங்கள் பிடித்தது.
கிரீக், இத்தாலி, மொராக்கோ போன்ற சின்னஞ்சிறிய ரெஸ்டாரண்ட்டுகளின்  வரிசையில், அட ஆமா "அடையாறு ஆனந்தபவன்" இருந்தது.  
கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். கூட்டம் அலைமோதும் என்று நினைத்து நுழைந்த எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. சிறிய ரெஸ்டாரண்ட் என்றாலும் வரிசை வரிசையாக போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகள், தமிழக படங்கள், உள்ளே நுழைந்தால் கல்லாவின் பின்னால் ஒரு மாபெரும் கோவிலின் கோபுரத்தின் படம் என அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Anandabhavan, NYC
ஆனால் உள்ளே மேஜைகளில் மட்டுமல்ல, கல்லாவிலும் ஆள் ஒருவர் கூட இல்லை. மணியைப் பார்த்தேன் மதியம் 1.30. இது நல்ல லஞ்ச் டைம் ஆச்சே, என்ன ஒருவரையும் காணவில்லை என்று நினைத்தேன். ருசிக்கு அலையும் எனக்கே தெரியவில்லை, யாருக்கும் தெரியவில்லை போலிருக்குது. அட்வர்டைஸ்மென்ட் தேவை, அதிலும் இந்த இடம் எங்கோ ஒரு முடுக்கில் இருக்கிறது என்று நானே காரணங்களைக் கற்பித்துக் கொண்டு இருந்தபோது, உள்ள சமையலறையில் தமிழ்ப் பேச்சுக் கேட்டது. ஆஹா அற்புதம் என்று எண்ணிக் கொண்டே, “யாருங்க உள்ளே ?, வணக்கம்”, என்றேன். உள்ளே தமிழில் பேசிக் கொண்டிருந்த தமிழச்சி ஒருவள் வந்து 'ஹாய் ஹலோ வெல்கம்' என்று TV -யில் சொல்வதுபோல் சொன்னாள். நான் 'வணக்கம்' என்று மறுபடியும் சொன்னேன். அதனை நிராகரித்துவிட்டு, "யூ கேன் சிட் வேரெவர் யு வான்ட்"என்று கதைத்தாள்.
Adyar Ananda Bhavan - New York, NY, United States. Decor

தமிழ் உணவகத்தில், தமிழ்ப்பெண், தமிழ்ப் பையனுடன்(?) தமிழில் பேசினால் என்ன குற்றம் என நினைத்துக் கோபம் வந்தது. உட்கார்ந்து மெனுவை மேய்ந்தேன். பின்னர் உடனே தாலி மீல்ஸ் என்று சொன்னேன். விலை 14:99. சரவணபவனை விட அதிக விலை. பரவாயில்லை போனால் போகட்டும், அடையாறு ஆனந்த பவனில் சாப்பிட்டு எத்தனை வருடங்களாகிறது.
Adyar Ananda Bhavan - New York, NY, United States

சிறிது நேரத்தில் சாப்பாடு வந்தது. சரவணபவன் லஞ்ச் ஸ்பெஷல் தாலி மீல்சை விட குறைவான பதார்த்தங்களே  இருந்தன. பார்த்தால் சாம்பாரைக் காணவில்லை. பதிலாக இரண்டு ரசம் இருந்தன. திரும்பவும் உள்ளே போய்விட்டு அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு சாம்பாரைக் காணவில்லை என்றேன். இதுதான் சாம்பார் என்றூ ரசம் நம்பர் 2 -ஐக் காண்பித்தாள். ஸ்பூனை விட்டுத் தேடிப்பார்த்தால், அடியில் ஒரே ஒரு வெங்காயம் இருந்தது. நான் விடாப்படியாக தமிழில் பேச, அவள் விடாப்படியாக ஆங்கிலத்திலேயே பேசினாள்.
Thali Meals

அப்புறம் சாப்பிட்டேன். பரவாயில்லை, ஆனால் ஆனந்தபவன் மாதிரி இல்லை. அவளை மறுபடியும் கூப்பிட்டுக் கேட்டேன். இது சென்னை அடையாறு ஆனந்தபவனின் கிளைதானே என்றேன். "இல்லை இது நியூயார்க் அடையாறு ஆனந்தபவன், சென்னைக் கடைக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை", என்றாள்.
Menu card

“என்ன சொல்ல   ராசா , சாயங்காலம் ஆச்சே”, என்று நொந்துகொண்டே வந்தவுடன் , எட்றா ப்ளைட்டை விடுறா இந்தியாவுக்கு என்று நினைத்துக்கொண்டே  என் ட்ராவல் ஏஜண்டைக்    கூப்பிட்டு  , இந்தியாவுக்கு டிக்கெட் எவ்வளவு என்றேன் ?

- முற்றும்.
பின்குறிப்பு : நான் இந்தியா வந்ததுக்கு இதுவும் ஒரு காரணங்கோ


Monday, February 8, 2016

அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா ?

எழுபதுகளில் இளையராஜா :பாடல் எண்: 28.
சின்னபுறா ஒன்று 

Anbe Sangeetha (Original Motion Picture Soundtrack) - EP, Ilaiyaraaja

1979ல் வெளிவந்த 'அன்பே சங்கீதா' என்ற படத்திற்காக இளையராஜா அவர்கள் இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல் இது. பாடலைக்கேளுங்கள்.


பாடலின் சூழல்: சோகமும் வேகமும் இணைந்து வரும் இப்பாடல் எதையோ நோக்கிப் பயணம் செய்யும் புகை வண்டி போல் ஓடி முடிகிறது. மறந்துபோன காதலியை நினைத்து உருகிப்பாடும் பாடல் இது.

இசையமைப்பு:
பாடலின் ஆரம்ப இசையாக பியானோ இசை ஒலிக்க அதனை ஒட்டி பெண்குரலின் ஹம்மிங் வருகிறது. அதன் பின்னர் ரிதம் கிட்டார், பேஸ் கிட்டார், டிரம்ஸ் இணைய வயலின் குழு இசைத்து முடிய, ஆண்குரலில், "சின்னப்புறா ஒன்று", என்று பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் முழுதும் ஆண் குரல் என்றாலும் BGM-களில் பெண்குரலில் ஹம்மிங் வருகிறது. பாடல் முழுதும் இளையராஜாவின் சிக்னேச்சர் பீட் (டிரிப்பிள் காங்கோ) ஒலிக்கிறது.
முதலாவது BGM வயலினில் ஆரம்பித்து, லீட் கிடார் இணைந்து ஒலிக்க, பின்னர் பெண் ஹம்மிங் வந்து வயலின் வந்து முடித்து வைக்க, முதல் சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது BGM பெண் ஹம்மிங்குடன் ஆரம்பித்து பின்னர் சோலோ வயலின் சோகத்தைப் பிழிய, பின்னர் கோரஸ் வயலின் வந்து முடிய 2-ஆவது பல்லவி ஆரம்பிக்கிறது.
இளையராஜாவுக்கு கைவந்த கலையான இந்த இசையமைப்பு அவருக்கு மிகவும் பிடித்த மெட்டாக இருக்க வேண்டும் இதே மெட்டை ஒட்டி பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். அதே பீட், அதே சாயல், அதே உருக்கம் அந்தப் பாடல்களிலும் ஒலிப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல்களில் சில, "தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி", “சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்”. எங்களுடைய அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில், இப்படிப்பட்ட பாடல்களை இணைத்து ஒரே பாடலாகப் பாடியிருக்கிறோம். ஏனென்றால் ஒரு பாடலின் பல்லவியை பாடி முடித்து, அடுத்த பாடலின் சரணத்தைப் பாடினாலும் பொருந்தும்.
பாடலின் வரிகள்:
Vaali
பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி. பல்லவி, சரணம் என்று அழகான, அருமையான பொருத்தமான வரிகளை எழுதியிருக்கிறார். இந்த வரி அந்த வரி என்றில்லாமல் எல்லா வரிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார். கேட்டுப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
சின்னப்புறா ஒன்று எண்ணக்கனாவினால் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது - என்று ஆரம்பித்திலேயே அசத்துகின்றன கவிதை வரிகள். குறிப்பாக 2-ஆவது பல்லவியில் "எந்தன் ராகங்கள் தூங்காது, அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா" என்ற வரிகள் சூழலுக்கு அப்படியே பொருந்தியனவாய் வருகின்றன. எந்தச் சூழலுக்கும் எந்தக் காலத்துக்கும் பொருத்தமாய் எழுதிய வாலி இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவர் பாடல்கள் மூலமாக நம் நெஞ்சத்தில் என்றும் வாழ்வார்.
பாடலின் குரல்:

பாடலைப் பாடியவர் S.P. பாலசுப்பிரமணியம் ஹம்மிங் கொடுத்தவர் SP. ஷைலஜா. SPB -யின் இனிமையான குரலும், சுத்தமான உச்சரிப்பும், பாவமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. குரல் நடிப்பில் SPB ஒரு உன்னதக் கலைஞர் என்பதில் எந்த சந்தேகமில்லை. பாடல் முழுவதிலும் வரும் ஹம்மிங்குரலில் SP ஷைலஜா ஒரு அமானுஷ்யத்தைக் கொண்டு வருகிறார். அவை பாடலுக்கு மெருகூட்டுகின்றன.
இளையராஜாவின் அற்புத மெலடிக்கும், இசை அமைப்பு மற்றும் இசைக்கருவிகள் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த உதாரணம் இந்தப்பாடல்.

இன்னும் வரும் >>>>>>>>>>>>>>>>>>>

Thursday, February 4, 2016

அமெரிக்காவில்அடையாறு ஆனந்தபவன் - பகுதி-1

Anandha Bhavan , Jersey City.


அக்டோபர் மாதம் துவங்கியதும் என்னுடைய கம்பெனியின் H1B விசா  வாங்கிய மென்பொருள் பொறியாளர்கள் ஒவ்வொருவராக வரத்துவங்க, குயின்சில் உள்ள எங்களுடைய கெஸ்ட் ஹவுஸ் நிரம்பி வழிந்து, பின்னர் ஜெர்சி சிட்டியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சில பேரை போட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.
அக்டோபர் முதல் வாரத்தில் ஹைதராபாத்திலிருந்து வந்த கிருஷ்ணா எஞ்சர்லாவை JFK ஏர்ப்போர்ட்டில் பிக்கப் செய்து, வெரஜோனா பாலம் தாண்டி ஜெர்சி சிட்டிக்குப் சென்றேன். ‘ஜெர்சி சிட்டி’ என்பது  பக்கத்து மாநிலமான நியூஜெர்சியில் உள்ள ஒரு நகரம். ஆனால் மேன்ஹாட்டனிலிருந்து மிகவும் பக்கம். மேன்ஹாட்டனையும் இந்த நகரத்தையும் ஹட்சன் நதிதான் பிரிக்கிறது. சொல்லப்போனால் மேன்ஹாட்டனில் உள்ள என் அலுவலகத்திற்கு என் வீடு இருக்கும் குயின்ஸ் பகுதியிலிருந்து வருவதைவிட ஜெர்சி சிட்டியிலிருந்து சீக்கிரம் வந்துவிடலாம்.
ஜெர்சி சிட்டி இந்திய நகரம் ஆகி வெகு நாளாகிவிட்டது. எங்கெங்கு காண்கினும் இந்தியராய் இருந்தனர். குறிப்பாக தென்னிந்தியர். இங்கு நுவார்க் (Newark  Avenue)  அவென்யூ என்ற ஒரு தெரு உண்டு. முற்றிலுமாக நமது இந்திய உணவகங்கள் நிரம்பிய பகுதி. பவார்ச்சி, பிரியாணி பாய்ண்ட் போன்ற பல உணவகங்கள் இருந்த வரிசையில் அட, ஒரு தமிழ் உணவகம், 'ஆனந்த பவன்' என்று அழகிய தமிழில் எழுதப்பட்டிருந்தது.  ஆஹா “அடையாறு ஆனந்த பவன்” இங்கும் வந்துவிட்டதா என நினைத்து ஆச்சரியப் பட்டேன்.
என்னுடைய திருவான்மியூர் நாட்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை முறை அடையாறு ஆனந்த பவனில் சாப்பிட்டுவிட்டு, அடையாறு பேக்கரியில் பஃப்சும் கேக்கும் வாங்கியிருக்கிறோம். அதன் மண மணக்கும் சாம்பாரும், காரக் குழம்பு, கூட்டு பொறியல் வகையறாக்கள் மட்டுமின்றி அதன் மாங்காய் ஊறுகாய்களையும் ஒரு கை பார்த்தது ஞாபகம் வந்து எச்சில் ஊற, காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். ஆந்திரா ரெஸ்டாரண்ட் எதுவும் இருக்கிறதா என்று கேட்ட கிருஷ்ணாவை அலட்சியம் செய்துவிட்டு ஆனந்த பவனில் ஆனந்தமாக நுழைந்தேன்
உள்ளே நுழைந்து வணக்கம் என்றேன். "ஹாய் சார் குட்மார்னிங்”, என்ற பதில் வந்தது. ஏன் தமிழ் ரெஸ்டாரண்டில் தமிழ் பேசக்கூடாதா? என்று நினைத்த போது, காற்றில் MSV எனக்கொரு காதலி இருக்கிறாள்" என உருகிப் பாடியது காதில் விழ, ஆஹா இது போதும் இது போதுமென உட்கார்ந்தேன். மெனு தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தது.

Add caption
என்னோட வந்த கிருஷ்ணா வேண்டா வெறுப்பாக மெனுவை மேய, நான் மெனுவைப் பார்க்காமலே ஒரு மீல்ஸ் என்றேன்.  ஷ்யூர்  சார் என்று சொல்லி அவனைப் பார்க்க அவனும்  தாலி மீல்ஸ் என்றான். 13.99 டாலர்கள் விலை. பரவாயில்லை போகட்டும் என்று உட்கார்ந்திருந்தேன்.
ஆவிபறக்க தாலி மீல்ஸ் வந்து சேர்ந்தது. வழக்கம்போல ஒரு சப்பாத்தி, சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், தயிர்ப்பச்சடி, ஊறுகாய், கூட்டு, பொரியல், கேசரி தவிர கெட்டியாக மஞ்சளாய் ஒன்று இருந்தது. அது என்னவென்று சிறிது வாயில் வைத்துப் பார்த்தால் பருப்பு. பப்புக்கறி என்பது ஆந்திர உணவாயிற்றே என்று நினைத்த வண்ணம், சிறிது ஊற்றி சாப்பிட்டேன். நல்ல நெய்யில் செய்யப்பட்ட பப்புக்கறி.
சுவையாக ஆனால் காரசாரமாக இருந்தது. ஆகா தமிழ் உணவகத்தில் ஆந்திர பப்புக்கறியா என்று முடித்துவிட்டு குழம்பில் இரண்டில் ஒன்றை எடுத்தேன். எது சாம்பார் என்று சரியாகத் தெரியவில்லை. இது சாம்பாராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதனை ஊற்றிச் சாப்பிட்டேன். காரம் தொண்டையை எரித்து கண்ணை மறைத்து கண்ணில் நீர் திரண்டது. இது சாம்பார் இல்லை காரக்குழம்பு என்று முடிவு செய்து, மற்றொரு குழம்பை எடுத்து ஊற்றி சாப்பிட்டேன். காரம் இப்போது தொண்டையைத் தாண்டி மண்டை வரை பாய்ந்தது."உன் கண்ணில் நீர் வழிந்தால் உன் மூக்கில் திரவம் கொட்டுமடா" என்றபடி கண்ணிலும் மூக்கிலும் நீர்கொட்ட ஆரம்பித்தது. ஐயையோ இதுதான் காரக் குழம்பு என்று நினைத்துக் கொண்டே அழுதேன். அதாங்க கண்ணில் நீர் கொட்டியதைச் சொன்னேன்.
ஆந்திர ரெஸ்டாரண்ட் போகச் சொன்ன கிருஷ்ணா எந்தப் பாதிப்பும் இல்லாமல் சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதோடு வெய்ட்டரைக் கூப்பிட்டு தெலுங்கில் மாட்லாட ஆரம்பித்தான். ஓ தமிழ் ரெஸ்டாரண்ட்டில் தெலுங்குப் பையன் போலருக்கு என்று நினைத்து விட்டுவிட்டேன்.
கூட்டு பொரியல் என்று எல்லாம் அதீத காரமாய் இருக்க, மறந்து போய் மாங்காய் ஊறுகாயை எடுத்து வாயில் போட்டு சில விநாடிகளில், தலை சுழல, உலகமே சுழல தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு ரெஸ்ட் ரூமை நோக்கி விரைவாக நடந்தேன். சரி சரி சரி, ஓடினேன்.
ஒரு ஐந்து நிமிடம் இடிமின்னல் முழங்கிவிட்டு வெளியே வந்து இது என்ன ஆனந்தபவனா அபாய பவனா என்று நினைத்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் என் தட்டும் கிருஷ்ணா தட்டும் காலியாக இருந்தது. "வேஸ்ட் பண்ண வேண்டாமென்று நினைத்து நானே சாப்பிட்டுவிட்டேன் ஆல்ஃபி" என்றான். "அடப்பாவி தீக்கங்கைக் கொடுத்தாக் கூட தித்திக்குது என்று சொல்லி தீவிரமாய்ச் சாப்பிடுவான் போல "என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன்.
அப்புறம் அந்த வெயிட்டரைக் கூப்பிட்டு, "செஃப் ஆந்திராவா"? என்று கேட்டேன், "ஆமாம் எப்படிக்கண்டு பிடித்தீர்கள் ?", என்றேன். வலியுடன் சிரித்துவிட்டு இது அடையாறு ஆனந்த பவனா இது ஆந்திரா ஆனந்த பவனா ?" என்று கேட்டேன். அவன் இன்னொருவரை கல்லாவில் இருந்து கூப்பிட்டுக் கொண்டு வந்தான். வந்தவரிடம், "இது அடையாறு ஆனந்த பவன்தானா?" என்று கேட்க அவர் சொன்னார் "இது அடையாறு ஆனந்த பவன் இல்லை" என்றார். அப்ப இது "ஆந்திர ஆனந்த பவனா", என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். இல்லை இது வெறும் ஆனந்த பவன் என்றும் அடையாறு ஆனந்தபவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றான்.  
தமிழ் ஆட்களை கவர்வதற்காக இந்தப் பெயரை வைத்து அதையும் தமிழில் எழுதி நாக்கையும், தொண்டையையும் வயிற்றையும் கெடுத்துவிட்டார்கள். சுவை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சைட் எஃபக்ட், வயிறு எஃபக்ட் மற்றும் பின் எஃபக்ட் தான் ம்ஹீம் மிடில.
இப்படி பொய்யாய் எத்தனை பேர் கிளம்பியிருக்காய்ங்க இதைக் கேக்க ஆளில்லையா என்று நினைத்துக் கொண்டே எழும் போது, அவன் சொன்னான் "நியூயார்க்கில் அடையாறு ஆனந்தபவன் இருக்கிறது" என்று.  நான் சொன்னேன் எனக்குத் தெரியாமல் நியூயார்க்கில் இருக்கா" உடனே போக வேண்டும் என நினைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

தொடரும் 

Monday, February 1, 2016

ஜல்லிக்கட்டும் சப்பைக்கட்டும் !!!!!!!!!!!!!

    
  ஜனவரி 9 ஆம் தேதி  சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இந்தி அறிவிப்புகளை கேட்டுவிட்டு கடுப்புடனும் அலுப்புடனும் மதுரையில் இறங்கினேன். அட ஆங்கிலம் ஓகே, இந்தி கூட ஓக்கேதான். ஆனால் தமிழ்நாட்டுக்குள் இயங்கும் விமானத்தில் தமிழ் இல்லையென்றால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வெளியே பெருந்திரளான மக்கள் தாரை தப்பட்டை முழங்க காத்திருந்தனர். ஒருவேளை சகாயத்துக்குத்தான் இவ்வளவு வரவேற்பா? ஆஹா மக்கள் விழிப்படைந்து விட்டார்களா? என்று நினைத்துக்கொண்டு வெளியே வர, என்னுடன் வந்த சகாயம் கையசைத்துவிட்டு, வேறு வழியாக வெளியேறிச் சென்றார். ஒருவேளை இதையெல்லாம் தவிர்ப்பதற்குத் தான் வேறுவழியில் செல்கிறாரோ? என்று நினைத்தேன்.
என்னுடன் வந்த டைரக்டர் திருமுருகனுக்கு வரவேற்போ? நல்லவேளை ஐந்து வருடத்தில் நாதஸ்வரத்தை முடித்துவிட்டார் என்று பாராட்டுகிறார்களோ? என்ற யோசனையுடன் அதீத இசைக்கு நடுவே சென்றேன். வெளியே ஜல்லிக்கட்டுக் காளைகளும் நின்றிருந்தன.
காத்திருந்த நண்பர் பிரபாகர், "வா ஆல்ஃபி, உனக்கு ஏதோ என்னால் முடிந்த வரவேற்பு ", என்று சிரித்தார். நான் உடனே சொன்னேன், " பிரபா உங்களுக்குத் தெரியாதா, காளை பிடிப்பவர்களின் வயது நாற்பதுக்குள் இருக்க வேண்டும். நான்தான் ரிடையர் ஆயிட்டேனே", என்று சொல்லிவிட்டு பின்னால் பார்த்தால் வந்தது "புண் ராதாகிருஷ்ணன்". ஏற்கனவே வந்த போது கையில் மாடுமுட்டி கட்டுப்போட்டபடி வந்தார் பொன் ராதாகிருஷ்ணன்.

பொன். ராதாகிருஷ்ணன்.
ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியுடன் மதுரைக்கு வருவதால், ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆர்வலர்கள்  தங்கள் காளைகளோடு வந்து வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசின் அறிவிப்பு வந்தவுடன் காளைகள் மெருகூட்டப்பட்டன, கொம்புகள் வண்ணமூட்டப்பட்டன, பாழடைந்து கிடந்த வாடிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டன. உற்சாகம் கரைபுரண்டோட, இந்த வருடப் பொங்கல் சிறப்பாக நடக்கப்போகிறது என்ற புளகாங்கிதம் எங்கும் தெரிந்தது, குறிப்பாக மதுரையில்.
ஆனால் என்னவோ என் உள் உணர்வு " து நடக்காது", என்றே சொன்னது.
ஏனென்றால் ஜல்லிக்கட்டுக்கு வந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு வேலையென்றே எனக்குத் தெரிந்தது. உச்ச நீதிமன்றத்தடை வந்ததும் எல்லா உற்சாகமும் அப்படியே வடிந்துபோயின.
ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்னு நெனைச்சு என் மனதில் எழுந்த கேள்விகளைக் கீழே தருகிறேன்.  
1)     உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பிரச்சனையை, வெறும் அரசு உத்தரவு தீர்க்க முடியுமா?
2)    நீதிமன்றம் சட்டத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கும் என  மத்திய அரசுக்குத் தெரியாதா?  
3)    இத்தனை நாட்கள் காத்திருந்துவிட்டு பொங்கலுக்கு மிக அருகில் இந்த உத்தரவு கொண்டுவந்ததற்கு காரணம் என்ன?
4)    நீதிமன்றத்தடை வரும் என்பதை யோசிக்கவில்லையா? வராது என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை.
5)    சட்டத்தினால் மட்டுமே ஜல்லிக்கட்டைக் கொண்டுவர முடியும் என்று அரசுக்குத் தெரியாதா
6)    மாநில அரசு அதற்கான நெறிமுறைகளை சரியாக அமைத்து நீதிமன்றத்திற்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை?
7)    விலங்கின ஆர்வலர்கள்/அமைப்புகள்  கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு சரியான பதிலைச்   சொல்லாமல் மழுப்பியது ஏன்?
8)    இது மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத தன்மையாஇல்லை அவர்களும் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றே நினைக்கிறார்களா?
9)    உங்களால் முடியவில்லை என்பதால் இது வெளிநாட்டுச் சதி என்று சொல்லி, பிரச்சனையை ஏன் திசை திருப்புகிறீர்கள்?
10) சட்டம் கொண்டு வர நீதிமன்றம் சொன்னபோது, ஏன் அரசு கையை விரித்தது?
            இரவு நேரங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஜல்லிக்கட்டு சம்மந்தப்பட்ட கலந்துரையாடல்களைக் கவனித்தேன்.
அதில் கலந்து கொண்ட சீமானோ, வேல்முருகனோ, தி.மு.க/அதிமுக  பிரதி நிதிகளோ, வெறுமனே கோபப்பட்டும், உணர்ச்சி வசப்பட்டும் பேசுகிறார்களே ஒழிய, விலங்கின ஆர்வலர்களின் கேள்விகளுக்குச் சரியான விதத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
சீமான் 
நானொன்றும் ஜல்லிக்கட்டுக்கு பெரிய ஆதரவாளன்  அல்ல, எதிர்ப்பாளனும் அல்ல. ஆனால் ஒரு பாரம்பரிய விளையாட்டை, ஒழுங்கு படுத்தி, நெறிப்படுத்தி, விலங்குகளுக்குத்துன்பம் ஏற்படாமலும், வீரர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படாமலும், அரசே ஏற்று நடத்த முடியும் என்ற  நம்பிக்கை உள்ளவன் .  
அப்படி நடத்தமுடியுமென்றால், அது பொங்கல் சமயம் மட்டுமல்ல, எல்லாச் சமயங்களிலும் நடக்க முடியும். ஏராளமான  வெளிநாட்டுப் பார்வையாளரை ஈர்த்து நல்ல அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும். அதற்கு விலங்குகளின் பாதுகாப்பு, வீரர்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, பார்வையாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதற்கு அரசியல்வாதிகளையும், அரசுகளையும் விட்டுவிட்டு சரியான நெறிமுறைகளோடு,விலங்கின அமைப்புகளின் ஆலோசனையோடு நீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது, வெறும் வாக்காளர்களாக நினைப்பதும், கண்துடைப்பு செய்வதும், ஆசைகாட்டி மோசம் செய்வதும் நம் நாட்டில் எப்போதுதான் முடிவுக்கு வருமோ ??

- முற்றும்.

Thursday, January 28, 2016

பதிவர்களோடு பரதேசி !!!!!!!!!!!!!

Pudukkottai Meet

என்  எழுத்துக்குப் பெருமையா? என் எழுத்தின் வலிமையா? என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா? என்று கேட்டு அதற்கு நானே 'ஆம் ஆம் ஆம்"  என்று சொன்னேன் என்றால்  என்னை விட முட்டாள் வேறு யாரும் இல்லை.
பின்னர் எதற்கு இத்தனை வரவேற்பு ?, இத்தனை அன்பு? இத்தனை கொண்டாட்டம்? என்று  எண்ணிப்பார்த்தால், அது தமிழின் மேல் உள்ள ஆர்வம், காதல், தோழமை என்றுதான் சொல்ல முடியும்.
விடுமுறைக்கு சீனா, இலங்கை மற்றும் இந்தியாவில் சில வாரங்கள் செலவிட நினைத்து, கிளம்பும் முன்பதாக இரு மாதங்களாக இருண்டு கிடக்கும் என் பிளாக்கில் அறிவித்தேன்.
ஜனவரி 8ஆம் தேசி மாலை சென்னை  வந்து சேர்ந்து ,எக்மோரில் உள்ள பாண்டியனில் அறையெடுத்தேன். வெளியே போய் மண்ணின் மத்தையும் புழுதியையும் சுவாசித்து சற்றே இருமலுடன் திரும்பி வந்து ஓய்வெடுத்தும் எடுக்காமலும் காலையில் எழுந்து ரெடியாகும் போது லித்தது அலைபேசி. அவர் செல்வா என்ற செல்வக்குமார் (நான் ஒன்று சொல்வேன்.....www.naanselva.blogspot.com )லிப்ட்டில் இறங்கியவாறே, "எங்கேயிருந்து பேசுகிறீர்கள் ?", என்று கேட்டேன்.  "இங்கேயிருந்து தான்", என்று என் முன்னால் வந்தார்.  
முன்பின் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால் ரொம்ப நாள் பழகியது போல் ஒரு தோழமை. ஆஹா ஆரம்பமே  அமர்க்களமாக இருக்கிறதே என்று நினைத்தேன். அவருடன் காலைச்சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சில நிமிடங்களில் இன்னொரு ஃபோன், "நான்தான் கார்த்திக் பேசுகிறேன்", என்று. அவர் வேறு யாருமில்லை நம்ம ஸ்கூல் பையன் கார்த்திக்தான் (www.schoolpaiyan.com). மாலை சந்திப்பதாக முடிவெடுத்து நான் என் அலுவலகம் சென்றேன்.  துணைக்கு செல்வாவும் வந்தார்.

Karthik( School Paiyan), Selvakumar and myself

மாலையில் சொல்லிவைத்தது போல் கார்த்திக் வந்து சேர,  செல்வாவும் வந்துவிட, ரூமில் உட்கார்ந்து பலநாள் தோழர்கள் போல அளவளாவி மகிழ்ந்தோம். பார்ப்பதற்கும் ஸ்கூல் பையன் மாதிரி வெகு இளமையாக இருந்தார்.
செல்வா சொன்னார், "புதுக்கோட்டையில் நிறைய பதிவர்கள் உங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கிறார்கள். நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்று. "என்னைச் சந்திக்கவா? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?”, வெட்கத்துடன் தப்பிக்கப்பார்த்தேன். அப்போது அலைபேசி ஒலித்தது. பேசியவர் கவிஞர் முத்து நிலவன். யார் முத்து நிலவனா, சிறந்த தமிழ் ஆசிரியரும், எழுத்தாளரும், பட்டிமன்ற பேச்சாளரும் பல இளைஞர்களின் ஆதர்ஷ வழிகாட்டியுமான முத்து நிலவன் ஐயாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை. அவரும் அதையே சொல்ல, ஐயாவின் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் வருவதாகச் சொன்னேன்.  
சாப்பிடப் போகலாம் என்று சொல்லி மூவரும் கிளம்பி வெளியே வந்தோம். அஞ்சப்பர், புகாரி, காரைக்குடி, பொன்னுசாமி  ஆகிய அருகிலிருந்த அசைவ உணவங்களில் காரைக்குடியை தேர்வு செய்து உள்ளே சென்றால் ஒருவரையும் காணோம். அதையும் மீறி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். சுமாராகவே இருந்தது. வெளியே வந்து பார்த்தால் அது பிரபலமான காரைக்குடி உணவகம் அல்ல. அய்யனார் காரைக்குடியாம். இனிமேல் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பேரைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
.
மதுரையில் இருந்த சில நாட்களில், இந்தத் தடவை பிறந்த மண்ணையும், பூர்வீக வீட்டையும்  பார்த்துவிட திண்டுக்கல் செல்ல முடிவு செய்தேன். ஜனவரி 12ஆம் தேதி சென்ட்ரல் எக்சைஸில் சூப்பிரண்டென்டன்ட் ஆக இருக்கும் நண்பன் சாம் தன் காரில் அழைத்துச் சென்றான்.
திண்டுக்கல் என்றதும் பிரபல பதிவர் திண்டுக்கல் தனபாலன் ஞாபகம் வர, தொடர்பு கொண்டேன். பூர்வீக வீட்டையும் மாமா அத்தை அவர்களையும் பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது, நாகல் நகரில் தனபாலனை சந்தித்து அப்படியே வேணு பிரியாணி உணவகம் சென்றோம். புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாக இருந்தார். பிரியாணியும் தாழ்ச்சாவும்  அமிர்தமாக இருந்தது. அதன் பின்னர் அவர் வீட்டுக்குச் சென்று அவரது அருமை மனைவியையும் சந்தித்தோம். தனபாலனுக்கு இணையான சுவாரஸ்யமானவர் அவர் மனைவி. மிகவும் சரளமாகவும் சகஜமாகவும் பழகினார்.
With Dindugal Dhanapalan  and his wife

அவருடைய பரம்பரைத் தொழிலான புடவைகள் மொத்தவிலை வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். சிறப்பான சேலைகளில் ஒரு ஐந்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். தனபாலன் அவர்களின் வியாபாரம் சிறந்து விளங்க பரதேசியின் வாழ்த்துக்கள்.

ஜனவரி 13ஆம் தேதி காலை அமெரிக்கன் கல்லூரியின் MSW -விலும் அழகர்கோவில் அருகில் இருக்கும் MBA மாணவர்களுக்கும் என்னுடைய கெஸ்ட் லெக்சரை முடித்துக் கொண்டு, நண்பர் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் துணைக்கு வர அவருடைய காரிலேயே புதுக்கோட்டை சென்றோம்.
போகும் வழியில், மறுமுறை வரும் போது ஓவியம் முற்றிலுமாக மறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், சித்தன்ன வாசலையும் அதின் சிதிலமடைந்த ஓவியத்தையும் மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு மாலை 5.30 மணியளவில் புதுக்கோட்டை சென்றோம். .
அங்கே கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமையில்  ஆர்வத்துடன் அநேகர் குடியிருந்தனர். அன்பர்கள் வந்தவண்ணம் இருக்க, எனக்கு பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
எனக்கு முன்னால் பேசிய தமிழ்ப்பேராசிரியர் நண்பர் பிரபாகரும், தமிழ் எப்படி வளர்கிறது என்றும் அது என்றும் அழியாது என்றும் சொல்லி விளக்கினார்.
"ஒரு பேச்சாளன் என்று என்னைச் சொல்ல முடியாது, ஒரு எழுத்தளான் என்றும் என்னைப்பற்றி சொல்லமுடியாது.  நான் யார் என்று கேட்டால், பஞ்சம் பிழைக்க பிறதேசம் போன பரதேசி எனக்கெதற்கு இத்தனை பெரிய வரவேற்பு", என்று என் பேச்சை ஆரம்பித்தேன்.  
with Muthu Nilavan and Prabahar

அங்கு பல தமிழாசிரியர்கள், கவிஞர்கள், பதிவர்கள் மென்பொருள் பொறியாளர்கள் கூடியிருந்தனர். மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுதாக அது அமைந்தது.

இதனை ஏற்பாடு செய்த கவிஞர் முத்துநிலவன் ஐயா, மற்றும் செல்வா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வந்திருந்த அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள். 

Monday, January 25, 2016

சகாயத்துடன் பரதேசி !!!!!!!!!!!!

சகாயத்துடன் பரதேசி !!!!!!!!!!!!

இடம் சென்னை விமான நிலையம் , டொமெஸ்டிக் டெர்மினல் , ஜனவரி 9ஆம் தேதி , 2016. ஒரு சிறு கைப்பெட்டியுடன்நடந்துவருவது உற்றுப்பார்த்தால் அட சகாயம். என்னை அறியாமலேயே என் பொருட்களை விட்டுவிட்டு விரைந்து சென்று கைகுலுக்கினேன். ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, உரையாடலை ஆரம்பித்தது அவரே.  
உங்கள் பெயர் என்ன? எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்? என்ற கேள்விகள் சம்பிரதாய முறையில் இருந்தாலும், அவர் சம்பிரதாயத்திற்காக கேட்ட மாதிரி தெரியவில்லை. னென்றால் அவரைப்பார்க்க வந்த அனைவரையும் அவர் இதே கேள்விகளைக் கேட்கத்தவறவில்லை.  
"யார் இவர்? எதற்கு அவர் வந்ததும் எல்லோரும் அவரை நோக்கி ஓடுகிறீர்கள்", கேட்டாள் அந்த வெள்ளைக்காரி, அவரிடம் பேசி முடித்து வந்த என்னிடம். இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?
ஒரு அரசு அலுவலர் என்ன சொன்னால், அதில் என்ன சிறப்பு?
இவர் ஒரு IAS  அதிகாரி என்று சொன்னால், அதில் என்ன தனித்துவம் இருக்க முடியும் ?. அதிகாரிகள் தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே.
ஒரு நேர்மையான மனிதன் என்று சொன்னால், அவ்வளவுதானா? அதுமட்டும்தானா என்று என் மனமே எதிர்க்கேள்வி கேட்கும்.
அப்படியென்றால் சகாயம் என்பவர் யார்? பின்னர் அவரை என்னவென்றுதான் சொல்வது?
Sagayam IAS
Sahayam IAS
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வரிகளுக்கு மட்டுமல்ல, அந்த தவ வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். சுயநலத்தை, குடும்ப நலத்தைப் பின்னுக்குத்தள்ளி, பொது நலனில் நாட்டு நலனுக்காக மட்டுமே தொடர்ந்து செயல்படும் ஒரு போராளி.
அவருடைய முதல் அதிரடி வெளிப்பட்டது, மாபெரும் வெளிநாட்டு கம்பெனியான பெப்சி கோலாவுக்கு எதிராக பெப்சி பானத்தில் தூசி மிதந்ததை அவரிடம் சிலர் காண்பிக்க, லேப் சோதனையில் அது குடிக்கத் தகுந்த பானம் இல்லை என்று தெரிய பூட்டுகளோடு சென்று தொழிற்சாலைக்குப் பூட்டுப்போட்டார். அந்தச் சமயத்தில் என்னுடைய மாமா மகன் அங்கு Personnel Officer ஆக இருந்தான். அவனிடம் நான் பேசும்போது, அவன் சொன்னான், "எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது" என்று. ஆனால் தலைமைச்செயலாளர், மந்திரிகள் முயன்றும் அவர் சம்மதிக்காதலால், அவரை மாற்றம் செய்தபின்தான், தொழிற்சாலையை திறக்க முடிந்தது. அந்த வீறு கொண்ட நேர்மை இந்நாள் வரை கொஞ்சம் கூட குறையக் காணோம்.
அவர் பணி செய்த வருடங்களை விட அதிகமுறை பணிமாற்றம் செய்யப்பட்டாலும், மனமாற்றம் அடையாமல் எந்த சோர்வுமின்றி, சென்ற இடங்களில் எல்லாம் முத்திரை பதிப்பவர்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாய் செயல்பட்ட காலம் போய், நீதியின் பிரதிநிதியாய் செயல் படத்துவங்கியிருக்கிறார். நமக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் அது நீதித்துறையும் நீதிமன்றமும் இருப்பதால்தானே.  
ஆமாம் ஆயிரக்கணக்கானவர்கள் தன்னிச்சையாக அவர் மேல் மதிப்பு கொண்டு, அவரை அரசியலுக்கு வரச் சொல்லும் பேரணிகள் தமிழ்நாடு முழுதும் நடைபெறுகின்றன. வெறும் காசுக்காக கூடுகின்ற உன்மத்தர்களின் கூட்டமல்ல அது. நாட்டு முன்னேற்றத்திற்காக கனவுகளைத் தாங்கி நிற்கும் மக்கள். யாராவது ஒரு மேசியா வந்துவிடமாட்டாரா என ஏங்கித்தவிக்கும் தானாகக் கூடிய மக்கள்.
தனிமனிதர்கள் சரித்திரம் படைக்க முடியுமா என்றால் முடியும் என்பதை சரித்திரம் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
 அவருடன் நடந்த உரையாடல் இன்னும் என் நினைவில்.
நான் முதலில் சொன்னேன். "கடவுள் உங்களுக்குத் துணை நிற்கிறார் "என்று. சிறுபுன்னைகையுடன் அதனை அங்கீகரித்த அவர் "இல்லாவிட்டால் எனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வரும்"?, என்றார்
"வெகுகாலமாக தங்களை உய்விக்க ஒருவர் வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கித்தவித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏன்  நீங்களாக இருக்கக்கூடாது" என்றேன். ஒரு சிறுபுன்னகை மட்டுமே பதிலாக வந்தது. 
"உங்களால் கவரப்பட்டவர்கள் வெளிநாட்டில் நாங்கள் அநேகர் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்குத்துணையாக நிற்கவும் தாய் நாட்டுக்குத் திரும்பவும் ஆயத்தமாக இருக்கிறோம்",  என்றேன். வெறும் உணர்ச்சி வசப்பட்ட வார்த்தைகள் இல்லை இவை.
நியூயார்க்கிற்கு அவரை அழைத்தேன். சிகாகோ தமிழ்ச்சங்கம் அழைத்ததையும் அதற்கு அரசு அனுமதி கிடைக்காததையும் சொன்னார். அதற்குள் கூட்டம் கூடிவிட, தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவசியம் தொடர்பில் இருங்கள் என்றார். விடைபெற்று வெளியே வர சிறிது சிரமப்பட்டேன்.
. சகாயம் அவர்களே பத்திரமாக இருங்கள். சீக்கிரம் வெளியில் வந்து மக்களுக்கு சகாயம் செய்யுங்கள். இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல எல்லா வயதிலும் உங்களுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறோம்.

அவரை ஒரு வார்த்தையில் அழைக்கமுடியுமென்றால் அவர் ஒரு மாபெரும் புரட்சியாளர். ஆமாம். பக்கத்தில் இருந்த வெள்ளைக் காரப் பெண்மணியிடம் சொன்னேன், "He is a great Revolutionist " என்று. அந்தப் பெண் கூட்டத்திற்குள் புன்னகைத்து நின்ற சகாயத்தைப் பார்த்துவிட்டு என்னை  நம்பமுடியாமல் பார்த்தாள்.
ஆம், எளிமையில் உள்ள வலிமை வெறும் தோற்றத்தில் தெரிவதில்லை. ஆனால் அவர் கொண்டு வரப்போகும் மாற்றத்தில் தெரியும். விடிவெள்ளி விரைவில் வெளிப்படும்.
முற்றும்