Monday, January 12, 2015

'யரலவளழ' எனக்கு வரல !!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் 17 “ஒரு வானவில் போலே".

1977-ல் வெளிவந்த "காற்றினிலே வரும் கீதம்" என்ற படத்திற்காக இளையராஜா அவர்கள் இசையமைத்து புகழ் பெற்ற பாடல் இது. முதலில் பாடலைக்கேட்போமா?

பாடலின் சூழல்:
வழக்கமான காதலன் காதலி பாடும் டூயட் பாடல் என்றாலும் இந்தப்பாடலின் மெலடியில் ஒரு மறைவான சோகம் இழையோடுகிறது. ஒரு வேளை படம் பார்த்தவர்களுக்கு இதனைப்பற்றி தெரியலாம், மலையாளிகளின் பேஸ் குரலில் இயற்கையாகவே இழையோடும் சோகமாகவும் இருக்கலாம். அல்லது இந்த வகை மெட்டில் அல்லது ராகத்தில் ஒளிந்திருக்கும் சோகமாகவும் இருக்கலாம்.
இசையமைப்பு:
ilayaraja yiung photo

இளையராஜா எழுபதுகளில் இசையமைத்த இந்தப்பாடல் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இதமான பாடல்களில் ஒன்று. இந்தப்பாடல் காதை மட்டுமல்ல மனதையும் வருடும் ஒரு பாடல். இராகத்திலும் இசையிலும் ஒரு புனிதத்தன்மை (purity) இருப்பதாக நினைக்கிறேன். இசையமைத்து 37 வருடங்களுக்குப் பின்னரும் மிகவும் புதிதாக (Fresh) ஒலிக்கிறது. கிடார் பேசுடன் ஆரம்பிக்கும் பாடலில் புல்லாங்குழல் இணைந்து தழுவ அதன்பின் வரும் வயலின்கள் அப்படியே இவற்றை தூக்கி நிறுத்த, பாடல் ஆரம்பிக்கிறது. வயலின்களின் மென்மையும் இரண்டாவது BGM-ல் வரும் கிடாரின் லீட் பீசும் இந்தப்பாடலின் ஹைலைட்ஸ் என்று சொல்லலாம்.
பாடல் வரிகள்:
ஒரு வானவில் போலே
 என் வாழ்விலே வந்தாய்
 உன் பார்வையால் எனை வென்றாய்
 என் உயிரிலே நீ கலந்தாய்

 ஒரு வானவில்.....

வளர் கூந்தலின் மணம் சுகம்
 இதமாகத் தூங்கவா
 வன ராணியின் இதழ்களில்
 புது ராகம் பாடவா
 மடி கொண்ட தேனை மனம் கொள்ள
 வருகின்ற முல்லை இங்கே
 கலைமானின் உள்ளம் கலையாமல்
 களிக்கின்ற கலைஞன் எங்கே
 கலைகள் நீ கலைஞன் நான்
 கவிதைகள் பாடவா

(ஒரு வானவில்)

உனக்காகவே கனிந்தது
 மலைத்தோட்ட மாதுளை
 உனக்காகவே மலர்ந்தது
 கலைக் கோயில் மல்லிகை
 இனிக்கின்ற காலம் தொடராதோ
 இனியெந்தன் உள்ளம் உனது
 அணைக்கின்ற சொந்தம் வளராதோ
 இனியெந்தன் வாழ்வும் உனது
 தொடர்கவே வளர்கவே
 இது ஒரு காவியம்

(ஒரு வானவில்)
பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கண்ணதாசனின் டூயட் பாடல்களில் சற்றே தூக்கலாக இருக்கும் காமரசம் இந்தப் பாடலில் காணப்படவில்லை. மாறாக மென்மையான காதலும் அன்பும் பாடல் முழுவதும் இழையோடுகிறது.
"ஒரு வானவில் போல என் வாழ்வில் வந்தாய்" என்று பல்லவி ஆரம்பிக்கும்போது காதலி தன் வாழ்வில் வந்தபிறகு, வாழ்வே வண்ணமயமாக மாறிவிட்டது என்று காதலன் சொல்வது செழுமையான உருவகம்.
முதலாம் சரணத்தில் "கலைமானின் உள்ளம் கூட கலையாமல் களிக்கும் கலைஞன்”, என்று காதலி பாராட்டுவதில் கண்ணதாசனின் டச் தெரிகிறது. காதல் பாடல்களில் கண்ணதாசனை மிஞ்ச முடியுமா?
குரல்:
  1. Jayachandran
பாடலைப் பாடியவர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி. எனக்குப்பிடித்த மலையாளக்குரல்களில் ஜெயச்சந்திரன் குரல் முதன்மையானது. ஏனென்றால் செழுமையான அடர்ந்த பேஸ் குரல் மட்டுமின்றி, 'யரலவளழ' “எனக்கு வரல" என்று பாடும் மலையாளக்குரல்களில், ,,ழ மட்டுமின்றி ர,ற மற்றும் ன,ண வையும் சிறப்பாகப் பாடுபவர் ஜெயச்சந்திரன். ஆனால் அவரின் எல்லாப்பாடல்களிலும் ஒலிக்கும் சோகம்தான் கொஞ்சம் உறுத்துகிறது.ஜானகி இதில் அழகான மற்றும் அளவான விகிதத்தில் அன்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

எழுபதுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களில் முக்கியமான, சொல்லத்தகுந்த பாடல் இது என்பதில் சந்தேகமில்லை.

தொடரும் >>>>>>>>>>

pongal greetings in tamil

அன்பு நண்பர்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் நல் 

வாழ்த்துக்கள் .


அன்பும் அமைதியும் , அருளும்  பொருளும் , பொங்கல் 

பொங்குவது போல் உங்கள் இல்லங்களில் பொங்கி 

வழியட்டும் .வாழ்க வளமுடன் . 



Thursday, January 8, 2015

நானும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்!!!!!!!!!!!!!!


எச்சரிக்கை : தலைப்பில் நான் குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகளின்  தலைவர்  பிரபாகரன் தானே என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான்.


எண்பதுகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நேரம். ஊரே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. இலங்கையில் சிங்களக் காடையர்கள் தமிழினத்தை நசுக்கி ஒழித்துவிட எல்லாவகையிலும்  முயன்று கொண்டிருந்தனர். குறிப்பாக அதிபராக இருந்த ஜெயவர்த்தனே. 
  1. Jeyawardene
அதனை எதிர்த்து பல போராட்டங்கள் வெடித்தன. கல்லூரி மாணவர்களும்  களத்தில் குதித்தனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று மனுக்கொடுத்தனர்.
Along with my classmates in  front of my college
அமெரிக்கன் கல்லூரியின் அருகில் உள்ள தேவர் சிலையைத் தாண்டி, ராஜாஜி மருத்துவமனை வழியாக செல்லும் மாணவர்களின் கோஷம் உள்ளே வகுப்பறையில் இருக்கும் எங்களுக்குத் தெளிவாக கேட்டும். ரத்தம் துடித்து, ஆத்திரம் மோலோங்கினாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம். எங்களுடைய மாணவர் தலைமைக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது. எங்கள் கல்லூரி வழியாக சென்ற மற்ற கல்லூரி மாணவர்கள் எங்களையும் பழித்தபடி சென்றார்கள். முன் கேட்கள் எப்பொழுதும் அடைக்கப்பட்டு இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஆத்திரம் உச்சத்திற்குப் போனது, லேடி டோக் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர்தான். எங்கள் கேட் முன்னால் நின்று பெண்கள் எங்களைப் பழிக்க ஆரம்பித்தனர். (லேடி டோக் எங்கள் சிஸ்டர் (?) நிறுவனம்) அவர்கள் கோஷத்தைக் கேட்ட எங்களுக்கு பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது. அந்த கோஷம் என்னவென்றால் "அஞ்சு பத்து அம்பது அமெரிக்கன் காலேஜ் ஒம்போது " என்பது - அதுவும் பெண்கள் சொல்வது.
Lady Doak College , Madurai
நாங்கள் மிகுந்த கோபத்துடன் வகுப்பறைகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்த ஒருவழியாக அனுமதி கிடைத்தது.
அடுத்த நாள் காலை, திரண்ட மாணவர்களில் சிலர் முதலில் லேடி டோக் காலேஜ் சென்று கோஷம் போடவேண்டும் என்று சொல்ல,( அது என்ன கோஷமென்று வெளியில் சொல்லமுடியாது ) பாதுகாப்புக்கு வந்த போலிஸ் அனுமதி மறுத்து தேவர் சிலை வழியாக அழைத்துச் சென்றனர். கோஷங்கள் காதைப்பிளந்தன.
"பனைமரத்துல வவ்வாலா? தமிழனுக்கு சவாலா?"
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"
"இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?"
“மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவோம்”
"டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார், அமெரிக்கன் காலேஜ் சூப்பர் ஸ்டார்".
சில மாணவர்கள் (சத்தியமா நான் இல்லைங்க) வழியில் வந்த பஸ்களை தட்டியும், ஆட்டோக்களின் ரப்பர் ஹார்ன்களை பிடுங்கவும் ஆரம்பித்தனர். தட்டிக்கேட்ட போலிஸ்காரருக்கு எதிராக புதுக்கோஷம் ஒன்று எழுந்தது. " ஏட்டையா ஏட்டையா தொப்பில ஓட்டையா". போலீஸ்காரர்களுக்கு கோபம் வந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டு வந்தார்கள்.
போய் கலெக்டர் ஆபிசில் மனுவைக் கொடுத்துவிட்டு ஹாஸ்டல் திரும்ப நல்லபசியில் ஹாஸ்டல் உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு பெரும்பாலானோர் சினிமாவுக்குப் போய்விட்டோம்.
"டேய் சேகரு இதுல விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகர் எங்க வந்தாரு?"
"கொஞ்சம் பொறுமையா கேளுரா மகேந்திரா"
மதுரையில் அப்பொழுதெல்லாம் போராளிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தேனிக்குப் பக்கத்தில் உள்ள கோம்பை என்ற பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து ஆயுதப்பயிற்சி நடந்தது. அரசாங்கம் அனுமதி அளித்ததா அல்லது கண்டுகொள்ளாமல் விட்டதா என்று தெரியவில்லை.

சில சமயங்கள் யூனிஃபார்ம் அணிந்து துப்பாக்கி ஏந்திய சிறுகுழுவினர் வரிசையாக நடந்து செல்வதை மதுரைத் தெருக்களில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இதில் பலகுழுக்கள் இருந்தாலும் பெரும்பாலும் LTTE, EPRLF  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம். அதுதவிர முன்னும் பின்னும் திறந்த வெளி ஜீப்பில் பாதுகாவலர் புடைசூழ இந்தக்குழுக்களின் தலைவர்கள் காரில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 
 அடுத்த நாள் மாலை புதிதாக வாங்கிய என்னுடைய ஸ்டோன் வாஷ் பேன்ட்டையும் (8 பாக்கெட்டுகள் கொண்டது-பாக்கெட்டுகள் அதிகம் இருந்து என்ன, செய்ய, உள்ளே வைப்பதற்கு ஒன்றும் இல்லையே) ஸ்டோன்வாஷ் சட்டையையும் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினேன். ஸ்டோன்வாஷ் உடைகள் அப்போதுதான் அறிமுகப் படுத்தப்பட்டு இருந்தன. போடும்போதே நண்பன் சையது கேட்டான், "எப்படா விடுதலைப்புலியில் சேர்ந்த ? " என்று. ஒரு புன்சிரிப்பை பதிலாகக் காண்பித்துவிட்டு அவனும் நானும் வெளியே வந்தோம். ராஜாஜி மருத்துவமனையில் அவனுடைய  ஊரான கம்பத்துக்காரர் யாரோ ஒருவர் உடம்பு சரியில்லாமல் சேர்க்கப்பட்டிருப்பவரை பார்க்கப் போனோம்.
அமெரிக்கன் கல்லூரிக்கு முன்னால் இருக்கும் வணிக வளாகத்தில் இருந்த கிங் மெட்ரோ ஜுஸ் சென்ட்டரில் சையது வாங்கிக் கொடுத்த "மிக்சர் ஜீஸை" -குடித்துவிட்டு கூலாக இறங்கி இடதுபுறம் நடந்தோம். தேவர் வழக்கம் போல் இடுப்பில் கைவைத்து கம்பீரமாக நின்றிருந்தார்.  சிலைக்கு தினமும் காலையில் யாரோ புதிய மாலை ஒன்றைபோட்டு விடுவார்கள். பலவித டிராஃபிக்கில் புழுதி பறந்து கொண்டு இருந்தது. சிறிதுதூரம் நடந்தவுடன், மூன்று கார்களும் ஒரு ஜீப்பும் வேகமாக எதிர்புறம் வருவதை பார்த்தோம். முதல் காரிலும் மூன்றாவது காரிலும் துப்பாக்கிகள் தாங்கிய நான்குபேர் இருந்தனர்.  AK-47 ஏந்திய சிலர் ஜீப்பில் இருந்தனர். நடுவில் இருந்த காரில் முன்புறம் டிரைவர் அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் உட்கார்ந்திருக்க, பின்புறத்தில் இருவர் உட்கார்ந்திருந்தனர். ஏதோ போராளிகளின் தலைவர் செல்கிறார் என்று சையது சொன்னான்.   முன்னால் போன கார் விரைந்து சென்றுவிட, பின்னால் வந்த கார் தயங்கி நின்றது. அதன்பின் வந்த கார் கூட பின்னால் நின்றுவிட்டது.  

நடுவில் இருந்த காரின் பின்புறக் கண்ணாடி இறங்க ஒருவர் தலையை நீட்டி என்னைக்கூப்பிட்டார். என்னைத்தான் கூப்பிடுகிறாரா என்ற சந்தேகத்தில் நான் சையதைப் பார்க்க அவன், "உன்னைத்தான் போடா" என்றான். நான் கிராஸ் பண்ணி 'அங்கு' செல்ல, காரின் பின்புறம் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் "நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் ?", என்று கேட்டார். திடுக்கிட்ட நான், "நான் எந்த இயக்கமுமல்ல அமெரிக்கன் கல்லூரி மாணவன்" என்று சொன்னேன். அவர் பக்கத்தில் இருந்த இன்னொருவர் புன்னகையுடன், "சரி தம்பி நீ போகலாம்", என்றார். நான் திரும்பவும் கிராஸ் பண்ணி வந்துவிட, சையது கேட்டான், "டேய் நல்லாப்பாத்தியாடா யார்னு தெரிஞ்சுதா?”, என்றான். "இல்லையே", என்றேன். "போடா லூசு அவர்தாண்டா விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரன்", என்றானே பார்க்கலாம். நான் மறுபடியும் பார்ப்பதற்குள், கார்கள் வேகமெடுத்து விரைந்தன. ஒரு மாபெரும் தலைவனை நேருக்கு நேர் சந்தித்தும் சரியாக பார்க்கவில்லையே என்பதை இன்று நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.அவர் கூட இருந்தது பொட்டு அம்மனாய் இருக்கவேண்டும் .

முற்றும் 

Monday, January 5, 2015

M.S.விஸ்வநாதனை கைவிட்ட இயக்குநர் ஸ்ரீதர் !!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 16 "நீ கேட்டால் நான் மாட்டேனென்று"

1978-ல் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப்படத்தில் பல ஹிட் பாடல்கள் இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். இதன் துள்ளல் இசை உற்சாகம் கொடுக்க வல்லது.
பாடலின் சூழல்:
காதலன் காதலியிடம் என்னவோ கேட்க, “நான் முழுவதுமாக உனக்கே சொந்தம், சொன்னதைக் கேட்கும் த்தினி நான்", என்று சொல்லி உற்சாகமாகப்பாடும் பாடல் இது. அப்படி என்ன காதலன் கேட்டிருப்பான் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். அப்படி என்ன பெரிதாகக் கேட்டிருக்கப்போகிறான் நமக்குத் தெரியாததை. பாடலைக் கேட்போம்.

 இங்கே பாடல் வீடியோவை உங்களுக்கென கொடுத்திருந்தாலும், நான் வெறும் பாடலை மட்டுமே டவுன்லோட் செய்து கேட்பதால் இந்தப்படத்தின் சூழல், பாடல் படமாக்கப்பட்ட விதம் ஆகியவற்றை விட்டுவிட்டு பாடலையும் இசையைக் குறித்து மட்டும் எழுவது என் நோக்கமாகும். இந்தப்படங்களில் பெரும்பாலானவற்றை நான் பார்த்ததில்லை என்பதும் ஒரு காரணம்.
பாடலின் இசை:
இளையராஜாவின் உற்சாகம் பொங்கும் துள்ளல் இசைக்கு இந்தப்பாடல் பெரிய உதாரணம். பாடல் முழுதும் மெட்டு மற்றும் இசைக்கருவிகளின் பயன்படுத்துதலில் ஒரு துரித வேகம் தெரியும். சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருக்கும் கிராமிய மெல்லிசை மட்டும் மேற்கத்திய இசையின் சரிகலவை  இந்தப்பாடல் என்று சொல்லலாம். அதோடு இளையராஜாவின் எல்லாப் பாடல்களிலும் இருக்கும் ஒரு ஆதார மெலடியும் இந்தப்பாடலில் சுகமாக இருக்கிறது. இந்தப்பாடலின் ஆரம்பத்தில் கர்நாடக கச்சேரிகளிலும் பஜனைகளிலும் பயன்படுத்தும் தாளத்தை பயன்படுத்தியதோடு பேஸ், டிரம்பட் போன்ற பலவித இசைக்கருவிகளை பயன்படுத்தி விதவித இசையொலிகளை எழுப்பி கொண்டாட்ட நிலையினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீதரின் பல முந்தைய படங்களுக்கு MSV இசையமைத்தார். எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட். ஆனாலும் இளையராஜா என்ற புதுமையை நாடி ஸ்ரீதர் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம்தான் இணைந்தார். இளையராஜா அவர் நம்பிக்கையை ஏமாற்றாமல் ஹிட் பாடல்களை கொடுத்தார். ஒரு சமயத்தில் பாலசந்தரும் அதனையே செய்தார். "ஸ்ரீதர் MSV-யின் வெற்றிக் கூட்டணியைவிட்டு தன்னிடம் வருகிறாரே, ஒரு நாளில் இது எனக்கும் நடக்குமல்லவா", என்று இளையராஜா அப்போது நினைத்தாராம்.  சில வருடங்களுக்குப்பிறகு அதே போல் நடந்தது. "மணிரத்னம்-இளையராஜா" கூட்டணியில் எல்லாப்பாடல்களும் சூப்பர்ஹிட் என்றாலும் மணிரத்னம், ரோஜாவில் AR.ரகுமானிடம் இணைய இளையராஜாவின் சகாப்தம் முடிவை நோக்கி நகர்ந்தது.
பாடல் வரிகள்:

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும் ஹையா

அன்பே உன்னை ஆராதனை செய்கின்றவள் மனது
பொன் போன்றது பூப்போன்றது எண்ணங்களோ இனிது (2)
தாமரை பூவில் தேன் சிதற (2)
நீ கொஞ்சம் கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச
நாம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா
எங்கோ எங்கோ அம்மம்மா

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியக்கும்


கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில
பல்லாயிரம் பாடங்களும்  சொல்லாமலே புரிய
நீ ஒரு காதல் நூல் நிலையம் (2)
பொன்மாலை தோறும் உன் லீலை பாடும்
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா
நாளும் நீதான் சொந்தமோ

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும் ஹையா




பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. துள்ளல் இசைக்கு ஈடு கொடுக்குமளவிற்கு சிறந்த வரிகள் இல்லையென்றாலும், இரண்டாவது சரணத்தின் முதற்பகுதி நன்றாகவே வந்திருக்கிறது. "கல்லூரியில் கல்லாததை உன் கண் ஜாடையில் பயின்றேன், பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிந்தது, ஏனெனில் நீயே ஒரு காதல் நூல் நிலையம்", என்று சொல்வதில் கவிஞரின் கற்பனை நயம் வெளிப்படுகிறது. 
பாடலின் குரல்:
  1. Vani Jeyaram
இந்தப்பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். எனக்குத்தெரிந்து இந்தப் படத்தில்தான் இளையராஜா வாணி ஜெயராமை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கிறார். அதன்பின் பல ஹிட் பாடல்களை இருவரும் சேர்ந்து கொடுத்தனர். அவருடைய பளிச்சென்ற குரல் லாவகமான உச்சரிப்பு, தெளிவான உச்சரிப்பு ஆகியவை பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.ஹைய்ய்யா  என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் வேறு விதமாகப்பாடி  இளமையான நாயகியின் குறும்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் இளையராஜாவின் துள்ளல் பாடல் வரிசையில் இந்தப்பாடல் முக்கியமான ஒன்று.

தொடரும் >>>>>>>>>>>>>>>>

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு 

வாழ்த்துக்கள் .இந்த புதிய ஆண்டில் வளமும் ,நலமும், 

அமைதியும், அன்பும் பெருகட்டும்