Monday, March 24, 2014

சிவகங்கை பயணம் பகுதி 3: சிவாலயமும் தேவாலயமும்!!!!!!


சிவகங்கைக்கு கிழக்கே சுமார் 16 கி,மீ தொலைவில் உள்ளது காளையார்
 கோவில். பாடல் பெற்ற தலமாகிய இந்தக் கோவிலின் மூலவர் பெயர் காளீஸ்வரர். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரை "காளை" என்று குறிப்பிட்டதால், இவர் காளையார் என்று அழைக்கப்பட, இந்தக் கோவில் "காளையார் கோவில்" என்று வழங்கப்படுகிறது.

முன்னால், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் கொண்டது. கலை அழகுடன் மிக அழகாக இருந்தது. நடுவில் மண்டபம் கொண்ட ஒரு அழகான தெப்பக்குளம் இருக்கிறது. இதன் பெயர் "ஆனைமடு" என்பது. இந்திரனின் வெள்ளை யானையாகிய "ஐராவதம்" வந்து இந்தத் தெப்பக்குளத்தை உருவாக்கியது என்ற ஐதீகத்தால் இந்தப்பெயர். 

இங்குள்ள மூன்று சந்நிதிகள்  இறைவனின் காத்தல், பாதுகாத்தல் மற்றும் முடித்தல் என்ற மூன்று செயல்களைக்குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மூலவருக்கு காளீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் என்ற மூன்று பெயர்களும் சக்திக்கு ஸ்வர்ணாம்பிகை, செளந்தர நாயகி மற்றும் மீனாட்சி என்ற மூன்று பெயர்களும் வழங்கப்படுகின்றன.

தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பும் கோபுர அமைப்பும் உலகில் எங்கும் காண முடியாது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இடம் ஒரு முக்கிய கோட்டையாகும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இங்குதான் ராஜா முத்து வடுக நாதத் தேவர் உயிரிழந்தார். அதன்பின் மருதுபாண்டியர், ராணி வேலு நாச்சியாருடன்  தப்பி ஓட, ஆங்கிலேயப் படைகள் இந்தக் கோவிலைக் கொள்ளையிட்டு 5000 பகோடாக்கள் (தங்கக்காசுகள் )மதிப்புள்ள கோவில் நகைகளைக் கவர்ந்து கொண்டனர். எனவே இந்தக் கோவில் சிலகாலம் மூடப்பட்டுக் கிடந்தது.

இது, பின்னர் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போதிருந்த தேவகோட்டை ஜமீந்தார் AL.AR.RM அருணாச்சலம் செட்டியார் சந்நியாசம் வாங்கி காளையார்கோவில் வேதாந்த மடத்திலேயே தங்கிவிட்டார். பின்னர் அவர் "ஸ்ரீலஸ்ரீ ஜமின்தார் அருணாச்சல ஞான தேசிக ஸ்வாமிகள்" என்றழைக்கப்பட்டார். அவருடைய சமாதி அந்த மண்டபத்தின் முன்  இருக்கிறது. ஸ்ரீ என்றால் திருமிகு என்று அர்த்தம் ஸ்ரீலஸ்ரீ என்றால் ஆயிரம் திருவுக்குச்சமானம்.

இது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்ததாயினும் அவர்களுடைய அனுமதியின்படி, “தேவகோட்டை ஜமீந்தார் கட்டளை" என்று ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதனை பரம்பரை பரம்பரையாக தேவகோட்டை ஜமீந்தார்கள் நடத்தி வருகின்றனர். தற்போதைய ஜமீந்தார் AL.AR.RM சின்னவீரப்பன் செட்டியார் இந்தக் கட்டளையை கவனித்துவருகிறார்.

இந்தக் கோவிலில் தைப்பூச விழாவில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதென்று சொன்னார்கள். ரதத்தையும் பார்த்தபோதுதான், பள்ளியில் "காளையார் கோவில் ரதம்" என்ற கோவிமணி சேகரன் எழுதிய சிறுகதையைப் படித்தது எனக்கு ஞாபகம்  வந்தது. வைகாசியில் நடக்கும் தெப்பத் திருவிழாவும் புகழ் பெற்றது. காரைக்குடியில் கோவில் பார்க்காத குறையும் நீங்கியது.

வனராஜூக்கு நன்றி சொல்லி, கோவிலின் முன் விற்ற இளநீரை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். "என்ன வனா, மதுரைக்குத் திரும்புகிறோமா", என்று கேட்டேன். "போகும் வழியில் இன்னுமொரு இடம் இருக்கிறது. அதனைப் பார்த்துவிடலாம் என்றார். அது எந்த இடம் என்று கேட்டபோது, 19ஆவது நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பேராலயம் இருக்கும் "இடைக்காட்டூர்" என்றார். வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்.

காரை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்தால், வருகிறது இடைக்காட்டூர் "புனித இருதய நாதர் ஆலயம்". உலகமெங்கிலும் பல கத்தோலிக்க ஆலயங்களைப் பார்த்திருந்தாலும், இந்த கத்தீட்ரல் மிக வித்தியாசமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இது பிரெஞ்சு தேசத்திலிருந்து வந்த பாதிரியார் ஃபெர்டினாண்ட் செலி S.J.(Father Ferdinand Celle.S.J) அவர்களால் 1894-ல் கட்டப்பட்டது. இது காதிக் (Gothic) கட்டடக்கலையில் கட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் பேராலயத்தின் (Reims Cathedral) அதே வடிவத்தில் கட்டப்பட்டதாகும். இது தேவதைகளால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாதிரியார் 153 ஏஞ்சல் வடிவங்களை இங்கு அமைத்திருக்கிறாராம்.

இதில் 200 வகையான செங்கல்கள், ஓடுகள், டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்டெயின் கிளாஸ் என்று சொல்லப்படுகிற வண்ணக்கண்ணாடிகளால் அமைந்த பெரும் ஜன்னல்களும், அவற்றில் வரையப்பட்டிருந்த வெவ்வேறு பைபிள் நிகழ்வுகளும் பிரமிப்பை ஊட்டின. முக்கியமாக அதன் கண்கவர் வண்ணங்கள், சூரிய  ஒளியில் தகதகத்தன. உள்ளே ஸ்டக்கோ (stucco) வால் செய்யப்பட்ட புனிதர்கள் மற்றும் ஏஞ்சல்கள் வண்ணமயமாக இருந்தன. குறிப்பாக இயேசு நாதரின் புனித இருதயத்தை சூழ்ந்திருக்கும் அவரின் தந்தை ஜோசப், தாய் மரியாள் சூழ்ந்த இந்தப் புனித குடும்பத்தின் உருவங்கள் தங்க நிற கில்ட்டால் வண்னம் தீட்டப்பட்டு, ஃபிரென்ச் நாட்டின் கலை நுணுக்கத்திற்கு சாட்சி பகர்ந்தன.

ராமநாதபுர வரலாற்றில் இந்த ஆலயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிழவன் சேதுபதியின் மருமகனான, நமக்கு ஏற்கனவே அறிமுகமான கட்டையத்தேவனை, பாதிரியார் ஜான் டி பிரிட்டோ (St. John de Britto) கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற, கிழவன் சேதுபதி பாதிரியாருக்கு மரணதண்டனை விதிக்கிறான். இந்த நிகழ்ச்சி ஸ்டெயின் கண்ணாடியில் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.


பின்னர் போப் ஆண்டவர் அவர்களால் உயிர்த்தியாகம் செய்த பாதிரியார் ஜான் பிரிட்டோவுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் பலிபீடம் (Altar) மிக அழகாக வடிவமைக்கப்பட்டு,கிறிஸ்துவத்தின் மையக் கருப்பொருளான தந்தையாகிய இறைவன், மைந்தனாகிய இறைவன், தூய ஆவியானவரான இறைவன் ஆகிய மூவரும் ஒருவரே என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பளிச்சிடும் தங்க வண்ணத்தில் சுற்றிலும் ஏஞ்சல்கள் தகதகத்தன.

இப்படி ஒரு மூலையில் இப்படி ஒரு பேராலயம் கட்டப்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். தமிழ்நாடு தன்னுடைய உயர்வான செறிவான நீண்ட வரலாற்றில் எத்தனை எத்தனை நுணுக்கங்களையும், ரகசியங்களையும், அதிசயங்களையும் புதைத்து வைத்திருக்கிறது என்பதை நினைத்து அசந்து போனேன்.

புன்சிரிப்பு மாறாத வனராஜிக்கு நன்றி சொல்லி, மதுரை வந்து சேர்ந்தோம். இந்ததடவை என் மதுரைப் பயணம் மறக்க முடியாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் கொடுத்தது.

சிவகங்கை பயணம் முற்றியது .

விரைவில் எதிர்பாருங்கள் "துருக்கி பயணம்".

பின்குறிப்பு: குறுகிய காலத்தில்  பெருகிய மனதோடு 50,000 ஹிட்கள் பெற உதவி செய்த நண்பர்கள்  அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்.


Thursday, March 20, 2014

முத்து காமிக்ஸ்:ஆதலினால் அதகளம் செய்வீர் !!!!!!!!!!


லார்கோவின் சாகசம்
          வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கியவர் என் தந்தை. ஆறாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி, வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அம்புலி மாமா, (வேதாளர்) கல்கண்டு,  கோகுலம் (பலே பாலு) மஞ்சரி ஆகிய பத்திரிக்கைகள் பழக்கமாயின.
          கொஞ்சம் முன்னேறி தமிழ்வாணன் அறிமுகமானார். துப்பறியும் சங்கர்லாலை மறக்கமுடியுமா? அதன்பின் முத்து காமிக்ஸ். தினமும் அப்பா கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து சேர்த்து வைத்து, தேவதானப்பட்டி மாணிக்கம்பிள்ளை ஏஜென்டிடம் முதலிலேயே சொல்லி  வைத்தால்தான் கிடைக்கும். பின்னர் சுஜாதா வந்தார். அப்புறம் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, லாசாரா, அசோகமித்திரன், கி.ரா.,சுந்தர ராமசாமி,  வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா என்று வாசிப்பு பறந்து விரிந்தாலும் இன்று வரை சுவை குறையாமலிருப்பது சுஜாதாவும் முத்து காமிக்சும்தான். இரண்டுமே மறுவாசிப்பிலும் திகட்டாதவை.
Sujatha 
          அந்தச் சமயத்தில் ஆங்கிலப்படங்களே எனக்கு அறிமுகமாகாத போது, படித்த ஒவ்வொரு முத்து காமிக்சும் ஒரு முழு நீள ஆங்கிலப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும். லைட் ரீடிங்கில்  (Light Reading) காமிக்ஸுக்கு இணை எதுவுமில்லை. ஆங்கில காமிக்ஸில் என்னைக் கவர்ந்தவை எவர்கிரீன் "டின்டின்" காமிக்ஸ். அதன் பின்னர்தான் சூப்பர்மேன், பேட்மேன், ஆஸ்டிரிக்ஸ் எல்லாம். ஆனால் முத்து காமிக்ஸ்தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை  தூண்டியது.
          முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே வெளியீட்டாளர். அதற்கு போட்டியாக வந்த பொன்னி மற்றும் ராணி காமிக்ஸ், தரத்தில் இதற்குப் பக்கத்தில் வரமுடியாது. இவைகளின் அச்சுத்தரம், சிறந்த மொழிபெயர்ப்பு, அட்டைப் படங்கள், மேலும் அச்சுப்பிழை ஒன்று கூட இல்லாத கவனமான  தயாரிப்பு என்பதால் முத்துகாமிக்சின் தரம் இணையற்றது. முல்லை தங்கராசன் பதிப்பாசிரியராக அப்போது பொறுப்பேற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து சுவையான கதைகளை தேர்ந்தெடுப்பதில் தன் தந்தையையும் மிஞ்சிவிட்டார் தற்போதைய உரிமையாளர் விஜயன்.
Muthu Comics Office in Sivakasi
          2 வருடங்களுக்கு முன்னால், மதுரைக்குப் போயிருக்கும்போது, நண்பர் பிரபாவின் காரை எடுத்துக் கொண்டு, சிவகாசிக்குச் சென்று "பிரகாஷ் பப்ளிஷர்" நிறுவனத்தை நேரில் பார்த்து வந்தேன். இன்றும் வெளிநாடு வாழ் ரசிகர்கள் அங்கு வந்து செல்கின்றனர். புத்தக விலைக்கு பல மடங்கு அதிகமாக தபால் செலவு செய்து வரவழைத்துப் படிக்கிறோம். அதோடு முத்து காமிக்ஸின்  பழையனவற்றை பொக்கிஷமாகவே சேர்த்து வைப்பதோடு, அவைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வாசகர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.  
          ஆறாவது படிக்கும்போது, காமிக்ஸ் வாங்கக் காசில்லாத சூழ்நிலையில், வீட்டிலேயே என் தம்பி பெயரில் "பாஸ்கர் நூல் நிலையம்" என்று ஆரம்பித்தேன். என் அப்பாவை நச்சரித்து ஜாதிக்காய் பலகைகளை இணைத்து ஊமை ஆசாரியை வீட்டுக்கே வரவழைத்து ஒரு சிறு பீரோவைச் செய்து வாங்கினேன். (அவர் மரவேலை செய்யும் சத்தம் அவரை ஒன்றுமே செய்யாது . ஆனால் எங்கள் காதுகள் ஒரு வாரத்திற்கு  சரியாக கேட்காது.)   இதில் உறுப்பினர் ஆக விரும்புவர்கள், ஒரு முத்து காமிக்ஸ் புத்தகத்தை நன் கொடையாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ரூபாய் தர வேண்டும். அதன்பின் ஒரு காமிக்ஸை படிக்க 10 பைசா தரவேண்டும். இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி பல காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ந்தன. அவற்றை நானே பைன்டிங்கும் செய்துவிடுவேன். நிறைய நண்பர்கள் உறுப்பினராகி தந்த காமிக்ஸ் புத்தகங்களாலும், கொடுத்த காசில் வாங்கிய புத்தகங்களாலும் நூல்நிலையம் நன்றாகவே வளர்ந்தது.
Johny Neero
          முத்து காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களை என்றைக்கும் மறக்க முடியாது.
 இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ மற்றும் அவரின் அழகிய உதவியாளர் ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, மாடஸ்டி பிளைசீ, ஏஜன்ட் காரிகன் இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். 

இவர்களின் ஆங்கில மூல நூல்களையும் பின்னர் வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். தற்சமயம் என்னிடம் சுமார் 2000 காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கின்றன. 
          முத்து காமிக்சிலிருந்து தற்சமயம் மேகசின் வடிவத்தில் வண்ணத்தில் வெளியிடப்படும் முழுநீள கிராபிக் நாவல்களில் சமீபத்தில் வெளிவந்ததுதான் "லார்கோவின்ச் தோன்றும் "ஆதலினால் அதகளம் செய்வீர்". உரிமையாளர் விஜயன் வெறும்  பதிப்பாளர் மட்டுமல்ல, அவரே ஒரு காமிக்ஸ் ரசிகர். எனவே கதையை தேர்வு செய்வதிலும், சரியான தலைப்பை உருவாக்குவதிலும், அழகான அட்டைப்படத்தை வடிவமைப்பதிலும் அவருடைய உழைப்பு வெளிப்படும்.
          தீடீரென அடித்த அதிர்ஸ்ட்டத்தில் பெரும் பணக்காரனான லார்கோவின்ச், பர்மாவில் மாட்டிக்கொண்ட தன் நண்பனை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் கதை.
          பல எதிர்பாரா திருப்பங்களை உள்ளடக்கிய இந்நாவலின்  மூல ஆசிரியர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிலிப்பே ஃபிராங்க் (Phillipe Franc) அழகான புகைப்படங்கள் போன்ற ஓவியங்களை உருவாக்கியவர் ஜீன் வேன் ஹேம் (Jean Van Hamme)
          மேல்நாட்டு சாகசகங்களை தமிழில் படிக்கும்போது அதன் சுவை தனிச்சுவைதான், நிச்சயமாக ஒரு சிறந்த "ஆக்ஷ ன் திரில்லர்" பார்த்த உணர்வைத்தந்தது.

          முத்து, லயன் மற்றும் தற்போது வந்திருக்கும் சன்ஷைன் லைப்ரரி வெளியீடுகளை வாங்கிப்படித்து இன்புறுங்கள். உங்களை குழந்தைகளாய் மாற்றி குதூகலம் தரும் என்பது நிச்சயம்.

Monday, March 17, 2014

சிவகங்கை பயணம் பகுதி 2: சிவகங்கைச் சீமை


சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் கதையை முன்னரே பார்த்தோம். ஆனால் சிவகங்கை சமஸ்தானம் உருவானது ஒரு சுவாரஸ்யமான வரலாறு இதோ உங்களுக்காக.

சேதுநாடு அல்லது ராமநாதபுரம் சமஸ்தானம், ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதியின் நீண்ட ஆட்சிக் காலத்தில் (1674-1710) பரந்து விரிந்த நாடாக இருந்தது. ராமநாதபுரத்தின் ஏழாவது ராஜாவான இவர் காலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகள் ஒரே நாடாக இருந்தன. சேதுபதி எப்படி புதுக்கோட்டைப் பகுதியை தொண்டைமானுக்கு தாரை வார்த்தாரோ, அதேபோல் சேதுபதிதான் சிவகங்கையையும் கொடுத்தது. 

கிழவன் சேதுபதி மன்னராக இருக்கும்போது, நாலுகோட்டை பெரிய உடையாத்தேவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டி ஆயிரம் போர்வீரர்களுக்குத் தலைவன் ஆக்கினார். அவர்களைப் பராமரிக்க சில ஊர்களையும் தானமாகக் கொடுத்தார். போர் நடக்கும் சமயங்களில் அவர்கள் வந்து உதவ வேண்டும். அதன் பின்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, அவர் மகன் விஜய ரகுநாத சேதுபதி 1710-ல் 8-ஆவது அரசராக முடிசூட்டிக் கொண்டார். அதோடு அவரின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரிய உடையத்தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவரையும் ஆயிரம் போர்வீரர்களுக்கு தளபதியாக நியமித்ததோடு பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம் ஆகிய கோட்டைகளையும் தொண்டி துறைமுகத்தையும் பாதுகாக்க உத்தரவிட்டார்.
அவனுக்குப்பின் அவன் மகன் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி 9ஆவது மன்னராக முடிசூட்டிக்கொண்டான். ஆனால் கிழவன் சேதுபதியின் இரண்டாவது மகன் பவானி சங்கரன், ராம நாதபுரத்தின் மேல் படையெடுத்து வந்து சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியை சிறைப்பிடித்து அடைத்துவிட்டு, ராமநாதபுரத்தின் 10ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் (1726-1729). சுந்தரேஸ்வரின் தம்பி கட்டையத்தேவன் தப்பித்து ஓடி தஞ்சாவூரின் மராட்டிய மன்னர் துலாஜியிடம் அடைக்கலம் புகுந்தான்.  

இதனை சசிவர்னதேவர் எதிர்த்ததால் அவரையும் விரட்டியடித்தான். சசிவர்ண தேவர் தஞ்சாவூர் சென்று தஞ்சைமன்னன், போர்வீரர்களின் வீரத்தைச் சோதிக்க அரண்மனையில் வைத்திருந்த புலியினைக் கொன்று, தன் வீரத்தை நிரூபிக்கிறான். காட்டில் அலையும்போது ஒரு ஞானி அவனுக்கு இதனைப்பற்றி உபதேசம் செய்ததாகக் கேள்வி.

அங்கு ஏற்கனவே அடைக்கலம் புகுந்த கட்டையத்தேவனுடன் நெருக்கமானான். பின்னர் தஞ்சை மராட்டிய மன்னனின் உதவியுடன், பெரும் படையுடன் சென்று 1730-ல் உரையூரில் நடந்த உக்கிரமான போரில் ராமநாதபுரத்தைக் கைப்பற்றி அதன் 11ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான்.
அதன்பின் கட்டையத்தேவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, மூன்று பகுதிகளைத்தனக்கும், 2 பகுதிகளை நாலு கோட்டை சசிவர்ணத் தேவருக்கும் பிரித்துக் கொடுத்தான். அதோடு சிவகங்கையைத் தலைநகராக்கி,  சசிவர்ணத்தேவருக்கு "ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடைத்தேவர்" என்ற பட்டம் கொடுத்து சுயமாக ஆட்சி செய்யும்படி செய்தான். அப்போது பிறந்ததுதான் சிவகங்கைச் சீமை. இவருடைய மகன்தான் முத்துவடுநாத தேவர் என்ற பெயரில் இரண்டாவது ராஜாவாக முடிசூட்டி 1750 முதல் 1772 வரை அரசாண்டார். இவரது மனைவிதான் ராணி வேலு நாச்சியார். அதன்பின் நடத்தவற்றை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
பிரிட்டிஷ் காலத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை இரண்டுமே ஜமீனாக சுருக்கப்பட்டது. D சண்முகராஜா இதன் பரம்பரை பொறுப்பாளராக இருந்து இதனைச் சேர்ந்த 108 கோயில்கள், 22 கட்டணைகள் மற்றும் 20 சத்திரங்களை நிர்வகித்து வந்தார். இவருக்குப்பின் இவர் மகன் D.S.கார்த்திகேய வெங்கடாசலபதி  ராஜா பொறுப்போற்றார். இவர் 1986-ல் இறந்து போகும் போது அவர் மகளான திருமதி.மதுராந்தகி நாச்சியாரை வாரிசாக நியமித்து, இப்போது இவர்தான் நிர்வகித்து வருகிறார்.

இதுதான் அரண்மனை வாசல் என்றார் வனராஜ். எங்கே எங்கே என்று பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ஒரே கடைகளும் விளம்பரப் பலகைகளும்தான் இருந்தன. வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் சிலை மட்டும் முன்னால் இருந்தது. அதில் சிவகங்கையின் வீர வரலாறு சுருக்கமாக இருந்தது. அரண்மனையின் முன்பகுதி வாசலின் இருபுறங்களும் கடைகள் சூழ்ந்து முகப்பின் அழகை மறைத்தன. வனாவின் நண்பர் ஒருவரின் உதவியால் திட்டிவாசலைத் திறந்து பார்த்தேன். உள்ளே சிறிது தொலைவில் பழைய கட்டடம் ஒன்று இருந்தது. வாரிசுகள் இன்னும் அங்கே வசித்து வருவதாகச் சொன்னார்கள். வரலாற்று முக்கிய இடங்களை நாம் பராமரிப்பதும் இல்லை, பாதுகாப்பதும் இல்லை. வனாவின் நண்பர் சொன்னார், "நீங்க முதலிலேயே வருவது தெரிந்திருந்தால் உள்ளே போக அனுமதி வாங்கி வைத்திருப்பேன்" என்று.  “பரவாயில்லை திடீரென்று தான் கிளம்பி வந்தோம்”, என்றேன்.

சற்றுத் தொலைவில் மியூசியம் ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள். வழி கேட்டுப்போய்ச் சேர்ந்தோம். பலருக்கும் தெரியவில்லை. சென்று பார்த்தால் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் பழுதுபட்ட ஒரு கட்டடத்தில் அந்த மியூசியம் இயங்கி வருகிறது. ஒரே ஒரு சிறிய கூடம், அவ்வளவுதான். கட்டணம் ரூ.5 என்று நினைக்கிறேன். செலுத்தி உள்ளே சென்றால் ஒரே தூசியும் குப்பையுமாக இருந்தது. அதிலே சிவகங்கை அரசவாரிசுகள் பயன்படுத்திய பல பொருட்கள் இருந்தன. ஒன்றும்  சரியில்லை, வெளியே வந்துவிட்டோம்.


"ஆல்ஃபி அடுத்து காளையர்கோவில் போகலாம்" என்றார், வனா. காளையர்கோவில் ரதம் என்று கோவி.மணிசேகரன் எழுதிய சிறுகதை ஒன்றை சின்ன வயதில் படித்ததிலிருந்து, அதனைப்பார்க்க வேண்டும் என்று வெகு நாள் ஆசை. இதோ சில நிமிடங்களில் அந்தக் கனவு நிறைவேறவிருக்கிறது.

தொடரும் >>>>>>>>>>>>>>

Wednesday, March 12, 2014

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் !!!!!!!!!!



நண்பர்களே ,
கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணமாலை" பட்டிமன்ற நிகழ்ச்சியில் அடியேன் பேசின பகுதியை இங்கே தருகிறேன்.
பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.