Monday, March 10, 2014

சிவகங்கை பயணம் பகுதி 1: விக்கு விநாயக்ராமின் விக்கு !!!!!!!!!!


              காரைக்குடி பயணத்தை நல்ல படியாக முடித்த மகிழ்ச்சியோடு, நேராக மதுரை கோணார் கடைக்குச் சென்று, மட்டன் தோசையை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று முழுவதும் திகட்டத்திகட்ட பல இடங்களை பார்த்த திருப்தியோடு, படுக்கைக்குச் சென்றேன்.     மருதுபாண்டியும், தொண்டைமானும், சேதுபதியும் மாறி மாறி நினைவில் வந்து போக, நாட்டைக் கொடுக்குமளவுக்கு இந்தக் "கதலி  நாச்சியார்" எவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்.
          அடுத்த நாள் காலையில் எட்டுமணிக்கு டான் என்று வந்து சேர்ந்தார் வனராஜ். நான் அமெரிக்கன் கல்லூரி “வாஷ்பர்ன் ஹாலில்" தங்கியிருக்கும்போது, வனா "வேலஸ் ஹாலின்" ஜெனரல் செக்ரட்டரி. எங்களுடைய கல்லூரி இசைக்குழுவில் SPB குரலில் பாடுபவர். இப்போது "மனிதம்" என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் சிறந்த சமூக சேவை செய்வதோடு, ஃபோர்டு நிறுவனத்தின் விருதைப்பெற்று, அசால்ட்டாக அடிக்கடி அமெரிக்கா வந்து செல்பவர். நியூயார்க் வந்தால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டில் வந்து தங்குவார்.
vanaraj in Columbia University, New York
          அவருடைய மாருதி ஜென்னில், அவர் மனைவி முன்னால் அமர்ந்து கொள்ள, நானும் வனாவும் பின்னால் உட்கார்ந்து கொண்டோம். "ஓ அக்காவும் நம்மோடு வருகிறார்களா", என்று கேட்டபோது வனராஜ் சொன்னார்.
          “ஆல்ஃபி, உனக்குத்தான் தெரியுமே, இவள் மானாமதுரையில்தான் இன்னும் வேலை செய்கிறாள். டெய்லி பஸ்ஸில் போய்விடுவாள். நாம் அந்தப்பக்கம் போவதால் வந்து ஒட்டிக்கொண்டாள்", என்றார்.
          அப்போதுதான் ஞாபகம் வந்தது, வனராஜ் மானாமதுரை சி.எஸ்.ஐ பள்ளியின் ஹாஸ்டலில் வார்டனாக இருக்கும்போது, அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருந்த அக்காவை கடினமான மனப்பயிற்சி செய்து காதல் கடிமணம் செய்து கொண்டார்.
வனராஜ் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பவர். பல பழைய காரியங்களை பேசிச்சிரித்துக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வண்டி மானாமதுரை சென்றடைந்தது. டிரைவர் நடுத்தர வயதில் அமைதியானவர். அக்காவை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு, கிளம்பினோம்.
          மானமதுரையின் மண்பாண்டங்கள் மிகவும் புகழ் வாய்ந்தது என்றார் வனா. மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் மற்றும்  அரண்மனைகளைப் பார்க்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மண்பானை சட்டிகளைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன் என்று மனதில் நினைத்தாலும், ஒன்றும் பேசாமல் அவருடன் சென்றேன்.

          அவர் அழைத்துச்சென்றது, செம்மண் பொருட்களை செய்துவிற்கும் கூட்டுறவுச் சங்கத்திற்கு. அங்கு போனபின்தான் தெரிந்தது, அது எவ்வளவு பாப்புலர் இடமென்று. சற்று நேரத்தில் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் வந்தது. பின் வடநாட்டார்.  
          அங்கு செய்யப்படும் டெரக்கோட்டா வகை அலங்கார சிற்பங்கள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிறியவை முதல் பெரியவை வரை திடமாக இருந்தன. குறிப்பாக குதிரைகள் மிக அழகாக இருந்தன, வாங்கிக்கொண்டேன். அது தவிர பூச்செடிகள் வைக்கப்பயன்படும் சட்டிகள் வெவ்வேறு சைசில் இருந்தன.

          அதுமுடித்து இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்குதான் கடம் செய்கிறார்கள். மானாமதுரை கடம் என்பது உலகத்திலேயே நம்பர் ஒன்னாம். ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறது. நம்ம விக்கு விநாயக்ராம்  கடம் வாசித்துத்தான் உலகப்புகழ் அடைந்தார். 
விக்கு விநாயக்ராம்
கிராம்மி  அவார்ட் கூட வாங்கியிருக்கிறார்.அவர் தலையைப்பார்த்தா விக்கு வைக்கிற மாதிரி தெரியலயே ஏன் அவர் பெயர் “விக்கு விநாயக்ராம் ” என்று வந்ததுன்னு கலிபோர்னியா விசு கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. அவரும் அவர் மகன்களும் அங்குதான் கடம் வாங்குகிறார்களாம். மானாமதுரையின் செம்மண்ணுக்கு இப்படி ஒரு பெருஞ்சிறப்பு இருப்பது எனக்கு ஏற்கனவே தெரியாது. மண்பானையில் எப்படி இப்படி கிண்கிணி நாதம் எழுகிறது என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அவர்களைக் கேட்டவுடன் தான் விஷயமே புரிந்தது. நல்ல ஜாதி களிமண்ணில்  (இதுலயும் ஜாதியா?) சிறிது வெங்கலம் அல்லது தாமிரம் (Copper) மற்றும் சிறிதளவு இரும்பும் கலந்து தயார் பண்ணுகிறார்கள். மற்ற சில இடங்களிலும் இது தயாரிக்கப் பட்டாலும் உலகத்திலேயே சிறந்த நாதம் வருவது மானாமதுரை கடத்தில் தானாம். அதிகப்பேர் பயன்படுத்தாதலால் இதனை தயாரிக்கும் குடும்பங்களின் வாரிசுகள் வேறு வேறுவேலைக்குச் சென்றுவிடுவதால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் அப்படியே அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.
          அடுத்து சிவகங்கைதான், ஆனா சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார் வனா. திரும்பவும் சி.எஸ்.ஐ வளாகத்தின் உள்ளே சென்று வனாவின் மனைவியின் சகோதரி வீட்டிற்குச் சென்றோம். (இந்த அக்காக்கள் தொல்லை தாங்க முடியலப்பா) அவர்களும் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்கள்.
          "பள்ளி நாளில் அவர்களை எதற்கு தொந்தரவு செய்தீர்கள்," என்று வனாவைக் கேட்டேன்.
                      அவர் வீட்டில் சாப்பாடு சுவை நன்றாகவே இருந்தது. ஆட்டுக்கறியை மிகவும்  சின்ன சின்னதாக நறுக்கி, முருங்கை மற்றும் கத்தரிக்காய் போட்டு குருமா வைத்திருந்தார்கள். மணமாக நன்றாக இருந்ததால் ஒரு பிடி பிடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினோம்.
          போகும் வழியில் வனாவின் மனிதம் அலுவலகத்திற்குச் சென்று அங்கு வேலை செய்யும் சமூகப் பணியாளர்களுடன் சிறிது கலந்துரையாடல் செய்து சமூகப் பணியில் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். வனராஜ் ஒரு சில வேலைகளை முடித்துக் கொண்டு வந்தார்.
          கார் நேராக சிவகங்கை செல்லும் சாலையில் விரைந்தது. சிவகங்கை மறவர் சீமைக்குச்  செல்வதை நினைத்து என் தேகம் சிலிர்த்தது.

தொடரும் 


Thursday, March 6, 2014

மனம் ஒரு குரங்கு! மனித மனம் ஒரு குரங்கு!


·        படிக்க புத்தகம் எடுத்தால் கொட்டாவி வருதா?
·        பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் நபரின் சட்டையில் அல்லது கோட்டில் நூல் ஏதாவது தொங்கிக் கொண்டிருந்தால் அதை இழுக்க வேண்டும் என்று நினைப்பு வருதா?
·        உங்கள் விரல்களை அதே கையில் உள்ள பெருவிரலால் எண்ணும் பழக்கமிருக்கா?. குறிப்பாக பாக்கெட்டில் கைவிட்டு எண்ணும்போது ஒரு விரல் குறைவது போல தோணி, படாரென்று கையை எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா?
·        பக்கத்தில் அல்லது எதிரில் உட்கார்ந்திருப்பவருக்கு ஏதாவது மச்சம் அல்லது மரு இருந்தால், தொட்டுப்பாக்கத் தோனுதா?
·        பஸ்ஸில் அல்லது ரயிலில் போகும்போது முன்னால் நின்று கொண்டிருக்கும் பெண்ணின் சடையை அல்லது கூந்தலை லேசாக இழுத்துப்பார்க்கனும்னு தோனுதா?
·        தெருவில் ஏதாவது கல்லை அல்லது உருண்டையாக ஏதாவது கிடந்தால் காலால் எத்திவிட மனசு துடிக்கிறதா?
·        பிறருடைய வீட்டுக்குச் சென்றால் அங்குள்ள ஏதாவது சின்னப்பொருளை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொள்ள ஆசையா இருக்கா?
·        கடிகாரத்தின் டிக்டிக் சத்தத்தோடு சேர்ந்து தாளம் போட ஆசையா இருக்கா?
·        புத்தகம் படிக்கும்போது, பத்து பக்கம் படித்தும் ஒண்ணும் விளங்காமல், மறுபடியும் முதலிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறீர்களா?
·        நகத்தை வெட்டும்போது சதையை வெட்டிவிடுவோம் எனப் பயப்பட்டிருக்கிறீர்களா?
·        உயரத்தில் இருந்து கீழே பார்க்கும்போது, விழுந்து பார்த்தால் என்ன என்று தோன்றுகிறதா?
·        ரெஸ்டாரண்ட் செல்லும்போது, பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து, அதையே ஆர்டர் செய்கிறீகளா? 
·        க்ரைம் நாவல் படிக்கும்போது பாதியிலேயே முடிவைப் படித்துவிடுவீர்களா?
·        வானத்தில் மேகங்களைப் பார்க்கும்போது அது ஏதாவது உருவங்கள் போலத் தெரிகிறதா?
·        உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் ஏற்கனவே நடந்தது போலத் தோன்றுகிறதா?
·        எந்தக் காரணமும் இல்லாமல் சில பேரைப் பிடிக்கவில்லையா?
 
மேற்கண்ட கேள்விகளில்   பலவற்றிற்கு அல்லது சிலவற்றிற்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் எனக்கும் இப்படியெல்லாம் தோன்றுகிறது.


பின்குறிப்பு 
கடந்த  இரு ஞாயிற்றுக்கிழமைகளாக  சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கல்யாண மாலை பட்டிமன்றத்தில்  இந்த வாரம் அடியேன் பேசிய பகுதி  வருகிறது .

Monday, March 3, 2014

சீறி வரும் பாம்பும்!!!!!!!!!!! சிரித்து வரும் பெண்ணும்!!!!!!!!!!!!

டிசம்பர் 1976, தேவதானப்பட்டி
       அதிகாலை சிலுசிலுவென்று குளிர் அடித்தது. கொடைக்கானலிலிருந்து இறங்கிய குளிர்காற்று கீழே மஞ்சளாறை தழுவிவிட்டு வீட்டுக்குள் வந்திருக்குமோ என எரிச்சலாய் இருந்தது. அதன் அடிவாரத்தில்தான் என் அழகிய கிராமம். காலை வெளிச்சம் வந்துவிட்டது என்பது என் கண்களைத்திறக்காமலே தெரிந்தது. உள்ளே ஈரச்சாம்பல் அலுமினியப் பாத்திரங்களை உரசும் சத்தம் சரக் சரக் சரக் என்று கேட்டது. அம்மா பாத்திரங்களை விளக்கும் சத்தம். 



       சில்லிட்ட கால்களை மூட போர்வையை எடுத்து காலில் உதைத்து போர்த்த முயன்றேன். போர்வை எட்டவில்லை. உதைத்து உதைத்துப் பார்த்துவிட்டு, முடியாமல் வேண்டா வெறுப்பாக கண்களைத் திறந்து போர்வையை தூக்கிப்பார்த்தேன். அது என்ன பளபளவென்று? மீண்டும் போர்வையை உயர்த்தி உற்றுப் பார்த்தேன். "அ...ம்....மா பா...ம்...பு".  என் கத்தலைக் கேட்டு அம்மா விரைவாக ஓடிவந்து பார்க்க ஒரு சிறிய நல்ல பாம்பு படத்தைத் தூக்கி நிற்க, விளக்கமாற்றை எடுத்து ஒரேபோடு. எனக்கு குளிர்போய் வேர்த்துவிட்டது. அதனை அப்படியே ஒரு குச்சியில் எடுத்து வெளியே போய் சாக்கடையில் எறிந்துவிட்டு அம்மா உள்ளே வர, "வெளியே" போயிருந்த அப்பாவும் வந்து சேர்ந்தார். நான் எட்டாவது படிக்கும் சமயம் என்று ஞாபகம். என் தம்பிகள் இருவரும் நடந்தது ஒன்றும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மகேந்திரன்தான் "ஏண்டிவில்லா குட்டியை கொன்னுட்டேயில்ல, தாய்ப்பாம்பு உன்னை சும்மாவிடாது" என்று பயமுறுத்தியதால், தொடர்ந்து பாம்புக் கனவுகள் வந்து தொல்லை கொடுத்தது. அம்மா பள்ளிவிட்டு வந்து வீட்டைச் சுத்தமாக பெருக்கி எடுத்து, சமையலறையில் சாணி போட்டு மெழுகி, வீடு பூரா சாம்பிராணிப் புகை போட்டார்கள்.
ஜனவரி 1978 அரசு மேல் நிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
       பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அறிவியல் பரீட்சைக்குப் படிப்பதற்காக காலையில் நான் சீக்கிரம் வகுப்புக்குச் சென்று படிக்கச் சென்றேன் .  என் பெஞ்சின் கீழ் (அப்பல்லாம் முன் வரிசை  பெஞ்ச்தான்) உள்ள கட்டையில் சுற்றிக்கொண்டிருந்தது  ஒரு பாம்பு. என்ன பாம்பு என்று ஆராயாமல்,  அட்டண்டரை கூப்பிட்டு வந்து பார்த்தால் பாம்பைக்காணோம். தாய்ப்பாம்புதான் என்னைத் தேடி வந்திருக்குமோ என்று ஒரே திகிலாய் இருந்தது?

மார்ச் 1980 தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, காந்திகிராமம்
       வழக்கம்போல் காலை 4.30க்கு எழுந்து,( ப்ளீஸ் நம்புங்க )  கூட்டு வழிபாடு முடித்தோம். அதன் பின் 5 மணி முதல் 6 மணி வரை, ஸ்டடி டைம் முடித்து சுகாதார மந்திரியான நான் என் குழுவைக் கூப்பிட்டுக் கொண்டு, ஹாஸ்டலைச் சுற்றிப் பெருக்கப் போனேன்.( ஆஹா சுகாதார மந்திரின்னா பெருக்கிற வேலையா , இது நல்லா  இருக்கே    , டே சும்மா இர்றா) அங்கே மரத்தடியில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு படுத்திருந்தது ஒரு பாம்பு. எடுத்தேன் ஒரே ஓட்டம். என்னோட மந்திரி சபை உறுப்பினர்கள்தான் அதை அடித்துப்  போட்டதை அப்புறம் வந்து சொன்னாங்க. அப்போதுதான் மகேந்திரன் சொன்னது உண்மையோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது.

நவம்பர் 1983 வாஷ்பர்ன் ஹால் - அமெரிக்கன் கல்லூரி, மதுரை
       ஒருநாள் இரவு வாட்ச்மேன் ராஜேந்திரனிடம் கண்ணைக் காட்டிவிட்டு (2 ரூபாய் லஞ்சம்) நானும் ராமராஜூம் இரவுக்காட்சி “நீயா?” பார்த்துவிட்டு திரும்பும்போது, நன்றாக வளர்ந்திருந்த ஒரு பாம்பு சரசரத்து குறுக்கே சென்றது. விதிர்விதிர்த்து விட்டேன். "ஏண்டா பாம்புக்கு இவ்வளவு பயப்படுற”, என்று கடிந்து கொண்டான் ராமராஜ்.  அவனுக்கு நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது. இச்சாதாரிப் பாம்போ என்று திகிலாய் இருந்தது.  
       அப்போதுதான் ஒரு நாள் ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்ததைப் பார்த்தேன். "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்று. ஆசிரியர் கொடுக்கிற அட்வைசையே கேட்கமாட்டோம் , இந்த ஆட்டோக்காரன்   அறிவுரையை கேட்போமா  நாங்க.

ஜனவரி-1987 காதுகேளாதோர் பள்ளி, சிவகாசி.
       என் முதல்வேலையான இங்கு, ஒரு நாள், இரவு உணவை முடித்துக் கொண்டு என் சைக்கிளில் என்னுடைய வீடு, இல்லை, ரூம், அதுவுமில்லை ஷெட் என்று வைத்துக் கொள்ளலாம். அப்போதெல்லாம் பேச்சலர்களுக்கு வீடு  கிடைக்காது? இப்போது அவர்களுக்கு மட்டும்தான் வீடு கிடைக்குதாம் என்ன அநிநாயம் பாருங்க. வேலை முடித்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது,  சாட்சியாபுரம் சுடுகாட்டைத்தாண்டி ,பளபளவென்று ஆமாம், பார்த்துவிட்டேன். பாம்பேதான் .சரசரவென்று சத்தம் கேட்க, துரத்துகிறதோ என்ற பயத்தில் பெடலை ஓங்கி மிதித்துப் பின் கால்களை பாரில் வைத்துக் கொண்டு ரூம் வந்து சேர்ந்தேன். அன்று  இரவு  முழுவதும் நாகராஜன் கனவில் தொல்லைகள் கொடுத்தான். அந்த வேலையை அத்தோடு விட்டு விட்டு கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள மாதேப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன்.
ஜூன் 1988 - நற்கனி சமுதாயத்திட்டம் ,வேர்ல்ட் விஷன் ஆஃப் இந்தியா
       தங்கியிருந்த பழைய சாராயக்கடையில் (வேறு ஒண்ணும் கிடக்கல)அந்தப்புரம் இந்தப்புறம் என்று சுற்றிலும் மாந்தோப்புகள். எனவே பாம்புகள் அதிகம். இரவில் வரும்போது கேன்வாஸ் ஸ்னீக்கர்களை வலுவாக தட்டிக் கொண்டுதான் வரவேண்டும். பாம்புகள் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை . பக்கத்து கிராமங்களில் வாரத்திற்கு ரெண்டு பேராவது பாம்பு கடித்து செத்துவிடுவார்கள். காலைக்கடன் முடிக்க வெளியே போகும்போது பாம்புகளோடு தான் வாக்கிங். கழுவுவதற்கு கிணற்றில் கற்படிக்கட்டுகளில் இறங்கினால், கடைசி இரண்டு மூணு படிக்கட்டில் காலைத்தட்டி சத்தமிடும் போது, பாம்புகள் நீருக்குள் இறங்க, பதட்டத்துடன் கழுவியும் கழுவாமலும் (கருமம்டா சாமி)வந்துவிடுவேன். வேர்ல்ட் விஷன், பாம்புக்கடிக்கு ஊசிபோட எங்களுக்கு டிரைனிங் கொடுத்தது. வேண்டாமென்று சென்னை வந்தேன்.
நவம்பர் 2000  வேளச்சேரி, சென்னை
       சல்லிசா கிடைக்குதுன்னு வாங்கிட்டேன். ஆனா மழைக்காலம் வந்தால் வேளச்சேரி தண்ணீர்ச்சேரி ஆகி எங்கள் வீடு மிதக்கும். பாம்புகள் நீந்தி விளையாடி மகிழும். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 'மலரும் நினைவுகள்' பார்க்க குட்டிப்பாம்பு ஒன்று வந்தது. நடுஹாலில் படம் எடுத்து அசையாமல் இருக்க, பக்கத்து வீட்டுக்கார நாயுடு மனைவி வந்து பயபக்தியுடன் ஆரத்தி எடுத்தார்கள். பார்த்தால் அந்த சின்ன வயது போர்வையில் பார்த்த அதே சைஸ், அதே படம். வீட்டுக்கு வந்திருந்த என் மனைவியின் பெரியம்மா பெண் பரிமளா ஏய் கொஞ்சம் இரு இருன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பொடேரென்று போட்டு கொன்றுவிட்டாள். நாயுடு மனைவி ஏதோ தெலுங்கில் திட்டிவிட்டு, புதைத்து சிறிய சமாதி எழுப்பி, ஊதுபத்தியெல்லாம் பொருத்தி  வைத்தார். அப்போதுதான் பார்த்தேன் அருகில் ஏரிபோல் தேங்கியிருந்த தண்ணியில் ஒரு பாம்பு எட்டிப்பார்க்க, என் தம்பி கல்லை விட்டு எறிய என்னைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நீந்திச்சென்றது. தாய்ப்பாம்புதான் என்று நாயுடம்மா சத்தியம் பண்ணினாள்.
தப்பித்து நியூயார்க் வந்தவுடன் இங்கெல்லாம் பாம்புகளே இல்லையென்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
Add caption
மார்ச் 2014, நியூயார்க்
       நேற்று அதிகாலையில் குப்பை எடுத்துவைக்க வெளியே வந்தபோது, பக்கத்து வீட்டு ஆப்பிரிக்க சகோதரர் எதையோ கவலையோடு தேடிக்கொண்டிருந்தார். அவர் வீட்டில் நிறைய செல்லப்பிராணிகள் வளர்த்து வருகிறார். குட்மார்னிங் சொல்லி "என்ன தேடுகிறீர்கள்" என்று கேட்டேன் .”என் பாம்பை”, என்று சர்வ சாதரணமாச் சொன்னார்.


முற்றியது.