Monday, March 3, 2014

சீறி வரும் பாம்பும்!!!!!!!!!!! சிரித்து வரும் பெண்ணும்!!!!!!!!!!!!

டிசம்பர் 1976, தேவதானப்பட்டி
       அதிகாலை சிலுசிலுவென்று குளிர் அடித்தது. கொடைக்கானலிலிருந்து இறங்கிய குளிர்காற்று கீழே மஞ்சளாறை தழுவிவிட்டு வீட்டுக்குள் வந்திருக்குமோ என எரிச்சலாய் இருந்தது. அதன் அடிவாரத்தில்தான் என் அழகிய கிராமம். காலை வெளிச்சம் வந்துவிட்டது என்பது என் கண்களைத்திறக்காமலே தெரிந்தது. உள்ளே ஈரச்சாம்பல் அலுமினியப் பாத்திரங்களை உரசும் சத்தம் சரக் சரக் சரக் என்று கேட்டது. அம்மா பாத்திரங்களை விளக்கும் சத்தம். 



       சில்லிட்ட கால்களை மூட போர்வையை எடுத்து காலில் உதைத்து போர்த்த முயன்றேன். போர்வை எட்டவில்லை. உதைத்து உதைத்துப் பார்த்துவிட்டு, முடியாமல் வேண்டா வெறுப்பாக கண்களைத் திறந்து போர்வையை தூக்கிப்பார்த்தேன். அது என்ன பளபளவென்று? மீண்டும் போர்வையை உயர்த்தி உற்றுப் பார்த்தேன். "அ...ம்....மா பா...ம்...பு".  என் கத்தலைக் கேட்டு அம்மா விரைவாக ஓடிவந்து பார்க்க ஒரு சிறிய நல்ல பாம்பு படத்தைத் தூக்கி நிற்க, விளக்கமாற்றை எடுத்து ஒரேபோடு. எனக்கு குளிர்போய் வேர்த்துவிட்டது. அதனை அப்படியே ஒரு குச்சியில் எடுத்து வெளியே போய் சாக்கடையில் எறிந்துவிட்டு அம்மா உள்ளே வர, "வெளியே" போயிருந்த அப்பாவும் வந்து சேர்ந்தார். நான் எட்டாவது படிக்கும் சமயம் என்று ஞாபகம். என் தம்பிகள் இருவரும் நடந்தது ஒன்றும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மகேந்திரன்தான் "ஏண்டிவில்லா குட்டியை கொன்னுட்டேயில்ல, தாய்ப்பாம்பு உன்னை சும்மாவிடாது" என்று பயமுறுத்தியதால், தொடர்ந்து பாம்புக் கனவுகள் வந்து தொல்லை கொடுத்தது. அம்மா பள்ளிவிட்டு வந்து வீட்டைச் சுத்தமாக பெருக்கி எடுத்து, சமையலறையில் சாணி போட்டு மெழுகி, வீடு பூரா சாம்பிராணிப் புகை போட்டார்கள்.
ஜனவரி 1978 அரசு மேல் நிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
       பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அறிவியல் பரீட்சைக்குப் படிப்பதற்காக காலையில் நான் சீக்கிரம் வகுப்புக்குச் சென்று படிக்கச் சென்றேன் .  என் பெஞ்சின் கீழ் (ப்பல்லாம் முன் வரிசை  பெஞ்ச்தான்) உள்ள கட்டையில் சுற்றிக்கொண்டிருந்தது  ஒரு பாம்பு. என்ன பாம்பு என்று ஆராயாமல்அட்டண்டரை கூப்பிட்டு வந்து பார்த்தால் பாம்பைக்காணோம். தாய்ப்பாம்புதான் என்னைத் தேடி வந்திருக்குமோ என்று ஒரே திகிலாய் இருந்தது?

மார்ச் 1980 தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, காந்திகிராமம்
       வழக்கம்போல் காலை 4.30க்கு எழுந்து,( ப்ளீஸ் நம்புங்க )  கூட்டு வழிபாடு முடித்தோம். அதன் பின் 5 மணி முதல் 6 மணி வரை, ஸ்டடி டைம் முடித்து சுகாதார மந்திரியான நான் என் குழுவைக் கூப்பிட்டுக் கொண்டு, ஹாஸ்டலைச் சுற்றிப் பெருக்கப் போனேன்.( ஆஹா சுகாதார மந்திரின்னா பெருக்கிற வேலையா , இது நல்லா  இருக்கே    , டே சும்மா இர்றா) அங்கே மரத்தடியில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு படுத்திருந்தது ஒரு பாம்பு. எடுத்தேன் ஒரே ஓட்டம். என்னோட மந்திரி சபை உறுப்பினர்கள்தான் அதை அடித்துப்  போட்டதை அப்புறம் வந்து சொன்னாங்க. அப்போதுதான் மகேந்திரன் சொன்னது உண்மையோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது.

நவம்பர் 1983 வாஷ்பர்ன் ஹால் - அமெரிக்கன் கல்லூரி, மதுரை
       ஒருநாள் இரவு வாட்ச்மேன் ராஜேந்திரனிடம் கண்ணைக் காட்டிவிட்டு (2 ரூபாய் லஞ்சம்) நானும் ராமராஜூம் இரவுக்காட்சி “நீயா?” பார்த்துவிட்டு திரும்பும்போது, நன்றாக வளர்ந்திருந்த ஒரு பாம்பு சரசரத்து குறுக்கே சென்றது. விதிர்விதிர்த்து விட்டேன். "ஏண்டா பாம்புக்கு இவ்வளவு பயப்படுற”, என்று கடிந்து கொண்டான் ராமராஜ்.  அவனுக்கு நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது. இச்சாதாரிப் பாம்போ என்று திகிலாய் இருந்தது.  
       அப்போதுதான் ஒரு நாள் ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்ததைப் பார்த்தேன். "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்று. ஆசிரியர் கொடுக்கிற அட்வைசையே கேட்கமாட்டோம் , இந்த ஆட்டோக்காரன்   அறிவுரையை கேட்போமா  நாங்க.

ஜனவரி-1987 காதுகேளாதோர் பள்ளி, சிவகாசி.
       என் முதல்வேலையான இங்கு, ஒரு நாள், இரவு உணவை முடித்துக் கொண்டு என் சைக்கிளில் என்னுடைய வீடு, இல்லை, ரூம், அதுவுமில்லை ஷெட் என்று வைத்துக் கொள்ளலாம். அப்போதெல்லாம் பேச்சலர்களுக்கு வீடு  கிடைக்காது? இப்போது அவர்களுக்கு மட்டும்தான் வீடு கிடைக்குதாம் என்ன அநிநாயம் பாருங்க. வேலை முடித்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போதுசாட்சியாபுரம் சுடுகாட்டைத்தாண்டி ,பளபளவென்று ஆமாம், பார்த்துவிட்டேன். பாம்பேதான் .சரசரவென்று சத்தம் கேட்க, துரத்துகிறதோ என்ற பயத்தில் பெடலை ஓங்கி மிதித்துப் பின் கால்களை பாரில் வைத்துக் கொண்டு ரூம் வந்து சேர்ந்தேன். அன்று  இரவு  முழுவதும் நாகராஜன் கனவில் தொல்லைகள் கொடுத்தான். அந்த வேலையை அத்தோடு விட்டு விட்டு கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள மாதேப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன்.
ஜூன் 1988 - நற்கனி சமுதாயத்திட்டம் ,வேர்ல்ட் விஷன் ஆஃப் இந்தியா
       தங்கியிருந்த பழைய சாராயக்கடையில் (வேறு ஒண்ணும் கிடக்கல)அந்தப்புரம் இந்தப்புறம் என்று சுற்றிலும் மாந்தோப்புகள். எனவே பாம்புகள் அதிகம். இரவில் வரும்போது கேன்வாஸ் ஸ்னீக்கர்களை வலுவாக தட்டிக் கொண்டுதான் வரவேண்டும். பாம்புகள் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை . பக்கத்து கிராமங்களில் வாரத்திற்கு ரெண்டு பேராவது பாம்பு கடித்து செத்துவிடுவார்கள். காலைக்கடன் முடிக்க வெளியே போகும்போது பாம்புகளோடு தான் வாக்கிங். கழுவுவதற்கு கிணற்றில் கற்படிக்கட்டுகளில் இறங்கினால், கடைசி இரண்டு மூணு படிக்கட்டில் காலைத்தட்டி சத்தமிடும் போது, பாம்புகள் நீருக்குள் இறங்க, பதட்டத்துடன் கழுவியும் கழுவாமலும் (கருமம்டா சாமி)வந்துவிடுவேன். வேர்ல்ட் விஷன், பாம்புக்கடிக்கு ஊசிபோட எங்களுக்கு டிரைனிங் கொடுத்தது. வேண்டாமென்று சென்னை வந்தேன்.
நவம்பர் 2000  வேளச்சேரி, சென்னை
       சல்லிசா கிடைக்குதுன்னு வாங்கிட்டேன். ஆனா மழைக்காலம் வந்தால் வேளச்சேரி தண்ணீர்ச்சேரி ஆகி எங்கள் வீடு மிதக்கும். பாம்புகள் நீந்தி விளையாடி மகிழும். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 'மலரும் நினைவுகள்' பார்க்க குட்டிப்பாம்பு ஒன்று வந்தது. நடுஹாலில் படம் எடுத்து அசையாமல் இருக்க, பக்கத்து வீட்டுக்கார நாயுடு மனைவி வந்து பயபக்தியுடன் ஆரத்தி எடுத்தார்கள். பார்த்தால் அந்த சின்ன வயது போர்வையில் பார்த்த அதே சைஸ், அதே படம். வீட்டுக்கு வந்திருந்த என் மனைவியின் பெரியம்மா பெண் பரிமளா ஏய் கொஞ்சம் இரு இருன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பொடேரென்று போட்டு கொன்றுவிட்டாள். நாயுடு மனைவி ஏதோ தெலுங்கில் திட்டிவிட்டு, புதைத்து சிறிய சமாதி எழுப்பி, ஊதுபத்தியெல்லாம் பொருத்தி  வைத்தார். அப்போதுதான் பார்த்தேன் அருகில் ஏரிபோல் தேங்கியிருந்த தண்ணியில் ஒரு பாம்பு எட்டிப்பார்க்க, என் தம்பி கல்லை விட்டு எறிய என்னைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நீந்திச்சென்றது. தாய்ப்பாம்புதான் என்று நாயுடம்மா சத்தியம் பண்ணினாள்.
தப்பித்து நியூயார்க் வந்தவுடன் இங்கெல்லாம் பாம்புகளே இல்லையென்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
Add caption
மார்ச் 2014, நியூயார்க்
       நேற்று அதிகாலையில் குப்பை எடுத்துவைக்க வெளியே வந்தபோது, பக்கத்து வீட்டு ஆப்பிரிக்க சகோதரர் எதையோ கவலையோடு தேடிக்கொண்டிருந்தார். அவர் வீட்டில் நிறைய செல்லப்பிராணிகள் வளர்த்து வருகிறார். குட்மார்னிங் சொல்லி "என்ன தேடுகிறீர்கள்" என்று கேட்டேன் .”என் பாம்பை”, என்று சர்வ சாதரணமாச் சொன்னார்.


முற்றியது.

Thursday, February 27, 2014

முதல் ரேடியோ பெட்டி

       அன்னிக்கு ராத்திரி தூக்கமே வரல. ஏன்னா அடுத்த நாள் எங்கப்பா தேனிக்குப்போய் ரேடியோ வாங்கப்போறார்னு என் அம்மாட்ட சொன்னதை கேட்டுட்டேன். அப்ப எனக்கு வயசு ஏழு இல்லாட்டி எட்டு இருக்கும். நாந்தேன் எங்கப்பாட்ட கேட்டுட்டே இருந்தேன். அப்துல்லா அவிங்க வீட்டுல வாங்கிட்டோம்னு ரொம்ப பீத்திட்டு இருந்தான். எங்க வீட்ல கரண்ட் வந்தே ஆறுமாசந்தேன் ஆச்சு. வீட்டு ஓனர் வத்தலக்குண்டு ராவுத்தர் வந்து ரெண்டு நாள் தங்கி கரண்ட் கனெக்ஷன் கொடுத்துட்டு முப்பது ரூபாய் இருந்த   வாடகையை பத்து ரூபா ஏத்தினார்.
       அது வரை ஹரிக்கேன் லைட்தான். தெனம் சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், எங்கப்பா ஹரிக்கேன் விளக்கை எடுத்து துடைச்சு, அதன் கண்ணாடிக் குமிழில கொஞ்சம் கோலப்பொடியை போட்டு கிழிஞ்ச பனியனை வச்சு துடைச்சா பளிச்சுன்னு ஆயிரும். நானும் அதே மாதிரி துடைக்கனும்னு ஆசையா இருந்தாலும் எங்கப்பா கொடுக்க மாட்டாரு. கொஞ்சம் சீமத்தண்ணியை ஊத்தி திரியை ஏத்திவிட்டா முதல்ல கொஞ்சம் புகை வந்து அப்புறம் சீரா எரியும். கரண்ட் வந்த பெரவு அதுக்கு அவ்வளவா வேலையில்லை. எப்பனாச்சும் கரண்ட் போனா பரண்மேல இருந்து எடுத்துப்பொருத்துவோம். இல்லேனா எனக்கு தடுமன் பிடிச்சுருச்சுன்னா, எங்கம்மா அதை எடுத்து பொருத்தி, அது மேலே துண்டை மடிச்சு வெச்சு, கொஞ்சம் சூடானவுடன் தலையிலும் நெத்தியிலும் வைப்பாங்க. தடுமனுக்கு ரொம்ப இதம்மா இருக்கும்.
       பள்ளிக்கூடத்துலயும் அன்னிக்கு எனக்கு ஒண்ணும் ஓடலை. எங்கப்பா பள்ளிக்கூடம் முடிச்சு, தேனி பொறப்பட்டுப் போனார். என்னையும் கூப்பிட்டுப் போகக்கூடாதான்னு நெனைச்சேன். ஆனா கேட்கத் தைரியம் இல்ல.
       அன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடு வந்து சேர்ந்தார் என் அப்பா. நாளைக்குப் பூட்டலாம்னு சொல்லிட்டு படுத்தார். நான் மெதுவா எந்திரிச்சு அட்டைப் பெட்டியில காது ச்சுப் பார்த்தேன். ஒண்ணும் கேட்கல.
       அடுத்த நாள் எல்லாத்தையும் வெளிய எடுத்தார். பளபளன்னு நல்லா ஜோரா இருந்துச்சு. UMS னு போட்டுருந்துச்சு. பீரோ மேல  வைச்சு, போட்டவுடன் கரகரன்னு ஏதோ கேட்டுச்சு. அதுக்குள்ள பக்கத்து வீடுகளில இருந்து ஆட்கள் வந்து கூட்டம் கூடிருச்சு. "பக்கத்து வீட்டு பினாங்குக்காரரை கூப்பிடவா",ன்னு எங்கப்பாட்ட கேட்டேன். பதிலே சொல்லாம நோண்டி நோண்டி பார்த்த போது, தீடீர்னு பாட்டு வந்துரிச்சு. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபத்தின் தமிழ்ச்சேவை" என்று சொன்னதும், முதல்ல நான் கைதட்ட அப்புறம் எல்லோரும் கைதட்டினாங்க. எங்கப்பாவின் முகத்தில கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நோண்டி 2 நாள்ள, திருச்சி வானொலி நிலையம், சென்னை வானொலி நிலையம் எல்லாம் கண்டுபிடிச்சார் அப்பா. ஆனா முக்காவாசி, இலங்கையும், திருச்சியும்தான் கேப்போம். டெல்லியிலிருந்து தமிழ் நியூசும் வரும். சரோஜ் நாராயணசாமின்னு ஒரு குரல்  பொம்பள குரலா ஆம்பள குரலானு தெரியாது.
       இதுக்கிடையில அடுத்த வாரத்தில ஒரு நாள் எனக்கு காய்ச்சல்னு பள்ளிக்கூடம் போகல. அப்பாவும் அம்மாவும் பள்ளிக்கூடம் போய்ட்டாங்க. வகுப்புல என்னைக் காணாத என் நண்பன் மகேந்திரன் என் வீட்டுக்கு வந்துட்டான். "என்னடா சேகர் என்னாச்சு?", ன்னு கேட்டு நெத்தியை தொட்டெல்லாம் பார்த்தான்.
       எனக்கு உப்புபோட்டு கல்லாமக்கா மாங்காய் ஒரு கீத்து வாங்கிட்டு வந்திருந்தான். தீடீர்னு பீரோ மேல பாத்துட்டு, "ஏலே இதான் நீங்க வாங்கின லேடியோ பொட்டியா, ரொம்ப நல்லாருக்கு. எலே லேடியோவைப் போடலாமா",ன்னு என்ட்ட கேட்டான். "வேணாண்டா  எங்கப்பா கொன்றுவாருன்னு", சொன்னேன். ஆனா நான் சொன்னதக் கேக்காம ஸ்டூலைப்போட்டு ஏறி, எட்டாம மேசையைப் போட்டு ஏறி திருப்பி திருப்பி நோண்ட ஏதோ இங்கிலிஸ்ல வந்துச்சு. 

 
       மேசையியிருந்து குதிச்ச அவன் சொன்னான்,
எலே சேகரு, உனக்கு குட்டி மனுசன்களை பாக்க ஆசையா?
"எங்கடா இருக்காய்ங்கன்னு?
 "சேகரு நீ சொன்னா நம்பமாட்டே, என் கண்ணால பார்த்தேண்டா, மேட்டுவளவு ஜமிந்தார் வீட்டிலே, இதவிட பெரிய பெட்டி ஒண்ணு இருக்கு. அதுல அன்னிக்கு துடைச்சு சுத்தம் பண்ண தெறக்கும்போது, நான் எட்டிப்பாத்தேன். குட்டி குட்டியாய் 4 பேர் நல்லா உடுத்தி உள்ளே உட்காந்திருந்தாய்ங்க. அவய்ங்கதான் பேசறது, பாடறது. எல்லாம்".
"எனக்கு நம்ப முடியல". போடா லூசு கரண்ட்ல வேலை செய்யுதுடா இந்த ரேடியா".
"நான் காமிச்சிட்டா? என்னா பந்தயம்".
"சரி வாடா ஜமீந்தார் வீட்டுக்குப் போவோம்".
"எங்கடா போறது, லேடியோ இங்கயே இருக்கே. உள்ளுக்குள்ள குட்டை மனுசங்க இல்லாட்டி உனக்கு என் பொன்வண்டைக் கொடுத்திர்றேன்."
 லேசா திறந்து காண்பிச்சான்.அது தீப்பெட்டிக்குள்ள கையையும் காலையும் ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.
 "ஐயையோ சும்மார்ரா வம்பா", என்றேன். நீ பேசாம இரு, நான் காமிக்கிறேன்னு, திரும்ப மேல ஏறினான்.  
       வட்ட ஒரு பைசா காசை எடுத்து, ஸ்குரூவை நோண்டி மேலே உள்ள கூடை அப்படியே டோப்பா எடுத்திட்டான். பார்ரா, இவனுக்கு எவ்வளவு திறமைன்னு திகைச்சுப் போயிட்டேன். பயமாயிருந்தாலும் உள்ள பார்க்க ஆசையா இருந்துச்சு. உள்ள ஒண்ணுமில்லாட்டி பந்தயத்துல ஜெயிச்சு  பொன்வண்டு  கிடைக்கும்லன்னு நெனச்சு ஒரு தெம்பு வந்துச்சு.
       ரேடியோ உள்ள பாத்தா கண்ணாடில குமிழ் குமிழா இருந்துச்சு. அது உள்ள என்னா இருக்குன்னு வெளியே தெரியல. அது எடுக்க முயற்சி செஞ்சப்ப, படீர்ன்னு ஒடைஞ்சு போச்சு. ஐயையோன்னு நான் போட்ட கூச்சல்ல, அந்த குச்சிக்காலன் குதிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். பயபுள்ள பொன் வண்டையும் கொடுக்காம போயிட்டான்.

       இன்னும் கொஞ்ச நேரத்தில, பள்ளிக்கூடம் இன்டர்வல்ல எங்கம்மா வரும், காலைல நேரம் இருக்காதுன்னு இன்டர்வல்லதான் எங்கம்மா வீட்டுக்கு வந்து டிபன் சாப்புடும். அது கூட எனக்கு பயமில்ல, எங்கப்பாரு மதியம் வந்தா என்ன நடக்கும்னு நெனைச்சு, எனக்கு ஜூரம் கூடிப்போச்சு. கதவை திறக்கற சத்தம் கேட்டு, அம்மான்னேன், ஆனா நுழைஞ்சது எங்கப்பா.

Monday, February 24, 2014

காரைக்குடி பயணம் பகுதி 6: ராஜாதி ராஜன் ராஜ கம்பீர ராஜ பரதேசி வருகிறார் !!!!!! பராக் !!!!!!!!


       இந்தப்பாம்புகளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் எங்கே போனாலும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதனைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்ப நம்ம சித்தன்னவாசல் "சமண கட்டுவிரியன்" என்ன ஆனது என்று பார்ப்போம்.
       தலையைத்தூக்கி என்னையே பார்த்துக்கொண்டிருந்த 'விரியன் பாம்புக்குட்டி' யைப் பார்த்து என் வீரம் எல்லாம் சோரம் போனது. என் கலவர முகத்தைப் பார்த்த மாவீரன் எட்வின், ஒரு நீண்ட குச்சியை எடுத்து அதனைப்பிடித்து அப்புறமுள்ள புதர்ப்பகுதியில் விட்டார்.
       "அண்ணே போவோம், 'சமண மரணம்' என் உடம்புக்கு ஒத்துக்காது”, என்று சொல்லி மலையிறங்கினோம். விரைவாக கீழே வந்து சேர்ந்தோம். அந்த வழுக்குப்பாறையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஏறுவதுதான் கடினம், இறங்குவது மிக எளிது (பரதேசியின் தத்துவம்-12).
         கார் கிளம்பி மதுரை வழியில் சென்றது."என்னன்னே இன்னிக்கு அவ்வளவுதானா?" என்றேன். "இன்னும் ஒரு இடம் பாக்கி", என்று சொன்னனார். சில நிமிடங்களில் ஒரு கம்பீரமான கோட்டைக்கு முன்னால் காரை நிறுத்தினார். அது என்னவோ தெரியல இந்த அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், மன்னர்கள் வரலாறு இதனை அறிவதிலும் பார்ப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். நான் நினைக்கிறேன் என் DNA யில் உள்ள அரச பரம்பரையின் வீர ரத்தம் கொஞ்சம் நஞ்சம் மிச்சம் சொச்சம் இன்னும் இருக்கும் போல.
       "ஆமா நீ ஒரு தொடை நடுங்கின்னு ஊருக்கே தெரியும் இதுல ராஜ பரம்பரையாம்".
       "வந்துட்டான்யா வந்துட்டான்யா, நல்ல குடி நாயகம் தூத்துக்குடி வெங்கலம்".
       "இப்பதான் பாம்பைப் பார்த்து அந்த நடுநடுங்கின. இதில இவர் பரம்பரை பெருமை வேற".
       "மகேந்திரா பாம்பென்றால் படையும் நடுங்கும்னு சொல்வாங்கல்ல, அது அரச பரம்பரைக்கும் விதிவிலக்கல்ல".
திருமயம் கோட்டை
Thirumayam Fort, Tamil Nadu
       புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கும் இது ஒரு அழகான மலைக்கோட்டை. இது நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராமநாதபுர மன்னர் விஜய ரகுநாத சேதுபதியால் (கிழவன் சேதுபதி) 1687-ல் கட்டப்பட்டது. அதன்பின் முதலில் இதன் தலைவராகத்தான் ரகுநாத ராய தொண்டைமான் நியமிக்கப்பட்டார். இவர் படே கில்லாடிதான். தன் கோதரியை திருமணம் செய்து கொடுத்ததால் தொண்டை மண்டலத்திற்கே அரசராகி விட்டாரே. இதுக்குப்பேர்தான் பெண்ணைக்கொடுத்து மண்ணைப்பெறுவதா? 

       ஆரம்பத்தில் 7 அடுக்குகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் (Ring Fort) இப்போது நான்கு பகுதிகள்தான் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Archeological Survey of India)  கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை, பாளையக்காரர்கள் போரில் ஈடுபட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும்.  

    
        மூன்று வெவ்வேறு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையான இதில் ஒவ்வொரு புறமும், அனுமார், சக்தி, கணபதி ஆகியோருக்கான கோயில்கள் உள்ளன. அது தவிர கள்ளர்களின் காவல் தெய்வமான கருப்பருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. மேலே போகிற வழியில் இருபுறமும் வெடி மருந்துக் கிடங்குகள் இருக்கின்றன (Magazine). இன்னும் சில சந்நிதிகளும் உட்புறத்தில் இருக்கின்றன. குறிப்பாக வைணவர்களுக்குத் தனியாக ஸ்ரீ சத்திய மூர்த்தி உய்யவன நாச்சியார் சந்நிதியும், சைவர்களுக்கு சத்யகிரீஸ்வரர் -வேனுவனேஸ்வரி ஆகிய சந்நிதியும் குடைவரைக் கோயில்களாக பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில்களுக்கு செல்வதும் சற்றே கடினம்.

       மேலே இரு பகுதிகளிலும் இயற்கையான குங்கள் இருக்கின்றன. மொட்டைப் பாறையில் நீருற்றினைப் படைத்த இந்தக் கடவுளை புரிந்து கொள்ளவே முடியவில்லை போங்கள்.  


       கோட்டையில் ஆங்காங்கே பீரங்கிகளைக் காண முடிந்தது. நடுவிலே ஒரு   உயரமான பீடத்தில் ஒரு பெரிய பீரங்கி இருந்தது. செங்குத்துப் படிகளில் ஏறி இரண்டு பேரும் பீடத்தின் மேலே சென்று பீரங்கி ஆராய்ச்சி செய்து திரும்பினோம்.
       இந்தக் கோட்டையில் தான், ஊமைத்துரை ஒளிந்திருந்த சமயத்தில் பிரிட்டிஷ் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனால் இக்கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்ற மற்றொரு பெயர் சொல்லப்படுகிறது. கோட்டை விஜயம் முடிந்து கீழிறங்க சூரியன் மறையத்துவங்கியது.
       “என்ன ஆல்ஃபி இன்னிக்கு பார்த்த இடங்கள் திருப்திதானே", என்றார் எட்வின்.
       “அண்ணே ஒரே நாளில் இவ்வளவு இடங்கள் பார்த்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி, ரொம்ப நன்றின்னே", என்றேன்.
       "அதுக்குள்ள நன்றி சொல்லாதே, திருமலை நாயக்கர் மஹாலை ராத்திரியில் பார்த்திருக்கிறாயா", என்றார்.
       “இல்லையே "என்று யோசிக்கும் போது, “அதான்பா ஒலி ஒளிக்காட்சி", என்றார்.
       "அண்ணே போலாம்னே, சின்ன வயசில பார்த்தது, டைம் இருக்கா".
       “எட்டுமணிக்குத்தான் நிகழ்ச்சி. குயூரேட்டர் என் நண்பர்தான் நேராப் போயிரலாம்”னு சொன்னார். ஆஹா பிரபாவுக்கும் போன் செய்தேன். அதிசயமாக அவரும் ஃப்ரீயாக இருந்ததால், மனைவியையும், மகளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். எட்வினின் நண்பர்கள் என்பதால் ராஜமரியாதை.  
       திருமலை நாயக்கரின்  வரலாற்று நிகழ்வுகள் கண்ணுக்கு ஒளியாகவும் காதுக்கு ஒலியாகவும் நன்றாக நடந்தது. "ரொம்பப் பழசு, புதிய டெக்னிக்கில் இதனை இன்னும் சிறப்பாக பண்ணலாம்", என்று சொன்னார் பிரபா. விசுவல் கம்யூனிகேஷன் HOD மட்டுமல்லாமல், அவர் ஒரு இசையமைப்பாளர் அல்லவா.
       ஒரே ஒரு குறை என்னவென்றால் “ஈ” என்ற படத்தில், இறந்தவன் ஈயாக மாறி வந்து பழிவாங்குவது போல், மஹாலில் வேலை பார்த்த பழைய படைவீரர்கள் எல்லாம் கொசுக்களாக மாறி ரத்தம் குடிக்க வந்தனர். என்னிடம் மட்டும் பாச்சா பலிக்கவில்லை. என்னிடம் ரத்தமில்லாமல் ஏமாந்ததோடு, எலும்பில் கடி விழுந்து பல் உடைந்து பொக்கை வாயாகிப் போனார்கள், யார்ட்ட ம்ம் யார்ட்ட.
       எட்வினுக்கு நன்றி சொல்லி, டிரைவர் சரவணணையும் அனுப்பிவிட்டு, காரில் திரும்பும் போது, வனராஜிடமிருந்து போன் வந்தது. "டேய் சிவகங்கை போகனும்னு சொன்னியே, நாளைக்குப் போகலாமா?”, என்று. உற்சாகமாக ஓகே  என்று உடனே சொன்னேன் .
என்ன நண்பர்களே , சிவகங்கைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திராம்ல ?
காரைக்குடி பயணம் முற்றுப்பெற்றது.
விரைவில் எதிர்பாருங்கள்  சிவகங்கை பயணம் .

பின் குறிப்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கு கொண்ட ,  பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுகிறேன்.
 



Wednesday, February 19, 2014

காவல் கோட்டமும் அரவானும் !!!!!!!!!!!!!!

காவல் கோட்டம் - சு வெங்கடேசன்.
தமிழினி பதிப்பகம்.


       "மாரத்தான் ஓட்டம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். மாரத்தான் வாசிப்பு என்று ஒன்று இருந்தால், என் அனுபவத்தில் "காவல் கோட்டம்" வாசித்த முயற்சிதான் அது. 1050 பக்கங்கள் மிகச்சிறிய எழுத்துக்கள். ஆனால் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சோர்வடையச் செய்யாமல் நல்ல ஒரு புத்தகத்தை வாசித்த ஒரு அனுபவம் கிடைத்தது.
       மாரத்தான் வாசிப்பு என்பதைவிட, இந்தப்புத்தகத்தை "மாரத்தான் எழுத்து" என்றுதான் சொல்ல வேண்டும். சு.வெங்கடேசன் அவர்கள் பல மைல்கள் பயணம் செய்து, பல நூறுபேரைச் சந்தித்து, பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்து சுமார் 10 வருடங்கள் செலவழித்து எழுதிய புத்தகம் இது. 2011-ன் "சாகித்ய அக்காடெமி" பரிசை இப்புத்தகம் வென்றது என்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. முற்றிலுமாக மதுரையின் வரலாறு சார்ந்தது என்பது இதனைப் படிக்க இன்னொரு காரணம். இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்தப் புத்தகம் முதல் பகுதியில் 'முடியரசு' என்ற தலைப்பிலும் 2ஆவது பகுதி "குடிமக்கள்" என்ற தலைப்பிலும் எழுதப்பட்டிருக்கிறது.
       மாலிக்காபூரின் படையெடுப்போடும் கற்பழிப்புகளோடும் ஆரம்பிக்கிறது இப்புத்தகம். அதன்பின் மதுரைப் பகுதியில் முஸ்லிம் மதம் இயல்பாகப் பரவியது என்பது ச்சு முகமது, விருமாயி ஆத்தா மகள் பாத்திமா என்று சொல்லும்போது விளங்குகிறது.
       அதன் பின்னர் விஜயநகர நிறுவனர் புக்கரின் மகன் குமாரகம்பனின் நாயக்கர் படைகள், ஜீனாகான் ஆட்சியை முறியடித்து, பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவியது. நாயக்கர் படையின் முன்னே விரைந்து வரும் வேட்டை நாய்களின் படை ஆச்சரியமூட்டியது. 500 ஆண்டுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சியம்மன் ஆலயமும் திறக்கப்படுகிறது.
       நடுவில் விஜயநகர கதை வருகிறது. மதுரை நாயக்க மன்னர்கள் அங்கிருந்து வந்தவர்கள் ஆதலால் அதன் பின்னனியை அறிவது அவசியமாகிறது. விஜய நகரப் பேரரசின் பெருமைமிகு மன்னர் கிருஷ்ணதேவராயர், ஹரிஹர புக்கர் வழியில் வந்தவரல்ல. அவர்கள் ஆட்சியின் கீழ் சந்திரகிரியை ஆண்ட ஆளுனர் சாளுவ நரசிம்மனின் வழி வந்த புது வம்சமான துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர்.
       இடையில் மதுரையைப் பிடித்துக் கொண்ட வீரசோழனை விரட்டி தளபதி நாகம நாயக்கரின் படை வந்து வீரசோழனை அப்புறப்படுத்தி தானே அரசாளத்துவங்கினார். அதனைக் கேள்விப்பட்டு ஆத்திரமடையும் கிருஷ்ணதேவராயர், நாகம நாயக்கரின் மகனும் தனக்கு தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் மெய்க்காப்பாளனான விஸ்வநாதன் தலைமையில் படையை அனுப்புகிறார். மகன் தந்தையை முறியடித்து சிறைப்படுத்தி திருப்பி அனுப்பி ராயரிடம் மன்னிப்பு பெற்றுத்தருகிறான். இந்த விஸ்வநாதனே 'அரவ நாடு' என்று அவர்கள் அழைத்த மதுரைக்கு ஆளுநராக்கப்பட்டார். இவர் வழித்தோன்றல்களே தொடர்ந்து மதுரையை ஆண்டனர். கிருஷ்ணதேவராயருக்குப் பின்னால் விஜய நகரப்பேரரசு நலியத்துவங்க, நாயக்க ஆளுநர்களே அரசர்களாக தொடர்ந்தனர். அவர்கள்  வழி வந்தவர்தான் திருமலை நாயக்கர். தொடர்ந்து பல நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்த அரியநாத முதலிதான் பாளையங்களை உருவாக்கியவர்.  
       ராணி மங்கம்மாள், முத்துவீரப்பன், விஜயரங்க சொக்க நாதன் ஆகியோரோடு நாயக்க ஆட்சி முடிவு பெற்று, ஆற்காடு நவாப் ஆட்சி வருகிறது. பின்னர் வந்த மருத நாயகன் யூசுப்கான் ஆட்சியும் முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி அமைகிறது.
       இதற்கிடையில் சிறந்த பாளையக்காரர்களான கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் ஆகியோர் ஒழிக்கப்பட்டனர்.
       பிரிட்டிஷ் ஆட்சியின் சமயம் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் (Black burn) முடிவின்படி விஸ்வனாத நாயக்கர் கட்டிய மதுரைக்கோட்டை இடித்தொழிக்கப் படுகிறது. இடிப்பதில் பெரும் பங்கு கொண்ட மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரி போன்றோர் பெயர்களில் தெருக்கள் உருவாகின. மதுரையில் போலிஸ்படை எப்படி உருவாக்கப் பட்டது என்பதைப்படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது.
       நாவலின் அடுத்த பகுதியில் கள்ளர் தொழிலிலும், காவல் தொழிலிலும் கொடிகட்டிப் பறந்த தாதனூர் பகுதியைப்பற்றி  வருகிறது .களவையும் காவலையும் ஒழிக்க தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதனால் இறந்துபோன அப்பாவி மக்களையும் பற்றி மிகவும்  விரிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.தாதனூரின் களவு ஒழிக்கப்படுவதோடு நாவல் முற்றுப்பெறுகிறது.
       இப்பொழுது நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் இது எவ்வளவு பெரிய இமாலய முயற்சியென்பதை. இந்த மாதிரி வரலாறு அல்லது நடந்த நிகழ்சிகளை விவரித்து எடுக்கப்படும் படங்களை டாக்குஃபிக்சன் ( Docufiction) என்பார்கள் . இதனையும் அப்படியே   அழைக்கலாம்.
Add caption
 திரைப்பட இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த “அரவான்” திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
சு.வெங்கடேசன்
       தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் விளங்கும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலில் தோற்றாலும் நாவலில் ஜெயித்திருக்கிறார்.
       வரலாற்றில் ஆர்வமுள்ளவர், குறிப்பாக மதுரைக்காரர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
Old Madurai

       

Monday, February 17, 2014

காரைக்குடி பயணம் பகுதி 5: கதை கேளு! கதை கேளு! புதுக்கோட்டை கதை கேளு!

Portrait of His Highness Dambadas Ramachandra Thondaiman Bahadur. Oil painting on canvas by Raja Ravi Varma 
       
ஊரிலே நுழைந்ததுமே தெரிந்தது, தமிழக நகர்களில் புதுக்கோட்டை வேறஜாதி என்று. அகலமான வீதிகள், திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நாற்சந்திப்புகள் என சிறிதே வித்தியாசமாக இருந்தன. ஏற்கனவே பார்த்த திருப்பத்தூர் மற்றும் காரைக்குடியை விட இது நிச்சயமாக பெரிய ஊர். சாலையெங்கும் பறந்த புழுதிதான் இதுவும் நம்மூர்தாங்கோ என்று  சொன்னது.
District court
பிரிட்டிஷ் கால சிவப்புக் கட்டிடம் வழியாக கார் ஊர, அதுதான் மாவட்ட நீதிமன்றம் என்றார்கள். அதன் முன்னால் கம்பீரமான புதுக்கோட்டை மன்னர் மாட்சிமை தங்கிய மார்த்தாண்டவர்ம பைரவ தொண்டைமான் சிலை இருந்தது.
புதுக்கோட்டை சமஸ்தானம் பிறந்த கதை
       புதுக்கோட்டை, முதலில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சேதுபதி ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ராமநாதபுரத்தைச்சேர்ந்த திருமயத்தின் ஆளுநராக ரகுநாத தொண்டைமான் இருந்து வந்தார். அச்சமயத்தில் ராமநாதபுரத்தின் சிறப்பு வாய்ந்த மன்னர் ரகுநாத கிழவன் சேதுபதி, (கிழவன் என்றால் இங்கு வயதானவன் என்று அர்த்தம் இல்லை) தொண்டைமான் சகோதரியான கதலி நாச்சியாரை மணக்கிறார். சில காலம் கழித்து, சிறப்பாக திருமயத்தை ஆளும் தொண்டைமானுக்கு புதுக்கோட்டைப் பகுதியையும் சேர்த்து அளிக்கிறார். கிழவன் சேதுபதி இறந்தவுடன் ரகுநாத தொண்டைமான் தன்னை சுதந்திர அரசராக பிரகடணம்  செய்கிறார்.
Tondaiman Durbar by Raja Ravivarma 
       அப்போதிருந்து மற்ற பாளையங்கள் சமஸ்தானங்கள் அழிந்தாலும் இந்தியா சுதந்திரம் வாங்கும் வரை இந்த சமஸ்தானம் நிலைத்து நின்றதற்குக் காரணம் இவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடங்கிப்போனதால்தான். ஆங்கிலப்படைகளுக்கு உதவியாக, ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகிய மன்னர்களை புதுக்கோட்டை எதிர்த்து போர்புரிந்தது. எனவே தான் தமிழ்நாட்டில் மற்ற பாளைத்தார் சமஸ்தானங்கள் எல்லாம் அழிந்து போக, புதுக்கோட்டை நிலைத்ததோடு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 17 முறை பீரங்கி ஒலிக்கும் (Gun salute)  மரியாதை தரப்பட்டது.
       பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு உதவியாக இருந்த அரசர்களுக்கு, அவர்கள் எந்தக் கோட்டைக்கு விஜயம் செய்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப பீரங்கி முழக்க வரவேற்பு கொடுத்தனர். அதில் புதுக்கோட்டை மன்னருக்கு 17 முறை.
       இந்தியா சுதந்திரம் வாங்கும்போது புதுக்கோட்டை ஒரு தனிப்பட்ட நாடாக இருந்தது. ஆனால் அப்போதிருந்த ராஜா ராஜகோபால தொண்டைமான் (1928-1948) அவர்களின் முடிவின்படி, ஏப்ரல் மாதம் 1948-ல் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இணைந்தது. கிபி.1686-ல் உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 அதாவது 262 ஆண்டு காலம் கழித்து முடிவுக்கு வந்தது.


       புதுக்கோட்டை மன்னரின் அழகான அரண்மனை இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படுகிறது. 

புதுக்கோட்டையில்  நன்கு பராமரிக்கப்படும் மியூசியம் ஒன்று இருக்கிறது. புதுக்கோட்டை மன்னர்கள் பயன்படுத்திய அரிய பொருட்களோடு, குடுமியான் மலை, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள் காட்சிக்கு இருக்கின்றன.

 புதுக்கோட்டைக்கு செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு கண்டிப்பாக செல்லுங்கள். என்னுடைய நாணயங்கள் சேகரிப்பில் புதுக்கோட்டை நாணயங்களும் உண்டு.

        “எட்வின் அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்னா. மணி மூன்று ஆகிறது, அடுத்து எங்கே”, என்றேன். "அடுத்து சித்தன்ன வாசல்", என்றார்.

 சூப்பரோ சூப்பர் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் போகிறோம் என்று முதலிலேயே சொல்லாமல், ஒரு இடம் பார்த்து முடித்தவுடன், அடுத்த இடத்தைச் சொல்லி அசத்தியது, எனக்கு ரொம்பப்பிடித்தது.

 முழுவதுமாக எப்போதும் திட்டமிடும் எனக்கு, இது ஒரு வித்தியாசமான அனுபவம். இது புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதி, ஒரு நல்ல மொட்டைப்பாறை.

 உயரமான இந்தப் பாறைப் பகுதியில் ஏறிச்சென்றால் சமணர்களின் குடைவரைக் கோயிலான இந்தச் சிறிய குகையில்  சித்தன்னவாசலின் ஓவியம் சிரித்தது.

 மிகச் சிதிலமடைந்து இருந்த அந்த ஓவியத்தின் முழுப்பகுதி, எப்படி இருந்திருக்கும் என்று  பக்கத்தில் இருந்த தற்கால ஓவியத்தைப் பார்த்துத் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலே இருந்த அலுவலர் ஒருவரும் வந்து அதனை விளக்கிக் கூறினார். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
       இந்த மாதிரி மொட்டைப் பாறைகள் கிடைத்தால் சமணர்கள் விடுவதில்லை. அதனைக் குடைந்து மண்டபங்கள் உருவாக்கி, கற்படுக்கைகளை உருவாக்கி தவம் செயயத்துவங்கி விடுவார்கள். பெரும்பாலும் பொதுமக்களை விட்டு விலகியே இவர்கள் வாழ்ந்தனர். இந்த இடத்தில் கி.மு.2ஆம் நூற்றாண்டு (நன்றாகப் பாருங்கள் கி.மு. கி.பி இல்லை) முதற்கொண்டு சமணர் வாழ்ந்து வந்தார்களாம். இங்குள்ள பிராமி எழுத்துக்களே அதற்கு சாட்சி.
       இந்தக் குகைக்கோவிலில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. முதலாவது உள்ள 'அர்த்தமண்டபத்தில்' தீர்த்தங்கரர்களின் சிலை இருக்கிறது. அதன் உட்பகுதியில்தான் கருவறை இருக்கிறது. அர்த்த மண்டபத்தின் கூரையில்தான் ஓவியம் இருக்கிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான ஒன்றாம் இது. தவம் செய்து செய்து போர் அடித்துப்போன முனிவர்கள் பொழுதுபோக்குக்காக இதனை வரைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


       நண்பர்களே முற்றிலும் அழிவதற்குள் ஒருமுறை பார்த்துவிட்டு வந்து விடுங்கள்.

       இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கருவறையை நோக்கும்போது ம் அல்லது ஓம் என்ற சத்தம் அப்படியே குகையை நிரப்புகிறது. அது எப்படி என்று தெரியவில்லை. வெளியே வந்தால் குகையை சுற்றியிருந்த கம்பி வலைகளில் ஒரு கட்டுவிரியன் சுற்றிக்கிடந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>>

பின் குறிப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி  23 ) சன் டிவியில் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கு கொண்ட ,  பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுகிறேன்.