Thursday, February 13, 2014

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !!!!!!!!!!!!!!!!!


வேலண்டைன் தின சிறப்புப்பதிவு
            “கிண்கிணி கினி கினி” “கிண் கிணி  கினி கினி”. யாரது காலங்காத்தால இசை எழுப்புவது என்று யோசிக்கையில், ஊப்ஸ் அப்போதுதான் ஞாபகம் வந்தது, அது என் மனைவி வாங்கிக் கொடுத்த புதிய சாம்சங் கேலக்சி நோட் 3-யில் வந்த அலாரம் எழுப்பிய நாதம். அட அதுக்குள்ள மணி அஞ்சாயிருச்சா?. ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியை எழுப்பாமல், அலுங்காமல் குலுங்காமல் எழுந்து, அவள் போர்வையை சரிசெய்து விட்டு கட்டிலைவிட்டு கீழிறங்கினேன். அன்றைய நாளின் வேலைகள் ஞாபகம் வர, ஒரு பெருமூச்சுடன் காலை ஜெபத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு எழுந்து சமையலறைக்குச் சென்றேன்.
        ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு, நீரைச்சுடவைத்து ஃபோல்ஜெர்ஸ் (Folgers)காப்பித்தூளை போட்டேன். 2% பாலை எடுத்து அடுத்த பர்னரில் வைத்துப் பதமாக காய்ச்சி, காப்பி தயாரித்து "வெட்ஜ்வுட் " (Wedge wood) கப்பில் ஊற்றி சிறிது ஆறவிட்டு (தமான சூட்டில்தான் அவள் குடிப்பாள்) குவிந்து கிடந்த பாத்திரங்களை மடமடவென்று விளக்கிப்போட்டேன்.
        ஃபிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியே வைத்து, சிறிது நீர் விட்டுக்கரைத்தேன். ஓ இந்த ஒரு நேரத்திற்குத்தான் வரும், சாயந்திரம் வந்து மாவாட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, கேலக்சியில் ஒரு அலாரம் வைத்துக்கொண்டேன்.
        கீழே அவனில் இருந்த இட்லி குக்கரை எடுத்து சிறிது அலசிவிட்டு ஒரே சைசில் வருவது போல் இட்லியை எடுத்து ஊற்றி ஸ்டவ்வில் வைத்தேன். என் மனைவிக்கு இட்லி நல்ல வடிவாக ஓரங்கள் சிதையாமல் இருக்க வேண்டும். அதற்குள் மணி ஆறாகிவிட, ஐயோ அவளை எழுப்ப வேண்டுமே என நினைத்து கப்பில் இருந்த காப்பியின் சூடும் இனிப்பும் சரியாக இருக்கிறதா மறுபடியும் செக்செய்து விட்டு உள்ளே கொண்டுபோனேன்.
        "அம்மா, கண்ணம்மா கொஞ்சம் எழுந்திருக்கியா? மணி ஆறாயிருச்சு."
        நெட்டி முறித்த அவள், ", அம்மா" என்றாள் நடுங்கிப்போன நான்," ஐயோ என்னம்மா என்னாச்சு" என்று பதறினேன் " கெண்டைக்கால் லேசாக  வலிக்கிறது", என்றாள்.
        இதோ, என்று காப்பியைக் கையில் கொடுத்துவிட்டு, ஜண்டு பாமுடன் உள்ளே வந்து, காலை மடியில் வாங்கி சூடு பறக்க ஜண்டு பாமைத் தடவிவிட்டேன். போதும் போதுமென்ற சொல்லுமளவுக்கு கெண்டைக்காலை நீவிவிட்டுக் கொண்டிருக்கும்போது, இட்லிக்குக்கர் விசிலடித்துக் கூப்பிட்டது. “இப்போது வலி தேவலையா?”, என்று கேட்டேன். "காப்பி எப்படியிருந்தது", என்று தயங்கித் தயங்கி கேட்டபோது, “அதான் நல்லா இல்லேன்னா சொல்லி இருப்பேனே, என்று எரிந்து விழுந்தாள். ஆஹா அப்ப நல்லாருக்குன்னு தான் அர்த்தம், அப்பாடா.
காப்பி குடித்தபின்,”இன்னிக்கு என்ன டிபன்?”, என்றபடி மனைவி மெதுவாக எழ, நான் கைத்தாங்கலாக அவளை கீழிறக்கினேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது, ஐயையோ பிரஸ்ஸில் பேஸ்ட் வைக்க மறந்துட்டேன், பெரிய கோவக்காரி ஆச்சே என்று நினைத்து சடாரென்று பாத்ரூமில் நுழைத்து நீம் பேஸ்ட்டைப் பிதுக்கி, ஓரல்-B​​​​ பிரஸ்ஸில் வைத்துக்கொடுத்தேன்.
                அவள் பாத்ரூமுக்குள் நுழைய, நான் கிச்சனுக்கு ஓடினேன். இட்லிக்கு இன்னொரு விசில் வரட்டும் என்று எண்ணி, தக்காளியை எடுத்து நறுக்கி வைத்துவிட்டு, சிறிது பெரிய வெங்காயத்தையும் நறுக்கி, வாணலியில் எண்ணையிட்டு தளதளவென்று வதக்கி, கொஞ்சம் கடுகு போட்டு நெய்யில் தாளித்து இறக்கினேன். “தக்காளி கொத்சு” மணமணத்தது. முந்தின நாள் வாங்கிய தேங்காயை உடைத்துப்பார்த்தால் அது சரியில்லை. உடனே ஃப்ரீசரைத் திறந்து அவசரத்துக்கு வாங்கி வைத்திருந்த ஃப்ரோஜன் தேங்காய்த்துருவலை எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, 2 பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மிக்சியில் வைத்து அரைத்து, பின்னர் தாளித்து வைத்தேன். ஃப்ரோஜன் தேங்காய்க்கு என்ன சொல்லப்போகிறாளோ? இட்லிக்கு  என் மனைவிக்கு கண்டிப்பாய் ரெண்டு சட்னி வேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கு கெட்ட கோபம் வந்துவிடும்.
        அற்குள் உள்ளிருந்து சத்தம் கேட்க, விரைவாக பெட்ரூமுக்கு ஓடினேன். "என்னாச்சு ஒனக்கு இன்னிக்கு"என்றாள். "என்ன என்ன" என்று பதறினேன்.“ஏன் என்னோட டிரஸ்யை எடுத்து வைக்கல? லாண்டிரியும் பண்ணல”, என்றாள்.
        ஐயையோ நேத்து ரெண்டு டிவி சீரியலில் உட்கார்ந்ததுல லாண்டரியையும் அவள் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணவும் மறந்துட்டேன் என அப்பதான் ஞாபகம் வந்தது.
        “நீங்க டிபன் சாப்பிடறதுக்குள்ள ரெடி பண்ணிடறேன்”, என்று கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு 4 இட்லியையும் ரெண்டு சட்னியையும் வைத்து ராயல் டவ்ல்டன் (Royal Dautlon)தட்டில் வைத்து கொடுத்தேன் (அவள் சாப்பிடுவதற்கு தனித்தட்டு உண்டு)
        உள்ளே வந்து மடமடவென்று அயர்ன் செய்யும் போது தான் ஞாபகம் வந்தது, ஐயையோ குடிக்க தண்ணீர் வைக்கவில்லை என்று. ஓடிப்போய் தண்ணீரில் ரெண்டு ஐஸ் கட்டிகளைப்போட்டு கொடுத்துவிட்டு, இன்னொரு வாட்டர்போர்டு (Waterford) கிறிஸ்டல் கிளாசில் ஆரஞ்சு ஜூசை வைத்துவிட்டு, நிமிர்ந்த போது, உள்ளே ஏதோ கருகும் வாடை அடித்தது.
        ஐயையோ இன்னிக்கு வீடு ரெண்டாகப்போகுது என்று உள்ளே ஓடினால் அவளுக்கு மிகவும் பிடித்த Forever 21 ஜீன்ஸ் ஓட்டையாகி, புகை வந்து கொண்டிருந்தது.
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))       
எரியுது ஜீன்ஸ் எரியுது, என்று பக்கத்தில் படுத்திருந்த மனைவி சத்தம் போட்டாள்.
        "ஏய் ரூத் என்னாச்சு, இன்னுமா எந்திரிக்கல", என்றேன்.  நான் படுத்தபடி கவனித்துக் கொண்டிருக்க, என் மனைவி ஜெபித்துவிட்டு, சமையலறைக்குப்போனாள். கனவு கண்டிருப்பாள் போல. அங்கே இட்லித்தட்டை எடுக்கும் சத்தம் கேட்டது
   பின்குறிப்பு:
        நம் மனைவிகளுக்கு கனவில்தான் இத்தனை சுகபோகம் அமைகிறது. நமக்காக வேலையும் செய்துவிட்டு வீட்டிலும் வந்து சமைத்து 24/7 365 நாளும் லீவு எடுக்காமல் வேலை செய்யும் நம் மனைவிகளை நேசிப்போம், காதலிப்போம்.

வேலண்டைன் தின வாழ்த்துக்கள்+++++++

Monday, February 10, 2014

காரைக்குடி பயணம்: பகுதி 4: “செட்டிகள் கெட்டிகள்தாம்”


  உலகத்தில் பல அரண்மனைகளைப் பார்த்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதிலிருந்த நுண்ணிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, அதன் பல்வேறு வண்ணங்கள் மதிய வெயிலில் பளிச்சென்று மின்னின.


        செட்டிநாடு அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் கட்டி வாழ்ந்த அரண்மனை இதுவாகும்.

 செட்டிநாடு என்ற நாட்டை அல்லது பகுதியை அரசாண்டவர் இவர் என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கின்றனர். செட்டிநாடு அரசர் (The Raja of Chettinad) என்பது சர். அண்ணாமலை செட்டியார் அவர்களின் பொதுச் சேவையை பாராட்டி, 1929-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு கெளரவப்பட்டம். இவர்கள் பரம்பரையும் இந்தப்பட்டத்தை பயன்படுத்தலாம் என்பது அப்போதிருந்த மெட்ராஸ் மாநில (Madras Presidency) அரசாங்கத்தின் உத்தரவு.

        அப்படியென்ன பொதுச்சேவை செய்தார் என்றால், அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரால்தான்  உருவாக்கப்பட்டது. இது தவிர செட்டிநாடு சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியன் வங்கி இவரால் நிறுவப்பட்டது. மேலும் பல பொதுச் சேவைகள், நன்கொடைகள், கட்டிடங்கள் மற்றும் கோவில்களை நிறுவியுள்ளார்.
With Edwin 
        அரண்மனை கட்டுவதற்குத்தேவையான  பல பொருட்கள் கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.  40,000 சதுர அடி கொண்ட இந்த அரண்மனை 1902-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912-ல் முடிக்கப்பட்டதாம். பர்மா தேக்கு, இத்தாலிய சலவைக்கற்கள் மற்றும் இங்கிலாந்தின் உருக்குக்கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. காரையோடு சுண்ணாம்பு, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு பயன்படுத்தப்பட்டதாம். இங்குள்ள கட்டில் மேஜை நாற்காலிகள் ரோஸ்வுட்டினாலானவை. பீங்கான் சாமான்கள் இந்தோனேசியாவிலிருந்தும், கிறிஸ்டல் சாமான்கள் ஐரோப்பாவிலிருந்தும், கண்ணாடிகள் பெல்ஜியமிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.செட்டிநாட்டின் கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் இந்த அரண்மனையில் பல சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன.
        ரொம்ப நாளாக நான் பார்க்க வேண்டுமென நினைத்திருந்த செட்டிநாடு அரண்மனையை பார்த்த திருப்தியில் எட்வினுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம். எங்கே என்று நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை. கார் கிளம்பி, ஒரு சிறு ஊரின் வழியாகச் சென்றது.


 அங்கு சாலையோரத்தில் நுங்குக் குலைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். சற்றே நிறுத்தி சில நுங்குகளை ஆசையோடு சப்புக்கொட்டி சாப்பிட்டுவிட்டு வயிறு நிரம்பியவுடன் கிளம்பினோம். நுங்குகளை சாப்பிட்டு எத்தனை நாளாகிறது.

        சடாரென்று ஒரு சந்திலே திரும்பிய கார், ஒரு சிறிய வீட்டின் முன் நின்றது. எட்வின் தன் அக்கா வீட்டுக்கு கூப்பிட்டுப் போன மாதிரி எங்காவது போய் விடுவாரோ என்று நினைத்து, "அண்ணே இன்னும் நிறைய பார்க்கவேண்டி இருக்கிறதா  சொன்னீங்களே", என்றேன். “இதைப் பார்க்காம போக முடியாது”,ன்னு சொல்லி, காரை விட்டு இறங்கச் சொன்னார். அப்புறம் தான் தெரிந்தது. அந்தச் சிறிய வீடு பெருங்கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடு. பராமரிப்பில்லாமல் பூட்டிக்கிடந்தது.


 சிறு கூடற்பட்டி என்ற அந்த சிறிய ஊரில், ஒரு சிறிய வீட்டில் பிறந்து சரியான படிப்பு கூட இல்லாமல், உலகம் போற்றும் ஒரு மாபெரும் கவிஞனாக வளர்ந்து எந்தப் பாசாங்கும் முகமூடியும் இல்லாமல் வெளிப்படையாக எல்லோரும் வாசிக்கும் திறந்த புத்தகமாக வாழ்ந்த கண்ணதாசனின் இருப்பிடத்தைப் பார்த்து பரவசமானேன்.
மானிட ஜாதியில் தனிமனிதன், நான்
 படைப்பதனால் என்பேர் இறைவன்! நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
 நிலையிலும் எனக்கு மரணமில்லை!
என்ற அவரின் வைர வரிகள் ஞாபகம்  வந்து உடலெல்லாம் சிலிர்த்தது.
        பின்னர் அப்படியே கிளம்பி வருகையில், முதலில் பொட்டல்காடாக தெரிந்தவை இப்போது கவிதையாக தெரிந்தன. வரும் வழியில், அட இந்தச் சிறிய தடாகம் அல்லி மலர்கள் சூழ்ந்து அந்த சூரிய ஒளி சுட்ட மட்ட மதியானத்திலும் ஒளியை  உள்வாங்கி பிரதிபலித்து ஜொலித்தது.

        கவிஞர் பாடல்களை முணுமுணுத்த வண்ணம், அப்படியே ஆளரவமற்ற பல பெரிய வீடுகளைக் கடந்து பல ஊர்களைக் கடந்து ஒரு சந்துக்குள் கார் நுழைய, "இதுதான் ப. சிதம்பரம் வீடு", என்றார் எட்வின். அங்கு எதற்கு வந்தோம் என்று புரியவிட்டாலும்ஓ அவரும் செட்டிநாட்டின் பிரபலங்களில் ஒருவர் அல்லவா என்று நினைத்துக் கொண்டேன்.
P.Chidambaram's House

 வேறு யாரெல்லாம் பிரபலங்கள் என்று எட்வின் அண்ணனோடு யோசித்ததில் கீழ்க்கண்ட லிஸ்ட் உருவானது.
Dr. அழகப்பா செட்டியார் - அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி ஆகியவற்றை உருவாக்கியவர்.
AM முருகப்பா செட்டியார் - முருகப்பா குழுமத்தில், EID பாரி, டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், TI சைக்கிள்ஸ்,சோழமண்டலம் ஃபைனான்ஸ், கோரமண்டல் இண்டர்னேஷனல் ஆகியவற்றை உருவாக்கியவர்.
கருமுத்து தியாகராய செட்டியார் - தியாகராசர் கல்லூரியை நிறுவியவர், தியாகராய மில் மற்றும் மதுரா வங்கியை (Bank of Madura Ltd) நிறுவியவர். இந்த வங்கி 2001-ல்  ICICI வங்கியோடு இணைந்தது.
M.A. சிதம்பரம் செட்டியார் - M.A.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் ஞாபகம் இருக்கிறதா?
ராஜா. சர் முத்தையா செட்டியார் - ராஜா முத்தையா மன்றம், ராணி சீதை ஹால், ராஜா முத்தையா ஆய்வு நூலகம்.
M.Ct.M. சிதம்பரம் செட்டியார் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை நிறுவியவர்.
Dr. ஜஸ்டிஸ் A.R.லட்சுமணன் - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி.
A.V.மெய்யப்ப செட்டியார்: AVM நிறுவனத்தை உருவாக்கியவர்.
        அடேயப்பா, தமிழ்நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தையும் செட்டிநாடு தம் உள்ளங்கையில் அல்லவா வைத்திருந்தன. செட்டிகள் கெட்டிகள்தாம். வண்டி அப்படியே விரைந்து புதுக்கோட்டைக்குள் நுழைந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>>>

Thursday, February 6, 2014

காசு, பணம் துட்டு மணி மணி !!!!!!!!!!!!!!

இலந்தை ராமசாமி 
நியூஜெர்சி தமிழ்ச்சங்க பட்டிமன்றம் ஆடிஷன் -09.28.2013 .

பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த கல்யாணமாலை பட்டிமன்றத்தில் பங்கு பெறுவதற்காக வைக்கப்பட்ட ஆடிஷனில் அடியேன் கலந்து கொண்டு “வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பணமே  முக்கியம்”, என்ற தலைப்பில் பேசிய உரையை இங்கு தருகிறேன் .அதில்  முதலாவது பெயராக தெரிவு செய்யப்பட்டு கல்யாணமாலை பட்டிமன்றத்தில்   பேசினேன்   என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்..
            வணக்கம் - வாய்ப்புக்கு நன்றி. நடுவராக வீற்றிருக்கும்  ஐயா இலந்தை ராமசாமி  அவர்களுக்கு என் பணிவான வணக்கம் .இலந்தை முன்னால் தமிழில் நான் ஒரு குழந்தை.  தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

        சித்திரமும் கைப்பழக்கம்
        செந்தமிழும் நாப்பழக்கம்
        பட்டிமன்றத்தமிழும் பாப்பையா பழக்கம்
        வாங்க பழகலாம் - தமிழ்பேசி.

        சித்திரமும் கைப்பழக்கம்
        செந்தமிழும் நாப்பழக்கம் -ஆனா
        பணப்புழக்கம் இல்லைனா - வெறும்
        மனப்புழுக்கம் தாங்க.

ஒன்னுமில்லை. என் நண்பன் ஒருவன் ஊரிலுள்ள  அவன் அம்மாவுக்குப் போன் பண்ணான். நடந்த கதைங்க, சாட்சி இருக்கு.
அம்மா சொன்னாள்: ராசா ஒன்னைப்பார்த்து எத்தனை நாளாச்சு? அஞ்சு வருசமாச்சு. ஒரு வாட்டி வந்து இந்தக் கிவியைப் பாத்துட்டு போனா, நான் சந்தோஷமா கண்ணை மூடிறுவேன்.
நண்பன் கேட்டான்: ம்மா நான் வர்றதைப் பத்தி இல்ல. ஆனா குறைஞ்சது அஞ்சாயிரம் டாலர் செலவாகும். ஒரு அஞ்சு மாசம் பணம் அனுப்பமுடியாது பரவாயில்லையா? இப்ப நான் வரனுமா? இல்லை பணம் வரனுமா?
அம்மா சில நிமிடங்கள் அமைதியாய் இருந்து விட்டு  பதில் சொன்னாள்: சரி ராசா நீ வராட்டிப் பரவாயில்ல, பணத்தை அனுப்பிடு சாமின்னு.
அந்தத்தாயை நான் குறைசொல்ல மாட்டேன்.அந்த படிக்காத தாயையும்  பிராக்டிக்கலா யோசிக்க வைத்தது பணத் தேவைதான்.

பட்டிமன்றத்துல பேசுவதற்கு ஏதாவது பாயிண்ட்ஸ் கிடைக்குமா என்று டிவியைத்திருப்பினேன்.
ஜெயா மேக்சைத் திருப்பினால்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப்பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை
பிழைக்கும் மனிதன் இல்ல.

சன் டிவியைத் திருப்பினால்
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாசக்கதவை ராசலட்சுமி தட்டுகிற நேரமிது.

விஜய் டிவியைத்திருப்பினால்
காசு, பணம் துட்டு மணி மணி
காசு, பணம் துட்டு மணி மணி

இப்படி உலகமே பணமயமாவுள்ள போயிருச்சு.
நம்மூரு  பழமொழிகளை  எடுத்துக்கங்க .
பணம் உண்டானால் மணம் உண்டு
பணம் பாதாளம் மட்டும் பாயும்
பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும்.

பக்கத்தில் கொஞ்சம் செக் பண்ணிப்பாருங்க. ஏதாவது பிணம் வந்து  உட்கார்ந்திருக்கப்போகுது. .ஹாலோவீன் சமயம் வேற. 
பாருங்க பணத்தின் அருமையைப்பற்றி நம்ம முன்னோர்கள் எத்தனை பழமொழிகளை   சொல்லியிருக்காங்க.
 நமக்கெல்லாம் தெரியும் இங்க   காலம் மாறிக்கிட்டே இருக்கு . ஆனா நம்மைப்போல உள்ள மிடில் கிளாஸ் மக்களுக்கு ரெண்டே காலம்தான். ஆனா இது மாசா மாசம் வரும்.
 
        முதல்வாரம் - டெபிட் கார்டு காலம்
        கடைசி வாரம் - கிரெடிட் கார்டு காலம்
நண்பனுக்கு போன் செய்தேன், "எப்படி புரோ இருக்கிற?”.
"சூப்பரா இருக்கேன் புரோ", என்றான். இது முதல் வாரம்
அவனையே கடைசி வாரத்திலே கேட்டேன் – ஓகேடா என்றான்
என்னடா குரல்ல சுரத்தில்லயேன்னேன்.அட ஒண்ணுமில்லன்னு சொன்னான்.
ஒண்ணுமில்லன்னு சொன்னது பணம் ஒண்ணுமில்லன்னு தான்னு எனக்குத்தெரியும்.

இதெல்லாம் நம்ம எதிர்க்கட்சி நண்பர்களுக்கும் தெரியும்ம்ம்ம்,  ஆனா தெரியாத மாதிரி நடிக்கிறாங்க.

வீட்டில்லிருந்து  வெளியே போகும்போது ,சில நாள் வாலட்டை மறந்துருவோம் பாருங்க எவ்வளவு பதட்டமாயிருக்கும் தெரியுமா. பாதி தூரம் போயிட்டு திரும்ப வந்திருக்கிறோம். வாலட்டில் பணம் கொஞ்சமா இருந்தா நடை கொஞ்சம் வீக்கா இருக்கும் .அதே சமயம் வாலட்டில் ஒரு நூறு டாலர் இருந்தா, அடா அடா வருமே ஒரு ராஜ நடை காணக்கண் கோடி வேணும்.

ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். நீங்கலெல்லாம் எதுக்கு அமெரிக்காவுக்கு வந்தீங்க?
அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைக்கவா?
சொந்த ஊரிலே
நொந்த பொருளாதாரத்தை மாற்ற
இந்த ஊருக்கு
வந்த ஜனம் தானே நாமெல்லாம்.

திரைகடலோடியும் திரவியம் தேடுன்னு சும்மாவா சொன்னாங்க.அப்புறம் எதுக்கு இந்த வெட்டிப்பேச்சு.வேணும்னா ஒரு பெட்டி வாங்கிட்டு என் கட்சியிலே சேர்ந்துறுங்க.

மத்த தலைப்புகளில் பேச வந்திருக்கும் நண்பர்களே நீங்களே யோசிச்சுப் பாருங்க.
உழைப்புன்னு சொல்றீங்களே.
ஊதியம் இல்லாத உழைப்பு வெறும் களைப்புதானே.
தன்னம்பிக்கையின்னு எடுத்துக்கிட்டா
பணம் இல்லாத தன்னம்பிக்கை மூட நம்பிக்கைதானே.
விடாமுயற்சின்னு சொன்னா
பணம் இல்லாத விடாமுயற்சி கூடா முயற்சிதானே.
அறிவு- அறிவிருந்தால் பணத்தை கண்டிப்பாக தேடுவீங்க.
அதிர்ஷ்டம்- பணம் இல்லாத அதிர்ஷ்டம் குருட்டு அதிர்ஸ்டம்ங்க. திரும்பத் திரும்ப வராது.

எனவே பணம்தான் முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பணம் இருந்தால் மற்றவை எல்லாம் தானாக கூடிவரும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.


பின் குறிப்பு: விரைவில் சன் டிவியில் கல்யாண மாலை பட்டிமன்றத்தில் பட்டிமன்ற ராஜா அணியில், “ குடும்ப வாழ்வு சுவைப்பது  அமெரிக்காவில்தான்” என்ற  தலைப்பில் அடியேன் பேசுவதை எதிர்பாருங்கள்.

Monday, February 3, 2014

காரைக்குடி பயணம் பகுதி 3: அக்கா மீன் குழம்பு பக்கா !!!!!!!

                நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் இப்பகுதி, செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இவர்கள் இலங்கை மற்றும் பர்மா நாடுகளுக்கு சென்று பெரும் செல்வமீட்டினர். அதன் பின்னர் சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கும் சென்றனர். வியாபாரத்திலும் வங்கிகள் நடத்துவதிலும் பெயர்போனது இந்த சமூகம்.

        அந்த செட்டிநாட்டின் தலைநகரம் என்று காரைக்குடியைச் சொல்லலாம். காரை வீடுகள் அதிகமாக இருப்பதால் ஒருவேளை காரைக்குடி என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் 74 கிராமங்களை உள்ளடக்கியது தான் செட்டிநாடு பகுதி.

        காரைக்குடியில் நுழைந்ததுமே பெரிய பெரிய வீடுகள் வரவேற்றன. "பழைய பொருட்கள் (Antiques) வாங்க விருப்பமா ?”, என்று எட்வின் கேட்டார். "தயவு செய்து கூட்டிப் போங்கள்", என்றேன். செட்டிநாட்டு மக்கள் பல நாடுகளில் பயணம் செய்தவர்கள் என்பதால், பல நாட்டுப் பொருள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பழைய வெள்ளி, வெங்கலம், ஐம்பொன் மற்றும் மரத்தாலான பல பொருட்கள் அங்கே இருந்தன. 

குறிப்பாக பர்மா தேக்கினாலான கட்டில், பீரோ, மேஜை, நாற்காலிகள் கலை நுணுக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடைகள் ஒரு பகுதியில் வரிசையாக இருந்தன. அதிகமாக வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருவதால் விலைகள் தாறுமாறாக இருந்தன. சில நாணயங்கள் மற்றும் சில மர சாமான்களை மட்டும் (பல்லாங்குழி பலகை)  வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அடுத்து எங்கே போகிறோம் என்றேன்?

        "ஆயிரம் ஜன்னல் வீடு" என்றார். ஆயிரம் ஜன்னல் வீடா? என்று வாயைப் பிளந்த என்னை, "வந்து பார்," என்று அழைத்துச் சென்றார். ஆயிரம் வாசல் இதயம் என்று கண்ணதாசன் பாடியது ஒருவேளை இதை மனதில் வைத்துத் தானோ?.

        18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஒவ்வொரு வீடும் அரண்மனை அளவு பெரியது. பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களால் கட்டப்பட்ட இந்த வீடுகள் இந்தியக் கட்டடக்கலையையும், ஐரோப்பா, குறிப்பாக ஃபிரான்ஸ் கட்டடக் கலையையும் இணைத்து வடிவமைக்கப்பட்டவை. ஆயிரம் ஜன்னல் வீட்டைப்பார்த்து அதிசயத்து விட்டேன். பல மாடிக்கட்டடமான இந்த வீட்டில் எங்கெங்கு நோக்கினும் ஜன்னல்கள் இருந்தன. எல்லாமே பர்மா தேக்கு என்றார்கள். கப்பல் கப்பலாய் இறங்கியிருக்கும் போல. ஆனால் அவ்வளவு பெரிய வீடு பூட்டிக்கிடந்தது. அது மட்டுமல்ல பெரும்பாலான மேன்ஷன் என்று அழைக்கப்படுகிற அரண்மனை வீடுகள் எல்லாமே பூட்டிக்கிடந்தன. வெளிநாடுகளில் குடியேறியவர்கள் கிட்டத்தட்ட இந்த வீடுகளை கைவிட்டு விட்டதால் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. என்ன ஒரு அநியாயம் பாருங்கள். தெருக்களெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. ஏதாவது ஒரு வீட்டில் குடியேறினால் கூட யாரும் கேட்க மாட்டார்கள் போல இருந்தது.
        அதற்குள் சாப்பாட்டு நேரம் வந்துவிட, "அண்ணே பசிக்கிற மாதிரி இருக்கு. ஒரு நல்ல செட்டிநாடு உணவகத்திற்குச் செல்வோம்", என்று சொன்ன போதே, செட்டிநாடு பதார்த்தங்கள் கண்முன் தோன்றி வாயுள் எச்சிலைப் பெருக்கின. "காரைக்குடி", 'அஞ்சப்பா', 'ஆச்சி', 'அம்மா' என் பலவித உணவகங்களும் நினைவில் வலம் வந்தன. "சரி வா போவோம்", என்று எட்வின் சொல்ல காரில் ஏறினோம்.
        “எந்த உணவகத்துக்கு?", என்றேன். "அக்கா உணவகம்" என்றார். அம்மா ஆச்சி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அக்கா உணவகமா? அது எது என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்தேன்.

        போகும் வழியில், ஒரு கோவிலைக் காண்பித்தார். அதன் அருகில் இருந்த ஊரணி அல்லது தடாகத்தில் தண்ணீர் பச்சை நிறத்தில் இருந்தது . இதுதான் பச்சைத் தண்ணியோ என்று நினைத்து என் ஜோக்குக்கு நானே சிரித்துக்கொண்டேன். "இந்த இடத்தில்தான் "நாதஸ்வரம்" டி.வி. சீரியல் பாட்டு எடுக்கப்பட்டது", என்றார். ஓ நம்ம திருமுருகன் சீரியல், அட காரைக்குடியில் தானே எடுக்கிறார்கள் என்று ஞாபகம் வந்து, அண்ணே அந்த ஷூட்டிங் பார்க்க முடியுமா? என்றும் அந்தக் கோவிலைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னேன்.

        "ஆல்ஃபி, அதற்கெல்லாம் செலவழிக்க நமக்கு நேரமில்லை இன்னொரு முறை அதற்கென தனியாக வருவோம்", என்றார். அதனால் ஒரு படம் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். நானும் கம்மென்று உட்கார்ந்து   , "அக்கா உணவகத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

        கார், ஓரம்கட்டப்பட, ஒரு வீட்டிற்குள் என்னை அழைத்துப்போனார். "இதுதான் என் சிஸ்டர்", என்று ஒருவரை அறிமுகப்படுத்த, அவர்கள், "கைகழுவுங்கள் முதலில் சாப்பிட்டுவிடலாம்", என்றார்கள். நான் எட்வினைப் பார்க்க அவர் சொன்னார், "இதுதான் அக்கா உணவகம்", என்று.
        சில வீடுகளில் அசைவம் சாப்பிட்டு அசெளரியம் நேர்ந்ததால், தெரியாத வீடுகளில் அசைவம் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அதனை எப்போதோ எட்வினிடம் சொல்லியிருக்கிறேன் போலிருக்கிறது.

        அக்கா அவர்கள், "தம்பி வெஜிடேரியன் என்பதால் வெறும் காய்கள்தான் செய்திருக்கிறேன்", என்று சாட்சாத் என்னைப்பார்த்து தான் சொன்னார். பாவம் எட்வின் எனக்காக அவரும் சைவம் சாப்பிடப்போகிறார் என்று பார்த்தால், அவர் அடுத்தபடியாக,  "எட்வின் உனக்கு தனியாக செய்திருக்கிறேன்", என்று சொன்னார்கள். 

நான் பரிதாபமாக சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலையும் சாப்பிடும்போது, எட்வின் ஒரு வார்த்தை கூட கேட்காமல், அயிரை மீன்குழம்பை ஊற்றி கரகரவென பிசைந்து கவளம் கவளமாக உள்ளே  தள்ளினார். 

தொட்டுக்கொள்ள வைத்திருந்த வஞ்சிர மீன் வருவலையும் வஞ்சகமில்லாமல் நொறுக்கினார். என் நிலைமை, குழம்பில் கொதிக்கிற கெண்டை மீன் போலானது. காரைக்குடி போய் அசைவம் சாப்பிடாமல் வந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். "அக்கா மீன் குழம்பு பக்கா"என்று சொல்லி வேற கடுப்பைக்கிளப்பினார். "சரி சரி நேரமாச்சு போலாம்", என்றேன். "தம்பி சரியாகவே சாப்பிடலயே", என்று சொன்னது இந்த தடவை என்னைப் பார்த்து அல்ல, ஏப்பம் விட்டு எழுந்த எட்வினைப் பார்த்து சொன்னார்கள். எட்வின் நீங்கெல்லாம் நல்ல வருவீங்க என்று மனதில் நினைத்துக்கொண்டே "அண்ணே அடுத்து எங்கே", என்று கேட்க  "கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை என்றார்".


தொடரும் >>>>>>>>>>>>>