Monday, June 3, 2013

மெக்சிகோ பயணம் 14: கோட்டையை யாருப்பா ஒளிச்சு வச்சது ?


                கோட்டைக்குச் செல்லும்வழி மிகவும் அகலமானதாகவும், இருபுறமும் மரங்கள் அடர்ந்தும் காணப்பட்டது. தூரத்தில் கோட்டை சிறிதளவு தெரிந்தது .வாசலில் உயரமான கப்பில் பைன் ஆப்பிள், தர்ப்பூசனி, வெள்ளரிக்காய், கேண்டலுப்,ஹனி டியூ ஆகியவற்றை வெட்டி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று வெள்ளையாக, நான் இதுவரை பார்த்தறியாத ஒன்றாக இருந்தது. என்னவென்று கேட்டேன்.அவர்கள் சொன்னது புரியவில்லை. ஆனாலும் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று வாங்கினேன். எது எடுத்தாலும் 10 பீசோக்கள். வாங்கிச் சாப்பிட்டால், இலேசான இனிப்புடன் நீர்ச்சத்து அதிகமாக, அந்த பசி நேரத்தில் அமிர்தமாக இருந்தது. எப்போதோ எங்கேயோ சாப்பிட்டமாதிரி இருந்தது .பார்க்கிங்  கிடைக்காததால்,  டேனியல் காரிலேயே தங்கிவிட்டான்.

                நுழைவாயிலில் உள்ளே செல்லும்போது, படை பரிவாரத்தோடு, கம்பீரமான அரபுக் குதிரையில் ஆரோகணித்துச் செல்வதுபோல், நினைத்துக்கொண்டு ("நான் கிருஷ்ணதேவராயன்" படித்த எபக்ட் போல ) உற்சாகமாக உள்ளே சென்றேன். வழியில் ஒரு பெரிய சதுக்கம் வந்தது.


 அருகில் வந்ததும் கோட்டை கொஞ்சம் கூட தெரியவில்லை. சதுக்கத்தையும், நீருற்றையும் கடந்து சென்றால், இரு பாதைகள் சென்றன. அதில் ஒன்றில் பெரிய கூட்டம் சென்று கொண்டிருந்தது. ஆடு மந்தையோடு செல்வதுபோல், அவர்களைப்பின்பற்றி சென்றேன். பாதையின் இருமருங்கும் நெருக்கமாக சிறுகடைகளும் தள்ளுவண்டிகளும் இருந்தன. ஆண், பெண், குடும்பங்கள், குழந்தைகள், காதலர்கள் என கோலாகலமாக மகிழ்ச்சியுடன் சென்றனர். ஒருபக்கம் பேட்டரி இரயில் மக்களை ஏற்றிக்கொண்டு  போய்க்கொண்டிருந்தது. 

ஒரு முக்கால் மணிநேரம் நடந்தபின்னும் கோட்டை வருவதாகத்தெரியவில்லை. யாரிடம் கேட்டாலும் உதட்டைப் பிதுக்கினார்கள் மொழிப்பிரச்சனைதான். தவறான வழி என்று பட்சி சொன்னது.
                கோட்டையும் கண்ணுக்குத் தெரியவில்லை. கோட்டை குட்டையாக இருக்குமோ?. ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா? என்று நடுத்தெருவில் கூவாத குறை. இறுதியில் ஒருவன் சிக்கினான். அவனிடத்தில், “கோட்டை எங்கே?” என்று கேட்டபோது, “அது இந்த வழியில் இல்லை, திரும்பிப்போ, ஆனாலும் இன்று மூடியிருக்கிறது, மதியம் 3 மணிக்குமேல் தான் திறக்கிறார்கள், புது பிரசிடன்ட் இங்கே பல நாட்டு விருந்தினர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கிறார்” என்றான். “இது என்ன வழி, எல்லோரும் எங்கே போகிறார்கள்” என்றேன். இது சும்மா பொழுதுபோக்கு கடைவீதி, தொடர்ந்து நடந்தால் நகரின் அடுத்த பகுதி வந்துவிடும் என்றான். சரிதான் போங்க.
                          மணி 1 ஆகி பசி வயிற்றைக்கிள்ளியது.திரும்பி நடையோ நடை நடந்து கோட்டைக்குச் செல்லும் குறுக்கு வழியில் நடந்தேன். ஃபெடரல் போலிசியோவால் தடுக்கப்பட்டேன். அனுமதியில்லை என்றார்கள். நம்பினால் நம்புங்கள், கோட்டை (Castle) கண்ணுக்கு தெரியவேயில்லை. உயரமான மரங்கள் அடங்கிய காடுதான் தெரிந்தது. இந்த கேசில் மேக்சிமிலியனை மட்டுமல்ல என்னையும்தான் ஏமாற்றிவிட்டது என்று நினைத்துவிட்டு வெளியேபோக நடையைக்கட்டினேன்.
                    மறுபடியும், அதே கடையில் அந்த வெள்ளை காய் அல்லது பழத்தை எனக்கும் டேனியலுக்கும் இரண்டு வாங்கிக்கொண்டு காருக்குச்சென்றால், டானியல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பி கப்பைக் கொடுத்து, “இது என்ன காயா இல்லை பழமா ?” என்றேன். “அது காயுமல்ல பழமுமல்ல ஒரு வகைக் கிழங்கு, ஜிக்கமோ என்று பெயர்” என்றான். அப்போதுதான் தேவதானப்பட்டி சந்தையில் எப்போதாவது விற்கும் பூமிக்கிழங்கு ஞாபகம் வந்தது. ஆனால் அது யானைக்கால் போல பெரிதாக இருக்கும்(டேய் சேகரு, உனக்கு வேற உருவகமே  கிடைக்கலியா ?) . மேலே கொஞ்சம் கொஞ்சமாய் சீவி தருவார்கள். அது பூமியில் இருக்கும் இடம், குரங்குகளுக்குத் மட்டுமே தெரியும் என்பார்கள். இதுவும் அதன் ஜாதிதான். ஆனால் இங்கே சிறிய சைசில் அல்லது ஒரு பெரிய சைஸ் டர்னிப்போல இருந்தது. “கேசில் உள்ளே பார்க்க முடியவில்லை” என்றதும், “நினைத்தேன்”, என்றான். “3 மணிக்கு திறப்பார்களாம், ஆனால் நான் காளைச் சண்டைக்கு போக வேண்டுமே”, என்றேன். “ஓ, வெல்  நெக்ஸ்ட் டைம் தென்”, என்றான்.
                 "டேனியல்", தயக்கத்துடன் கூப்பிட்டேன். என்ன? என்றான். “நான் உங்கள் நாட்டு சலவைக்காரி ஒருத்தியைப் பார்க்க வேண்டும்” என்றேன். என்ன? என்று திரும்பி உற்றுப்பார்த்தான். “அப்படிப்பார்க்காதே, ஒரு விஷயம் இருக்கிறது” என்றேன். “லெட்ஸ் ஸி”  என்றான். “ஓகே குட்” என்றேன். “நோ நோ இத வேற லெட்டஸ்ஸி” என்றான்.
                 மணி 2 ஆகியிருந்தது, 3 மணிக்கு மெக்ஸி டூர் ஆட்கள் வத்துவிடுவார்கள். டேனியலிடம் சொல்லி சீக்கிரமாக என் ஓட்டலுக்குத் திரும்பச் சொன்னேன். ஓட்டலுக்கு வந்து சேரும்போது மணி 2.30. டேனியலிடம் விடைபெற்று, இன்னொரு டீல் போட்டேன். வேறென்றுமில்லை, நாளைக்காலையில் ஏர்போர்ட்டில் இறக்கிவிட வேண்டுமென்று. அதோடு சலவைக்காரிகளை சந்திக்க வேண்டுமே.
                      வேகமாக ரூம் சென்று முகம் கழுவி, கீழிறங்கி ரெஸ்டாரண்டுக்கு வந்தேன். மணி 2.45 அதிக கூட்டமில்லை. ஆனால் ஒரு ஐம்பது ஐட்டங்களை பரப்பி வைத்து லஞ்ச் பஃபே என்றார்கள். பழக்கமானவை போல் தெரிந்த சில ஐட்டங்களை எடுத்து வைத்துக்கொண்டு வாயில் வைக்குமுன், “தயகாரஜான்” என்று கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஒருவன் கூவினான். என் அப்பா பெயரை அமெரிக்காவில் பலபேர் உச்சரிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். ஆனால் இவன் கொலை செய்ததுபோல் ஒருவரும் செய்ததில்லை. நான்தான்  என்றேன்/ போகலாமா? என்றான். அடப்பாவி ஒரு கவளம் கூட வைக்கவில்லையே, “நீயும் வந்து சாப்பிடு”, என்றேன். “சாப்பிட்டுவிட்டேன்” என்றான். “சரி ஒரு அரைமணி நேரம் தா”, என்றேன். “பத்து நிமிடம்”, என்று சொல்லி அகன்றான்.
                   அவசரமாக சாப்பிட்டதில் வயிறும் நிறையவில்லை மனமும் நிறையவில்லை. கொஞ்சம் பழங்களை மட்டும் எடுத்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. நிறையப்பேரை பிக்கப் செய்யவேண்டியதிருக்கும் என்று நினைத்தபடி ஏறினேன். தடதடத்து வேன் கிளம்பியவுடன், கேட்டபோது நான் மட்டும்தான் என்றான். என்னை ஆல்ஃFரட் என்று அழைக்கும்படி சொல்லிவிட்டு, அவன் பெயர்கேட்டேன், கார்லோஸ் என்றான். லேட்டாகிவிட்டதா என்று கேட்டதற்கு “இல்லை உன் ஷோ 4.30 மணிக்குத்தான்” என்றான். அடப்பாவி, இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால் கொஞ்சம் கூட சாப்பிட்டிருப்பேனே என்று நினைத்து வயிறு எரிந்தேன்.
               மூன்றரை மணிக்கு ஸ்டேடியம் சென்றடைந்தோம். “இது மூன்று மணிநேர ஷோ”, என்று சொல்லி டிக்கட்டை கையில் கொடுத்து “எப்போது வரவேண்டும்” என்றான்.” ஷோ ஏழரைக்கு முடியுமென்றால், நீ ஒரு எட்டு மணிக்கு வா” என்றேன். “அஃப்கோர்ஸ் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், முழுவதையும் பார்த்துவிட்டுத்தான் வருவேன்” என்றேன். “சரி எஞ்ஜாய் திஷோ” என்று சொல்லிவிட்டு அகன்றான்.
வெறும் பிக்கப் டிராப் போல இருக்கிறது. என்னுடைய கேள்விகளை எல்லாம் யாரிடம் கேட்பது என்று நினைத்தபடி, அரங்குக்கு சென்றேன். காளைச்சண்டையை நேரில் பார்க்கப்போவதை நினத்தால் , என் தோள்கள் தினவெடுத்துத்துடித்தது .( என்னது தோள் தினவெடுக்குதா , அங்க வெறும் தோல்தான இருக்கு ?என்னமோ இவனே காளையைப் பிடிப்பது போல ரொம்ப பண்றானே )



இன்னும் வரும் >>>>>>

No comments:

Post a Comment