Thursday, June 6, 2013

காஸ்டில்லோ தியேட்டரில் நடந்த கள்ளக்காதல்- பகுதி 1.


          நியூயார்க் நகரில் "பிராட்வே தியேட்டர்கள் " என்பது உலகப்புகழ் வாய்ந்த ஒன்று. இங்கு நடக்கும் இசை நாடகங்கள் (Musical Plays) ஒரு முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை தரவல்லவை. ஐந்தாறு வருடங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவையும் உண்டு. குறிப்பாக, 'Lion  King' 'Mary  Popins', 'Mama mia' போன்றவை வெகுகாலமாக ஓடிகொண்டிருப்பவை. இவற்றுள் பல திரைப்படங்களாகவும் வந்துள்ளன. பாடி நடிக்கும் நடிகர்கள், நகரும் மேடை, வேகமாக சீன் மாறுதல், ஒப்பனை, அலங்கரிப்பு, லைவ் ஆர்க்கெஸ்ட்ரா என கொஞ்சம் கூட நம்பமுடியாத அளவில் பிரமிப்பை ஏற்படுத்தும், பெர்ஃபெக்சனை இங்கு  பார்க்கலாம். இதற்கு பெரிய அளவில் மேல்தட்டு மக்களின் ஆதரவும், இதனைப்பார்க்கவே வரும் வெளிநாட்டு கூட்டமும் ஆண்டு முழுவதும் இருக்கும். என்ன, டிக்கெட்டுகள்தான் குறைந்தது $100 முதல் $200 வரை இருக்கும்.

            கிறிஸ்மஸ் காலங்களில் நடைபெறும் "ராக்கெட்டிஸ் ஸ்பெக்டாக்குலர் மியூசிக்கல்" பார்த்திருக்கிறேன். காண்பதற்கு இரு கண்கள் பத்தாது. 75 வருடங்களாக நடக்கிறது.. இது நடைபெறும் “ரேடியோ சிட்டி ஹால்” தியேட்டர் உலகின் பெரியவைகளில் ஒன்று. எதுவும் மிகையில்லை.



            பிராட்வே தியேட்டர்கள் தவிர, ஆஃப் பிராட்வே தியேட்டர்களும் (Off  Broadway) உண்டு. இதற்கும் தனியான ரசிகர் கூட்டம் உண்டு. டிக்கெட்டுகள் சல்லிசாக கிடைக்கும் அது வேறு ஒரு உலகம். அப்படி ஒரு தியேட்டரான "கேஸ்டில்லோ தியேட்டரில்" (Castillo Theater :www.castillo.org) ஒரு நாடகம் பார்க்க கடந்த வாரம் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
            டைம்ஸ்கொயர் பகுதியில் இருந்து சிறிது நடந்தால்  இந்த தியேட்டர் இருக்கிறது. 7 மணி ஷோவுக்கு 6.30 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன்.கெளன்ட்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம், "Looks like, there is Plenty of time for the show" என்றேன். வாய் விட்டுச்சிரித்த பெண், டிக்கட்டை கையில் கொடுத்து வரவேற்றாள். வாய்விட்டுச்சிரிப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்களா? அந்த நாடகத்தின் பெயர் " Plenty of time".
 அங்கு பல இளம் அழகிய பெண்கள் காணப்பட்டனர். டிக்கெட் கொடுக்க, வழிகாட்ட, தியேட்டர் வாசலில் என்று. விசாரித்ததில், நடிப்புப்பயிற்சி பெறுபவர்களும், தன்னார்வ தொண்டர்களுமாம் (Volunteers).
         காஸ்டில்லோ தியேட்டர் உள்ளேயே நாலைந்து தியேட்டர்கள் இருந்தன. உள்ளே வேறு வேறு நாடகங்கள் நடைபெறுகின்றன. பல டிரஸ்ட்டுகளின் உதவியாலும், தனியார் நன்கொடைகளாலும்தான் இங்கே தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. ஏனென்றால் பிராட்வே போன்று அதிக வருமானம் இவைகளுக்குக் கிடையாது.
         நேரமிருந்ததாலும், கூட்டம் அதிகமில்லையென்பதாலும் வெளியே வந்து சப்வே சான்ட்விச் கடையில் ஒரு “வெஜ்ஜி டிலைட்” சான்ட்விச்சோடு, சில இலைதளைகளை மேய்ந்துவிட்டு, தியேட்டருக்குத் திரும்பினேன். பத்து  நிமிடங்கள் முன்னதாக உள்ளே விட்டனர். பிரமாண்டத்தை எதிர்பார்த்த எனக்கு தியேட்டரைப் பார்த்ததும் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. மிகச்சிறிய அரங்கம், அதனினும் சிறிய மேடை. ஒரு நூறு பேர் மட்டுமே உட்காரமுடியும். $25 டிக்கட் கொஞ்சம் அதிகமோ, பேசாமல் திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது, பணம் ரீஃபன்ட் தரமாட்டார்கள் என்று ஞாபகம் வந்தது. என்னதான் நடக்குது பார்த்துவிடலாம் என்று நினைத்து, முன்வரிசையில் முதல் ஆளாக அமர்ந்து விஐபி போல உணர்ந்தேன். (ஏலேய் சேகரு எந்த விஐபி முதலில் வந்து உட்காருவார்கள்? - அட கூறுகெட்ட மகேந்திரா, முதல் வரிசையில் உட்கார்ந்ததை சொன்னேன்டா).
           அதன்பின் கூட்டம் கூட்டமாக வந்து, சிறிய அரங்கு சீக்கிரத்தில் நிறையும் என நினைத்து ஏமாந்தேன். ஒருவேளை, ஆரம்பித்தவுடன் வருவார்களோ? வேலை நாளாக இருப்பதால் ஆட்கள் இல்லாமல் இருக்கலாம். நாடகம் ஆரம்பிக்க ஐந்து நிமிடம் இருக்கும்போது ஒரு ஐந்தாறு நபர் வந்தார்கள். சரியாக 7 மணிக்கு பெல் அடித்தது.      
              தேவதானப்பட்டி சிவராம் டாக்கீஸில் பெல் அடிப்பது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் தியேட்டரில் வெளியே கேட்கும்  வண்ணம் , மக்களை அழைப்பதற்காக   பாடல்கள் போடுவார்கள். படம் ஆரம்பிக்கும் முன் எப்போதும், பெங்களூர் ரமணியம்மாளின் பாட்டு போடுவார்கள். ஞாபகம் வந்துவிட்டது, "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"என்ற பாடல். அரோகரா அரோகரா என்று சொல்லும்போது படம் போட்டுவிடுவார்கள் என்பதால் ஓடுவோம். (அடேய் சேகரு, உனக்கு வயசாகிப்போச்சு சும்மா பழசை எடுத்திட்டே இருக்கே, சும்மாரு மகேந்திரா ஒனக்கு மட்டும் இளமை ஊஞ்சலாடுதா?).
             திரைகள் எழும்ப, அரங்கு இருளாயிற்று. மேடை ஒளிர, ஒரு சிறிய ஹோட்டல் ரூம் கண்முன் உருவானது. கனகச்சிதமாக இருந்தது. பழைய காலத்து ரூம் போல் தெரிந்தது. ஒரு ஓரத்தில் சிறிய டிரஸ்ஸிங் டேபில், சேர், மற்ற பகுதியில் ஒரு சிறிய பார், மேஜை, அதன்மேல் அந்தக்காலத்து மதுபானங்கள். ரூமின் நடுவில் உள்ள 'கிங்' படுக்கையில் நல்ல விரிப்புகள், தலையனைகள். அட அப்பதான் பார்த்தேன், அந்தப்படுக்கையின் மேல் ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாக படுத்திருந்தனர். சொல்லவேயில்லை. ஐயையோ இதென்ன தெரியாமல் பலான ஷோவுக்கு வந்துவிட்டோமோ என்று திகைப்பாக இருந்தது.


விரைவில் பார்ட் 2

No comments:

Post a Comment