Monday, June 11, 2018

தள்ளிப்போன தற்கொலை முயற்சி !!!!


Image result for தூக்குப்போட்டுக் கொள்வது
வேர்களைத்தேடி பகுதி -16
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/05/blog-post.html
            பட்டினி, தாகம், செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்த சோகம், கண்ணீரினால் காய்ந்த கன்னங்கள், உலர்ந்து போன உதடும் மனசும் என்று கலந்து கட்டிய ஒரு உணர்வில்தான் தற்கொலை பண்ணிக்கொள்ள நினைத்தேன். மனதை ஒரு நிலைப்படுத்திவிட்டு ஒவ்வொரு வழியாக யோசித்தேன்.
          உடனே தோன்றியது தூக்குப்போட்டுக் கொள்வது. அம்மா கொடிக்குக்  கட்டும் நைலான் கயிறும் இருந்தது நினைவுக்கு வந்தது. இதே சமயலறையில்  போட்டுக் கொள்ளலாம் என்று அண்ணாந்து பார்த்தேன். அங்கே மேலே லாகடத்தில் '' வடிவில் கம்பியும் இருந்தது.
Related image

            ஆனால் இரண்டு காரணத்திற்காக அதை கைவிட்டேன். சாப்பாடு சமைத்து சாப்பிடுமிடத்தில் நான் இறந்து போனால் என் தம்பிகளுக்குப் பயமாயிருக்கும். அப்புறம்  எப்படி என் அம்மா எங்கே சமைக்க முடியும்? எப்படி எல்லோரும் அதே இடத்தில் சாப்பிட முடியும்? என்று நினைத்தேன். இது முதல் காரணம். இரண்டாவது காரணம், தூக்குப்போட்டால் கழுத்து எலும்பு முறிந்து நாக்கு முழுவதுமாக வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். பார்க்கவே கோரமாக இருக்கும். எனவே அப்படியெல்லாம் சாகவேண்டாம் என்று முடிவு செய்தேன்.
          அடுத்த முறையாக எலி மருந்து பாஷானம் தின்று செத்துவிடலாம் . இது ரொம்ப ஈஸி. மூலைக்கடைச் செட்டியார் காதையில் கேட்டால் சந்தேகமே வராமல் தந்துவிடுவார். நம் வீட்டில் கூட அம்மா போன தடவை வாங்கினது மீதமிருக்கும் கண்டுபிடித்துவிடலாம் என்று மெதுவாக எழுந்து தேடினேன். ஆஹா சமையலறை அலமாரியில் அம்மா வெளிப்படையாகவே வைத்திருந்தார். எடுத்தேன் முகர்ந்து பார்த்தேன்.
Image result for எலி மருந்து

          நாத்தம் குடலைப்பிடுங்கி வாந்தி வந்தது. ஓங்கரித்தேன். சத்தம் கேட்டு என் அம்மா வர அவசரமாக அதனை வைத்துவிட்டு மீண்டும் முழங்காலுக்கு வந்தேன்.
          "போதும்டா சேகர் எந்திரி" என்றார் என் அம்மா.
          "இல்லை"
          சரி விடுறா நம்ம அப்பாதான, எந்திரி நான் சொல்லிக்கிறேன்.
          "இல்லம்மா அப்பா சொன்னாதான் எந்திரிப்பேன்".
         
          "கோபச் சனியன் பிடிச்ச இந்த ஆளை வெச்சுக்கிட்டு பெரிய தொல்லையா இருக்கு. நீசப்பய" என்று சொல்லிவிட்டு அம்மா போனார்கள். அதீத கோபப்படும்போது அம்மா சொல்லும் அந்த வார்த்தை "நீசப்பய" என்பது. ஓரிரு சமயத்தில் “எங்கேயோ கிடந்து வந்த நீசப்பய" என்பார்கள். அப்படிச் சொல்லித்திட்டும்போது எனக்கு சிரிப்பு வந்துவிடும். சில சமயங்களில்         அவர்கள் சொல்வதற்கு முன்னால் அதனை நான் சொல்லிவிட அம்மாவுக்கு சிரிப்பு வந்துவிடும். சரி இப்ப தற்கொலைக்கு வருவோம்.
          எலிப்பாஷான முயற்சியையும் கைவிட்டு, பாப்பான் கிணற்றில விழுந்துரலாம்னு நினைச்சேன். எங்க தெருவுக்கு மட்டுமல்ல பக்கத்திலுள்ள பல தெருக்களுக்கு பாப்பான் கிணறுதான் குடி தண்ணீர். பக்கத்தில் டேங்க் கட்டி குழாய்கள் போட்டார்கள். அதற்கு தனபால் என்பவரையும் நியமித்து காலையிலும் மாலையிலும் மோட்டார் போடுவார்கள். அருமையான தண்ணீர். மோட்டார் போடவில்லையென்றாலும் கூட கிணற்றிலிருந்து இறைத்து எடுத்துக் கொள்வோம். மோட்டார் போட்டு முடித்த போது ஓடிப்போய் உள்ளே பார்ப்பேன். தண்ணி முழுவதுமாக தீர்ந்து போய் அடிப்பகுதி தெரியும்.  
Image result for பாழடைந்த கிணறு

அப்போது உற்றுப் பார்த்தால் தண்ணீர் ஊறுவது தெரியும். ஒரு மணி நேரத்தில் நிறைய தண்ணீர்     வந்துவிடும். தண்ணீர் ஊற்றிலிருந்து சிறிது சிறிதாக கொப்பளித்து வந்து நிரப்புவது கண்கொள்ளாக் காட்சி. அந்தக் கிணற்றில் நீர் இருக்கும்போது விழுந்தாலும் சரி நீர் வற்றியபோது விழுந்தாலும் சரி சாவு நிச்சயம். நீர் இல்லாத போது விழுந்தால் பாறையில் மண்டை தெறித்து சாவது நிச்சயம். நீர் இருக்கும் போது விழுந்தாலும் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் சாவு நிச்சயம்.
          ஆனால் மக்களுக்கு குடிநீர் தரும் அமுதசுரபியாக இருக்கும் கிணற்றில் நான் விழுந்து செத்துப்போனால், பின்னர் அதிலிருந்து எப்படித் தண்ணீர் குடிப்பார்கள். கிணறு இருக்கும்வரை என்னை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என்பதால் அந்த முடிவையும் கைவிட்டேன்.
          இறுதியாக இப்படியே பட்டினி கிடந்தால் கூட செத்துவிடுவோமே அப்படியே இருக்க வேண்டியது தான் என்று நினைத்த போது மீண்டும் உலர்ந்த கன்னங்களில் சூடான கண்ணீர் உருண்டது.
          மதியத்திலிருந்து முழங்காலில் நிற்கிறேன். முழங்கால் இரண்டும் கெஞ்சியது. என் அப்பாவும் அம்மாவும் பள்ளிக்குப்போய் 4 மணிக்குத்தான் திரும்ப வந்தார்கள். பசி காதை அடைத்தது. மதியம் வந்த என் அம்மா போட்டு வைத்திருந்த சாப்பாடும் அப்படியே இருந்தது.
          வந்து பார்த்த என் அம்மா, "டேய் சேகர் இன்னுமா சாப்பிடல, எழுந்து வாடா வந்து சாப்பிடு" என்றார்கள்.
          நான் என் அம்மாவை முறைத்தேன். நான் தான் பட்டினி கிடந்து சாகலாம் என்ற முடிவில் இருக்கிறேனே. அதற்குள் என் அப்பா உள்ளே வந்து ஒரு உருமு உரும நான் அப்படியே உட்கார்ந்து ஆறிப்போன சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தேன். எங்கப்பாவுக்கு அப்படி ஒரு மரியாதை கலந்த பயம். என் தற்கொலை முயற்சியும் கைவிடப்பட்டது.
          ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். என் அப்பாவிடம் எவ்வளவுதான் திட்டும் அடியும்  வாங்கினாலும் ஒரு முறை  கூட அவரை எதிர்த்துப் பேசினதில்லை, எதிர்த்து முறைத்ததில்லை.          மனசில் கூட எதிர்ப்பு எண்ணங்கள் தோன்றியதில்லை என்பதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் என்பதையும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு முறை தவிர அடிவாங்கிய மற்ற எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு தவறு செய்துதான் மாட்டியிருக்கிறேன். எனவே அப்போது நானே என் உடம்பை அடிவாங்க தயார் செய்து கொள்வேன்.
          இப்போது சென்று பார்த்தபோது பார்ப்பான் கிணறு தூர்ந்து போய்க்கிடந்தது. உள்ளே பாழடைந்து நீரின்றி வெறும் தேங்காய் மட்டைகளும், பழைய செருப்புகளும் இன்னும் பலவித குப்பைகளும்தான் அதிலிருந்தன. அதைப் பார்க்கும்போது மனதை ஏதோ செய்தது. ஆழ்குழாய் கிணறுகள் வந்துவிட்டன என்பதால் கிணறுகளை பராமரிப்பதும் இல்லை தேவையும் இல்லை. ஆனால் அந்தக் கிணறுமுன் நடந்த பெரிய சண்டை ஞாபகம் வந்தது. அதனை அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
 தொடரும்



12 comments:

  1. ஆஹா பாக்கியராஜ் ஒரு படத்தில் தற்கொலைக்கு தொடர்ந்து முயன்று தோற்கும் ஞாபகம் வந்தது.ஆனால் உங்கள் தோல்விக்கெல்லாம் உங்கள் பொது நலச் சிந்தனையே தடையாக இருந்திருக்கிறது என நினைக்க தாங்கள் இன்று செய்து வரும் பொதுச் சேவைகளின் மூலம் புரிகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி ,சில சமயங்களில் சுய நலமே பொதுநலமாகவும் ,பல சமயங்களில் பொதுநலமே சுயநலமாகவும் ஆகிவிடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம் .இதில் நீங்கள் எந்த வகையை குறிப்பிடுகிறீர்கள் ?

      Delete
    2. நான் சொல்வது பாஸிடிவாக

      Delete
    3. நான் சொல்வது பாஸிடிவாக

      Delete
  2. ஆஹா பாக்கியராஜ் ஒரு படத்தில் தற்கொலைக்கு தொடர்ந்து முயன்று தோற்கும் ஞாபகம் வந்தது.ஆனால் உங்கள் தோல்விக்கெல்லாம் உங்கள் பொது நலச் சிந்தனையே தடையாக இருந்திருக்கிறது என நினைக்க தாங்கள் இன்று செய்து வரும் பொதுச் சேவைகளின் மூலம் புரிகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுவாரஸ்யம். என் நண்பன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று நானும் உதவிய விவரங்களை எங்கள் பதிவொன்றில் எழுதி இருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், அதன் சுட்டியை இங்கே பகிரலாமே

      Delete
    2. https://engalblog.blogspot.com/2014/06/blog-post_11.html

      படித்து விட்டு ஒரு பின்னூட்டமிட்டால் படித்து விட்டீர்கள் என்று தெரிந்துகொள்வேன்.

      :)))

      Delete
  4. ம்... இப்படியும் பல முயற்சியா...?

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை முயற்சிகள் அன்றோடு முடிந்துவிட்டன தனபாலன்.

      Delete
  5. நானும் தற்கொலைக்கு முயற்சி செய்து அதில் இருந்து தப்பியதால்தான் இப்ப மோடியை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. முயற்சிகள் பலிக்காமல் போனதற்கு கடவுளுக்கு நன்றி

      Delete