Monday, June 27, 2016

சொர்க்கத்தின் கோவிலில் பரதேசி!!!!!

சீனாவில் பரதேசி -13

Beijing bus travel
Public bus in Beijing 
நன்றாகத் தூங்கி எழுந்தேன். கிளம்பி காலைச் சிற்றுண்டி முடித்து வெளியே வந்து பஸ்ஸில் ஏறினேன். நேற்றே ஜோஹன்னாவிடம் எல்லா வழிவகைகளையும் கேட்டுக் கொண்டு கையில் அட்ரஸையும் சீனமொழியில் எழுதி எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். பீஜிங்கில் பஸ் பிரயாணம் இதுதான் முதல் முறை என்பதால் சிறிது படபடப்பாக இருந்தது. பஸ் முழுவதும் ஏசி  செய்யப்பட்டு இருந்தது. அமெரிக்கா போல் அங்கு எல்லா பேருந்துகளும் ஏசி/ஹீட்டர் வசதிகளோடு இருந்தன. கண்டக்டர் பெண் நடுவில் உட்கார்ந்திருந்தாள். அவளிடம் போய் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்க பஸ்களில் கண்டக்டர் கிடையாது. ஒரு அரை மணி நேரப்பயணத்திற்குப் பின் நான் பார்க்க வேண்டிய இடம் வந்தது. இதற்குப் பெயர் 'டெம்பில் ஆஃப் ஹெவன்' ( Temple of Heaven).
The Entrance Ticket Information in Chinese
Entrance to get the tickets
          பஸ்ஸைவிட்டு இறங்கி குறுக்கே நடந்து கடந்து வழிகேட்டால் உயரமான சுவர்கள் கொண்ட ஒரு பெரிய தோட்டம் போன்ற இடம் வந்தது. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தேன். ஒரு மரங்கள் சூழ்ந்த  அந்த இடத்தின் நடுவில் அகலமான சிமென்ட் பாதை தெரிந்தது. அதனுள்ளே போகச் சொன்னார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கோவிலையையும் காணோம்.பாதையின் இரு மருங்கிலும் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு 1 1/2 கி.மீ. நடந்திருப்பேன். நடந்து உள்ளே போனதும், பசி வயிற்றைக் கிள்ளியதால் வழியில் வந்த ஒரு கடையில் விற்ற பன் போன்ற ஒரு வஸ்துவைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் விற்ற பழங்களையும் சாப்பிட்டுவிட்டு, ஒரு லெமன் ஜூஸ் போன்ற ஒன்றைக் குடித்தவுடன்தான் என்னுடைய படபடப்பு அடங்கியது.
Excising  People
சாப்பிட்டு முடித்து ஒரு ஏப்பத்தையும் விட்ட பிறகு கடைக்காரப் பெண்ணிடம் இடத்தைக் கேட்டேன். அவள் இடதுபுறம் இந்த ஒரு மரப் பாலத்தைக் காண்பித்து அதனைத் தாண்டிப் போகச் சொன்னாள். அவள் சொன்ன வழியில் சிறிது நடந்தவுடன் மிகப் பிரமாண்டமான ஒரு கோயில் தெரிந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்துவிட்டோம் என்று நினைத்து அதனை நோக்கி நடந்தேன்.

அதனைப் பற்றி சில விவரங்களைப் பார்த்துவிடுவோமே.

1.   இந்த 'சொர்க்கத்தின் ஆலயம்' கிபி.1406 முதல் 1420 –க்குள் யாங்லி பேரரசரால் கட்டப்பட்டது. இவர்தான் விலக்கப்பட்ட நகரத்தையும் கட்டியவர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
2.   ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜியாஜிங் (Jiajing) பேரரசர் காலத்தில்தான்  இது விரிவுபடுத்தப்பட்டு "டெம்பிள் ஆஃப் ஹெவன்" என்ற பெயரையும் பெற்றது.
3.   ஜியாஜிங் இது போன்றே கிழக்குப்புறம், சூரியனுக்கும் (Temple of sun) வடபுறம்  பூமிக்கும் (Temple of Earth), மேற்குப்புறம் நிலவுக்கும் (Temple of Moon) வெவ்வேறு கோவில்களைக் கட்டினாராம்.
4.   அதன்பின் 18ஆம் நூற்றாண்டில் சின்லாங் (Qianlong) பேரரசர் காலத்தில் இது  முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது.
5.   ஓப்பியம் யுத்தம் நடக்கும்போது, ஆங்கில ஃபிரெஞ்சுப்  படைகள் இதனை ஆக்ரமித்து தங்கள் செயலகம் போல் பயன்படுத்தினராம்.  
6.   1900ல் நடந்த பாக்சர் புரட்சியின் போது எட்டு நாடுகள் ஒன்று சேர்ந்து இதனை ஆக்ரமித்து தங்கள் போர்த்தலைமையகமாக ஆக்கிக் கொண்டனர். இதனால் முற்றிலும் சிதிலமடைந்து சிலகாலம் கேட்பாரற்றுக் கிடந்தது.
7.   ஆனால் 1914ல் யுவான் ஷிக்காய் (Yuan shikai) தாம் சீன அதிபராக பதவியேற்றபிறகு, இங்கு ஒரு மிங் வழி பிராத்தனையை நடத்தினார். ஏனென்றால் அவரே தன்னை சீனப்பேரரசராக முடிசூட்டிக் கொள்ள நினைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.
8.   1918ல் இது அரசு பூங்காவாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்டது.
9.   1998ல் இதன் கட்டடக்கலையின் உன்னதத்தை வியந்து, புனெஸ்கோவால் "வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்” டாக ஆக்கப்பட்டது.
10.               இந்த இடம் மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று சதுர மீட்டர் அகலம் கொண்டதாம்.

North Sky Gate
Inner Entrance 

மெதுவாக இடதுபுறம் இருந்த பாலத்தில் நடந்த போது, ஒரு பிரம்மாண்டமான உயரமான நுழைவாயில் வந்தது. அருமையான வேலைப்பாடுகளைக் கொண்ட  அந்த வாயிலைக் கடந்து, அதன் மறுபுறம் பல படிகளில் இறங்கி உள்ளே சென்றால் வெட்டவெளியில் பிரமாண்டமாக பல வண்ணங்களில் ஜொலித்தது, “சொர்க்கத்தின் கோவில்”.
Hall of Prayer for Good Harvests, the largest building in the Temple of Heaven
Temple of Heaven
அதன் இருபுறமும் இடைவெளிவிட்டு இரு பெரிய கட்டங்கள் இருந்தன.
எனது முன்னால் வந்தது "ஹால் ஆஃப் பிரேயர் ஃபார் குட் ஹார்வெஸ்ட்”. ( Hall of Prayer for Good harvest)அப்படியே நடந்து சென்று சுற்றியும் அமைக்கப்பட்டிருந்த படிகளில் ஏறி மேலே சென்றேன்.

வட்ட வடிவமாக மூன்று அடுக்குகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்த பிரார்த்தனை மண்டபம் 36 மீட்டர் சுற்றளவும், 38 மீட்டர் உயரமும் கொண்டது. மூன்று அடுக்கு மார்பிள் கல்லால் இதன் அடிப்பகுதி அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த முழு மண்டபமும் மரத்தால் கட்டப்பட்டது. ஆனால் ஒரு ஆணிகூட பயன்படுத்தப்படவில்லையாம்.

இதன் மறுபுறம் இருந்தது “இம்பீரியல் வால்ட் ஆஃப் ஹெவன்” (The Imperia lVault of Heaven). இது ஒரு அடுக்கில் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டது. ஆனால் ஹால் ஆஃப் பிரேயரைக் காட்டிலும் சின்னது. இதன் கவர் வழவழப்பாய் இருக்கிறது. லேசாகப்பேசினால் கூட எதிரொலி கேட்கிறது. பிரார்த்தனை மந்திரங்களை ஓதும்போது கூடியிருக்கும் அனைவருக்கும் கேட்கும் விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எதிரொலி சொர்கத்தில் எதிரொலிக்கும் என்று இவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இது “ஹால் ஆஃப் பிரேயரு”டன் ஒரு காவிநிற பாலத்தின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

இதன்  கிழக்குப்புறத்தில் ஒரு வட்டவடிவ பலிபீடம் ஒன்று இருக்கிறது. இதுவும் மூன்று அடுக்கு பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு, ஒவ்வொரு அடுக்கிலும் டிராகன் வடிவங்கள் செதுக்கப்பட்டு இருந்தன.

அதன் மறுபுறம் இறங்கினால் ஒரு கம்பீரமான சீன ஆண்மகனும் இளவரசிபோல் உடையணிந்த ஒரு அழகியும் முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர்.  சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, நானும் அவர்களை நோக்கி நகர்ந்தேன்.

-தொடரும்.

ஒரு முக்கிய அறிவிப்பு :

வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும், தமிழர் விழா ட்ரெண்டன்  , நியூ ஜெர்சியில்  வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .அடியேனும் கலந்து கொள்கிறேன்.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.வாருங்கள் சந்திப்போம் .






2 comments:

  1. சொர்கத்தின் வாயிலைத் தொட்ட ஆல்பி சார். ஆணியில்லாமல் மரத்தால் கட்டப்பட்ட அந்த இடம் ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியங்கள் தொடரும் பாஸ்கர் .

      Delete