Thursday, June 11, 2015

ரஷ்ய ஜார் மன்னனின் கொலையாளி !!!!!!!!!!!!!!!!!!!

The Assassin of theTsar
மேகங்கள்சூழ்ந்த மே மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் நெட் ஃபிலிக்சில் மேய்ந்ததில் கிடைத்த படம் இது. யூ டியூப்பிலும் இருப்பதை பின்னர் பார்த்தேன்.
ரஷ்யாவில் உள்ள ஒரு மனநிலை மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளி தான் தான் 1918-ல் ஜார் மன்னன் நிக்கலஸ் II-ஐ   கொன்றதாகக் கூறுகிறான். அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனே நிக்கலஸின் தாத்தாவான அலெக்சாண்டர் II-1891ல் கொலை செய்ததாகக் கூறுகிறான் என்பதால் இது ஒரு வேளை முன்பிறவி ஞாபகமாக இருக்குமோ என்று  சிலர் சந்தேகப்படுகிறார்கள். இது மனநிலைப்பிரச்சனை என்பதால் பல ஆண்டுகள் அங்கே இருக்கிறான். இதற்கிடையில் புதிதாக அங்கு ஒரு டாக்டர் வருகிறார். (Dr. ஸ்மிர்நவ்) அங்கு ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு சீனியர் டாக்டர், புதிய டாக்டருக்கு எல்லா நோயாளிகளைப் பற்றியும் சொல்லும்போது டிமோ (Timofyev) வைப்பற்றி சொல்லி விளக்குகிறார்.   

Dr. ஸ்மிர்நவ் டிமோவைப்பற்றி முழுவதுமாக அறிய முயலும்போது, டாக்டருக்கு டிமோ கொன்ற ஜார் நிக்கலஸ் II தான்தான் என்று தோன்றுகிறது. பின்னர் இருவரும் சந்தித்து உரையாட உரையாட அந்தக் கொலையைப் பற்றி உலகமே அறியாத பல விஷயங்கள் ஃப்ளாஸ்பேக்கில் காண்பிக்கப்படுகிறது.
இது ஒரு "சைக்காலஜிக்கல் திரில்லர்" என்று சொல்லலாம். வரலாற்று உண்மைச்சம்பவங்களை இணைத்து வழங்கிய படத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் அறிவதற்கு முன் கொலை செய்யப்பட்ட இந்த இரண்டு பேரரசர்களைப்பற்றி சிறு குறிப்புகளைப் பார்ப்போம்.
பேரரசர் அலெக்சாண்டர் II
Emperor Alexander II
1.    ஜார் மன்னன் பேரரசர் அலெக்சாண்டர் II கி.பி.1818ல் மாஸ்கோவில் பிறந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் 1855ல் பேரரசராக முடிசூட்டப்பட்டார்.
2.    ரஷ்யாவின் பேரரசர் தவிர, 'போலந்தின் அரசர்' (King of Poland) பின்லாந்தின் இளவரசர்( The Grand Prince of Finland) ஆகிய பதவிகளையும் வகித்தார்.
3.    ரஷ்யாவில் வெற்றிகரமாக பல சீர்திருத்தங்களை வடிவமைத்த பெருமை இவருக்குண்டு.
4.    கி.பி.1861ல் செர்பியர்களை விடுதலை செய்ததால் 'அலெக்சாண்டர் தி லிபரேட்டர்' என்று அழைக்கப்பட்டார்.
5.    மேலும், நீதித்துறையில், நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது, சிறு நகரங்கள் கிராமங்களை மக்களே நிர்வகிப்பது, தூக்குத்தண்டனை ஒழிப்பு போன்ற பல சீர்திருத்தங்களை செய்தார்.
6.    ராணுவத்தை நவீனப்படுத்தி, ஒரே நிர்வாகத்தின் கீழ்  கொண்டுவந்தார்.
7.    உயர் குல பிரபுக்களின் பல சலுகைகளை நீக்கினார். பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.
8.    அலாஸ்காவை அமெரிக்காவுக்கு $7.2 மில்லியனுக்கு விற்றவர் இவரே. இது நடந்தது 1867ல். பல தனியார் கம்பெனிகள், நாடெங்கிலும் இரயில் தடங்கள், இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்தல் போன்றவற்றை செய்து ரஷ்யாவை முன்னேற்றப்பாதையில் நடத்தினார்.
9.    பல்கேரியாவை ஆட்டமன் பேரரசின் அடக்கு முறையிலிருந்து காப்பாற்றி சுதந்திரம் கொடுத்தார். எனவே இன்னும் பல்கேரிய மக்களால் போற்றப்படுகிறார்.
10. அவர் உயிர் மீது தாக்குதல் நடந்த பல முறை தப்பித்த அலெக்சாண்டர், கான்ஸ்டிட்டியூசனல் மொனார்க்கியாக ரஷ்யாவை மாற்றுவதற்கு இரண்டு நாள்கள் இருக்கையில், ஒரு புரட்சி அமைப்பின் மூலம் கொல்லப்பட்டார். இல்லாவிட்டால் இன்றுவரை ஜார் மன்னரின் பரம்பரை அங்கு ஆட்சியில் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.   
பேரரசர் நிக்கலஸ் II
Emperor Nicholas II
1.    பேரரசர் நிக்கலஸ் II, கி.பி.1868ல் பிறந்தார். கொல்லப்பட்ட அலெக்சாண்டர் II வின் பேரன். ஆனால் நடுவில் வந்த இவரின் தந்தை, “கான்ஸ்டிடியூசனல் மொனார்க்கி” (பிரிட்டனில் உள்ளபடி) என்ற அலெக்சாண்டர் II -வின் முயற்சியை நிராகரித்து மீண்டும் சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வந்து, புரட்சியை இரும்புக்கரம்  கொண்டு  அடக்கினார். ஆனால் சிறிய வயதில் இறந்து போனதால், நிக்கலஸ் II ஆட்சிப் பொறுப்பேற்றார். இவர் தன் தந்தையின் முறையைப் பின்பற்றி சில தவறான முடிவுகள் எடுத்ததால் இவரே ரஷ்யாவின் கடைசி பேரரசர் என்ற நிலையில் “போல்சோவிக்” களுக்கு ஆட்சியைப்பறிகொடுத்தது மட்டுமன்றி அவர்கள் கையில் சிறைப்படுத்தப்பட்டு 1918ல் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டார்.
2.    ஆட்சிக்கு வந்தபின் ஜப்பானுக்கு எதிரான போரில் கடுந்தோல்வியை சந்தித்தது ரஷ்யா. இவருடைய தவறான முடிவின் மூலம் ஜெர்மனி மீது போர் தொடுத்து, முதலாம் உலகப்போர் தொடங்கி, அதில் ரஷ்யா தோற்றதோடு 3.3 மில்லியன் ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
3.    டென்மார்க், கிரீஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே, பிரஷ்யா, ஆகிய அனைத்து அரசு குடும்பத்தினரும் இவருக்கு உறவினர்தான். இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் பார்ப்பதற்கு அச்சு அசல் இவரைப் போலவேதான் இருப்பாராம். இருந்தாலும் 1917ல் நடந்த போல்ஷேவிக் புரட்சியில் மாட்டிக்கொண்ட இவருக்கு இங்கிலாந்தும் சரி, நேசநாடான ஃபிரான்சும் சரி அடைக்கலம் கொடுக்க மறுத்தன.
Emperor Nicholas II Family
4.    சிறை பிடிக்கப்பட்ட இவரது குடும்பம் முதலில் அரண்மையிலேயே வைக்கப்பட்டது. பின்னர் வசதிகள் முற்றிலுமாக குறைக்கபட்டு டோபோல்ஸ்க் என்ற இடத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அதைவிட சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டு ஜூலை 1918ல் இரண்டாவது நிக்கலஸ், அவர் மனைவி அலெக்சான்ரா, பட்டத்து இளவரசன் அலெக்சி, நான்கு மகள்கள், ஓல்கா, டாட்டியானா, மரியா, அனஸ்டாசியா ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு அவர்களை விட்டு நீங்க மாட்டோம் என்று இருந்த குடும்ப மருத்தவர், அரசரின் உதவியாளர், அரசியின் வேலைக்காரி, குடும்ப சமையல்காரர் ஆகியோரும் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.   
5. ரஷ்ய ஆர்தொடக்ஸ் சர்ச் இவரை 1981ல் புனிதராக அங்கீகரித்தது.
இப்போது படத்துக்கு வருவோம்.
டாக்டராக நடித்தவரும் பேரரசர் இரண்டாம் நிக்கலஸாக நடித்தவரும் ஒருவரே. "ஓலெக் யான்கோவ்ஸ்கி (Oleg Yankovsky) என்ற அவர் திறம்பட நடித்துள்ளார்.
Oleg Yankovsky as Tsar Nicholas
மனநோயாளியும், பேரரசரைக் கொல்பவரும் ஒருவரே. பெயர் மால்கம் மெக்டோவல் (Malcdm Mcdowell) இவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அலெக்சாண்டர் போரோடைன்ஸ்கி, கேரன் ஷக்ஜரோவ் ஆகிய இருவரும் திரைக்கதை அமைக்க, இயக்கியவர் கேரன் ஷக்ன ஜரோவ் (Kaven Shakhnazarov) விளாடிஸ்லவ் ஷட் மற்றும் ஜான் ஆல்ட்மன் இசையமைத்திருக்கிறார்கள்.
USSR -ரின் மோஸ்ஃபிலிம் இதனைத் தயாரித்து 1991ல் ரஷ்யாவிலும் 1993ல் லண்டனிலும் வெளியிட்டார்கள்.  ரஷ்ய மொழியில் எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டது.  
ரஷ்ய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் பார்த்து மகிழலாம்.

முற்றும்

6 comments:

  1. ம்... முடிவில் குடும்பத்தோடு கொலை...!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப பாவம் , ஒரு காலத்தில் பாதி ஐரோப்பாவை ஆண்ட ராமனோவ்
      குடும்பம் , சடுதியில் அழிந்தது .

      Delete
  2. அருமையான பதிவு சார்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. ம்ம் நிறைய தகவல்கள் அறிந்து கொண்டோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி துளசிதரன்

      Delete