Thursday, May 28, 2015

ஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது !!!!!!!!!!!! பகுதி 2

احرق دهونك بركوب الدراجات

    இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும் 
  http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_26.html
     
         ஹோம் வார்டன்கள் ரூத்தும், கலைச் செல்வியும் சென்டரை சுத்திக் காண்பித்தார்கள். திரும்பவும் தயாளனிடம் சென்று, வரும் ஜூன் முதல் வாரத்தில் ஜாய்ன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் பொடி நடையாய் கிளம்ப ரெடியானேன். தயாளன், "திரும்ப நடந்தா போகப் போகிறீர்கள்", என்று கேட்டுவிட்டு "அப்பாத்துரை சாரை கொண்டுபோய் சாட்சியாபுரத்தில் இறக்கி விட்டுவிடு", என்றார். அப்பாத்துரை அங்கு ஆஃபிஸ் அஸிஸ்டண்ட்.  
      சைக்கிளைக் கொண்டு வந்த அப்பாத்துரை, குள்ளமாய் இருந்தார். இவர் எப்படி இந்த உயரமான சைக்கிளை ஓட்டுவார் என்ற யோசனையுடன் கிட்டப்போனேன். "இந்தாங்க சார் ஓட்டுங்க", என்றார் அப்பாத்துரை. திடுக்கிட்ட நான் "இல்லை பரவாயில்லை நீங்களே ஓட்டுங்க, இறக்கிவிட்டுட்டு அப்படியே நீங்க வந்துரலாம்ல", என்றேன். நல்லவேளை அப்பாத்துரை அதற்குமேல் கட்டாயப்படுத்தாமல் ஏறிக்கொண்டு, பின்னால் உட்காரச் சொன்னார். பின்னர் தட்டுத்தடுமாறி பேலன்ஸ் செய்து ஓட்ட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம் அவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்டும்போது அவர் கால் எட்டவேயில்லை. மேலே வரும் பெடலை ஒரு அழுத்து, அது கீழே  போய்விட்டு திரும்ப மேலே வரும்போது இன்னொரு அழுத்து. இப்படித்தான் இருபுறமும் நடந்தது. பார்க்க வேடிக்கையாக இருந்தது.
         காலே எட்டாதவர்களெல்லாம் சைக்கிள் ஓட்டும்போது, நான் கண்டிப்பாய்ப் பழகிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தேவதானப்பட்டி வந்து சேர்ந்தேன்.
      வேலை கிடைத்த மகிழ்ச்சியை முழுவதுமாக பகிர்ந்து மகிழ முடியாமல், சைக்கிளை எப்படி பழகப்போகிறேன் என்பதை நினைத்தால் பகீரென்றது. ஒரு புரம் அம்மாவிடம் சண்டை போட்டேன். எல்வின் சென்டருக்கு தினமும் போய் வருவது மட்டுமல்ல, சோஷியல் ஒர்க்கர் என்பதால் பல இடங்களுக்கும் போக வேண்டியதிருக்குமாம். சைக்கிள் தெரியாவிட்டால் இந்த வேலையைச் செய்யவே முடியாது, அது தவிர சைக்கிளுக்கெல்லாம் அப்போதெல்லாம் டிரைவர் கிடைக்காது (டேய் சேகரு அப்ப மட்டுமல்லடா இப்பவும் தான் கிடைக்காது. சைக்கிளுக்கு டிரைவராம், நீயெல்லாம் ஒரு ஆள்னு உனக்கெவன்டா வேலை கொடுத்தான் - வந்துட்டான்டா மகேந்திரன் - எங்கடா தொலைஞ்ச இத்தனை நாள் - அப்படியே போயிருக்கக் கூடாதா?)
     இரவும் பகலும் இதே யோசனையாய் ரெண்டு நாள் கழிந்தது.  தேவதானப்பட்டியில் வெட்கம் இல்லாமல் யாரிடம் போய்க் கேட்பேன் . அன்றைய தினம் ஏதோ வேலையாக தேவதானப்பட்டி வந்த பெரியகுளம் வனராஜ் என் வீட்டுக்கு வந்தார். வனராஜ் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு சீனியர் இப்பொழுது "மனிதம்" அமைப்பின் நிறுவனர். "என்னடா ஆல்ஃபி உனக்கு வேலை கிடைச்சிருக்காமே, ஜேம்ஸ் சொன்னான் காங்கிராட்ஸ், எப்ப டிரீட் ?", என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்த வனராஜ், "என்னடா சுரத்தில்லாம இருக்க", என்றார். நான் என் பிரச்சனையைச் சொன்னேன். உள்ளூரில் பழக தயக்கமாய் இருப்பதையும் சொன்னேன். "அடப்பாவி இத்தனை வருஷம்  மறைச்சிட்டியேடா? ஏண்டா இதை முதல்லயே சொல்லல. சரி ஆல்ஃபி கவலையை விடு, டெய்லி பெரியகுளம் வந்துரு நான் கத்துக்கொடுக்கிறேன்", என்றார் சர்வசாதாரணமாக. நான் ஆனந்தக்கண்ணீர் முட்ட அவரைக் கட்டிக் கொண்டேன். "எப்ப வனா ஆரம்பிக்கலாம் ?," என்றேன்.
Vanaraj
"நாளைக்கே  வாடா" என்றார். அவரும் அப்போது வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். "வனா யார்ட்டயும் சொல்லாதீங்க", என்றேன். புன்னகைத்த வனா, “கவலைப்படாதரா சகோதரா", என்றார்.
     மறுநாள் பக்கத்து டவுனான பெரியகுளத்தில் இருக்கும் வனராஜ் வீட்டுக்குச் சென்றேன். நடுவில் ஓடும் வராக நதியின் தென்கரையில் உயரமான படிகள் வைத்த வீடு. உள்ளிருந்து வந்த வனாவின் தம்பி இன்பராஜ் (இவன் அ.கல்லூரியில் என்னுடைய செட்) தோளில்  படாரென்று தட்டி, "ஏண்டா ஆஃல்பி இன்னுமா சைக்கிள் பழகாம இருக்க ?", என்று அட்டகாசமாய்ச் சிரித்தான். நான் வனாவை முறைத்தேன்.
      அப்போது சமையலறையிலிருந்த வனாவின் அம்மா வந்து என்னை வரவேற்றார்கள். முகம் முழுவதும் ஒரே புன்னகை மயமாய் இருந்தது. ஐயையோ வனா இவர்களிடம் சொல்லிவிட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் மூச்சு விடவில்லை. கொஞ்ச நேரத்தில் கடைக்குப் போயிருந்த வனாவின் தங்கையும் வந்துவிட, எனக்கு விதிர்விதிர்த்துவிட்டது. "வனா வாங்க சீக்கிரம் போகலாம்", என்று அவசரப்படுத்தினேன்.
      பின்னர் நாங்கள் கிளம்பி, பெரியகுளம் கண்மாய் போகும் வழியிலிருந்த ஒரு கிரவுண்டுக்குப் போனோம்.
         முதன்முதலில் சைக்கிளில்  ஏறி உட்காரும் போது, ஒட்டகத்தின் மேல் உட்காருவது போல் இருந்தது. இரண்டாவது நாளே, கொஞ்சம் பேலன்ஸ் கிடைத்துவிட்டது ஆனால் தைரியம் வரவில்லை. ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பழக இன்னும் ஒரு நாள் ஆயிற்று. ஆனால் இரண்டுக்குமே ஒரு கல் அல்லது மேடை தேவைப்பட்டது.
        நான்காம் நாளில் வனா, "இன்னக்கி உனக்கு ஒரு டெஸ்ட் இருக்கு", என்றார், கிரவுண்டில் இரண்டு கல்லை எடுத்து இருபுறங்களிலும் வைத்து, “இதுக்கு நடுவில் ஓட்டு", என்றார். எவ்வளவு முயற்சி பண்ணியும் கல்லின் மேல்தான் சைக்கிள் மோதியது இத்தனைக்கும் இரு கல்லுக்கும் நடுவில் நிறைய இடைவெளி இருந்தது. அந்த நாள் முழுவதும் அதற்குப் பழக, கல்லின் இடைவெளியை சுருக்கிக் கொண்டே வந்தார். ஓரளவுக்கு பழகியவுடன், “ஓகேடா       ஆல்ஃபி நாளைக்கு நாம் ரோட்டில் ஓட்டலாம்", என்றார்.

              காலையில் போகும்போது பெரியகுளம் கண்மாய்க்குப் போகும் ரோடு காலியாக இருந்தது. எப்பொழுதாவது மாட்டு வண்டியோ, ஜீப்போ வரும், ஓரம் சென்று இறங்கிவிடுவேன்.  இப்படியே கண்மாய் சென்று சேர்ந்து ரோட்டில் மீண்டும் பழகிவிட்டு, திரும்பினோம். திரும்பும்போது ஆடுமாடுகள் ஊர் திரும்பும் நேரமாதலால், எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தூரத்தில் மாடு அல்லது ஆடைப் பார்த்துவிட்டால் இறங்கிவிடுவேன். உருட்டிச் சென்று, அதனைக்  கடந்தவுடன் கல்லைத்தேடிச் சென்று அதன் மேல் கால் வைத்து ஏறி மீண்டும் ஓட்டுவேன். இருந்தாலும் ஒரு ஆட்டுக்குட்டி , ரெண்டு கன்னுக்குட்டி, ஒரு பசு மாடு , ஒரு எருமை மாடு  ஆகியவற்றை மட்டும் லைட்டாய்   இடித்தேன் .ஒரே ஒரு புல்லுக்கட்டுக்காரியிடம் புட்டத்தில் இடித்து இரெண்டே இரண்டு கெட்ட வார்த்தை  பழகிக்கொண்டேன் .புதிதாய் பழகுகிறேன் என்றால் நம்ப  மறுத்துவிட்டாள் . மற்றபடி சேதாரம் ஒன்றும் இல்லை, விழுப்புண்களும்  இல்லை.
         ஒருவழியாக அந்த கடைசி நாளையும் முடித்துவிட்டு வனா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
வனாவின் அம்மாவும் தங்கையும் அங்கிருந்தார்கள். "வனா கையெல்லாம் ரொம்ப வலிக்குது" என்றேன். வனாவின் அம்மா, "சைக்கிள் ஓட்டினா கால்தானே வலிக்கும் ?" என்று சொன்னார்கள்.
        அதற்கு வனா சொன்னார், "அம்மா ஓட்டினாத்தானே கால் வலிக்கும், உருட்டிக் கொண்டே இருந்தா கைதானே வலிக்கும்", என்றாரே பார்க்கலாம்.

முற்றும்

Tuesday, May 26, 2015

ஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது !!!!!!!!!!!!


"என்னங்க அத்தை இது இப்படி இருக்கு", இது அப்பா. 'சும்மா இருங்கய்யா, இத  வளர்க்கிறேன் பாருங்க எட்டூருக்கு", என்றார் என் ஆயா. அதாங்க என் அம்மத்தா, கறுத்துச் சிறுத்து என் ஆயாவின் உள்ளங்கையில் அடங்கியிருந்த எனக்கு இது எதுவுமே ஞாபகமில்லை. இது நடந்தது திண்டுக்கல்லில் வருஷம், அட அதாங்க நான் பிறந்த வருஷம்.( அஸ்கு புஸ்கு)
ஆனா 'எட்டூர்' என்று என் ஆயா  சொன்னது அப்படியே பலித்தது. பிறந்தது திண்டுக்கல், வளர்ந்தது தேவதானப்பட்டி படித்தது காந்திகிராமம் அப்புறம் மதுரை, முதல் வேலை சிவகாசி, இரண்டாம் வேலை கிருஷ்ணகிரி மூன்றாம் வேலை சென்னை, இப்ப இருப்பது நியூயார்க். என்னாங்க எட்டூரு கணக்கு வருதா ? இது நம்ம குமாரசாமி கணக்கு இல்லைங்க .நல்லா நாலு வாட்டி எண்ணிப்பாத்துக்கங்க. சொன்னது சொன்னபடியே வளர்த்து ஆளாக்கினது என் ஆயாதான்.
இப்படி சவலைப் பிள்ளையா பிறந்த நான் கொஞ்சம் தவளைப் பிள்ளையா தாவி தெருவுக்கு வந்தபோது டிராக் ஈவெண்ட்ஸ், கிரவுண்ட் ஈவிண்ட்ஸ்னு எல்லா ஸ்போட்சிலும் சும்மா பூந்து வெளையாடினேன். என்னன்னு கேக்கறீங்களா? அதாங்க, கோலிக் குண்டு, கிட்டிப்புள்ளு, பம்பரம், நொண்டி, கிளித்தட்டு, கண்ணாமூச்சி இப்படி பல விளையாட்டை சொல்லிக்கிட்டே போகலாம் எனக்கு என்ன ஒரே  குறைன்னா இதுகள்ள ஒண்ணாச்சையும் ஒலிம்பிக்கிள்ள சேத்திருந்தாய்கண்ணா, ஏதோ நானும் நம்ம நாட்டுக்கு பெருமை சேத்திருப்பேன்.
நான் ஆறாவது படிக்கும்போது, கால் எட்டாத பயபுள்ளைக எல்லாம் சைக்கிள்ல ஊடுகால் போட்டு ஓட்டறத பாத்து எனக்கும் ஆசையா இருந்துச்சு. நானும் முயற்சி பண்ணேன். ஒருவிசை கூட முடியல. ஒரு நாள் மகேந்திரனும் நானும் அவருடைய அண்ணன் சைக்கிளை தள்ளிட்டுப் போய் காந்தி மைதானத்துல ஒட்டிப் பார்த்தோம். மகேந்திரன் நல்லா வளர்ந்த பய, ஈஸியா ஓட்டினான். நான் ஏறி ஊடுகால் போடும்போது, கண்ணுக்குட்டி ஒண்ணு குறுக்கே துள்ளிவந்து மோத என் ஊடுகால் மாடுகால்ல மோதி விழுந்ததுல மொத்தக்காலும் ரத்தக்காலா ஆகி, வெற்றிகரமான 33-ஆவது விழுப்புண்ணைக் கொடுத்துச்சு. (ஆஹா விழுப்புண்ணுல நானு ராஜேந்திர சோழனையும் மிஞ்ச்சிட்டேன்ல)
எங்கம்மாவுக்கு வந்த வேகாளத்துல புண்ணை மட்டும் விட்டுட்டு அடிச்ச அடியில் மத்த எல்லா இடத்திலயும் பன்னு மாதிரி வீங்கிப்  போச்சு. எனக்கே என்னை அடையாளம் தெரியல. அன்னிக்கு வந்தது சைக்கிளுக்கு ஆப்பு. 'பெரியவனா ஆனாப் பாத்துக்கலாம், ஓங்கப்பாவுக்கே ஓட்டத்தெரியாதுன்னு' எங்கம்மா சொன்னாங்க அது நெசமான்னு அவர்ட்ட கேக்கிறதுக்கு கடைசி வரைக்கும் எனக்கு தைரியம் வரல. எங்க வீட்டில சைக்கிளும் இருந்தில்ல, அவர் ஓட்டியும் நான் பாத்ததில்ல.
என் கூடப் படிச்ச எல்லா நாதாரிகளும் சைக்கிள் ஓட்டிப்பழகிவிட என்னோட பள்ளிப்படிப்பு ஏக்கத்துலயே ஓடிமுடிஞ்சிருச்சு.
+1, +2க்கு காந்திகிராமம் ஹாஸ்டல்ல போய் சேர்ந்தேன். சைக்கிள் வச்சுக்க அனுமதியில்லை. பழகிக் கொடுக்க பசங்க இருந்தாலும் சைக்கிள் இல்லாதனால அந்த இரண்டு வருஷமும் அப்படியே ஓடிப்போச்சு.
       அடுத்து அமெரிக்கன் கல்லூரில சேந்தேன். நல்ல வலுவான தீவிரவாதிகள் NCC -ல சேர மிதவாதிகள் எல்லாம் NSS -ல சேர்ந்தோம். ஐயோ அதுக்கு நாம் பட்ட பாடு எனக்குத்தேன் தெரியும். NSS சென்ட்டர்கள் எல்லாம் வெளியிலதான் இருக்கும். சாயந்தரம் வகுப்பு முடிஞ்சு அங்கே ரெண்டு மணி நேரம் போகனும். பசங்க எல்லாம் அவய்ங்க அவய்ங்க சைக்கிளை எடுத்துட்டு கிளம்பிடுவாய்ங்க. நான் வாசல்ல நின்னு தொண்ணாந்துட்டு நிப்பேன். 
எங்கம்மா மேல கோவம் கோவமா வரும். எத்தனை பொய் சொல்லிருப்பேன் தெரியுமா? அதுல கொஞ்சத்தை கீழே தர்றேன்.
“அண்ணே உங்க கூட வர்றேன். உங்கள்ட்ட சில சந்தேகம் கேக்கனும்”.
“டேய் மச்சான் காலுல சுளுக்குடா, கொஞ்சம் ஒன்கூட வரவா?”
“மச்சி யார்ட்டயும் சொல்லாதரா என் ஒரு காலு ரொம்ப வீக்கு, டாக்டரு சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு.”
“அண்ணே வலது கால் பிசகிப்போச்சு, கொஞ்சம் பின்னாடி ஏறிக்கவா?”
-யார்ட்டயும் சொல்லக் கூச்சப்பட்டு, வெக்கப்பட்டு, பழகாமலே மூணு வருஷமும் முடிஞ்சு போச்சு.
  • IMPOSING: The main building of the Madurai Institute of Social Sciences in Madurai. Photo: R. Ashok
    Madurai Institute of Social Sciences
அப்புறம் மதுரை சமூகப்பணிக்கல்லூரில MA படிக்கப் போனா, அங்க கோஎஜிகேசன்னு நிறைய பொண்ணுங்க சைக்கிள்ளதான் காலேஜீக்கு வரும். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுங்கற டாப் சீக்ரட்டை மெயிண்டைன் பண்றதுக்குள்ள தாவு தீந்துபோச்சு.
"ஆல்ஃபி வெளியவா போற, இந்தா சைக்கிள் எடுத்துட்டு போ"
“வேணாம் ரேகா, நான் லேடீஸ் சைக்கிள்லாம் ஓட்ட மாட்டேன்”.
-இப்படியெல்லாம் சமாளிச்சு அந்த ரெண்டு வருஷமும் முடிஞ்சு போச்சு. இந்தக் கவலைல ரொம்ப நாள் தூங்காம இருந்திருக்கேன். என் வாழ்க்கையே சைக்கிள் கத்துக்காமயே முடிஞ்சிறுமோன்னு நெனச்சேன். சைக்கிள் தெரியாட்டி டூவீலர் ஓட்ட முடியாதுன்னு தெரிஞ்சு என் ஓர மனசு ஒடைச்சு போச்சு. சரி அப்ப ஸ்டிரைட்டா காரை வாங்கி ஓட்ட வேண்டியதுதான்னு என் ஈர மனசு ஒரு பக்கம் சொல்லிப் பாத்தும் என்னைத் தேத்த முடியல.
முதுகலை முடிச்சும் சைக்கிள் கலை கைவசம் வரல. லீவுக்கு ஊருக்குப் போகும் போதும் கூச்சத்துல வெளியே போய் கத்துக்க முடியல. மீசை வளர்த்த ஆம்பளை சைக்கிளை எப்படி கத்துக்கிறது.
1986 மே மாத முதல் வாரத்தில் உன்னை அப்பா கூப்பிடுறார்னு சொன்னான் ஜேம்ஸ். பிஷப் போத்திராஜீலு நம்மள எதுக்குக் கூப்பிடுறார்னு நெனச்சிக்கிட்டே கீழவாசல்ல இருக்கிற பிஷப் பங்களாவுக்குப் போனேன்.
Bishop Pothirajulu
"ல்ஃபி, சாட்சியாபுரத்துல நம்ம CSI  ஸ்கூல்ல “சோசியல் வொர்க்கர்' போஸ்ட் ஒண்ணு இருக்கு, போறியான்னு கேட்டார். ஆஹா இன்னும் ரிசல்ட்டே வரல வேலை வந்துருச்சேன்னு பிஷப் ஐயாவுக்கு நன்றி சொல்லிட்டு, அவர் கொடுத்த லெட்டரை எடுத்துக்கிட்டு சிவகாசிக்கு பஸ் ஏறிட்டேன்.
சிவகாசிக்குப் பக்கத்தில் உள்ள சாட்சியாபுரம். "எல்வின் சென்ட்டர்" எங்க இருக்கு என்று கேட்கும் போது, வழி சொன்னார்கள். நடந்து நடந்து நடந்து போனால்கடந்த பிரிட்டிஷ் கால கட்டடமான "எல்வின் சென்ட்டர்” ஒரு வழியாக வந்தது, ஒரு 1 1/2 கிலோ மீட்டர் இருக்கும். மே  வெயிலில் நடந்து காய்ந்த கருவாடாக வேர்த்து விறுவிறுத்து வந்தேன்.  CSI School &  Home for the Deaf & Mentally Retarded ல் கொஞ்சகாலமாக Social Worker Cum Rehabilitation Officer  போஸ்ட் காலியாக இருந்தது.
பிஷப் லெட்டரை மரியாதையுடன் வாங்கிப் படித்த ஹெட்மாஸ்டர், "எப்ப ஜாய்ன் பண்ணுகிறீர்கள்?" என்று கேட்டார். வேர்த்து வடிந்து என்னைப் பார்த்து, "நடந்தா வந்தீர்கள், ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்திருக்கலாமே ?", என்றார் ஹெட்மாஸ்டர் தயாளன். வச்சிக்கிட்டா  வஞ்சகம் பண்ணுறேன், தெரிஞ்சிக்கிட்டா  தேவுடு காக்கிறேன். வெட்கத்திலும் துக்கத்திலும் எனக்கு குமுறி குமுறிக்கொண்டு வந்தது. அடக்கிய அந்த நேரத்தில் ஒரு முடிவு எடுத்தேன். சைக்கிள் பழகாமல் இங்கு வந்து சேரக் கூடாது என்று. ஆனால் எப்படி ? என்ற பெரிய கேள்வி பூதாகரமாக என்முன்னால் ஊசலாடியது.

-தொடரும்.
பின்குறிப்பு : இதன் அடுத்த பகுதி வரும் வியாழனன்று வெளி வரும். நன்றி.

Thursday, May 21, 2015

தங்கக் கொள்ளையரும் நவஜோ வீரர் டெக்ஸ் வில்லரும் !!!!!!

 கார்சனின் கடந்த காலம்

முத்து/ லயன் காமிக்ஸ்களுக்கு  உலகமெங்கும் தீவிர ரசிகர்கள் உண்டு. அவர்களில் அடியேனும் ஒருவன். முத்து காமிக்ஸ் என்ற பெயரில் முதலில் வெளிவந்த போது பொறுப்பாசிரியராக முல்லை தங்கராசன் இருந்த காலத்திலிருந்து (1972 முதல் ஜூன் 1974 வரையில்) இந்தப் புத்தகங்களை தொடர்ந்து படித்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுள் நானும் ஒருவன் என்பதை ஏற்கனவே சிலமுறை உங்களிடம் சொல்லியுள்ளேன். முத்து காமிக்ஸின் நிறுவனர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களின் பின் அவர் மகன் விஜயன் தலையெடுத்த பிறகு லயன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வந்தது 'திகில் காமிக்ஸ்'. அந்த வரிசையில் இப்போது புதிதாக வருவது 'சன்ஷைன் லைப்ரரி' (Sun Shine Library) என்ற புதிய வடிவில் வெளிவரும் வண்ணமிகு கிராபிக் நாவல்கள். அப்படி சமீபத்தில் வெளிவந்த முழு நீளச் சித்திரக்கதைதான் "கார்சனின் கடந்த காலம்".
முத்து காமிக்ஸில் முதலில் வலம் வந்த சூப்பர் ஹீரோக்களான, இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ/ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், ஆகியோருக்கு அடுத்த வரிசையில் வரும் முக்கியமான ஜோடி டெக்ஸ் வில்லரும் (இரவுக்கழுகார்) கிட் கார்சனும். 1948-ல் இத்தாலியில் வெளிவந்த காமிக்ஸ்தான்  இதன் மூலம்.
 அமெரிக்காவில் ஆங்காங்கு பரவலாக  வசித்துவந்த செவ்விந்தியர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு புதிய எதிர்காலத்தை நாடி அலை அலையாக ஏராளமான ஐரோப்பியர்கள் முடிபுகுந்தனர். வந்தேறிய வெள்ளைக்காரர்களை, பூர்வகுடிகளான சிவப்பிந்தியர் எதிரிகளாகப் பார்த்து கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அவர்களால் நவீன ஆயுதங்களை எதிர்த்து நிற்கமுடியவில்லை. அதோடு அவர்கள் சிறிய குழுக்களாக தனித்தனி தலைவர்கள் கீழ் வாழ்ந்து வந்தனர். காலக்கிரமத்தில் செவ்விந்தியர் எதிர்த்து அழிந்துபட்டனர். சிலர் ஆதரித்து இணைந்தனர், சிலர் நாகரிக வாழ்வைத் தழுவி, இப்போது பெரும்பாலும் ஒன்றாக கலந்துவிட்டனர்.
முக்கியமாக மிட்வெஸ்ட் மற்றும் டெக்சஸ், அரிஜோனா பகுதியில் இருந்தனர். அங்கே சிறுசிறு நகரங்கள் எழுந்த போது, அமெரிக்க அரசாங்கம் அந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக ஷெரிஃப்களை நியமித்தது. அதோடு ஒவ்வொரு பகுதிக்கும் ரேஞ்சர்களை நியமித்தது. கைத் துப்பாக்கியை கண நேரத்தில் எடுத்து சுட வல்லவர்கள் இவர்கள். சட்டத்தின் காவலர்களாகவும், மக்களின் பாதுகாவலர்களாகவும், கொள்ளைக்காரர்களை பிடிக்கவும் இவர்கள் பயன்பட்டார்கள்.
இந்த வரிசையில் 'wild west' என்ற பகுதியின் ஹீரோக்களாக சிலகாலம் வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் குதிரை வீரன் கிஸ்கோகிட் மற்றும் பாஞ்சோ.

 அதன்பின் அறிமுகப்படுத்தப்பட்ட வீரர்தான் செவ்விந்தியக் குழுவில் புகழ்பெற்ற ஒரு பழங்குடியினர் ஆன நவஹோக்களின் (NAVAJO-இந்தப்பெயர் நமது காமிக்ஸில் 'நவஜோ' என்ற குறிப்பிடப்பட்டிருக்கும்)   தலைவர்களுள் ஒருவரான 'இரவுக்கழுகு' என அழைக்கப்படும் டெக்ஸ் வில்லர் தான் நம் கதையின் ஹீரோ. அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் இன்னொரு வீரர் கிட் கார்சன், இருவரும் டெக்சஸ் ரேஞ்சர்கள்தான். நம்மூரில் இருக்கும் ஃபாரஸ்ட் ரேஞ்சர்கள் போன்றவர்கள். 
Tex Villar
குறிப்பாக இந்த நாவலில் இரவுக்கழுகாகும் அவர் மகனும் கிட் கார்சனை நோக்கிச் செல்லும் பயணத்தில் கிட் கார்சன் இளமைப் பருவத்தில் நடத்திய ஒரு சாகச நிகழ்வை தன் மகனிடம் கதைபோல் சொல்லிக் கொண்டு வருகிறார். பின்னர் அவர்கள் கார்சனிடம் இணைந்து திரும்பவும் ஒன்று சேர்ந்து தங்கக் கொள்ளையர்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை. 
'சன்ஷைன் லைப்ரரி' வெளியீடான இந்த நாவல் உயர்தர வளவளப்பான லித்தோ பேப்பரில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு சிவகாசியிலிருந்து நியூயார்க் வந்து சேர்ந்தது.
Bonelli2
Gian Luigi Bonelli
இந்தக் கதையை எழுதியவர்  Gian Luigi Bonelli. இதற்கு அருமையான ஓவியங்கள் தீட்டியவர் Aurelio Galleppinni.
Aurelio Galleppinni
   இதில் முத்துகாமிக்சுக்கு என்ன பெருமை என்றால், மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு மற்றும் எடிட்டிங். அதுமட்டுமல்ல சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதன் உரிமையாளர் விஜயன் சிறந்தவர்தான். அவர்தான் மொழிபெயர்க்கிறார் என்று நினைக்கிறேன். அதையும் புத்தகத்தில் குற்ப்பிட்டால் நலமாய் இருக்கும். 
நமது பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். தமிழ் மொழியில் ஆர்வம் பிறப்பதோடு, இந்தப் புத்தகங்கள் அவர்களுடைய கற்பனை வளத்தையும் வளர்க்கும். அதோடு கேட்ஜெட்டுகளுக்கு அடிமைகளாக ஆவதையும் தடுக்கும்.
என்னுடைய கற்பனையில் கொஞ்சம் தொப்பி வைத்து ஒரு நல்ல அரபுக்குதிரையில்  ஏறினால் நானும் கிட்டத்தட்ட டெக்ஸ் வில்லர் போலதான் இருப்பேன்
“ஏலே சேகரு  வேணாம்  , ஒத்தக்கையன்னு பாக்கிறேன் , உன்னைப்பார்த்தா
டெக்ஸ் வில்லர் மாறியா தெரியுது எக்ஸ் வில்லன்    மாறியில்ல தெரியுது”.
“அடப்பாவி இந்த மகேந்திரன் எங்க இருந்து வாரான்னே  தெரியமாட்டேங்குதே”

- முற்றும்.

Monday, May 18, 2015

அழகான பெண்ணின் அடாவடிக்கேள்விகள் !!!!!!!!!!!


கடந்த வாரம் ஒரு நாள், கட்டுப்போட்ட கையுடன் சிரமப்பட்டு கிளம்பி வேலைக்குச் செல்ல சப்வேயில் ஏறினேன். அங்கே ஒரு அழகான அம்மாவும் அதைவிட அழகான ஒரு பையனும் ஏறினார்கள். அம்மாவின் பூனைக் கண்கள் அவனுக்கும் வந்திருந்தன. பையனுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். பாவம் என்னைப் போலவே இடது கையில் கட்டுப்போட்டிருந்தான். நான் நினைக்கிறேன், பள்ளிக்கு அனுப்ப முடியாமல், வீட்டிலேயும் விட முடியாமல் வேலைக்குத் தன்னோடு அழைத்துச் செல்லுகிறாள் அந்தப் பெண் என்று. அந்தப் பையனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆடி ஓடும் வயதில் இப்படிக் கட்டுப் போட்டுக் கொண்டு திரிகிறானே என்று. எனக்கு கட்டுப் போட்டவுடன் தான், இதே நிலையில் இருக்கும் மற்றவர்கள் நிலைமையை  என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. சரி சரி எனக்கும் சரி, அந்தப் பையனுக்கும் சரி இது தற்காலிகம் தானே என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.
நல்லவேளை சப்வே டிரைனில் இடம் கிடைத்து உட்கார்ந்தேன். எனக்கு நேர் எதிரில் அந்த அம்மாவும் மகனும் உட்கார்ந்தார்கள். கையில் இடித்து விடுவார்கள் என்று நினைத்து பீக் நேரம் கழித்து வந்தால் சப்வேயில் அவ்வளவு கூட்டமில்லை. எதிரிலிருந்த பையனைப் பார்த்து புன்னகைத்தேன். அவன் என்னை முறைத்துவிட்டு அவன் அம்மாவைப் பார்த்தான்.
நான் சேசுவேன்னுட்டு என் புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றேன்.
அப்போது "ஆல்ஃபி நேராக உட்கார்", என்று ஒரு அதட்டல் கேட்டது. (உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் நடந்தாலும் நமது வசதிக்காக தமிழிலேயே கொடுத்துள்ளேன்.)
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, முன்னால் பார்த்தால் அந்தப்பெண் சொல்லியிருக்கிறாள். நான் பார்த்ததும் என்னையும் என் கைக்கட்டையும் பார்த்து இலேசாக புன்முறுவலினாள். நானும் மந்தமாக சிரித்து வைத்தேன்.
யார் இவள்? என் பெயர் அவளுக்கு எப்படித் தெரியும்? கண்ணை மூடிக் கொண்டு எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவள் யாரென்று தெரியவில்லை. அதோடு அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண். எங்கேயாவது சர்ச்சில் பார்த்திருப்பாளோ என்று ஒரே புதிராக இருந்தது.
மீண்டும் புத்தகத்தை எடுத்து விரித்தேன்.
"ஆல்ஃபி பட்டனைப்போடு என்றாள்".
சட்டென்று பார்த்தால் என் சட்டையில் ஒரு பட்டன் போடாமல் இருந்தது. ஒரு கையில் போட்டதால் விட்டுப்போயிருக்கும் என்று நினைத்து மிகவும் முயன்று அந்தப் பட்டனைப் போட்டேன். ஆனால் இந்தத் தடவை என்னைப் பார்த்து சொன்ன மாதிரியே இல்லை. அந்தப் பையனைப் பார்த்தேன். அவன் சட்டையிலும் ஒரு பட்டன் போடாமல் இருந்தது. ஆனால் அவன் கண்டுகொள்ளவில்லை.
நான் அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்க்க, அடுத்து அவள் சொன்னாள், "ஆல்ஃபி புத்தகத்தை ஒழுங்காகப்படி", எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவள் என்னைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் நீலக் கண்களின் ஓரத்தில் ஒரு கிண்டல் தெரிந்தது. அது என் பிரமையாகவும் இருக்கலாம்.
சடாரென்று புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். படிக்க முடியவில்லை. அதே பக்கத்தில் இருந்தேன். ஆனால் அவர்களைப் பார்க்கக் கூடாது என்று தலையை தொங்கப்போட்டுக் கொண்டு இருந்தேன்.
ஆனால் அடுத்தடுத்து இன்ஸ்ட்ரக் ஷன் வந்து கொண்டே இருந்தது. அவற்றுள் சில கீழே
“ஆல்ஃபி தலையை ஒழுங்காச் சீவலையா?”
ஆல்ஃபி உடைஞ்ச கையை அங்குமிங்கும் அசைக்காதே?”
“நல்லா சாய்ஞ்சு உட்காரு
“மூக்கை நோண்டாத
பேண்ட் அழுக்கா இருக்கு பாரு, இன்னிக்கு மாத்திரு.”
“இன்னக்கி நாக்கை கிளீன் பண்ணியா?”
“கம்பியைப் பிடிச்சுக்க, ஏற்கனவே உடைஞ்ச கை
- இப்படி ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குறது. எல்லாத்தையும் என்னைப் பார்த்துச் சொல்ற மாதிரியே இருந்துச்சு. ஒண்ணும் முடியல, ஒண்ணும் படிக்கல, கண்ணை, மூடிட்டு தூங்கிறது போல இருந்துரலாம்னு நினைத்து, தலையைச் சாய்த்தேன்.
person-with-sling-around-hand-due-to-broken-bones.jpg

"ஆல்ஃபி தூங்காத, அடுத்த ஸ்டாப்பில இறங்கனும்"னு சொல்றா, எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. ஆனா அடுத்த ஸ்டாப் லெக்சிஸ்டன் அவென்யூ வந்ததும் தாயும் மகனும் இறங்கினார்கள். போகும்போது, என்னைப் பார்த்து புன்னகைத்து "ஹேவ் நைஸ் டே", என்று சொல்லிவிட்டு இறங்க்கினாள். 'யு டூ' என்று பதில் சொல்லிவிட்டு அவள் சிரித்தது சாதாரண புன்னகையா இல்லை கிண்டலா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் அதைப்பற்றி மிகவும் சிந்தித்து, யோசித்து கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்தேன்.
· அந்தப் பெண்ணுக்கு நான் யாரென்றோ, என் பெயர் என்னவென்றோ தெரிந்திருக்க நிச்சயமாய் வாய்ப்பில்லை.
·   அந்தப் பெண்ணின் மகன் பெயர் நிச்சயமாய் 'ஆல்ஃபி' என்று தான் இருக்க வேண்டும் (சே ஒரு தடவை நான் அவனைக் கூப்பிட்டுப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்)
·         அந்தப் பெண் நிச்சயமாய் என்னைப் பார்த்து எதுவும் சொல்லவில்லை (ஆனால் ஒவ்வொன்றும் அப்படியே எனக்கும் பொருந்தியதே)
·         என்னைப் பார்த்துச் சொன்னது போல் தோன்றியது ஒரு தற்செயல் நிகழ்வு.
·         என் பெயரும் ஆஃல்பி என்பது ஒரு கோ இன்சிடன்ஸ் மட்டும்தான்.
நன்கு யோசித்தால் குழப்பம் தீர்ந்து தெளிவு பிறக்கும் என்று திருவள்ளுவரோ அல்லது விவேகானந்தரோ அல்லது யாரோ சொன்னது நினைவுக்கு வர, “சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே, சுசிலாவின் மகனே ராஜசேகரே”, என்று பாடிய படியே-34 ஆவது தெருவில் இறங்கி அலுவலகம் சென்றேன்.
அலுவலகத்தில் என்னுடைய பேக்கை வைத்துவிட்டு கொண்டு வந்த மதிய உணவை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு சீட்டில் உட்கார்ந்து PC-யை ஆன் செய்தேன்.
அப்போதுதான் கவனித்தேன், நான் போட்டுக் கொண்டிருந்த சட்டை இரண்டு நாளுக்கு முன்னால் ஒரு மீட்டிங்க்குச் செல்ல அணிந்த அதே சட்டை. சட்டையில் பிரச்சனையில்லை, ஆனால் அதன் இடதுபுறத்தில் ஒட்டியிருந்த 'Hello' ஸ்டிக்கரில் "Alfy" என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததைப்  பார்த்து அயர்ந்து போனேன் .
முற்றும்.