Monday, December 9, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 6: ஆளுநரின் அரண்மனை

La Fortaleza

கோட்டைக்குள் செல்வதற்கு முன்பு போர்ட்டரிக்கோ வந்த வரலாற்றை இன்னும் சிறிது விரிவாக  பார்ப்போம் .
        அப்போதிருந்த ஸ்பெயின் நாட்டு அரசரும் அரசியும் பொருளுதவி செய்ய "கொ…லம்பஸ் விட்டாச்சு லீவு" என்று சொல்லி "புது உலகத்திற்கு" இரண்டாம் முறையாக பயணம் செய்தார் கிறிஸ்டோபர் கொலம்பஸ். அப்போது கண்டுபிடித்த தீவுதான் போர்ட்டரிக்கோ. அது கிபி.1493 ஆம் ஆண்டு.  ஆனாலும் கி.பி 1508- ஆம் ஆண்டுக்கு மேல்தான் ஸ்பானியரின் காலனி ஆதிக்கம் ஆரம்பித்தது. கி.பி.1509ல் பான்சே ஒ லியோன் (Ponce De Leon) என்பவர் ஆளுநராக ஸ்பெயின் அரசரால் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆப்பிரிக்காவிலிருந்து ஃபிரெஞ்ச் ஆட்கள் வந்தனர். லூசியானோலிருந்து கறுப்பின மக்கள் வந்தனர். அதன் பின்னர் ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஸ் விவசாயிகள் குடிபெயர்ந்தனர்.
        கிழக்கு மேற்காக 100 மைலும், வடக்கு தெற்காக 35 மைலும் உள்ள இந்த சிறிய தீவில் தற்போது சுமார் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். கி.பி.1898ல் நடந்த ஸ்பானிஷ் அமெரிக்க போருக்குப்பின்னர், இது அமெரிக்காவின் டெரிட்டரி ஆக இயங்கி வருகிறது. அமெரிக்க டாலர்தான் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இங்கு வாழ்பவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக அங்கீகாரம் பெற்றவர்கள். இதனுடைய பாதுகாப்பு அமெரிக்காவின் கையில். போர்ட்டரிக்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரால் ஆளப்படுகிறார். இவர்களது உள்நாட்டு விவகாரங்களை இவர்களே கவனித்துக் கொள்கிறார்கள் என்பதால் இது அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இதுவரை ஆகவில்லை. இவர்கள் அமெரிக்காவின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். அமெரிக்காவிலிருந்து இங்கு செல்வதற்கும் விசா தேவையில்லை. ஆனால் இவர்கள் அமெரிக்க வரி கட்டுவதில்லை என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
லா  ஃபோர்ட்டலிசா (La Fortaleza)
        காரை அடிவாரத்தில் பார்க்கிங் செய்துவிட்டு, அழகான ஒரு நீர்வீழ்ச்சி வந்தனம் கூறி வரவேற்றதை ஆமோதித்து, பழைய துறைமுகப்பகுதியின் ஓரமாக நடந்து மேலே சென்றால், வலதுபுறம் இந்தக்கோட்டை அமைந்துள்ளது. கொஞ்சதூரம் மேலே ஏறிச் சென்றால் ஒரு மூலையில் பிரமாண்டமான ஆலமரம் ஒன்று வந்து ஆச்சரிய மூட்டியது.

 அடேயப்பா ஆலமரத்தைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு என்று சொல்லி அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். எத்தனை வருடங்களாக இங்கு இருந்து கொண்டு எத்தனை வரலாற்று நிகழ்வுகளையும் அரசர்களையும் பார்த்திருக்கிறேன் என்ற பெருமிதத்தில் கம்பீரமாக விழுது பரப்பி நின்றது.கொஞ்சம்  தள்ளிப்போனால் ஒரு மாபெரும் ஈச்ச மரமொன்று இருந்தது . பழங்கள் எட்டாத உயரத்தில் இருந்தன.
  

சேன் வானின் துறைமுகத்தைப் பாதுகாக்க, கி.பி.1533-40ல் கட்டப்பட்டதுதான் இந்தக் கோட்டை.

        இன்னும் கொஞ்சம் மேலேறிச் சென்றால், ஒரு பிரமாண்டமான நுழைவாயில் வந்தது. இதுதான் சிட்டிகேட் என்று அழைக்கப்படுகிறது.
 இதன் சுவர்கள் 20 அடி அகலமும் 50 அடி உயரமும் கொண்டது. துறைமுகம் வழியே வந்திறங்கும் முக்கிய அரசர்கள் மற்றும் தலைவர்கள் இந்த வழியாகத்தான் அரச மரியாதையுடன் அழைத்துச் செல்வார்களாம்.

 என்ன காரணத்தாலோ என்னை வரவேற்க ஒருவரையும் காணோம் . பாகிஸ்தான் சதி என்று நினைக்கிறேன்.

        சான்டா கேட்டலினா  பேலஸ் (Santa Catalina's  Palace) என்று அழைக்கப்படும் கவர்னர் மாளிகை இதன் உள்ளேதான் இருந்தது.  பதினாறாம் நூற்றாண்டிலிருந்து போர்ட்டரிக்கோவின் ஆளுநர் வாழும் இடமாக இன்று வரை இருப்பதால், ஐரோப்பியர்கள் கண்டுபிடித்த புது உலகில் இதுவே மிகப்பழமையான, இன்றும் உபயோகத்தில் இருக்கும் 'அதிகார மாளிகை' (Oldest Executive Mansion) ஆகும்.
 ஆதலால் தான் 1983-ல் யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்து, இது ஒரு "உலக பாரம்பரிய சின்னமானது" (World Heritage Site).அதன் உள்ளே ஒரு கைடட் டூர் ஒன்றிருந்தது. மாளிகையின் வெளிப்புறம், சிற்றாலயம் (Chapel), தோட்டம், தடாகங்கள் ஆகிய பகுதிகள் சுற்றிக்காட்டப்பட்டன. உட்புறம் செல்ல அனுமதியில்லை.
King Juan carlos
        பதினாறாம் நூற்றாண்டிலிருந்து மொத்தம் 170 ஆளுநர்கள்  இங்கே தங்கியிருக்கிறார்கள். அது தவிர ஸ்பெயின் அரசர் வான் கார்லஸ் (Juan Carlos),

 நெதர்லாந்து அரசி ஜூலியானா, மற்றும் அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடியும் அவர் மனைவி ஜாக்குலின் கென்னடியும் இங்கு தங்கினர். சமீபத்தில் ஜூன் 2011ல் தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா இதனை வந்து பார்வையிட்டாராம்.

        மாளிகையின் உள் வளாகத்தில் இருந்த சிறிய சேப்பலின் அருகில், குறுகிய சுழல் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், அதிலே மிகச்சிறிய “டஞ்சன்” என்று சொல்லப்படும் அறை ஒன்றிருந்தது. அதில்தான் தண்டனை பெற்ற குற்றவாளியை அடைத்து வைப்பார்களாம். ஒரு ஆள் கூட நீட்டிப் படுக்க முடியாத அந்த இடத்தில் பலபேரை அடைத்து வைப்பார்களாம்.
இந்தக் கோட்டை இருமுறை ஆக்ரமிக்கப்பட்டது.
1) கி.பி.1598ல் இங்கிலாந்தச் சேர்ந்த கம்பர்லேண்ட் ஏர்ல் ஜார்ஜ் கிஸிப் ஃபோர்டு (Earl of Cumberland) தாக்கிப் பிடித்துக் கொண்டார்.
2) கி.பி.1625ல் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெனரல் (General Balduina Enrico) இக்கோட்டையைப் பிடித்து இதன் அரண்மனையில் தங்கினர்.
        பின்னர் இங்கிருந்து டச்சுப்படைகள் பின்வாங்கியபோது கோட்டையும் நகரமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
        கி.பி.1898ல் அமெரிக்கா போர்ட்டரிக்கோவை பிடித்துக் கொண்டபோது (Spanish American War), இங்கு தங்கியிருந்த கடைசி ஸ்பானிய கவர்னர், ரிக்கார்டோ டி ஆர்டெகா (Ricardo De Ortega) தன்னுடைய வாளை  உருவி அங்கிருந்த பெரிய கடிகாரத்தில் ஒரு போடுபோட, அது அப்படியே நின்று போனதாம்.
        1950-ல் போர்ட்டோரிக்கோவின் தேசியவாதிகள் இங்கு தங்கியிருந்த கவர்னரை தாக்க உள்ளே நுழைந்தபோது  சுட்டுக்கொல்லப்பட்டனர்.
        இப்போது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர்கள் இங்கு தங்கி ஆள்கிறார்கள். தற்போதைய கவர்னரின் பெயர் Alejandro García Padilla.
அப்போது அழகிய வைரமொன்று  கழுத்தில் ஜொலிஜொலிக்க, ஒரு பளபளப்பான கறுப்பு நிற பூனை அங்கு வந்தது. டூர் கைடு சொன்னாள், "அதைச்சீண்டாதீர்கள்”, என்று.ஏன் என்று கேட்டேன். 

பயணம் தொடரும் !!!!!!!!!!!!!!!!!!!!

நண்பர்களே வரும் வியாழன் வெளி வர விருப்பது
"பரதேசியின் காதல் கதை". படிக்கத்தவறாதீர்கள்.



9 comments:

  1. ///பரதேசியின் காதல் கதை". படிக்கத்தவறாதீர்கள்.// வெயிட்டிங்க் வெயிட்டிங்க்

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச நாள் பொறு தலைவா !!!!!!!!!!!!!!!!!
      மிக மிக மிக ரகசியம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  2. பிரமாண்டமான ஆலமரம் உட்பட தகவல்கள் வியக்க வைத்தது...

    முடிவில் ஆவலுடன் - Waiting...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.உங்கள் தொடர்ந்த
      அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.உங்களோடு இணைந்து ஒரு பொங்கல் கவிதைப்போட்டி நடத்த ஆசை . உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  3. அமெரிக்க டாலர்தான் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இங்கு வாழ்பவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக அங்கீகாரம் பெற்றவர்கள்...
    இதனுடைய பாதுகாப்பு அமெரிக்காவின் கையில். போர்ட்டரிக்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரால் ஆளப்படுகிறார். இவர்களது உள்நாட்டு விவகாரங்களை இவர்களே கவனித்துக் கொள்கிறார்கள் என்பதால் இது அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இதுவரை ஆகவில்லை. இவர்கள் அமெரிக்காவின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். அமெரிக்காவிலிருந்து இங்கு செல்வதற்கும் விசா தேவையில்லை. ஆனால் இவர்கள் அமெரிக்க வரி கட்டுவதில்லை என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது./// வித்தியாசமான நடைமுறைகள்..வியப்பாகவும் இருந்தது அண்ணா ..! தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த் ,என்ன ரொம்ப நாள் ஆளையே காணோம் ?

      Delete
  4. பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நண்பரே.....

    வியாழன் அன்று வெளிவரும் பகிர்வினைப் படிக்க ஆவலுடன்!

    ReplyDelete
  5. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  6. அங்குள்ள அரசியல் நடைமுறை
    இதுவரை கேள்விப்படாததாகவும்
    வித்தியாசமாகவும் உள்ளது

    நேரில் பாத்த திருப்தி தரும்
    படங்கள் மற்றும் சரித்திர சம்பத்தப்பட்ட
    விளக்கங்கள்

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete