வேர்களைத்தேடி
பகுதி –40
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
மீன் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே தேவதானப்பட்டியில் வெளியே
சாப்பிட்ட சில தருணங்கள் ஞாபகம் வந்தது. முதலாவதாக ஆச்சி இட்லிக்கடை. பாட்டி வடை சுட்டதுபோல்
இது பாட்டி இட்லி சுட்ட கதை.
எங்கள் வீட்டில் பெரும்பாலும் உணவு வெளியில் சாப்பிடுவதில்லை.
ஆனால் எப்போதாவது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, இல்லை மாவாட்டுவதற்கு நேரமில்லை என்றால்
என்னை ஆச்சி இட்லிக்கடைக்கு அனுப்புவார்கள். கடை என்றால் பெரிய கடையில்லை. அவருடைய
ஒரு அறை வீட்டின் வெளியே போடப்பட்ட சிறு கீற்றுக் கொட்டகை. ஆச்சி தனியாகத்தான் வாழ்ந்து
வந்தார். அவருடைய உறவினர்கள் பற்றிப் பெரிதாகத்
தெரியவில்லை. இந்து நடுநிலைப்பள்ளியின் அருகேயுள்ள தெருவிலிருந்து கோட்டையன்
கோவில் அல்லது கொண்டைத்தாத்தா கோவிலுக்குச்
செல்லும் வழியில் இடது புற மூலையில் இருந்தது ஆச்சி கடை. இங்கே காலையில் இட்லி மட்டும் கிடைக்கும். எத்தனை மணிக்கு கடை திறப்பார் என்று
தெரியாது. ஆனால் நான் ஒரு ஏழு அல்லது ஏழரை மணிக்குச் செல்லும்போது அங்கே வியாபாரம்
விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும். அங்கே பலபேர் இட்லிக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆச்சி ஒல்லியாக உயரமாக இருப்பார். வளர்த்த காதில் ஒன்ருமிருக்காது.
தும்பைப்பூ போன்ற வெள்ளைச்சேலை அணிந்திருப்பார். ரவிக்கை கிடையாது. சின்ன இடமாக இருந்தாலும் சாணி மெழுகி சுத்தமாக இருக்கும்.
கரி அடுப்பில் ஒரு அலுமினிய இட்லிப் பாத்திரம் அதனருகில் சிறு மரமனையில் ஆச்சி உட்கார்ந்திருப்பார்.
சுருங்கிய நெற்றியில் தோன்றும் முத்துமுத்தான வியர்வையை அவ்வப்போது சேலைத்தலைப்பால்
துடைத்துக் கொள்வார். வாயில் ஒரு பல் கூட இல்லை. ஆனால் பேச்சில் குழறல் இருக்காது.
இட்லிச்சட்டியைத்திறந்து ஆவி பறக்க தட்டுகளை
கீழே வைத்து இலேசாக நீர் தெளித்து வெறுங்கையிலேயே இட்லிகளை எடுத்துவிடுவார். அதனால்தானோ அவரின் இரு கைகளும்
வெள்ளையாக இருக்கும். கைகள் அல்லது கால்கள் அதிகமாக நீரில் புழங்கினால் சேத்துப்புண்
என்று வெள்ளையாக வரும். ஆச்சிக்கு இருந்தது அதுவில்லை என நினைக்கிறேன் நம்புகிறேன்.
இட்லிகள் தும்பைப்பூ போல் வெள்ளைவெளேரென்று சரியான அளவில் மல்லிகைப்பூப்போல
மெதுவாக இருக்கும். அப்போது 1970களில் ஆரம்பத்தில்
ஒரு இட்லி ஐந்து பைசா என்று நினைக்கிறன். ஆச்சி கடையில் மெதுவான இட்லி மட்டுமல்ல சட்னியும்
விசேஷம் தான் இரண்டு வகையான சட்னி இருக்கும். தேங்காய் பொட்டுக்கடலை போட்டு அரைத்த
சட்னியும், காரச்சட்டினியும் இருக்கும். தேங்காய்சட்னி மிகவும் தண்ணியாக இருக்கும். ஆனால் இட்லியில் தோய்த்துச்
சாப்பிட்டால் சுவை அள்ளும். காரச்சட்னி சிறிது கொத்சு போல இருக்கும். காரம் மூளைக்கு
ஏறும். ஆச்சி கடையில் நான் பார்த்து . இட்டலிகள் சட்டியிலிருந்து எடுக்கப்பட்டு பாத்திரத்திற்குப்
போனதேயில்லை. நேராக வாங்குபவர்களிடம் போய்விடும். அங்கேயே ஓரமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு
மட்டும் ஒரு சிறு வாழை இலையின் அடியில் ஒரு தினப்பத்திரிகை வைத்து கையில் கொடுப்பார்கள்.
அதே இரண்டு வகை சட்னிதான். இட்லியும் அளவும் தரமும் சட்னிகளின் சுவையும் என்றும் ஒரே
மாதிரி இருக்கும் கைப்பக்குவம். வாங்க வருபவர்கள் கையில் இட்டலிக்கும் சட்னிக்கும்
பாத்திரம் கொண்டுவர வேண்டும். அப்போது பிளாஸ்ட்டிக்கெல்லாம் கிடையாது. எப்போதும் அடுத்து
எனக்கு என்று மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஆச்சி முதலில் வந்தவர்களுக்கு
முன்னுரிமை கொடுப்பதோடு யாருக்கும் எந்த சலுகையும் காட்ட மாட்டார். அதையும் அன்பாகவே
செய்வார். அங்கேயே சாப்பிடுபவர்களுக்கும் அதே வரிசைதான்.
அந்த வயதிலும் உழைத்துச் சாப்பிட்ட அவர் ஒரு உண்மையான தொழிலாளி.
தொழிலாளி என்று சொல்வதைவிட அவரை ஒரு போராளி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
எப்போதும் ஒரே மெனுதான், ஒரே இட்டலிப் பாத்திரம்தான், 9 மணிக்குள்
மொத்தமாக தீர்ந்து விடும் . ஆச்சிக்கு பெரியதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை.
ஒரு நேரம் மட்டும்தான். அவரை வாழ்வை நடத்துவதற்கு அது போதுமானதாக இருந்திருக்கும்.
மற்ற நேரத்தில் என்ன செய்வார் என்று யோசித்திருக்கிறேன்.
ஒரு நாள் கடைவீதியில் பார்த்துக் கேட்டுவிட்டேன். அதனை அவருடைய
வார்த்தைகளில் சொல்கிறேன். "சேகர் நல்லா
இருக்கியா? பாத்து ரொம்ப நாளாச்சு, டீச்சரும் வாத்தியாரும் நல்லா இருக்காங்களா
என்ன கேட்ட? மத்த நேரத்தை எப்படி செலவழிக்கிறேன்னா? காலைல நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சு
குளிச்சு ரெடியாகி பாத்திரங்களை துலக்கி, மாவை நல்லா கரைச்சு வச்சிருவேன். தேங்காய்
துருவி, சட்னிகளைச் செஞ்சுட்டு அடுப்பு பத்தவச்சு இட்லிச்சட்னியை வைக்கிறதுக்குள்ள
ஆளுக வந்திருவாக. ஆறு மணியிலிருந்து 8.30-
9 மணிக்கெல்லாம் மாவு முழுதும் தீர்ந்திரும் சில வேளையில் 8 மணிக்கெல்லாம் தீர்ந்திரும்.
ஆனாலும் நிதம் அதே அளவுதான்”.
" ஏன்
ஆச்சி கொஞ்சம் அளவைக் கூட்டலாம்ல, தினமும் குறைஞ்சது 10 பேராவது ஏமாந்து போறாங்கள்ள, ".
“இல்ல சேகரு அளவைக் கூட்டிட்டா, இட்லியோட
தரம் குறைஞ்சு போகுமோன்னு பயம். அதனாலதான் எனக்குத்தெரிஞ்ச அளவிலயே நான் செய்யுறேன்.
அப்புறம் என்ன செய்வேன்னு கேட்டல்ல பண்ட பாத்திரங்களை
விளக்கி வைப்பேன். அதுக்குள்ள பத்துக்கு மேலாயிரும். அப்புறம் கடைக்குபோய் அடுத்த நாளுக்கு
தேவையான அரிசி, உளுந்து, உப்பு, மிளகாய், தேங்காய், புளின்னு எல்லா மளிகை சாமானும்
வாங்கிட்டு வருவேன். அதுக்குள்ளே மத்தியானம் ஆயிரும். அப்புறம் சோறுபொங்கி சாப்பிட்டிட்டு
சித்த நேரம் படுப்பேன். நாலு மணிக்கெல்லாம் எழுந்து மாவாட்டி வைத்துவிட்டு எல்லா பாத்திரங்களையும்
ரெடி பண்ணி வைத்துவிட்டு இரவு உணவை உண்டுவிட்டு சீக்கிரமாக எட்டு மணிக்கெல்லாம் படுத்துவிடுவேன்”.
Courtesy : Google |
" ஏன் ஆச்சி தினமும் அரிசி உளுந்து வாங்கனும். ஒரு மாசத்துக்கு
வாங்கிப்போட வேண்டியதுதானே. நாடார் கடையில அக்கவுண்ட் வச்சுட்டா மாசாமாசம் மொத்தமா
கொடுத்திரலாம்ல"
“நாடார் கடையில கேட்டுப்பார்த்தேன். அதெல்லாம் மாசச்சம்பளம் வாங்குற
கவர்ன்மென்ட் உத்தியோகஸ்தர்களுக்கு மட்டும் தான் தருவாகலாம். அதோட எதுக்கு கடனை வாங்கனும். கடனைக் கட்டாம பொசுக்குன்னு போயிட்டேன்னா, அந்தக்கடனை
யார் கட்டறது?.”
ஆச்சி நல்லாத்தான் யோசிக்குதுன்னு நெனைச்சேன். அதற்கப்புறம்
+1 +2 படிக்கறதுக்கு காந்திகிராமம் போயிட்டேன். பொங்கல் லீவுக்கு ஊருக்கு வரும்போது,
எங்கம்மாவுக்கு அன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் இருக்குன்னு சொல்லி சீக்கிரம் போகனும்னு சொன்னாங்க.
நான் சொன்னேன் "பரவாயில்லம்மா,
நான் ஆச்சி கடையில இட்லி வாங்கிட்டுவரேன்”னு
சொன்னேன்.
“என்னடா உனக்குத் தெரியாதா, ஆச்சி செத்துப்போச்சு. இட்லி வியாபாரம்லாம்
முடிச்சுட்டு சாமான் வாங்கிவச்சுட்டு படுத்த கிழவி எந்திரிக்கவேயில்லை. மகராசி நல்ல
சாவுதான்னு” அம்மா சொன்னாங்க. செருப்பை மாட்டிக் கொண்டு உடனே அந்த இடத்துக்குப்போனேன்,
குடிசையின் வாசல்ல பூட்டுத் தொங்கி அந்தத் தெருவே வெறிச்சுனு இருந்துச்சு.
தொடரும்
உழைப்பாளிகள்.
ReplyDeleteஅப்போதெல்லாம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இதேபோல சாலையோரம் இட்லியோடு கல்தோசையும் சேர்த்து விற்பனை செய்வார்கள். ஏகப்பட்ட ஸைட் ஐட்டங்கள் இருக்கும். சுவை... சுவை...
நன்றி ஸ்ரீராம்.
Deleteம்ம். காட்சிகள் கண் முன்னே விரிகிறது.அருமை
ReplyDeleteநன்றி சுபஸ்ரீ இராகவன்.
Delete//அதோட எதுக்கு கடனை வாங்கனும். கடனைக் கட்டாம பொசுக்குன்னு போயிட்டேன்னா, அந்தக்கடனை யார் கட்டறது?.”//
ReplyDeleteஎத்தனை சத்தியமான வார்த்தைகள்.. ?
உண்மைதான் பாஸ்கர் .
Deleteஎல்லா ஊரிலும் இது போல பாட்டிகள் (ஆச்சிகள்) இருந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டுக் கிராமங்களில் பெண்களின் நடத்திய இட்லிக் கடைகளைத் தமிழ் நாட்டின் தேசியத் தொழில் எனலாம்.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் முத்துச்சாமி , வருகைக்கு நன்றி.
Deleteஆச்சி மனதில் நிறைந்துவிட்டார். நானும் இவர்களைப் போல ஒருவரை என் ஹாஸ்டல் வாழ்க்கையில் மதுரையில் சந்தித்திருக்கிறேன். அவர் கொண்டுவரும் அப்பம், வடை போன்றவற்றிர்க்காகக் காத்துக்கொண்டிருப்பேன்.
ReplyDeleteதேர்ந்தெடுத்துப் போட்ட படமும் மனதை நிறைக்கிறது.
மே 1ம் தேதி போட்டிருக்கவேண்டிய இடுகை.