Monday, October 29, 2018

கோயில் கதவிற்குப் பூசை ?


வேர்களைத்தேடி பகுதி 30
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.  
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_22.html       
பெயர்க் காரணம் ( நன்றி தினமலர்)
Image result for kamatchi amman temple devadanapatti
Temple Entrance 
அசுரன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால், “தெய்வதானப்பதி” என்று அழைக்கப்பெற்றது. பின்னர் இந்தப் பெயர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது. இந்த தெய்வதானப்பதி நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ராஜகம்பள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவரின் தலைமையிலான பாளையத்தின் ஆட்சியாக (ஜமீன்தார் ஆட்சி) இருந்து வந்தது. இந்த ஜமீனைச் சேர்ந்த மாடுகளை ஒருவன் மேய்க்கக் கொண்டு செல்வான். அவன் மேய்க்கக் கொண்டு செல்லும் மாடுகளில் ஒன்றான குட்டி போடாத பசு ஒன்று தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று மாலையில்தான் திரும்ப வரும். அந்த ஒரு பசு மட்டும் எங்கே செல்கிறது? எதற்குச் செல்கிறது? என்று அறிய ஆவல் கொண்ட அவன் ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து சென்றான்.
Image result for kamatchi amman temple devadanapatti

அங்கு மூங்கில் புதர் ஒன்றில் யௌவன வடிவமான தேவ அம்சம் பொருந்திய பெண் அப்பசுவின் பால் அருந்துவது கண்டான். அவன் கண்டது சாதாரணப் பெண் அல்ல. அது காமாட்சியம்மன். ஒளிப்பிழம்பாய் விளங்கும் அன்னையை மாடு மேய்ப்பவன் பார்த்தவுடன் அவன் கண்கள் குருடாகிப் போய்விட்டன. அவன் ஜமீன்தாரரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இது தெய்வக் குற்றமாக இருக்கும் என்று கருதிய ஜமீன்தாரர் பூசைகள் செய்தார். அப்போது அம்மன் அசரீரியாக, “இந்தப் பகுதியில் வச்சிரதந்தன் என்ற அசுரனை அழித்து அமைதிக்காக தவமிருக்கும் என்னைக் கண்ட மாடு மேய்ப்பவன் என்னுடைய ஒளி தாங்காமல் அவன் கண்களை இழந்தான். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆற்றில் பெருமழை பெய்து வெள்ளம் வரும். அந்த வெள்ளத்தின் மீது மிதந்து வரும் மூங்கில் பெட்டியில் நான் அமர்ந்து வருவேன். ஒரு இடத்தில் மூங்கில் புதர் கொண்டு அணையிட்டு பெட்டியைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெட்டியை எடுத்து வழிபட்டால் குருடான உன் மாடு மேய்ப்பவனுக்குக் கண்கள் தெரியும். கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்திலிருப்பவர்கள் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக் கூடாது. தேங்காயும் பழமும் நைவேத்தியம் செய்தால் போதும். அன்ன நைவேத்தியம் கூடாது” என்றும் கூறியது.
அம்மனின் வாக்குப்படி மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது. ஜமீன்தாரரும், அந்த ஊர் மக்களும் மஞ்சளாற்றின் கரையில் காத்து இருந்தனர். ஆற்றில் மூங்கில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைக் கண்டதும் அவர்கள் மூங்கில் புதர் அணையிட்டு அந்தப் பெட்டியை நிறுத்தினர். கண்கள் குருடான மாடு மேய்ப்பவன் அந்தப் பெட்டியை எடுத்தான். அவன் அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனுக்கு கண்கள் தெரியத் தொடங்கின. காமாட்சியம்மனின் சக்தியை நேரில் கண்ட மக்கள் பக்தியுடன் வணங்கத் தொடங்கினர். தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து அவசர அவசரமாகப் பூசை செய்தார்கள். தேங்காய் உடைக்காமல், வாழைப்பழம் உரிக்காமல் பூசை செய்த பின்னர்தான் உணர்ந்தார்கள். குட்டி போடாத காரம்பசுவின் பாலருந்திய அம்மன் உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் விரும்புகிறார் என்றும் தெளிவு கொண்டனர். அன்றிலிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. பூசை செய்த பின்னர்தான் தேங்காய் உடைக்கப்படும். இது வேறு எந்த இந்து சமயக் கோயில்களிலும் இல்லாத ஒன்று. இக்கோயிலில் அன்ன நைவேத்தியமும் செய்யப்படுவதில்லை.
Related image

 கோயில் கதவிற்குப் பூசை
மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் காமாட்சி என்று அழைக்கப்படுகிறார். அம்மனின் அருள் வாக்குப்படி பெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. காமாட்சிப்புல்லால் வேயப்பட்ட குச்சுவீட்டுக்குள் அம்மன் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் பூசை செய்யும் பொறுப்பு மலைமேல் குடியிருக்கும் மன்னாடியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் பூசைப் பணிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில் மன்னாடியருக்கும், ஜமீந்தாரருக்கும் அவர்களது நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டில் கோபம் கொண்ட மன்னாடியார் கோயில் கதவைப் பூட்டியதுடன் “நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை பூட்டியகதவு திறக்கப்படுவதில்லை. மேலும் அடைத்த கதவிற்கு முன்பாகத்தான் பூசை செய்யப்படுகிறது. தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையிலிருந்தபடி கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
 தொடரும் 

3 comments:

  1. தேவதானப்பட்டி தகவல்கள் அறிந்தேன்...

    ReplyDelete
  2. மூங்கிலனை காமாட்சி கோவில் தலபுராணம் விரிவாக தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete