Monday, September 17, 2018

ரங்கராட்டினத்தில் மயங்கிய பரதேசி !!!!

Related image
ரங்கராட்டினம்

வேர்களைத்தேடி பகுதி 25
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_10.html
எப்போதாவது திருவிழா, தேர்தல் சமயங்களில் ராட்டினக்காரர்கள் வருவார்கள், சந்தை நடக்கும் புதன் கிழமைகளிலும் சில சமயங்களிலும் வருவார்கள். குடைராட்டினம் அல்லது ரங்கராட்டினம் மற்றும் சிலசமயம் இருவரும் வந்துவிடுவார்கள். இதில் முந்தி வந்தது யார். யார் இருக்க வேண்டும் யார் போக வேண்டும் என்று சண்டைகளும் வந்துவிடும். ஏனென்றால் ஒரு ராட்டினம் வரும்போது 50 ரூபாய்க்கு வியாபாரம் ஆகுமென்றால் 2 ராட்டினம் வரும் போது அது பாதியாகக் குறைந்துபோகுமென்பதால் தான் சண்டை. ராட்டினமென்றால் பிரமாண்டமாக இருப்பது இல்லை. சிறியதாக மிஞ்சிப்போனால் ஒரு பெரியாள் உயரம்தான் இருக்கும். குடை ராட்டினத்தில், குதிரை, புலி சிங்கம் ஆகிய உருவங்களில் இருக்கும் பொம்மைகளின் முதுகில் ஏறிக் கொள்ளலாம். மாறி மாறி சில தொட்டிப் பெஞ்ச்சுகளும் இருக்கும். அதிலும் உட்கார்ந்து கொள்ளலாம். அதன்பின்னர் ராட்டினத்தை சுற்றி விடுவார்கள். வேகம் பிடித்து சுற்றிவிட்டு இறங்கும்  பிள்ளைகள் கீழிறங்கி தள்ளாடி கீழே விழுவதும் உண்டு.  பத்துமுதல் 20 சுற்றுகளுக்கு 5 பைசாதான். கூட்டத்துக்கு தகுந்தாற்போல் சுற்றுகள் கூடும் அல்லது குறையும்.
Image result for ராட்டினம்
குடைராட்டினம்
ரங்கராட்டினம் முற்றிலும் வேறுவகை இதில் உள் தொட்டிகளில் உட்கார்ந்தால் அது மேலும் கீழும் போய் வரும். இதனையும் கையில்தான்  சுற்றுவார்கள். ஒவ்வொரு பெட்டியாக கீழே வரும்போது ஏறி உட்கார அது ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டே மேலும் கீழும் போய் வரும்.  
அந்த நாளில் சந்தையில் ரங்கராட்டினம் வந்திருந்தது. கையில் அம்மா கொடுத்திருந்த பத்து பைசாவும் இருந்தது. "தம்பி ராட்டினம் கீட்டினம்னு போயிறாத, ஏதாவது வாங்கிச் சாப்பிடு" என்று   அம்மா சொன்னது , என் மனதைப்படித்துவிட்டது போலத்தெரிந்தது .நம் மனதைப்படிப்பதில்  அம்மாக்கள் எப்போதும் கில்லாடிகள்தானே. அம்மாவின் வேண்டுகோள் அல்லது ஆணை, ராட்டினம் ஏறுவதற்கு மேலும் தூண்டியது. ஆணை மீறல் எப்போதும் ஒரு திரில்லை தருகிறது தானே. ஆனால் தனியாகப்போகத் தயக்கமாக இருந்ததால் இடிந்த சுவர் வழியாக இருந்த பள்ளிக்குக் குறுக்கு வழியில்  விரைந்து சென்று தேடினேன். வெங்கடேசன் இருந்தான்.
மூச்சு வாங்க, "வெங்கடேசா ராட்டினம் சுத்தலாமா" என்றேன்.
"காசு இல்லடா"
 "காசு என்ட்ட இருக்குடா" என்று சொல்லி உள்ளங் கையில் வேர்வையுடன் இருந்த இரும்புப் பத்துப் பைசாவை  எடுத்துக் காட்டினேன். சரிடா என்று சொல்லிய வெங்கடேசை கையைப் பிடித்துக் கொண்டு கீழிறங்கி ஓடினேன். மதிய உணவு இடைவேளை முடிய இன்னும் கால் மணிநேரம் மட்டுமே இருந்தது. ஓடி வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்க 10 காசைக் கொடுத்துவிட்டு ஒரே தொட்டிலில் இருவரும் ஏறினோம்.
இன்னும் ஒரு பெட்டியில் ஆட்கள் இல்லாவிட்டாலும் நாங்கள்  அவரசப்படுத்தியதால் ராட்டினம் சுற்ற ஆரம்பித்தது. முண்டாசு கட்டிய ராட்டினக்காரர் எக்கி எக்கி மேலிருந்து வந்த தொட்டியை கீழ்நோக்கி உந்தித்தள்ள ராட்டினம் வேகம் பிடித்தது. முதலில் ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. ஆனால் வேகம் கூடக்கூட ஏற்கனவே மூச்சு வாங்கிக் கொண்டிருந்த எனக்கு மேலும் மூச்சு முட்ட, தலை கிறுகிறுத்தது. "வெங்கடேசா நான் சாகப் போறேன்டா”  என்று கத்திவிட்டு வெட்கத்தை விட்டு அவன் மடியில் சாய்ந்தேன். நாக்கு வறண்டு போக வயிற்றில் பூச்சிகள் பறந்தது. நெஞ்சு வாய்வழியே வந்துவிடும் போல் இருந்தது. ரொம்பவும் பயந்து போய் ராட்டினத்தை நிறுத்தச் சொல்லி கத்தினேன். ஒரு கட்டத்தில் “டேய் நிறுத்துடா நீசப்பயலே” (என் அம்மாவிடம் கற்றுக் கொண்ட ஒரே கெட்ட வார்த்தை அல்லது நல்ல வார்த்தை) என்று அலற வெங்கடேசன், “சும்மா இருடா”, என்று என் வாயைப் பொத்தினான்.
ராட்டினமும் ஒரு வழியாக நின்றது. மடியில் கிடந்த என்னை வெங்கடேசன் கைத்தாங்கலாக வெளியே இழுக்க, எனக்கோ, அரை மயக்கத்தில் அண்ட சராசரமும்   சுற்றியது. குமட்டிக் கொண்டு வர, புளிய மரத்தின் கீழே அவசரமாய்ச் சென்று ஓங்கரித்து வாந்தியெடுத்திட்டேன். மதியம் சாப்பிட்ட கறிக்குழம்பு சோறு முழுவதுமாக வெளியே வந்த பிறகுதான் முடித்தேன். யாரோ ஓடிவந்து சொம்பில் தண்ணீர் குடிக்க அப்படியே கொப்பளித்து முகம் கழுவி ஒரு ஓரமாய் தரையில் உட்கார்ந்தேன்.
பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விட ,வெங்கடேசன் என்னை தரதரவென்று இழுத்துக் கொண்டு பள்ளி சென்றான். அன்று மதியம் முதல் பீரியட் ஆங்கில ஆசிரியர் எஸ்பால் கிராம்மர் வகுப்பு. ஆங்கில கிராம்மர் எனக்கொன்றும் அவ்வளவு பிடித்தமான வகுப்பு இல்லை. பிடிக்காத வெறுக்கும் வகுப்பும் இல்லை. ஆனால் மதிய வகுப்புகள் என்றாலே சற்று கடினம்தானே. அதோடு எஸ் பால் வாத்தியார் கொஞ்சம் கண்டிப்பானவர் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். பரீட்சையில் நடந்த சம்பவத்திற்குப்பின் என்மேல் அவருக்கு ஒரு கண். என்றாவது ஒருநாள் அன்று நடந்த தவறுக்கு நான்  பொறுப்பல்ல என்று சொல்லிவிட நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பமும் தைரியமும் எனக்கு எப்போதும் அமையவேயில்லை. எஸ்பால் ஆசிரியர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தால் அவரிடம் போய் சார் நான் காப்பி அடிக்கவில்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்ல வேண்டும்.
என்மேல் இருந்த கெட்ட பெயரை மாற்ற இன்னும் முயற்சி எடுத்து படிக்க ஆரம்பித்து வகுப்பில் நன்கு படிக்கும் மாணவன் என்று பெயரெடுத்தேன்.
ஆனால் அன்றைய தினம் தலைசுற்றிக் கொண்டு, லேசாக குமட்டிக் கொண்டும் இருந்தது. வகுப்பில் எப்போதும் முன் வரிசையில் உட்காரும் நான் அன்று பின் வரிசையில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் தூங்கி எழுந்தால் நன்றாக இருக்கும் போலத் தெரிந்தது.
எஸ் பால் ஆசிரியரிடம் படித்த  மாணவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அவருக்கு கொட்டாவி விட்டால் பிடிக்காது. யாராவது மாணவன் கொட்டாவி விட்டால் அவருக்கு கெட்டாவி வந்து காதைத் திருகியே கொன்றுவிடுவார். ஆனால் பெண்கள் கொட்டாவி விட்டால் வெறும் திட்டுவதோடு நிறுத்தி விடுவார். அன்றைய தினம் தூங்காமல் இருக்கவும், தலை கிறுகிறுப்பைத் தாங்காமலும் நான்பட்ட அவஸ்தை இன்று நினைத்தாலும் சுற்றுகிறது. அன்றைய தினம்  முடிவெடுத்தேன். இனிமேல் ரங்க ராட்டினமோ தங்க ராட்டினமோ குடை ராட்டினமோ வடை ராட்டினமோ எந்த ராட்டினமும் ஏறக்கூடாது என்று. அதனை இன்று வரை கடைப்பிடிக்கிறேன். அதுமட்டுமல்ல ராட்டினத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே எனக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிடுகிறது. இதுபோல அறிவியல் முனியாண்டி ஆசிரியர் வகுப்பில் நடந்த சுவையான சம்பவத்தை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
-தொடரும்.

9 comments:

  1. நான் எந்தக் காலத்திலும் ராட்டினங்கள் பக்கம் சென்றதில்லை. உயரமான இடங்களும் செல்ல மாட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம் நீங்க நம்மாளு

      Delete
  2. Spal sir passed away sekar I think ...very good person

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்ணன். ஆசிரியரின் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

      Delete
  3. இறங்கும் போது தான் வயிற்றில் சிறு கலக்கம் ஏற்படும்...!

    ReplyDelete
    Replies
    1. அய்யா எனக்கது வேண்டவே வேண்டாம்

      Delete
  4. ரங்கராட்டினம் எனக்கும் அலர்ஜிதான் நல்ல வர்ணனை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா உங்களுக்கும் அதே பிரச்சினைதானா ?

      Delete
  5. ச்சே.. இம்புட்டு தானா உங்க தைரியமெல்லாம்..

    ReplyDelete