Thursday, July 26, 2018

மகளிர் மரபு அன்றும் இன்றும் !


Fetna – 2018 பகுதி  2
 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_12.html

Fetnaவில் நடந்த கருத்துக்களத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசிய உரை
Image result for suba veerapandian
சுபவீரபாண்டியன்
சுபவீரபாண்டியன் ஐயா உள்ளிட்ட பேரவைக்கு என் பணிவான வணக்கங்கள். மகளிர் மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்பை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனென்றால்  எனக்கு நான்கு பெண்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம். ஒன்று என் அம்மா, அவர் நேற்றைய தலைமுறை, இரண்டாவது என் மனைவி அவர் இன்றைய தலைமுறை மூன்றாவது என் இரு மகள்கள் அவர்கள் நாளைய தலைமுறை.
என் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள். மதுரைக்கருகில் ஒரே பள்ளியில் வேலைபார்த்தார்கள் . சம்பள நாளில் அம்மா கையெழுத்து மட்டும்தான் போடுவார். பணத்தை வாங்குவது செலவழிப்பது என் அப்பாதான். ஆனால் என் நல்லவேளை அப்பா அநாவசியச் செலவு செய்யமாட்டார். பிள்ளைகளான எங்களின் படிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் தான் செலவழித்தார்.
நான் அதே பழக்கத்தை என் மனைவியிடம் எதிர்பார்த்தேன். ம்ஹூம் நடக்கவில்லை. என் அம்மா என் அப்பா மேல் வைத்திருந்த மரியாதை கலந்த பயம்,  மதிப்பு ஆகியவற்றை நினைத்தால்  இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இதையெல்லாம் ஒரு அப்பாவின் மகனாக, மனைவியிடம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். 1 லட்சம் டாலர் சம்பாதித்தாலும் ஒரு 100 டாலருக்கு அல்லாட வேண்டியிருக்கு. கேட்டால் "உனக்கு விவரம் பத்தாது" என்கிறாள். நல்லவேளை இது என் அம்மாவுக்கு தெரியாது அப்படியே 100 கொடுத்தாலும் நூறு முறை பத்திரம் பத்திரம் என்கிறாள் .

ஒரு நாள் என் அம்மா காலை வேளையில் என் அப்பாவிடம் ஒரு மஞ்சள் நிறக் கயிற்றில் ஒரு மஞ்சளைக் கட்டி கழுத்தில் கட்டச் சொன்னார்கள். என் அப்பாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏன் என்று திகைப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே தங்கத்தாலி இருந்தது. "என்ன சுசிலா எதுக்கு உனக்கு ரெண்டு தாலி" என் எங்கப்பா கிண்டல் பண்ணார். ஆனா நடந்தது என்னன்னா, தங்கத்தாலியில் கோர்க்கப்பட்ட குண்டு கொஞ்சம் லூசாயிருந்ததால் ஆச்சாரியாரிடமும் கொடுப்பதற்காக, முடிவு செய்த என் அம்மா, வெறும் கழுத்தோடு இருக்கக்கூடாது அப்படி இருந்தா கணவனுக்கு ஏதாவது ஆபத்து வரலாம்னு நினைச்சு. அப்படிச் செய்தாங்க. இது வெறும் மூடநம்பிக்கையா இருக்கலாம். ஆனா தன் கணவன் மேல் வைத்திருந்த பற்று, பாசம் மரியாதை எல்லாவற்றையும் காட்டுவதாகவே அது இருந்ததுன்னு நினைக்கிறேன்.   
நாங்கள் கிறித்தவர் என்றாலும் தமிழ்க்கிறித்தவர் என்பதால் இந்த தாலிகட்டும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
              திருமணமான புதிதில் நடந்த ரோட்டரி சிறப்பு மீட்டிங்கில் தாலியின் சிறப்பு மகிமை, மரபு பாரம்பரியம் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு நானும் என் மனைவியும் போயிருந்தோம். போய்விட்டு வந்து உடை மாற்றி வந்து பார்த்தால் என் மனைவியின் தாலி கோட்  ஸ்டாண்டில்  தொங்கிக் கொண்டிருந்தது. நானே தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது போல பயந்துவிட்டேன். என்னாச்சுன்னு கேட்டேன், "அது கழுத்தை உறுத்துகிறது" என்றாள். போடுகின்ற பெண்களுக்கு மட்டுமல்ல அதனைப் பார்க்கிற கண்களுக்கும் உறுத்த வேண்டும் என்றுதானே தாலி கட்டுவது வழக்கமாயிற்று.  இதில என் பொண்ணு தாலி கட்டுவது மட்டுமல்ல மோதிரம் போடுவது கூட அடிமைத்தனம் என்கிறாள். இப்படியாக பெண்களின் மரபு மாறிவருகிறது.
மூத்த நாகரிகமான நம் தமிழ் நாகரிகத்தில், நம் சமுதாயம் பெண்வழிச் சமுதாயமாகவே இருந்திருக்கிறது. ராகுல சாங்கிருத்தியன் எழுதிய "வாய்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகத்தில்  இதற்கான சான்றுகள் இருக்கின்றன.
வீடு, விவசாயம், சமூகம் என எல்லாவற்றையும் பெண்கள் தான் நடத்தியிருக்கின்றனர். மேட்ரியார்க் என்று சொல்வார்கள். எந்தக் காலக் கட்டத்தில் இது மாறி ஆணாதிக்க சமுதாயமாக ஆகிவிட்டது என்று தெரியவில்லை. சதி, விதவைக்கோலம், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு போன்ற பிற்போக்குத்தனங்கள் வந்து ஆக்கிரமித்தன. நல்லவேளை அவையெல்லாம் பெரும்பாலும் இன்றைக்கு இல்ல, இவையெல்லாம் நமது மரபுகள் இல்லை. பெண்ணைத்தூக்கிப் பிடித்து தெய்வமாக்கும் மரபு நம் மரபு, நாட்டையும் ஆறுகளையும் கடலையும், ஏன் மொழியையும் கூட பெண்ணாக தாயாக நினைக்கும் மரபு நம் மரபு, மாற்றங்கள் பல நடத்திருந்தாலும் பாசம்  செலுத்துவதிலும், நேசம் காட்டுவதிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், பிள்ளைகளை உருவாக்குவதிலும் மகளிர் மரபு அன்றும் இன்றும் ஏன் என்றும் மாறாமல் இருக்கிறது. இருக்கும் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன், வணக்கம்.
Fetna பதிவுகள் தொடரும் >>>>>>

5 comments:

  1. ஆழமான கருத்து நண்பரே , இப்பெலாம்
    தாலி கட்டினா காலி ங்கற மாதிரிதான்
    வாழ்க்கை இருக்கு நண்பரே.!

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் நான் அப்படி நினைத்திருந்தாலும் தற்சமயம் அது தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு நண்பரே.

      Delete
  2. முடிவில் சொன்ன கருத்து மிகவும் அருமை...

    ReplyDelete
  3. மூன்று தலைமுறைப் பெண்களை அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் அடிப்படையில் ஒப்பிட்டுள்ள விதம்: கொஞ்சம் கதை கொஞ்சம் கருத்து

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நடந்தவைதான் , கொஞ்சம் சுவைக்காக சிறிது கூட்டியோ குறைத்தோ சொல்லியிருப்பேன்.

      Delete