Thursday, July 19, 2018

தாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி !!!!

8 Most Irritating Habits Of Indian Husband


                          "தாய்லாந்துக்கு போய்விட்டு வரவா?”, என்று மனைவியிடம் கேட்டேன். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன்னால் அதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன். முகமது சதக் குழுமத்தின் அங்கமான பன்வேவ் கம்ப்யுட்டிங் (Openwave Computing LLC, New York) என்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் வேலை பார்ப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது இக்குழுமத்தின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பெருகியிருக்கிறது. முகமது சதக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் பிறந்த 'முகமது சதக்' தான் என்னுடைய நிறுவனத்தின் தலைவர். லாங் ஐலண்டில் எம்பிஏ படிக்க வந்து, படித்து முடித்தவுடன் ஆரம்பித்த நிறுவனம்தான் பன்வேவ்.
முகமது சதக்கின் அண்ணன் "அஸ்லாம் ஹூசைன்" தான் சென்னையில் உள்ள பன்வேவ் நிறுவனத்தின் "ஆஃப்  ஷோர்" மையத்தின் எம்டி (MD). இவருடைய பையன் ஜலாலுதீன் இரு வருடங்களுக்கு முன்னர் சித்தப்பாவைப் போலவே எம்பிஏ படிக்க நியூயார்க் வந்தார். அப்போதிருந்தே நிறுவன நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கும்போதெல்லாம் நியூயார்க் மிட்டவுனில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு வருவார். படித்து முடித்தவுடன் இங்கேயே முழுநேர வேலையில் சேர்ந்தார்.
இதற்கிடையில் ஜலாலுக்குத் திருமணம் நிச்சயமாகி அது 2018 மே மாதம் 9-ஆம் தேதி என்று முடிவானது. ஜலால் என்னைக் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டதினிமித்தம் நானும் போவதற்கு முடிவு செய்தேன்.
என் மனைவியிடம் சொல்ல, “சித்திரையில் அக்னி நட்சத்திரத்தில் போகாதே, கருகி விடுவாய், நானும் கண்டிப்பாய் வரமுடியாது”, என்று மறுத்துவிட்டாள். போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, “நீ வேண்டுமென்றால் போய்விட்டுவா”, என்று சொல்லிவிட்டாள்.
எப்பொழுதும் இந்தியா போகும் வழியில் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் சென்று அங்கே சில நாட்கள் தங்கிச் செல்வது என் வழக்கம் என்று உங்களுக்குத்தெரியும். இதற்கு முன்னர் இப்படி நான் பார்த்தது தான், லண்டன், சீனா, இலங்கை ஆகியவை. இந்தத் தடவையும் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் செல்லலாம் என்றபோது தாய்லாந்து ஞாபகம் வந்தது. "ஆனா அன்ட் தி கிங்" (Anna and  the  King) என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்னால் பார்த்ததிலிருந்து தாய்லாந்து என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இடம் பெற்றது.
அங்குள்ள பிரமாண்ட புத்தர் கோவில்கள், அரண்மனை மற்றும் மிதக்கும் அங்காடி ஆகியவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. நம்புங்க பாஸ், அட நம்புங்க சிஸ் இதைத்தவிர வேறொன்றும் அல்லது வேறெங்கும் போவதற்கு எந்த ஐடியாவும் இல்லை.
தாய்லாந்து போகும் இந்தத் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னேன்.
"டேய் தனியாவா போற, ஏண்டா நாங்கெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து போறப்ப பெரிய உத்தமன் மாதிரி நான் வரலன்னு சொன்னே".
"அடேய் என்னோட ஆர்வங்கள் பார்க்க விரும்பும் இடங்கள் எல்லாம் வேறடா. உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது. அதனாலதான் நான் உங்க கூட வரல "
நம்பிட்டோம்,ஏலேய் ஏடாகூடமா எதையாவது செஞ்சு மாட்டிக்காதே ஆமா சொல்லிட்டோம், ஆமா உன் மனைவிட்ட சொல்லிட்டியா?”.
"இல்லடா இனிமேத்தான் சொல்லணும்".
“அடப்பாவி இன்னும் சொல்லலயா, அடேய் தாய்லாந்துக்கு தனியாய் போறேன்னு சொன்னா எந்த மனைவிதான் விடுவா?.
“அப்ப நீங்கெல்லாம் ஒண்ணாப் போகும்போது என்னடா சொல்லிட்டு போனீங்க?”.
"நாங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டுத்தான் தாய்லாந்து போனோம்".
“அதெல்லாம் முடியாதுறா இதுக்குப்போய் பொய் யெல்லாம் சொல்லத்தேவையில்ல. அதுதவிர பொய் சொல்லிட்டு அதை மெயின்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம்”.
"என்னவோடா நாங்க சொல்றத சொல்லிட்டோம், நீ அப்புறம் உன்பாடு உன் மனைவி பாடு"
இப்போது வீட்டில்  மனைவியிடம்
அப்ப இந்தியாவுக்கு நீ வரலையா?” 
“லூசாப்பா நீ இந்த வெயில்ல யாராவது இந்தியாவுக்குப் போக முடியுமா?”
“நான்தான் சொன்னேனே, இந்தக் கல்யாணம் அவசியம் போக வேண்டிய ஒண்ணு”.
“சரி அதான் போய்ட்டுவான்னு சொல்லிட்டேன்ல”.
 “தேங்க்ஸ் அதோட போற வழில தாய்லாந்துக்கு போய்ட்டு அப்புறம் சென்னைக்குப் போலாம்னு இருக்கேன்”. (தயங்கி தயங்கி மிகவும் தயங்கிக் கேட்டேன்)
“தாய்லாந்துக்கா, சரி போய்ட்டு வா ஆனா பத்திரம்"
என் கற்பனைக்கு சடுதியாக சிறகுகள் முளைக்க, நான் வானவீதியில் பறக்க ஆரம்பித்தேன்.
எந்தச் சண்டையோ, கேள்வியோ, எதுக்கு? அங்க என்ன இருக்கு? என்று எந்த விசாரணையும் இல்லாம, சரின்னு சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியம். நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கும் ஆச்சரியம்தான்.
அதனால் கண்கள் பனிக்க, இதயம் நனைய நான் நினைத்தேன். என் மனைவிக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு என்றும் பாத்திரவானாக இருப்பேன். ஒழுக்கம் காப்பேன் உத்தமனாய் நடப்பேன் என்று உளமாற உறுதி கூறினேன். அப்படியே போய்த்திரும்பி வந்துவிட்டேன். என் மனைவியின் மீது அன்பும் மதிப்பும் கூடியது.
திரும்ப நியூயார்க் வந்து சேர்ந்தபின் ஒரு நாள் நான் பாத்ரூமில் இருந்தபோது வெளியே என் மனைவி தன் தோழியிடம் தலைவாரிக் கொண்டே ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருந்தாள். பல விஷயங்களைப் பற்றிப்  பேசிவிட்டு என்னுடைய பயணம் பற்றிய பேச்சு வந்தது.
"ஏண்டி எப்படி நீ தாய்லாந்துக்கு  அவரை  தனியா அனுப்பின? நானெல்லாம் இந்த மாதிரி தப்பை செய்யவே மாட்டேன்".
“அடப்போடி முசப்பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தா தெரியாதா?".
நான் உள்ளே திடுக்கிட்டதில் ஒரு சில துளிகள் தொடையில் விழுந்தன. அதோடு எனக்கு ஒரு சில சந்தேகங்கள் எனக்கு உதித்தன. 
1.   இந்தப் பழமொழியை இவள் எங்கே கற்றுக் கொண்டாள்?
2.   இந்தப்பழமொழியில் முயல் யார்? நாய் யார்?
3.   தாய்லாந்து போவதற்கு முன்னால் இதனைக் கேட்டிருந்தால் ஒருவேளை என்ன நடந்திருக்குமோ?
மகேந்திரன் : “டேய் சேகர்எனக்கு ஒரு சந்தேகம்  தொடையில் விழுந்தது கண்ணீரா சிறு நீரான்னு சொல்லாம முடிச்சிட்டியே?”
(விரைவில் எதிர்பாருங்கள் தாய்லாந்தில் பரதேசி)

12 comments:

  1. இந்தியாவைதான் தாய் லேண்ட் என்று சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்... இல்லையா?!!!

    ReplyDelete
    Replies
    1. அது தாய்நாடு ஸ்ரீராம்.

      Delete
  2. எஞ்சாய் பண்ணுங்க நண்பரே...
    தனியாக பயணிப்பது போர்தான்
    அதையே ரசிச்சு பயணித்தால்
    அதுவே தனி சுகம்தான்...

    ReplyDelete
  3. நான் நம்புகிறேன். எங்கள் alfy உலகம் அறிந்த உத்தமர் :D

    ReplyDelete
  4. தாய்லாந்து, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓரு நாடு. பட்டாயா நகரம் புகழ் பெற்றது. எல்லவிதத்திலும்தான். சுற்றுப்பயண அனுபங்களைப் படிக்க waiting

    ReplyDelete
    Replies
    1. பட்டாயா போன கதையும் இருக்கிறது முத்துச்சாமி.

      Delete