Monday, March 5, 2018

சொந்த அம்மாவே டீச்சர் என்றால் என்ன செய்வது ?


வேர்களைத்தேடி பகுதி: 8
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/02/blog-post_26.html


மிகவும் சிரமப்பட்டு எழுந்த என் ஆசிரியர், பழைய நினைவுகளில் மூழ்கித் தவித்து அப்படியே கண்ணீர் சிந்தினார். என் அப்பா உட்பட அவருடன் வேலை பார்த்த பலரும் இறந்துவிட்ட நிலையில் என்னைச் சந்தித்தது அவருடைய உணர்ச்சிகளை எழுப்பியிருக்க வேண்டும்.
பின்னர் என்னுடைய, அவர் சார்ந்த நினைவுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய மானங்காத்த மன்னர்கள் புத்தகத்தைப் பற்றி நான் சொன்ன போது, அதன்பின் தான் எழுதிய பல புத்தகங்களைப் பற்றிச் சொன்னார். சிலவற்றை எனக்குக் கொடுத்தார். அதற்காக என் சிறு காணிக்கையை அவருக்குச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன். உடல் தளர்ந்துவிட்டாலும், இன்னும் எழுத வேண்டும் என்ற தமிழின்  கம்பீரத்தை தளரவிடாமல் தன்னகத்தே வைத்திருக்கும் என் தமிழாசிரியர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ்ச் சேவை செய்ய இறைவனை இறைஞ்சுகிறேன்.
வெளியே வந்தேன். முற்றிலும் மாறிப்போன தெரு வழியே மீண்டும் நடந்து வெளியே வந்து, நான் படித்த நடுநிலைப்பள்ளி இப்போது எங்கிருக்கிறது என்று கேட்டுக் கொண்டு காரில் மீண்டும் ஏறி பஸ் ஸ்டாண்டு அருகில் வந்தோம். அதன் பின்புறம்தான், இந்து நடுநிலைப்பள்ளி  இடம் பெயர்ந்திருக்கிறது. உள்ளே மாணவர்களின் இரைச்சல் கேட்க, 1970-களில் நானும் அவர்களில் ஒருவனாக இருந்தது ஞாபகம் வந்தது.
அப்படியே ஒரு ஓரம் உட்கார்ந்து நினைவலைகளில் நீந்தத் தொடங்கினேன்.

My Father and Mother

       சொந்த அம்மாவே டீச்சர்  என்றால் என்ன செய்வது ? ஆம் என் முதல் வகுப்பு ஆசிரியை (1-C) என் அம்மா சுசிலா நேசமணிதான். எனக்கு ஐந்து வயதானவுடன் என் அம்மா, தலைமையாசிரியர் ராமுபிள்ளையிடம் அழைத்துச் செல்ல அவர் என் காதைத் தொடச் சொன்னார். எங்கம்மாவை நான் பார்க்க, அவர்கள் என்னைப் பார்த்து ‘தொடு’ என்றவுடன் சட்டென காதைத் தொட்டேன். சிரித்து விட்ட ராமு பிள்ளை, “அப்படித் தொடக் கூடாது, கைகளை தலைப்பக்கம் கொண்டு சென்று காதைத் தொடு”, என்றார். சுலபமாக நேரடியாக காதைத் தொடுவதை விட்டுவிட்டு ஏன் இப்படி சுற்றித் தொட வேண்டும் என்ற விஷயம் அப்போது எனக்குப் புரியவேயில்லை. 
அந்தச் சமயத்தில் கிராமத்தில் சரியான பிறந்த தேதி குறித்து வைக்குமளவுக்கு படிக்காதவர்கள் இருந்ததால், ஐந்து வயதுக்கான வளர்ச்சியை குறிக்க இப்படி ஆசிரியர்கள் செய்வதுண்டு. வலது கையை தலைமேல் சுற்றி இடது காதைத் தொட்டால் பிள்ளைக்கு ஒன்றாம் வகுப்பில் சேர வயது வந்துவிட்டது என்ற முடிவு செய்து ஜூன் முதல் வாரம் அல்லது விஜயதசமியன்று சேர்த்துவிடுவார்கள். பெரும்பாலானவர்களை விஜயதசமி அன்று கொண்டுவர, பள்ளியின் மேனேஜர் பரமசிவம் அய்யர் பள்ளியின் உள்ளே மாபெரும் கற்சிலையான சிவபார்வதி முன் தரையில் உட்கார்ந்து நெல் மணிகளைப் பரப்பி பெயர் எழுதி நாவிலும் பெயரை எழுதுவார். பிறகு வகுப்பில் உள்ள எல்லோருக்கும் மிட்டாய்கள் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் மிட்டாய்களை என் அம்மா ஒரு காகிதத்தில் மடித்து  வைத்து வீட்டுக்கு கொண்டு வந்து எனக்கும் என் தம்பிக்கும் கொடுப்பார்கள் . அவர்கள் எதையுமே சாப்பிட ஆசைப்பட்டது போல் எனக்கு அன்றும் சரி இன்றும் சரி தெரிந்ததேயில்லை .எல்லாமே எங்களுக்குத்தான் தந்து விடுவார்கள் .பெரும்பாலும் ஆரஞ்சு மிட்டாய்கள்தான் இருக்கும் .ஆரஞ்சுப்பழ சுளை போல் கொஞ்சம் பெரிதாக இருக்கும் .வாயில் வைத்திருந்தால் நீண்ட நேரம் இருக்கும்.ஆனால் எனக்குத்தான் அப்பவும் இப்பவும் சரி பொறுமை கிடையாதென்பதால் உடனே கடித்துச்   சாப்பிட்டுவிடுவேன். அப்பறம் எனக்கே அதே போல் அட்மிஷன் நாளும் வந்தது
சரி இப்போது என் காதுக்கு வருவோம். எவ்வளவு முயன்றும் என்னால் என் காதைத் தொட முடியவில்லை. ஆனால் என் அம்மா என் பிறந்த தேதியைச் சொல்லவும் ராமு வாத்தியார் “சும்மாதான் காதைத் தொடச் சொன்னேன்,சேகருக்கு ஐந்து வயதாகி விட்டது, சேர்த்துக் கொள்ளுங்கள்”, என்று சொல்லி விட்டு என் முதுகில் தட்டி” சேகர் நல்லாப் படிச்சு உங்கம்மா அப்பா பெயரை நன்கு  காப்பாற்ற வேண்டும்”, என்று சொன்னார். நானும் மையமாகத் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.
எங்கம்மா இப்போது என் காதைப் பிடித்து தன் வகுப்புக்கு இழுத்துச் சென்றார். ஏனென்றால் அவர் ஏற்கனவே காதை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லியும் நக்கலாக நான் நேராக பிடித்ததால் என நினைக்கிறேன்.
எங்கம்மாவின் வகுப்புக்கு வந்ததும் வழக்கம் போல் அவர்களுடைய மேஜையின் மேல் ஏறி உட்கார்ந்தேன். ஏனென்றால் 1-ஆம் வகுப்பில் அப்பொழுதுதான் நான் சேர்ந்தாலும் மூன்று வயதிலிருந்தே நான் எங்கம்மாவுடன் பள்ளிக்கு வர ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் எங்கள் ஊர் முழுவதுமாக கின்டர் கார்டன் என்பெதெல்லாம் கிடையவும் கிடையாது, யாருக்கும் அதைப்பற்றித் தெரியவும் தெரியாது. டீச்சரின் மகன் என்ற பெருமையிலும் உரிமையிலும் எப்போதும் மேஜை மேல்தான் உட்காருவேன், தூங்குவேன். அதனால் ஒன்றாம் வகுப்புப் பாடம் முழுவதும் எனக்கு ஏற்கனவே அத்துப்படி.
ஆனால் இந்த முறை எங்கம்மா வழக்கத்திற்கு மாறாக, நான் கீழேதான் உட்கார வேண்டும் என்று சொன்னது எனக்குக் கொஞ்சம் கூட புரியவேயில்லை. மிகுந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும், கிள்ளளுக்கும், கொட்டுக்கும் பணிந்து கீழே போய் உட்கார்ந்தேன். தன் சொந்த அம்மாவே டீச்சராக இருக்கும் பட்சத்தில் அவர் மகனுக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்கள். அதைவிட அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டம் அது என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால்தான் தெரிகிறது.
இது சில நாட்கள் தினமும் தொடர்ந்தது. தினமும் மேஜைமேல் உட்கார அடம் பிடிப்பேன். பிறகு சிரமப்பட்டு இறக்கி விடுவார்கள். ஆனால் ஒருமுறை கூட போனால் போகிறது என்று என்னை மேஜைமேல் உட்கார அனுமதிக்கவேயில்லை. சில நாட்களில் எனக்குப் புரிந்துவிட்டது பழகியும்விட்டது.
ஆனால் கீழே இருக்கும்போது என் சில்மிஷத்தை ஆரம்பித்தேன்.
ஒருநாள் எல்லோரும் கூடி இரண்டாவது பெல் அடித்தவுடன் அனைவரும் எழுந்து நிற்க, என் அம்மா பிரார்த்தனைப் பாடலைப் பாடினார்கள்.
தேவே ன்னைப் போற்றிடுவேன்
தினமும் என்னைக் காத்திடுவாய்
நாவால் உன்னை நான் பாட
நல்ல தமிழைத் தந்திடுவாய்.
எல்லோரும் கண்களை மூடி பாடிக் கொண்டிருந்த சமயத்தில் நான் செய்ததை நினைத்தால் இன்னும் எனக்கு அவமானமாக இருக்கிறது.
-தொடரும்.   

முக்கிய அறிவிப்பு 

டொரோண்டோவில்  நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)


7 comments:

  1. சுவை கூடிக்கொண்டே போகிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துச்சாமி .

      Delete
  2. //நல்ல தமிழைத் தந்திடுவாய்.// TRUE

    ReplyDelete