Tuesday, April 18, 2017

குதிரைப்படைக்கும் கழுதைப்படைக்கும் சண்டை !

இலங்கையில் பரதேசி -9
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post.html


            " சரவணபவன் இங்க இருக்கா?"
          "சார் சரவணபவன்னா சரவணபவன் இல்லை, சரவணபவன் மாதிரி. ஆனா ரெண்டும் ஒண்ணுதான் "
          "என்ன அம்ரி குளப்புற ?"
          "வந்து பாருங்களேன்"
           சில நிமிட நேர டிரைவில் வந்தது ஒரு ரெஸ்டாரண்ட், பேர் ஷண்முகாஸ் .
“ரெண்டும் ஒண்ணுதான்னு சொன்னே?”
“ஆமா சார்  சரவணன் யாரு?”
“முருகன்”
“ஷண்முகன் ?”
“அதுவும் முருகன்தான்”
“அத்தைதான் சொன்னேன்”
“அம்ரி, இதெல்லாம் உனக்கு தெரியுமா ஆச்சரியம்தான் “
“உங்களுக்கும் தெரியுதே”
“எனக்கு இதுவும் தெரியும் இதுக்கு மேலையும் தெரியும்” 
அம்ரி சொன்னது உண்மைதான் பேரைத்தவிர மற்ற எல்லாமே சரவணபவன் தான். சுவை உட்பட .
          சீனா போய் இலங்கை வந்து இறங்கியதால், இட்லி தோசை சாப்பிட்டு வெகுகாலம் ஆகியிருந்தது. நாக்கில் ஜலம் ஊற இட்லி வடை காம்போ ஒரு பிளேய்ன் தோசை என்று நிறுத்தி நிதானமாகச்  சாப்பிட்டேன். மூன்று வித சட்னியுடன் சாம்பாரில் தோய்த்து ஒவ்வொரு கவளமாக உள்ளே இறங்க இறங்க அமிர்தமாக இருந்தது. அனுதினமும் சாப்பிடுபவர்களுக்கு ஒன்னுமே தெரியாது. ஒரு வாரம் பத்து நாள் கழித்துச் சாப்பிட்டுப் பாருங்கள் அப்புறம் தெரியும், நம்ம ஊரின் பண்டங்களின் சுவை.
Related image
Ghee Roast
          அம்ரியின் காதில் மெதுவாக கேட்டேன்.
          “இந்தக்கடை வைத்திருப்பவர்கள் நாடார்தானே”
          “எப்படி சார் கரெக்டாக கண்டுபிடித்தீர்கள்”.
          பலவருடங்களுக்கு முன்பே குடிபெயர்ந்த குடும்பம்தான் இதனை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். பெரிய பங்களா போன்ற இடத்தில் ரூம் ரூமாக இருந்தது. பெரும்பாலும் நம்மூர் தமிழர்கள்தான் வேலை பார்த்து வந்தனர்.
          “அம்ரி, முடியும்போதெல்லாம் இங்கு வந்துவிட வேண்டியதுதான்”.
 அம்ரியும் மகிழ்ச்சியுடன் தலைமாட்டினான்.
          உண்டு முடித்து ஒரு நாற்பது நிமிட பயணத்தில் ஓட்டல் வந்து சேர்ந்தோம். படுக்கையில் சாய்ந்தேன்.
          மாபெரும் போருக்கு ஆயத்தமாகி, ஒருபுறம் குதிரைப்படை நிற்க மறுபுறம் சிங்களக் காடையினர் கழுதைகளில் வீற்றிருந்தனர். குதிரைப் படையின் தலைவன் அப்படியே பிரபாகரன் மாதிரியே இருந்தது. ஒருவேளை பிரபாகரன்தான் என்று நினைக்கிறேன்.
          குதிரைப்படை வாயு வேகத்தில் புகுந்து, கழுதைப்படையை முறியடித்து அரைமணி நேரத்திற்குள் போர் முடிந்து போனது. கொழும்புக் கோட்டையில் பிரபாகரன் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள கிட்டத்தட்ட 600-700 வருடம் கழித்து தமிழருடைய ஆட்சி மலர்ந்தது. அமைச்சர்கள் பலர் பதவியேற்றுக் கொள்ள பிரதம மந்திரி ஒவ்வொரு மந்திரியையும் பேரரசருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பிரதம மந்திரியை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.  உற்று உற்று பார்த்தால் அது என்னை மாதிரியே தெரிந்தது. இல்லை அது நான்தான். ஆஹா தமிழீழத்திற்கு நான் பிரதம மந்திரி இது என்ன குழப்பம்?
          "சார் சார்"
யாரது பதவியேற்கும் விழாவில் இடையூறு செய்வது.
“சார் நான்தான் அம்ரி மணி எட்டாகிவிட்டது”.
படக்கென்று எழுந்தேன், ஆஹா கனவு. தமிழரின் விடுதலை இப்படிக் கனவாகி விட்டதே என்று ஒரு பெருமூச்சு விட்டு விட்டு எழுந்து ரெடியாகி வெளியே வந்தேன்.
          பளிச்சென்று வெயில் அடிக்க அது ஒரு அழகிய தினம் .
“அம்ரி ஷண்முகாஸ்போகலாமா காலை உணவுக்கு?”
          “சார் அது இங்கிருந்து தூரம். அதோடு நாம வேறுவழியில் போகிறோம்”, என்றான்.
          "அப்படியா போகிற வழியில் இட்லி தோசை கிடைக்குமா?"
          “சார் அங்கெல்லாம் கிடைக்காது. இலங்கை உணவுதான் கிடைக்கும்”.
           “சரிவா எங்காவது சாப்பிட்டுவிட்டுப் போவோம்”.
          கார் கிளம்பிச் செல்ல கொழும்பை விட்டு வெளியே வந்து கிராமப்புறத்திற்கு வந்தோம். போகிற வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினான் அம்ரி.
          "சார் இங்கே புஃபே இருக்கும்.
          "காலங்காத்தால புஃபே யா , வேறு எங்காவது கொஞ்சம் லைட்டாய் சாப்பிடலாம் அம்ரி"  
          “பெரும்பாலான கடைகளில் இப்படித்தான் இருக்கும் சார்”
“சரி வா போகலாம்”, என்று உள்ளே நுழைந்தோம்.


          இலங்கை உணவு அங்கே வரிசையாக சூடேற்றிய ட்ரேய்களில் நிரம்பியிருந்தது. அவர்களின் ஒரு வகை பிரட், கைக்குத்தலரிசி போன்ற சாதம், மஞ்சள் நிற லெமன் சாதம், மாட்டுக் கறிக்குழம்பு, மீன்குழம்பு அதுதவிர சாலட்களும், பழ வகைகளும் இருந்தன.
Add caption

          அதனைப் பார்த்தவுடனே எனது வயிறு நிரம்பிப்போக, மிகவும் லைட்டாக பிரட், சாலட் சிறிது பழங்கள் சாப்பிட்டு எழுந்தேன். அம்ரி ஒரு வெட்டு வெட்டினான். அவனது புஜபல பராக்கிரமத்திற்கு அப்போதுதான் காரணம் புரிந்தது.
Front of the Restaurent

          நானெல்லாம் அவைகளைப் பார்த்து ரசிக்கத்தான் முடியும். நமக்கு ஒரு கவளம் கூட சாப்பிட்டாலும் புஜத்திற்கு எங்கே போகிறது, தொப்பையை அல்லவா பெருக்குகிறது? இந்தச் சின்ன உடம்பிற்கு தொப்பை துறுத்திக் கொண்டிருந்தால் நன்றாகவே இருக்கிறது. ஒரு தடவை வயிரைத் தடவிப் பார்த்துவிட்டு எழுந்துவிட்டேன்.
          “என்ன சார் எழுந்திட்டீங்க” .
          “அம்ரி நீ நிதானமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும் அதுவரை இங்கே வெளியே நிற்கிறேன்”.
          சாலை குறுகிய சாலையென்றாலும் நல்ல திடமான சாலைகளாக இருந்தன. நம்மூர் நாட்டுப் புறத்திற்குள் நுழைந்த மாதிரிதான் இருந்தது. ஆனால் எங்கும் பசுமையாக வளமையாக இருந்தது. காலையில் லேசாக சில்லென்று இருந்தது மிகவும் உற்சாக மூட்டக்கூடியதாக இருந்தது. பலவித வாகனங்கள் போய்க் கொண்டு இருந்தன. சிறிது நேரத்திற்குள்ளாகவே பல வாகனங்கள் அங்கு வர, அந்த உணவகம் நிரம்பி வழிந்தது. காலை உணவை இப்படிச் சாப்பிடுவார்கள் என நான் நினைக்கவேயில்லை.
          அம்ரி ஒரு ஏப்பத்துடன் வெளியே வந்தான். 'அம்ரி தூங்கிடாதே" என்றேன்.
          “பயப்படாதீங்க சார் பகலில் எனக்குத் தூங்கும் பழக்கமில்லை”.
          கார் நகர்ந்தது "முதல் ஸ்டாப் எங்கேயென்றேன். போற வழியில் ஒரு மிருகக் காட்சி சாலை இருக்கிறது. பார்த்துவிட்டுப் போவோம் என்றான்.
          ஒரு மணி நேர டிரைவ் விற்குப்பின் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை வந்தது உள்ளே நுழைந்தோம். அங்கே மிருகங்களை விட குடும்பங்கள் மற்றும் காதல் ஜோடிகளைத் தான் அதிகம் பார்த்தேன். பத்து நிமிடங்களில் வெளியே வந்து வா போகலாம் என்றேன்.
          “என்ன சார் அதுக்குள்ளே வந்திட்டீங்க?”
          “அம்ரி இதற்குள் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. அதோட பழைய நியாபகம்லாம் வருது இங்க வேணாம்பா . அடுத்த இடம் எங்கே போகிறோம் ?”என்றேன்.
          “அடுத்த இடம் அனாதை யானைகளின் விடுதி”
“ யானைகளுக்கு அனாதை விடுதியா? என்னப்பா சொல்ற?”
-தொடரும்.



6 comments:

  1. அனாதை யானைகளுக்கு விடுதியா... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி வெங்கட்

      Delete
  2. இட்லி வடை காம்போ ஒரு பிளேய்ன் தோசை - சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. உங்களையெல்லாம் கொஞ்சம் காயவிட்டால்தான் அதன் அருமை தெரியும் .

      Delete
  3. கனவு நனவாகட்டும். இலங்கையின் அரசியல் தலைமை ஏற்க உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. இராயரே நியூஜெர்சி பக்கம் ஒதுங்கி நிக்கும்போது நானெல்லாம் ஜுஜுபி .
      நடக்காத ஒன்று என்பதற்காக அப்படிச்சொன்னேன் .

      Delete