Tuesday, January 17, 2017

சீனாவில், நான்கு முறை அழிந்து எழும்பிய நானூறு வருட கத்தோலிக்க ஆலயம் !!!!!!


சீனாவில் பரதேசி 30

Cathedral of the Immaculate Conception

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_5.html

"ஆரம்ப காலம் போல அல்லாது இப்போதெல்லாம் கம்யூனிச அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடுவதில்லை. எனவே இங்கு எல்லா மதத்தினரும் அவரவர் மதங்களை கடைப்பிடிப்பதற்கும் விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதியிருக்கிறது”.

"மதமென்று பார்த்தால் இங்கு எந்த மதத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் ?”. “புத்தமதம் அதிகம் என்று சொல்லலாம். டாவோயிசமும் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவு. எந்த மதத்தையும் சாராதவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்”.

"சரி இந்த ஆலயத்திப் பற்றி மேலும் விவரங்களைச் சொல்லு"

“முதலில் சேப்பல் என்று அழைக்கப்படும் சிற்றாலயமாக அமைக்கப்பட்டு பின்னர் விரிவு படுத்தப்பட்டு பேராலயமாக ஆக்கப்பட்டது. 1650ல் சிங் வம்சத்தைச் சேர்ந்த ஷின்ஜி பேரரசர், அவர் ஆட்சிக்கு வந்த ஏழாவது வருடத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த ஜேஸுட் பாதிரியாரான ஜோகன் ஆடம் ஷ்கால் வான்பெல் (Johann Adam Schall Von Bell) என்பவருக்கு விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கினான்.அப்போது ஆரம்பித்து இரண்டு வருடங்களில் இந்தப் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
From outside( I am standing in the front)

ஷுன்ஜி பேரரசர் பாதிரியாரோடு  மிகவும் நட்பு பாராட்டியதோடு 24 முறை இந்த பேராலயத்துக்கு வந்து சென்றாராம்.

கி.பி.1690ல் பீஜிங் தனது முதல் ரோமன் கத்தோலிக்க பிஷப்பான ஃபிரான்சிஸ்கன் பெர்னட்டின் டெலா சிசியா வை பெற்றது. அது முதல் இதற்கு ஒரு பேராலய( கதீட்ரல்) அந்தஸ்து கிடைத்தது. அதுமட்டுமல்ல பலமுறை அழிந்தாலும் மறுபடியும் மறுபடியும் இந்த ஆலயம் மீண்டு வந்தது என்பதைக் கேள்விப்பட்ட போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து சொல்கிறேன்.


கி.பி. 1703ல் காங்லி பேரரசரின் 24 ஆவது ஆண்டு ஆட்சியில் அவரின் உதவியோடு இது மராமத்து செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஐரோப்பிய கட்டிடக்கலை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் 1720-ல் பீஜிங்கில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்த ஆலயம் முற்றிலும் அழிந்து போனது. மீண்டும் சிலுவை வடிவத்தில் எழும்பிய ஆலயம் 1730ல் மீண்டும் வந்த நில நடுக்கத்தால் சிதிலமடைந்து போனதாம்.

ஆனால் அப்போதிருந்த யாங் செங் (Yang zhang) பேரரசர் 1000 வெள்ளிக்காசுகளை அளித்து அதனை மறுபடியும் கட்ட உதவியிருக்கிறார்.

1775ல் அந்தோ இது தீ விபத்தில் முற்றிலும் எரிந்து போனது. அப்போது தன்னுடைய 40 ஆவது ஆண்டுஆட்சியில் இருந்த சிங்லாங் பேரரசர் இதனை மறுபடியும் கட்ட 10 ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொடுத்திருக்கிறார்.  

இப்படி கத்தோலிக்க ஆலயம் சீன நாட்டில் சீரோடு வளர்ந்து வரும் வேளையில், ஒரு பெரும் பிரச்சனை வந்தது. கி.பி.1838ல் தனது 14 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த டாவோ குவாங் பேரரசர் ,பல குழப்பங்கள் நிலவிய சூழ் நிலையில், சீனாவில் கத்தோலிக்க ஆலயங்களைத் தடை செய்தார். அதனால் இந்த ஆலயம் அரசால் கைப்பற்றப்பட்டு அதில் நடந்து வந்த ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் இரண்டாவது ஓப்பியம் யுத்தமெல்லாம் முடிந்தபின் கி.பி. 1860ல் தான் இது மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அதன் பிஷப்பாக வந்தவர் ஜோசப் மார்ஷியல் மெளலி ( Joseph Martial Mouli) என்பவர்.

அதன் பின்னர் 1900ல் பாக்சர் புரட்சி நடைபெற்றபோது சீனா முழுவதிலும் இருந்த எல்லா கத்தோலிக்க ஆலயங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அவ்வமயம் இந்தப் பேராலயம் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலும் தூர்ந்து போனது.
[IMG]http://i265.photobucket.com/albums/ii232/TERESA7_album/FORUM-1%20TO%20041408/LI-SHAN.jpg[/IMG]
Arch Bishop Joseph Li Shan
நான்கு ஆண்டுகள் கழித்து நான்காவது முறையாக மீண்டும் இந்தப் பேராலயம் எழுப்பப்பட்டது. அதுதான் இன்று வரை நிலைத்திருக்கிறது.

இப்போது தினமும் அதி காலையில் சீன மொழியிலும், ஞாயிறுகளில் ஆங்கில மற்றும் இத்தாலிய ஆராதனைகளும் இங்கு நடக்கின்றன. இந்த வளாகத்தில் தான் சீனக் கத்தோலிக்க தலைமை குருவான ஆர்ச் பிஷப் ஜோசப் லி ஷான்  என்பவர் இருக்கிறார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்ததென் அடையாளங்கள் இருந்தன. ஐரோப்பியக் கட்டிடக்கலையில் உள்புறம் அற்புதமாக இருந்தது. உள்ளே அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன்.  புதுவருடமும் அதுவுமாக ஆலயத்தில் அந்த நாளை ஆரம்பித்தது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வெளியே வந்து  லீக்கு நன்றி சொல்லி “அடுத்து எங்கே?” என்றேன்.
“அடுத்து ஒரு டாவோ ஆலயம்” என்றான்.
"ஏன் நீ போக வேண்டுமா புது வருடத்திற்கு?
“இல்லை உன்னைத்தான் கூப்பிட்டுப் போகிறேன். மற்ற நம்பிக்கைகளை பற்றியும் உனக்குத் தெரிய வேண்டுமல்லவா”.
“நல்ல ஐடியாதான் போகலாம்”.
அங்கிருந்து ஒரு கேப்பை பிடித்து அரைமணிநேரத்தில் ஒரு ஆலயத்திற்குச் சென்றோம்.
“இதன் பெயர் என்ன லீ?”.
“இதன் பெயர் வெள்ளை மேக ஆலயம் (White Cloud Temple) டாவோயிஸக் கோவில்களின் முக்கிய மூன்று இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். இது சொர்க்கத்தின் கீழுள்ள முதல் ஆலயம் (The First Temple Under Heaven) என்றும் சொல்கிறார்கள்”.
White cloud Temple

இப்போதுள்ள ஆலயம் 14 ஆம் நூற்றாண்டில் மிங் வம்சத்தால்  கட்டப்பட்டது. ஆனால் இதே இடத்தில் 8 ஆம் நூற்றாண்டு முதலே ஆலயமிருக்கிறது. 1215ல் மங்கோலியரின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கும் இடமாக இது செயல்பட்டிருக்கிறது.

1222ல் டாவோயிஸ குரு குயு (Qiu) என்பவர் ஜெங்கிஸ்கானைச் சந்தித்து டாவோயிஸத்தின் விளக்கத்தைக் கொடுத்தார். அவருடைய நினைவகமும் இதன் உள்ளே இருக்கிறது. அதன் மேல்தான் இந்தக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது.


நாட்டில் பலவித மாறுபாடுகள் ஏற்பட்டாலும்  ஆலயம் அதனால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது.
Forgot to remove the mask for pollution 

1949ல் நடந்த கம்யூனிஸ் புரட்சியின் போது  மூடப்பட்டது. ஆனால் திரும்பவும் திறக்கப்பட்டு இப்போது முழுவதும் செயல்படும் ஆலயமாக இருக்கிறது.

உள்ளே சில படங்கள் எடுத்தோம். அதன்பின் சாப்பிடப் போகலாம் என்றேன் லீயிடம்.
“பக்கத்தில் நல்ல திபெத் உணவகம் இருக்கிறது, அங்கே போகலாம்”, என்றான்.
தொடரும். 

பின்குறிப்பு :

"சீனாவில் பரதேசி" அடுத்த பகுதியில் முடியும் .விரைவில் எதிர்பாருங்கள் “இலங்கையில்  பரதேசி”.உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி

5 comments:

  1. ஆலயங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி...

    உடன் பயணிக்க காத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. Is pollution there in China?

    I wonder how patient you are, to take down all these information, while on tour?

    ReplyDelete
  3. தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete