Monday, August 1, 2016

நடைப்பயணத்திலும் நாவல் படிக்கும் சீன அரச வம்சம் !!!

சீனாவில் பரதேசி -18

அன்றைய நாளில் சூரியனும் நன்கு வெளிவந்ததால் குளிர் குறைந்து போக, ஏரிக்கரை பூங்காற்று இதயத்தையும் சேர்த்து குளிர்விக்க உற்சாக நடை போட்டேன்.
நாங்கள் வந்த கிழக்குப்பகுதியின் முன்புறம் இரண்டு பிரம்மாண்ட வெங்கலச் சிங்கங்கள் இருபுறமும் இருந்தன. சீன வரலாற்று இடங்கள் எல்லாவற்றிலும் இதேபோல் இருந்ததை ஏற்கனவே சொன்னேன்.
வரிசையாக நான் பார்த்தவற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அப்படியே கீழே கொடுக்கிறேன்.
Hall of Benevolence and Longevity, Summer Palace - Beijing
Hall of Benevolence and Longevity ( Courtesy Google Maps) 
1.   ஹால் ஆஃப் பெனவலன்ஸ் &லாங்ஜிவிட்டி: இங்குதான் அரசவைக் கூட்டங்கள் நடக்குமாம்.
2.   ஹால் ஆஃப் ஜேட் பில்லோஸ்: சிங் பேரரசரின் காலத்தில் இது பேரரசர் தங்குமிடமாக இருந்தது. ஒரு கட்டத்தில் குவாங்சு பேரரசர் சொன்னபடி கேட்காததால் பேரரசி ஸிக்சி, அவரை இந்த இடத்தில் சிறிது காலம் அடைத்து வைத்திருந்தாராம்.
3.   யியுன்  ஹால் (Yiyun Hall): ஸிங்லாங்  பேரரசர் காலத்தில் இது நூலகமாக இருந்ததாம். பின்னர் பேரரசி லாங்யு இங்கு தங்கியிருந்தாராம். தற்சமயம் இங்கு ஸிங்லாங் (Qinlong Emperor) பேரரசர் சேகரித்து வைத்திருக்கும் கற்சிற்பங்கள் அவர் தன் கையால் எழுதிய (Calligraphy) வண்ண அலங்கார எழுத்துக்கள் ஆகியவை பார்வைக்கு உள்ளன.
4.   டெஹி கார்டன் (Dehe Garden) இது மூன்று தளங்களைக்  கொண்ட ஓப்பரா கூடம் .அரசர்களுக்கு பொழுதுபோக்கு முக்கியம் அல்லவா? .
5.   ஹால் ஆஃப் ஜாய் & லாங்ஜிவிட்டி : இங்குதான் பேரரசி சிக்ஸி தங்கியிருந்தாராம்.  
Long Corridor
6.   சேங்லாங்க் அல்லது லாங் காரிடர்: இது பேரரசி சிக்ஸியின் அரண்மனையிலிருந்து தொடங்கி நீண்ட தூரம் இருந்தது. நம்மூரில் இருக்கும் வீடுமுன் இருக்கும் முற்றம் போல ஆனால் நீளமாக இருந்தது. நீளம் என்றால் மிக நீளம். சுமார் 750 மீட்டர் நீளம். மேலே கூரையமைத்து இருபுறமும் பல தூண்கள் அமைக்கப்பட்டு, தரையிலிருந்து சற்றே உயரத்தில் தளமமைக்கப்பட்டு இருந்தது. கூரைபோடப்பட்ட வாக்கிங் தடம் போல இருந்தது. இதில் இருபுறம் மற்றும் தூண்களிலும் கூரையின் உட்பகுதியிலும் மரசிற்பங்கள், அலங்கார வளைவுகள், ஓவியங்கள் என்று இருந்தன. 
Long Corridor Summer Palace ccolorful painted and decorated carvings
Lomg Corridor 
   ஏதோ மகாபாரதக் கதை போன்று தெரிந்ததால்  லீயிடம் கேட்டேன்.  "சீனாவில் இருக்கும் சிறப்பு வாய்ந்த இடங்கள், சீனப்புராணங்கள் மற்றும் நான்கு  சின்ன நாவல்களும் ஓவியவடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது", என்றான். நடந்து பார்த்துக் கொண்டே போனால் காமிக்ஸ் படிப்பது போல நாவல்கள் படிக்கலாம் போலத் தெரிந்தது. நடைப்பயணத்திலும் நாவல் படிக்கும் சீன அரச வம்சத்தினரை நினைத்தால் மிகுந்த வியப்பாக இருந்தது .ஒரு நிமிடம் கூட வீணாகக் கழிக்க மாட்டார்கள் போல . லீ என்னுடைய பாடிகார்டாக  வர, நானும் அந்த தடத்தில் ராஜநடை போட்டு நாவல்களை பார்த்து புரிந்து கொள்ள முடிந்தேன். லீ  போதும்  வா இன்னும் நிறைய இடம் பார்க்க வேண்டும் என்று சொல்ல, திரும்பி அவன் பின்னால் நடந்தேன்.   
Hall of Dispelling clouds
7.   ஹால் ஆஃப் டிஸ்பெல்லிங் கிளவுட்ஸ்: லாஞ்சிவிட்டி ஹாலின் நடுப்புறத்தில் அமைந்திருக்கும் இந்த மண்டபத்தில்தான் பேரரசி சிக்ஸி உட்கார்ந்து தன்னை சந்திக்க வரும் முக்கிய நபர்களை பார்ப்பாராம். அதுதவிர ஏதாவது விழாக்கள், பூஜைகளும் அங்குதான்  நடக்குமாம். மேலும் இங்குதான் அவரின் பிறந்தநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டதாம்.
8.   டவர் ஆஃப் புத்திஸ்ட் இன்சென்ஸ்: 

லாஞ்சிவிட்டி மலையின் நடுவில் மிக உயரமான இந்த புத்தர் கோவில் இருக்கிறது. சிங்லாங்  பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட இது எட்டு அடுக்குகளைக் கொண்டது. 20 மீட்டர் உயரமான பிரம்மாண்ட கற்பாறை மேலே கட்டப்பட்ட இது 41 மீட்டர் உயரம் உடையது. அதில் சிறப்பான கல்மரத்தால் ஆன எட்டு பெரிய தூண்கள் இருந்தன. அதனைத் தொட்டுக் காண்பித்த லீ சொன்னான். இது மிகவும் உறுதியான மரம் இங்கே இரும்பு மரம் (Iron wood) என்று சொல்வார்கள் என்றான். அது இரும்பா மரமா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது. விரலால் தட்டிப் பார்த்தேன். விரல் வலித்தது. இந்த மாதிரி சின்னச் சின்ன தகவல்கள் ஒரு வழிகாட்டி மூலம் மட்டும்தான் கிடைக்கும். எனவே அவனை அமர்த்தியதில் மகிழ்ச்சி. இங்கு நடக்கும் பூஜையில் பேரரசி சிக்ஸி தவறாது கலந்து கொண்டு பத்தி பொருத்தி பிரார்த்தனை செய்வார்களாம்.
9.   சி ஆஃப் விஸ்டம் (Sea of wisdom) :லாஞ்சிவிட்டி மலையின் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த வண்ணக் கண்ணாடி மாளிகையில் ஏராளமான புத்தர் சிலைகள் இருந்ததாம். இப்போது பராமரிப்புக்காக மூடப்பட்டிருந்தது.
திரும்பவும் மலையிலிருந்து கீழிறங்கி நடந்து வரும்போது ஏரியின் மேலே குறுக்கே ஒரு பாலம் இருந்தது அதற்குக் கீழே சில படகுகள் இருந்தன. குளிர்காலத்தில் அனுமதி இல்லை.
அதற்கு மறுபுறம் அலங்கரிக்கப்பட்ட விதானம் அமைந்த ஒரு பெரிய படகு இருந்தது. முற்றிலும் வேலைப்பாடுகள் அமைந்து பளபளவென்று அமைந்தது.
"அது என்ன என்று தெரிகிறதா?”
"அது பேரரசி சிக்ஸி  உலாவரும் ராயல் பார்ஜ்".
"பாதி சரி பாதி தவறு".
"எது சரி எது தவறு?”
"பேரரசி சிக்ஸியின்  படகு என்பது சரி, உலா வருவார்கள் என்பது தவறு?”
என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் அருகில் அழைத்துச் சென்று காண்பித்தான்.
கிட்டப்போய் பார்த்த பின் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
பிரமாண்டமான வேலைப்பாடுகளும், சிற்பங்களும் அமைந்த அந்தக் கப்பல், ஆமாம் படகென்று சொல்லுமளவுக்கு சிறியதல்ல.
ஆனால் அது உண்மையில் படகுமல்ல கப்பலுமல்ல.
பளபள வென்று சூரிய ஒளியில் மின்னிய அந்த அமைப்பின் அதிசயம் கண்டு அசந்தே போனேன். புன்னகையுடன் லீ வந்து அதைப்பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
தொடரும்.


4 comments:

  1. 750 மீட்டர் தாழ்வாரம் அழகானது! அதில் வரைந்த காமிக்ஸ் படிக்க நினைத்தீரே, சைனீஸ் கற்றுக்கொண்டீரா?

    ReplyDelete
    Replies
    1. ரங்கா , படம் பார்த்து கதை சொல்றதை நான்தான் ஒண்ணாம் வகுப்புலேயே கத்துக்கிட்டேனே.

      Delete
  2. ஆல்பி சார், //அது உண்மையில் படகுமல்ல கப்பலுமல்ல// என்ன அதுவோ ? காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. காத்திருங்கள் பாஸ்கர் , வரும் திங்கள் வரை .

      Delete