Monday, February 29, 2016

சீனாவில் முதல் ஏமாற்றம் !!!!!!!!!!!

சீனாவில் பரதேசி - பகுதி -2
Velupillai Prabhakaran.jpg
பிரபாகரன்
" பிரபாகரன்   உயிரோடுதான் இருக்கிறார் என்று  தமிழ்நாட்டில் வைகோ போன்ற சிலர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் உள்ளுர்க்காரர் என்பதாலும் தமிழ் என்பதாலும், அங்கே என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?" ,என்றேன்.
மாந்தன் சொன்னார்,  "பிரபாகரன் வீரசொர்க்கம் அடைந்தார்", என்றுதான் நாங்கள்  நினைக்கிறோம். ஆனால் அந்த மாவீரருக்கு சாவு இருக்கிறதா என்ன ?.  பிரபாகரன் என்ற  லெஜண்டுக்கு சாவில்லை", என்றார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும் இலங்கை போகும் திட்டம் இருந்ததால் நாமே நேரில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன் .
With Maanthan in Doha Airport

இப்படி மீதியான நேரம் சுவையாகவே கழிய, மறுபடியும் விமானம் ஏறி மதியம் 2 மணியளவில் பீஜிங் வந்து சேர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து பிரச்சனை  ஆரம்பித்தது வேறு என்ன பிரச்சனை, மொழிப்பிரச்சனைதான். விமான நிலைய அலுவலர்கள், போலீஸ்காரர்கள், ஏன் மிலிட்டரி ஆட்களுக்குக்  கூட ஆங்கிலம்  ஒரு அச்சரம் தெரியவில்லை. அவர்களுக்குத்தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தை  "நோ இங்கிலிஸ்"  என்பது தான். ஆனால்  அவர்களுடைய மிடுக்குக்கு மட்டும் பஞ்சமில்லை.
Beijing Airport

ஆட்டு மந்தை  போல் கூட்டத்தோடு  கூட்டமாக இமிக்ரேஷனில் நின்றேன்.ஏற்கனவே  பாஸ்போர்ட்டில் விசா அடித்திருந்த பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு, என் முறை  வரும்போது நீட்டினேன். நல்லவேளை எந்தக்கேள்வியோ  பதிலோ ஒன்றுமில்லை. ஒரு புன்னகை இல்லை, ஒரு வரவேற்பு இல்லை. இறுகிய முகத்துடனேயே  கொடுத்த பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். என்ன நாடு இது ?. கம்யூனிச நாடு என்பதற்காக இப்படியா? ஒருவேளை எனக்கு வாய்த்த ஆள்தான் அப்படியா என்று சுற்றி முற்றிப்பார்த்தால், எல்லாக் கவுன்ட்டரிலும்  அதே கதைதான். ஒரு பேச்சு மூச்சு         காணோம். அங்கே  வழிகாட்டுவதற்கும் யாருமில்லாததால் நானும் கூட்டத்தோடு போனேன். கீழிறங்கி அங்கே இருந்த ஒரு டிரைனில் ஏறி பெட்டிகளை எடுக்கும் இடத்திற்கு வந்தேன். ஒரு டிராலியில் பெட்டிகளை அடுக்கி எடுத்து, டாக்ஸி, கேப், கார் ஹோட்டல் டிராப் என்று பலவிதத்தில் கேட்டுக் களைத்து நின்றபோது, 'இன்ஃபர்மேஷன் டெஸ்க்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து அவசர அவசரமாக  அங்கு சென்றேன்.
Beijing Capital International Airport Terminal 3 is one of the world’s most environmentally sustainable airport terminal buildings.(c)PID
Beijing Airport - Aerial view


அங்கு உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண், "இவன் எதுக்கு இங்க வரான் ?"  என்று நினைப்பது போலவே என்னைப் பார்த்து, வேண்டா வெறுப்பாக மறுபுறம் திரும்பியது. நானும் வம்படியாகப் போய், "என் ஹோட்டல் போக வாடகைக்கார் வேண்டும்" என்றேன். "நோ இங்கிலிஸ்" என்று சொன்னார். எனக்கு கெட்ட கோபம் வந்துவிட்டது. “why the hell then you are sitting here ?" என்று கத்தியபோது, உடனே என் மனம் சொன்னது" டேய் பைத்தியக்கார ஆஃல்பி, நீ இருப்பது கம்யூனிச நாடு கொஞ்சம் அடக்கிவாசி", என்று.  
அப்போது வாலண்டியர் என்று போட்டு ID கார்டு அணிந்த ஒருவன் என்னிடம் வந்தான். "யு நீட் எனி ஹெல்ப் ?".
வாடா சாமி உன்னைத்தான் தேடிட்டிருந்தேன் என்று சொல்லிவிட்டு, கைகுலுக்கிவிட்டு, “ஹோட்டலுக்குப் போக வேண்டும், கவர்ன்மென்ட் டாக்சி ஸ்டேன்ட் எங்கேயிருகிறது ?", என்றேன். அவனுக்கு கவர்ன்மென்ட்  என்ற வார்த்தையை எத்தனை முறை விளக்கியும் புரியவில்லை. அதன்பின்னர் உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான், "எங்கே போவதாய் இருந்தாலும் சீனமொழியில் எழுதி வைத்துக்கொள்", என்று.
Top 5 best airports in the world ?
என்னுடைய “ஃபீல் இன்” அட்ரஸை முதல்வேலையாக அவனிடம் கொடுத்து சீன மொழியில் எழுதிக் கொண்டேன். பின்னர் அவன் உதவியுடன், டாலர்களை சீன யுவான் - ஆக (yuan) மாற்றிக்கொண்டேன், ஒரு டாலருக்கு 6 யுவான். பின்னர் அவன் யாரிடமோ போனில் பேசிவிட்டு சொன்னான், “உங்கள் ஹோட்டலுக்கு போக 360 யுவான் ஆகும்”, என்று. அது ஏர்போர்ட்டிலிருந்து தூரமாம். நானும் சரியென்றதும் என்னுடைய பெட்டிகளில் ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டு விறுவிறு வென்று நடந்தான். அவன் பெட்டியோடு போய்விட்டால் என்ன செய்வது என்று அவனோடு ஓடினேன். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தோம். சரியான குளிர்காற்று முகத்தில் தாக்கியது. ஆஹா இதற்கு நியூயார்க்கே பரவாயில்லையே என்று நினைக்குமளவிற்கு குளிர். அதோடு காற்றில் ஒரு காரமான மணம். சுவாசிக்கும்போது மூக்கு சற்றே எரிந்த மாதிரி இருந்தது.
20 நிமிடங்கள் காத்திருந்தும் டாக்ஸி வராததால், எப்போது வரும் என்று அவனைக் கேட்டேன். இதோ வருகிறது இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் 10 நிமிடங்கள் ஓடிவிட, நான் குளிரில் கிட்டத்தட்ட விரைத்துவிட்டேன். பற்கள் தாளமிட, தாடைகள் உறைய, மூக்கு வேறு மிகவும் எரிந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல், அவனிடம் சொன்னேன், "அடேயப்பா என்னால் தங்க முடியவில்லை, நான் மீண்டும் உள்ளே செல்கிறேன்" என்றேன். “320 கொடுங்கள் போதும்”, என்றான். அப்போதுதான் எனக்குச் சந்தேகம் தட்ட " உண்மையில் இவன் யார் ?", என்று நினைத்துவிட்டு, மடமடவென்று என் பொருட்களைக் கைப்பற்றி இழுத்துக்கொண்டே மீண்டும் உள்ளே நுழைந்தேன்.அங்கே ஒரு சீனப் போலிஸ்காரன் நின்றிருந்தான். நான் அவனை நோக்கிப் போவதைப் பார்த்த அந்த தன்னார்வலன் (volunteer) அப்படியே நழுவினான். அப்போதுதான் தெரிந்தது, அந்த தன்னார்வலன் நன்னார்வலன் அல்ல என்று. நல்லவேளை நஷ்டம் எதுவும் இல்லை என்று தேற்றிக்கொண்டு, அந்த போலிஸ்காரனிடம் சீனமொழியில் எழுதியிருந்த என் ஹோட்டல் அட்ரஸை காட்டி சைகையில் போகவேண்டும் என்று சொன்னேன். அவன் மறுபுறம் உள்ள எஸ்கலேட்டரைக் காட்டினான். அது கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே டாக்சி சர்வீசஸ் என்று எழுதியிருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சுடன், சென்று என் அட்ரஸைக் காட்டினேன். 260 யுவான் என்றார்கள். ஆஹா நல்வேளை கொஞ்ச நேரத்தில் நூறு  யுவானை இழந்திருப்பேன்.ரசீது கொடுத்துவிட்டு, அவர்களே கொண்டுவிட்டு டிரைவரிடம் அட்ரஸைக் காட்டி போகச் சொன்னார்கள்.
டிரைவரிடம் பல முறை பேச முயற்சி செய்தும், அவன் மூச்சுக்கூட  விடாததால் முற்றிலும் கைவிட்டு, மெளனத்தைக் கடைப்பிடித்தேன். 40 நிமிட பயணமும் மெளனமாகவே கழிந்தது. வெளியே பெரும் கட்டிடங்கள் தெரிந்தன. ஆனால் எல்லா இடமும் ஒரு சாம்பற்கலரில் இருந்தது. சந்துக்குள் இருந்த என் ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நுழைந்ததும் என் கண்ணில் பட்டது, ஏர்போர்ட் டிராப் 160 மட்டும் என்று. அட இங்கேயும்   100 யுவான் ஏமாந்து விட்டேனே என்று நொந்து போனேன் .பிறகு பரவாயில்லை 200 போக இருந்த இடத்தில் நூறுதானே போனது என்றெண்ணி மனதை தேற்றிக்கொண்டேன் .அதற்குள் உள்ளிருந்து ஒரு விடலைப் பெண் என்னை நோக்கி இரு கைகளையும் விரித்து   நீட்டிக்கொண்டு  ஓடிவந்தாள். ஃபீல் இன் என்றால், அய்யய்யோ ஒரு வேளை ஒரு மாதிரியான இடமோ  என்று பயந்து நின்றேன் .

தொடரும்

14 comments:

  1. சுவாரசியம்..ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர்,உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

      Delete
  2. சீன நாட்டின் வரவேற்பைப் பார்க்கும்போது நம் நாடு தேவலாம் என்றுதான் தோன்றுகிறது! இப்படி ஒரு மொழிப்பற்று அவர்களுக்கு இருக்க வேண்டாம்! தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மொழிப்பற்று என்பது மற்ற மொழிகளை கற்கமாட்டோம் என்பதல்ல
      என்பது என் தாழ்மையான கருத்து.வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
    2. மிகச் சரி நண்பர் alfy அவர்களே..

      Delete
  3. சோதனை மேல் சோதனையாக இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய இருக்கு,வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. பல வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது உங்களது பதிவு. சீனாவுக்குச் செல்லும்போது உங்களது பதிவை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சீனாவுக்குப்போகும் முன்னால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.இன்னும் பல விஷயங்கள் சொல்லுகிறேன்,வருகைக்கு நன்றி.

      Delete
  5. மேலும் நீங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தீர்கள் என்பதை படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மதுரைத்தமிழன்.அடுத்தவன் கஷ்டப்பட்டதை ஆவலோடு படிப்பீர்களே .

      Delete
  6. Interesting Alfy. Waiting for Part-3

    Kindly narrate in details about the reality of China. Because, my friend's friend boasted about China like anything during their visit, saying that China is far ahead (25 years) in development.

    ReplyDelete
    Replies
    1. Thanks Alien. Alien reading Paradesi blog, its sounds kinda funny.

      Delete