Thursday, June 5, 2014

அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தாயா தந்தையா?

Mrs Umayal Muthu 
    கடந்த மே  மாதம் 10 ஆம் நாள் ,2014 அன்று   தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய திருமதி உமையாள்   முத்து ஆச்சி  அவர்கள் தலைமையில் நடந்த அன்னையர் தின சிறப்பு பட்டிமன்றத்தில் “அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தந்தையே”   என்று அடியேன் பேசிய  பேச்சின் முழு உரையை இங்கு தருகிறேன்
நடுவர் உள்ளிட்ட அவைக்கு என் பணிவான வணக்கம்.
நடப்பது தாய் தினக் கொண்டாட்டம். பட்டிமன்ற நடுவராக வந்திருப்பது ஒரு தாய்க்குலம். தீர்ப்பு எதிர்ப்பக்கம் சாதகமாகவும் எங்களுக்குப் பாதகமாகவும் போய்விடுமோ என்று எங்கள் அணியினர் சந்தேகப்பட்டனர். நான் சொன்னேன், “கவலைப்படாதீங்க, நடுவராக வந்திருப்பவர் தாய்க்குலம் என்றாலும், மெத்தப்படித்தவர், ரொம்ப நல்லவர், எதையும் சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்புச் சொல்வதில் வல்லவர். தன் இனத்துக்கும் குலத்துக்கும் சார்பாக தீர்ப்புச்சொன்னால் அது ஒரு தலைப்பட்சமான தீர்ப்பாக அமைந்துவிடும் என்று அவருக்குத் தெரியாதா?”, என்று கேட்டேன். என்ன சரிதானா நடுவர் அம்மா?
எதிர்க்கட்சியைப் பாருங்க, தாய்க்குலத்துக்குப் பேச எங்கள் தந்தைக்குலம் தான் அதிகமா வந்திருக்கு. இல்லேன்னா அவர்கள் வீட்டுக்குத்திரும்பிப் போக முடியாது நடுவர் அவர்களே. எனவே அவர்கள் தாய்க்குலத்துக்கு நயந்து பேச வரவில்லை, அவர்கள் பயந்து பேச வந்திருக்காங்க.  
எனக்கு முன்பு பேசிய எதிர்க்கட்சி நண்பர்கள், ஏதோ தந்தை அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை எல்லாமே தாய்தான்  என்று பேசினார்கள்.
உங்களுக்குக் கருக்கொடுத்தவர் தந்தை, உருக்கொடுத்தவர் தந்தை. இப்படி கருவாய், உருவாய், நிழல் தரும் தருவாய் ன் உங்களை திருவாயும் ஆக்கியவர் தந்தைதானே. இல்லையெனில் நீங்கள் தெருவாய் அல்லவா போயிருப்பீர்கள்?.  
தலைப்பை நன்றாக கவனியுங்கள், அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிக பங்கு பெறுவது யார்? என்பது தானே கேள்வி. ஒரு வேளை இந்தியாவில் வேறுமாதிரி இருக்கலாம். அதுவும் இப்ப எப்படின்னு தெரியல. ஆனா இங்க நாங்கதானே எல்லாம்.
பத்துமாதம் சுமந்தேன் பத்து மாதம் சுமந்தேன் என்கிறார்கள். சமீபத்தில்தான் தெரிந்தது, அது பத்து மாதம் இல்லையாம். 9 மாதம்தானாம். இப்படித்தான் இந்த தாய்க்குலம் எல்லாத்தையுமே கூடக் கூட மிகைப்படுத்திச் சொல்லி கடுப்பேத்துகிறார்கள், மை லார்ட்.
குழந்தையைச் சுமப்பது அவர்கள்தான், ஆனால் அப்போது அவர்களையும் சேர்த்து சுமப்பது நாங்களல்லவா. பிரசவ வேதனையில் அவர்கள் துடிக்கும்போது, சொந்தக்காரக்கள் கூட யாருமில்லாமல் அதைவிட அதிக வேதனையை அனுபவிப்பவர்கள் நாங்கள்தானே.
வயிற்றிலிருந்து வந்தவுடன், நாங்கள் எங்கள் கையில் வாங்குவதோடு சரி. அப்புறம் இறக்கிவிடுவதேயில்லை. வயிற்றில் சுமந்தவர்கள் அவர்கள், ஆனால் குழந்தைகளை எங்கள் தோளிலும் மாரிலும் போட்டு வளர்ப்பவர்கள் நாங்கள் அல்லவா.
அவர்கள் பால் கூட கொடுப்பதில்லை, நாங்கள்தான் கொடுக்கிறோம் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இப்பல்லாம் யார் பால் கொடுக்கிறார்கள் பம்ப்தானே நடுவரே. எனவே நாங்கள் தாயுமானவர்கள்.
எங்கள் மாரில் மட்டுமல்ல காரில்போட்டு வளர்ப்பதும் நாங்கள் தான். ஸ்கூலில் அட்மிஷன் வாங்குவது, ஸ்கூலில் விடுவது, பிக்கப் செய்வது, ஹோம் வெர்க் செய்வது எல்லாமே நாங்கள் தானே. எத்தனை தடவை “work from Home” போட்டுவிட்டு பேபி சிட்டிங் பண்ணியிருக்கிறோம்.
கார் ஓட்டப்பழகக் கூடாதா? என்று என் மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவள் சொல்கிறாள். வீட்டிலேயே "லிவ் இன் டிரைவர்  இருக்கும் போது எதற்குப் பழக வேண்டும் என்கிறாள். Full Service -free யாக வரும்போது, எதுக்கு Self Service என்கிறாள். நீங்களே  கேளுங்கள் இது  நியாயமா? பேட்டா கூடத்தருவதில்லை நடுவர் அவர்களே. கேட்டால் காலிலுள்ள பேட்டாவை காண்பிக்கிறாள். அதுவும் நான் வாங்கிக்கொடுத்தது.
பட்டிமன்றத்தலைப்பைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி ஞாபகத்துக்கு வருது.
முட்டை  முதல்ல வந்துச்சா? இல்லை கோழி முதல்ல வந்துச்சா? தந்தையா இல்லை தாயா என்று பார்க்கும்போது, கடவுள், ஆதாம் எனும் தந்தையைத்தானே முதல்ல படைச்சார். எங்கள்  விலாவில் ஒரு எலும்பை உருவித்தானே தாயாகிய ஏவாளைப் படைத்தார். அப்ப இருந்தே கொடுத்துக் கொடுத்துத்தானே நாங்க குறைஞ்சு போயிட்டோம். அப்ப உருவி எடுத்ததிலிருந்து இன்னக்கிவரை எங்களை ஒண்ணுமில்லாம உருவிவிட்டுட்டாங்க நடுவர் அம்மா?  
இதெல்லாம்  தெரிஞ்சும் தெரியாத மாதிரி நீங்க முகத்தை வச்சிருக்கீங்க.
பிள்ளைகளுக்கு சோறாக்குவது நாங்கதானென்னு சொல்லுறாங்க. சோறாக்குவது அவங்களா இருக்கலாம்.  ஆனா சோறூட்டுவது நாங்கதானே. அதுக்கு மேல பாத்திரம் வேற விளக்கனும். நடுநடுவில் பிள்ளைகளுக்கு டயப்பர் சேஞ்ச் பண்ணனும். நீங்களே சொல்லுங்க சமையல் பன்றது கஷ்டமா அல்லது பாத்திரம் கழுவுது கஷ்டமா? நாங்க பாத்திரத்தை கழுவி வைக்க, அவர்கள் எங்கள் ஆத்திரத்தை கழுவிக்கழுவி ஊத்தறாங்க நடுவரே. 
எப்பவாச்சும் உடம்பு சரியில்லாம ஒரு ரசம் வைக்கச்சொன்னா, அது கூட தெரியல, ரசம் விஷம் மாறி இருந்தாலும் "ஆசம்" என்று சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்க.
அதோட இப்ப புதுசாக் கல்யாணமா வீட்டுல, சமையலும் நாங்கதான் கழுவுறதும் நாங்கதான். நழுவுறது மட்டும் தான் அவங்க.
அதனால நீங்களே பாருங்க, எங்களுக்கு  கொடி இடையா ஆயிப்போச்சு, ஆனா அவுங்களுக்கு தடி இடையா ஆயிப்போச்சு.
நாங்களும் உயிரைக்கையில பிடிச்சுட்டுதான் இங்க வந்திருக்கோம். கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல நாங்க என்ன சுகத்தைக் கண்டோம். பழிபாவம் எல்லாம் எங்க மேல. அவுங்களுக்கு எப்பவும் பாராட்டு வேணும். இதான் எங்க நெலமை.
எனவே உண்மை நிலையை தைரியமாச் சொல்லிட்டேன். பெத்துக் கொடுக்கிறது தான் அவங்க, வாழ்க்கையை கத்துக் கொடுக்கிறது நாங்கதான், ஏன் பிள்ளைகளுக்கு சொத்துக் கொடுக்கிறதும் நாங்கதான்.  
அதனால் சத்தான அனுபவம் உள்ள உமையாள் முத்து, முத்தான தீர்ப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையில், வாய்ப்புக் கொடுத்த தமிழ்நாடு அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றி கூறி அமைகிறேன். நன்றி வணக்கம்.


14 comments:

  1. Replies
    1. தாய் பாவமா? இல்லை தந்தை பாவமா ? என்ற போட்டியில் குழந்தை பாவம் என்று சொன்னாரே, அதுதான் எங்கள் தங்கத்தமிழன் திண்டுக்கல் தனபாலன்.
      Welcome back

      Delete
  2. //நீங்களே பாருங்க, எங்களுக்கு கொடி இடையா ஆயிப்போச்சு, ஆனா அவுங்களுக்கு தடி இடையா ஆயிப்போச்சு.///

    ரொம்ப தைரியமைய்யா உங்களுக்கு.... இந்த பட்டி மன்றம் முடிந்தவுடன் வூட்டுக்கு போவாமா இஸ்தான் புல் டூர் போனதன் ரகசியம் இதுதானோ

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ கண்டுபிடுச்சிட்டின்களா?

      Delete
  3. உயிர குடுத்து பேசிருக்கீங்க.. ஆமா தீர்ப்பு என்னான்னு சொல்லவே இல்ல

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு தெரிந்ததுதானே . அத வேற ஏன் கேட்கிற தம்பி.
      ஆனா தந்தைக்குலத்துக்காக தொடர்ந்து போராடுவான் இந்த போராளி .

      Delete
  4. சந்தத்தில விளையாடியிருக்க ஆல்ஃபி.... தொழில்முறை பட்டிமன்றப் பேச்சாளரின் லாவகம் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. சந்தம் எனக்கு சொந்தம் ஆகத்தான் தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கிறேன் . அது இன்னும் மந்தம் ஆகத்தான் இருக்கிறது பிரபா .

      Delete
  5. நம்ம தரப்பு வாதத்தை நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க. சமபங்கு என தீர்ப்பாகும் என்று எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு சான்சே இல்லை .தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குலவுசனப்பிரியன்.

      Delete
  6. நம் தரப்பு வாதத்தினை சரியாகச் சொல்லி இருக்கீங்க.... ஆனாலும் தீர்ப்பு வேற மாதிரி தான் இருந்திருக்கும்..... நம்ம நிலை அது தான்....

    தைரியமா பேசி இருந்தாலும் உள்ளூர ஒரு பயம் இருந்திருக்குமே... வீட்டுக்குத் தானே திரும்பி போயாகணும்! :)

    ReplyDelete
    Replies
    1. அங்கு திரண்டு வந்திருந்த தாய்மார்கள் , என் மனைவியிடம் வந்து என்னை மன்னித்து விட்டுவிடும்படி சொன்னார்கள் . தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  7. தாயுமானவர்களின் எண்ணிக்கையே அதிகம்!

    நம்ம வீட்டில் பூனை வளர்ப்பதும் கூட அப்பாதான். நாள் முச்சூடும் ஓயாமல் பசியறிந்து தட்டுக்கழுவி பூனைச்சோறு போட்டாலும், அப்பா வேலையில் இருந்து வந்ததும் மடியில் ஏறிப் படுத்துக்கொண்டு பெருமூச்சுவிடும் பூனைக்கு, அந்த விநாடி நான் எதிரி:-)))

    ReplyDelete
    Replies
    1. ஒத்துக்கொண்டதற்கு நன்றி துளசி கோபால்.

      Delete