Thursday, May 8, 2014

புரூக்ளினில் புரட்சி !!!!!!!!!!!!!

அந்தப்பெண்ணை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அவள் என்னைப் பார்த்துப் புன்னகைக்க நான் மையமாக சிரித்தேன். கடந்த வாரம் புரூக்ளினில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்கு சென்றேன். எனக்குத்தெரிந்த ஒருவர் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தார். எனவே ஒரு "கெட்வெல் சூன்" (Get well soon) கார்டை வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்.

பல மாடிகளைக் கொண்ட மிகப்பிரமாண்டமான மருத்துவமனை. உள்ளே மிகச் சுத்தமாகவும், எந்த ஒரு ஆஸ்பத்திரி வாடையும் இல்லாமலும் இருந்தது. அங்கு மெதுவாய் நடந்து கொண்டிருந்த நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் சற்றே கவலை தோய்ந்த முகங்கள், பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்த நர்ஸ்கள், டாக்டர்கள் என்று ஒரு வித்தியாசக்கலவையாய் இருந்தது.

கீழ்ப்புறத்தில் பெரிய ஹோட்டலின் ரிஷப்ஷன் போன்று இருந்தது. பக்கத்தில் ஒரு சிறிய கடை பரபரப்பான வியாபாரத்தில் இருந்தது. கெட்வெல் கார்டுகள், பலூன்கள், பொம்மைகள், சிறிய பூந்தொட்டிகள், அழகிய சிறு அலங்காரச் செடி வகைகள், பூங்கொத்துகள் என்று இருந்தன. அனைத்தும் அங்குள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கத்தான்.

எலிவேட்டரில் ஏறும்போது, அதே நடுத்தர வயதுப்பெண் என்னையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். தென் அமெரிக்கப் பெண் போலத் தெரிந்தது. டாக்டரா நர்சா என்று தெரியவில்லை. இங்கேதான் ரெண்டு பேருமே ஸ்டெதாஸ்கோப் வைத்திருக்கிறார்களே. ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்?. ஒருவேளை என்னைத் தெரியுமோ. எலிவேட்டரில் நிறையப்பேர் இருந்தார்கள். நானும் சிரித்து வைத்தேன். நாலாவது மாடியில் நான் இறங்கிக் கொள்ள, அவளும் அங்கேயே இறங்கினாள். வேறு யாரும் இறங்கவில்லை. இறங்கியவள் என்னைப்பார்த்து "ஹாய்", என்றாள். நானும் "ஹாய்", என்றேன்.
நான் ஏற்கனவே கூச்ச சுபாவம் உள்ளவன். (சொன்னாங்க, சொன்னாங்க) அதுவும் பெண்களிடம், சொல்லவே வேணாம். நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். "ஹலோ உங்களைத்தான் எங்கே செல்ல வேண்டும்" என்றாள். நான் சொன்னேன். "வாருங்கள் நான் அந்தப்பகுதிக்குத் தான் செல்கிறேன்", என்றாள். அழகாக வேறு இருந்தாள்.

இதென்னடா வம்பாப்போச்சு என்று நினைத்தாலும் உதவி பண்ண வந்தவளை உதாசீனப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணெத்தில் அவள் கூட நடந்தேன்.

"நீங்கள் ஒரு இந்தியர்தானே?", என்றாள். அப்பாடா ஒருவர் நியூயார்க்கில் என்னை இந்தியரா என்று கேட்டது மகிழ்ச்சியாயிருக்கிறது. சமீப காலமாக "பங்களாதேஷா ?" என்று கேட்டவர்கள்தான் அதிகம்.

"ஆம்", என்று புன்னகைத்தேன்.
“மகாராஜாக்களின் தேசம்”,
"ஆம்”
“ஒருநாள் இந்தியா செல்லவேண்டுமென ஆசை. இந்தியர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்"
ஐயையோ இவள் எதற்கு அடிபோடுகிறாள் என்று தெரியவில்லை. அவளுக்கோ அல்லது எனக்கோ காதலிக்கும் வயதில்லை.
அவள் மீண்டும் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, “எனக்கு ஒரு இந்திய இளவரசரைத் தெரியும்", என்றாள். "நான் இங்கு மாணவியாக இருக்கும்போது தான் அவர் இங்கு வந்திருந்தார். அடேயப்பா அவர் வரும்போதெல்லாம் ஒரு ஊர்வலம் போல பல கார்கள் அணிவகுத்து வரும். குறைந்தது 50 பேர் அவரைச் சுற்றி இருப்பார்கள். சில சமயம் கூட்டம் கட்டுக்கடங்காது", என்று தொடர்ந்தாள்.
யாராக இருக்குமென யோசித்த நான், இளவரசர் என்றால் ஏதாவது வட இந்திய மாகாணத்திலிருந்து வந்திருப்பார் என நினைத்தேன்.
“இந்தியா மிகப்பெரிய நாடு, எந்தப்பகுதி என்று தெரியுமா?”, என்றேன்.
"செளத் இந்தியா", என்றாள்.
"தென்னிந்தியாவா?, ஒரு வேளை ஆற்காடு இளவரசராக இருப்பாரோ.
"அவர் இளவரசர் என்று யார் சொன்னது".
"இல்லை நானாகவே யூகம் செய்து கொண்டேன்"
"யாரிடமாவது கேட்டீர்களா?"
"இல்லை அப்போது நான் ஸ்டூடன்ட் தானே, ஆனால் யாரோ, அவர்தான் ரூலர் என்றார்கள், அவரைக்கண்டவுடன் எல்லோரும் வணங்குகிறார்கள்".
"எப்படி இருப்பார்"


"கருப்புக் கண்ணாடியும், வெள்ளைத் தொப்பியும் எப்போதும் அணிந்திருப்பார்.
"பேர் தெரியுமா?"
"தெரியாது ஏதோ இனிஷியல் சொன்னார்கள்".
"MGR-ஆ"

"அட ஆமாம், அவரே தான்"

5 comments:

  1. எம்.ஜி.ஆர். ப்ரூக்ளின் வரை பிரபலம்! :)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக ,தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட்.

      Delete
  2. //அடேயப்பா அவர் வரும்போதெல்லாம் ஒரு ஊர்வலம் போல பல கார்கள் அணிவகுத்து வரும். குறைந்தது 50 பேர் அவரைச் சுற்றி இருப்பார்கள். சில சமயம் கூட்டம் கட்டுக்கடங்காது"//
    இது புருக்ளின் புருடா மாதிரி தெரியுதே.

    ReplyDelete
    Replies
    1. சேக்காளி ,கவிதைக்குத்தான் பொய் அழகு , கட்டுரைக்கு அல்ல .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete